சனிக்கிழமை: சரித்திரமா? தரித்திரமா?
இதை நீங்கள் வாசிக்கும் போது தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் நிறைவடைந்திருக்கும். சனிக்கிழமைக்காகக் காத்திருக்கும் பொழுதுகளில் இதை வாசிப்பீர்கள். சனிக்கிழமை இலங்கையின் எதிர்காலத்தைத் தன்னுள் உட்பொதிந்து வைத்திருக்கிறது. ஒரு சாதாரண இலங்கைக் குடிமகனுக்கு எதிர்வரும் சனிக்கிழமை எதைத் தரப் போகிறது என்ற வினாவுடன் தொடங்கலாம்.
வெற்றி வாய்ப்புள்ள இரண்டு பிரதான வேட்பாளர்களதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் இலங்கை அரசியலின் சீரழிந்த நிலையின் சிறந்த எடுத்துக்காட்டுக்கள். நடைமுறைச் சாத்தியமற்ற தேர்தல் வாக்குறுதிகள், நீண்டகால முன்நோக்கற்ற வேலைத்திட்டங்கள், இலவசங்களின் அரசியல் என்பன நிறைந்தனவாகவே அவை இருக்கின்றன.
இது இரண்டு விடயங்களைத் தெளிவுபடுத்துகின்றது. முதலாவது வாக்காளர்கள் முட்டாள்கள், இலவசத்திற்காகவும் சலுகைகளுக்காகவும் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு. இரண்டாவது இந்த வாக்குறுதிகளின் நடைமுறைச்சாத்தியம் குறித்து யாருமே கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை. இவை இரண்டும் முதிர்ச்சியடைந்த ஜனநாயகத்தின் பண்புகள் அல்ல. அரசியல்வாதிகளின் இந்த எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் இலங்கையர்கள் வாக்களிப்பின் ஊடு தக்கவைத்திருக்கிறார்கள். இதிலிருந்து மீள வேண்டியது அவசியம். அதுவே வளமான இலங்கையை நோக்கிய முதற்படி.
இம்முறை தேர்தல் பிரச்சாரங்களுக்காக செலவழிக்கப்பட்டுள்ள தொகை சொல்கிற செய்தி என்ன. கடந்த மூன்று வாரங்களில் தேர்தல் பிரச்சாரங்களுக்காக பிரதான இரண்டு வேட்பாளர்களும் செலவழித்த தொகை 1.3 பில்லியன் இலங்கை ரூபாய்கள். இவ்வளவு பணம் வேட்பாளர்களுக்கு எப்படி வந்தது. வேட்பாளர்களுக்காகப் பணத்தைச் செலவழிப்பவர்களின் எதிர்பார்ப்பு என்ன? வெற்றிபெறுபவரோ அல்லது தோல்வியடைபவரோ, அவர்களுக்காகச் செலவழிக்கப்பட்ட பணத்தை எவ்வாறு திருப்பிக் கொடுக்கப் போகிறார்கள்? அல்லது விழலுக்கிறைத்த நீராய் இப்பணம் போய்ச்சேரப் போகிறதா?
இலங்கை இன்று எதிர்நோக்கும் பாரிய பிரச்சனை, இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு சீராக்குவது என்பது. இந்தப் பிரச்சனைக்கான தீர்வை எந்தவொரு வேட்பாளரும் முன்வைக்கவில்லை. ஆண்டுதோறும் இலங்கை செலுத்தவேண்டிய 7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான அந்நியக் கடன் மீளளிப்பை எவ்வாறு செய்வது. இதற்கான பதில் இரு வேட்பாளர்களிடமும் இல்லை. ஆனால் வரிவிலக்களிப்பதாக இருவரும் சொல்கிறார்கள். இதன் அபத்ததை என்னவென்பது.
1994 முதல் 2005 வரை நிறைவேற்றதிகார முறையை நீக்கும் உறுதிமொழியுடனேயே சனாதிபதி வேட்பாளர்கள் பதவிக்கு வந்தனர். இன்றோ, பிரதம வேட்பாளர் எவரும் அதற்கு ஆயத்தமில்லை. எந்தச் சனாதிபதி வேட்பாளருக்கும் நிறைவேற்றதிகாரத்தை இழக்க மனமில்லை என்பதை நாற்பதாண்டுக் கால அரசியல் நமக்குக் கூறுகிறது. நிறைவேற்றதிகாரத்தின் கொடுங்கரங்களை நாமறிவோம். பேச்சளவிலேனும் அதை இல்லாமல் செய்ய உறுதியளிக்கவியலா இரண்டு பேரே (வெல்லக்கூடிய) நம்முன் தெரிவுகளாக உள்ளார்கள் என்பது எவ்வளவு வருத்தத்திற்குரியது. அதன் தொடர்ச்சியே ஒரு புறம் ஆட்சியைக் குடும்பத்தின் கையிற் பேண ஒரு தரப்பும் ஒரு முன்னாள் சனாதிபதியின் குடும்ப வாரிசிடம் ஒப்படைக்க இன்னொரு தரப்பும் மோதும் நிலையையே காணுகிறோம்.
