அரசியல்உள்ளூர்என் கண்களில்...

கருத்திலும் களத்திலும் விரிவடைய வேண்டிய போராட்டம்

மூன்று வாரங்களுக்கு மேலாக தொடர்ந்து போராடும் போராட்டக்காரர்களும் அவர்களுக்குத் தொடர்ச்சியான ஆதரவை வழங்கிவருவோரும் மெச்சத்தக்கவர்கள். அரசாங்கமும் இன்னும் சிலரும் எதிர்பார்த்தது போல போராட்டம் நீர்த்துப் போய்விடவில்லை. அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடியும் தொடர்ச்சியாகப் போராடும் போராட்டக்காரர்களுக்கான மானசீகமான மக்கள் ஆதரவும் போராட்டங்களை மெதுமெதுவாக கிராமங்களை நோக்கி நகர்த்தியுள்ளது. கொழும்பில் நடக்கும் போராட்டங்களுக்கு அஞ்சாத அரசாங்கம் இப்போராட்டம் கிராமங்களுக்கு விரிவடைவது குறித்து அஞ்சுகிறது. கடந்தவார நடத்தை அதை உறுதி செய்கிறது.

இக்கட்டுரை எழுதப்படும்வரை ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இப்பின்னணியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் முன்பு சில வினாக்கள் இருக்கின்றன. முதலாவது, இருவரும் பதவி விலக மறுத்துவரும் நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? இந்த வினாவுக்கான விடையைத் தேடவேண்டிய கட்டாயத்திற்கு போராட்டக்காரர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அரசாங்கம் போராட்டக்காரர்களைக் களைப்படையச் செய்து அவர்கள் மீது தங்களது தீர்வைத் திணிக்கும் கைங்கரியத்தை நோக்கியே நகர்கிறது.

இரண்டாவது, ஒருவேளை இருவரும் பதவி விலகினால் அடுத்தது என்ன? கடமை முடிந்தது என்று நடையைக் கட்டுவதா அல்லது தொடர்ந்து போராடுவதா. தொடர்ந்து போராடுவதாயின் அதற்கான கோரிக்கைகள் என்ன?

மூன்றாவது, மேற்சொன்ன இரண்டில் எது நடந்தாலும் பொருளாதார நெருக்கடி தீரப் போவதில்லை, எனவே அதற்கான தீர்வுகள் நோக்கியும் கவனங்குவிக்க வேண்டிய விடயங்கள் பற்றியுமாகப் போராட்டத்தை நகர்த்துவதா இல்லையா?

இம்மூன்று கேள்விகளும் பிரதானமானவை. ஏனெனில் இப்போது இரண்டு முக்கிய போக்குகளை அவதானிக்கவியலும். முதலாவது, என்னதான் போராடினாலும் இந்த நெருக்கடிக்கான தீர்வை பாராளுமன்றத்தின் வழியே எட்டவியலும் என்பது தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இரண்டாவது, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியுதவியைப் பெற்றுவிட்டால் இப்பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்பது உறுதிபடப் பலரால் சொல்லப்படுகின்றது.

இவ்விரு போக்குகளும் தவறானவை மட்டுமல்ல, ஆபத்தானவையும் கூட. மக்கள் போராடத் தொடங்கி மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையில் பாராளுமன்றம் எதைச் சாதித்துள்ளது. மக்கள் அன்றாட உணவுக்காகவும் எரிபொருளுக்காகவும் வரிசையில் மணிக்கணக்கில் நிற்கையில் மதியஉணவு விடுமுறை எடுப்பதா இல்லையா என பாராளுமன்றில் விவாதங்கள் நடக்கின்றன. பாராளுமன்றம் ஒரு கோமாளிகளின் கூடாரம் போலாகி விட்டது. ஆனால் பிரதான அரசியல் கட்சிகள் யாவும் இந்த பாராளுமன்ற வரையறைக்குள் நின்றபடி அரசியல் செய்யவே விரும்புகிறார்கள். ஏனெனில் இது பாதுகாப்பானது, சிரமமற்றது. ஆட்களை மாற்றினாலும் ஒரே விதிகளின்படி ஆட்டத்தைத் தொடரவியலும். இந்த நெருக்கடியின் போதும் புத்தாக்கமாகச் சிந்திக்கவோ செயற்படவோ எவரும் தயாராக இல்லை.

சர்வதேச நாணய நிதியம் ஒரு மந்திரக்கோலல்ல. எங்களது பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கும் வல்லமை அதனிடம் இல்லை. அதனிலும் மேலாக அது சர்வதேச நாணய நிதியத்தின் நோக்கமுமல்ல. சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் போது மக்களின் இன்னும் சொல்லொனாத் துயரங்களை அனுபவிப்பர். எனவே அது குறித்தும் பேசவேண்டியுள்ளது.

சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் வரலாற்றில் இவ்வாறான ஒரு மக்கள் எழுச்சி நடைபெறுவது முதன்முறையன்று. இது இரண்டாவது முறை. இவ்விடத்தில் 1953 ஹர்த்தாலின் படிப்பினைகளை மனங்கொள்வது பயனுள்ளது. 1953ம் ஆண்டு ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி சமூகநலத்திட்டங்களை இல்லாமல் செய்து அரிசி, சீனி உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை ஏற்றியமைக்கு எதிரான தொழிற்சங்கங்கங்களும் இடதுசாரிக் கட்சிகளும் இணைந்து பொது வேலைநிறுத்தம் ஒன்றை அறிவித்தன. ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி நடைபெற்ற இந்த பொது வேலைநிறுத்தத்திற்கு எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவளிக்க மறுத்துவிட்டது. அதேபோல தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் ஆதரவு தர மறுத்துவிட்டது. ஆனால் தமிழரசுக்கட்சி இந்த ஹர்த்தாலுக்கு முழு ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்தது. தமிழரசுக்கட்சியின் வரலாற்றில் உழைக்கும் மக்கள் பக்கம் நின்ற முதன்மையான நிகழ்வாக இதைக் கொள்ள முடியும்.

தமிழரசுக் கட்சியின் இந்த முடிவுக்கு மூன்று முக்கிய காரணிகள் இருந்தன. முதலாவது பாராளுமன்றத்தில் இருந்த ஒரே வட பிரதேசத் தமிழரசுக் கட்சித் தலைவரான வன்னியசிங்கம் நிதானமும் பொறுப்புணர்வுமுடைய ஒருவராக இருந்தமையால் அவர் இந்த ஹர்தாலில் பங்குபெறுவதன் அவசியத்தையும் தேவையையும் வலியுறுத்தி வந்தார். இரண்டாவது புதிதாக உருவாகிய தமிழரசுக்கட்சிக்கு அதன் அரசியல் எதிரிகளான தமிழ்க்காங்கிரஸ் காடையர்களின் உதவியோடு தமிழரசுக் கட்சியின் கூட்டங்களைக் குழப்பி வந்தனர். வடபுலத்து இடதுசாரித் தலைவர்கள் மக்கள் துணையோடு தமிழரசுக் கட்சியினர் கூட்டங்களை நடாத்த தொடர்ச்சியாக உதவிக்கரம் நீட்டியிருந்தார்கள். மூன்றாவது தமிழரசுக்கட்சியின் எதிரியான தமிழ்க் காங்கிரஸ் அரசாங்கத்தில் அங்கம் வகித்தது.

எதிர்பார்ப்புக்கு மேலாக ஹர்த்