சிறுபான்மையினரின் பிரச்சனைகள் பேசுபொருளாகாத தேர்தல் பிரச்சாரமாக இம்முறை ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் நடந்து முடிந்துள்ளது. இது சொல்லுகிற செய்தி வலியது. இரு பிரதான வேட்பாளர்களும் குறிவைப்பது பெரும்பான்மையாகவுள்ள சிங்கள்-பௌத்தர்களின் வாக்குகளாகவே உள்ளது. இந்நிலையில் இரண்டு வேட்பாளர்களிடமும் சிறுபான்மையினர் எதிர்பார்க்க என்னவிருக்கிறது.
சிங்கள பௌத்த பேரினவாதம் இனவெறியாக வடிவெடுக்கிறது. போர் முடிந்து பத்தாண்டுகளின் பின்னும் இராணுவம் வலுப்பெறுகிறது. நாட்டினுள் அந்நியப் பொருளாதார ஊடுருவல் மட்டுமன்றி அந்நிய அரசியல் இராணுவ ஊடுருவல்களும் அப்பட்டமாக நிகழ்கின்றன. நிறைவேற்றதிகாரம் அதற்கு வாய்ப்பானது.
நிறைவேற்றதிகாரம் எவரெவரதோ கைப்பொம்மையாக இயங்கப் போகும் ஒருவரின் அடக்குமுறையாகும் அபாயத்தைத் தேர்தல்கள் மூலம் தவிர்க்க இயலுமா?
இக் கேள்விகளை சனிக்கிழமை வாக்களிக்கும் ஒவ்வொருவரும் ஒருமுறை தமக்குள் கேட்டாக வேண்டும். அண்மையில் படித்த கவிதையொன்றுடன் நிறைவு செய்கிறேன்:
எவரும் ஆடத் தடையற்ற ஆட்டம்.
வென்றவர் நாட்டை ஆள்வார் என்பர்.
ஆடக் கையிற் பசை தேவை.
அல்லது கையிற் பசையுள்ள புரவலர் தேவை – அல்லது
வலிய நிறுவனமொன்றின் துணை தேவை.
ஆட்ட விதிகள் எளியன.
ஆட்டங் காணக் கூடுவோரில் அதிகமானோரின்
ஒப்புதலைப் பெறுபவர் வென்றவராவார். ஒப்புதலைப்
பெற விதிகளும் கட்டுப்பாடுகளும் இருந்தாலும், மீறி
அகப்படாத வரை அவற்றை மீறலாம்.
எனவே,
ஒப்புதலைப் பெற, வரையின்றி உறுதிமொழிகளை
வழங்கலாம். கூடியுள்ளோரை உசுப்பேற்றிக்
கூறுபடுத்திப் பிற போட்டியாளர்களை ஓரங்கட்டலாம்.
உதவிக்கு ஊடகங்களை விலைக்கு வாங்கலாம்.
இயன்றால் ஆடுவோரையும் விலைக்கு வாங்கலாம்.
வீடோ காணியோ உத்தியோகமோ காசோ உணவோ
உடையோ வேறு நுகர்பண்டமோ கஞ்சாவோ
சாராயமோ தன் கையால் வழங்காமல் வேறு எவர்
மூலமேனும் கொடையாக வழங்கலாம்.
ஆட்டத்தின் போக்கில் விபத்துகளாற் சிலரோ
சிலவேளை பலரோ காயப்படலாம் அல்லது சாகலாம்.
வீடுகளும் கடைகளும் பணிமனைகளும் தீப்பற்றலாம்.
நாட்டின் அமைதி குலையலாம்.
விதிகட்கமைய விளையாடி எவரும் வென்றதில்லை
எனவும் வென்றவர் உண்மையில் நாட்டை
ஆள்வதில்லை எனவும் எல்லாரும் அறிவர்.
மெய்யாக வென்றோரை எவருமறியாரெனினும்,
ஆட்டத்திற் பங்கேற்கும் அனைவரும் தோற்றோரென
எல்லாரும் அறிவர்.
எனினும் எல்லாரும் ஆட்டத்திற் பங்கேற்பர்
தோல்வியைத் தவிர்க்க வேண்டின் ஆட்டத்தினின்று
முற்றாக ஒதுங்கலாம்.
வெல்ல வேண்டின் ஆட்ட விதிகளை மாற்றலாம்
அதினுஞ் சிறப்பாக ஆட்டத்தையே மாற்றலாம்.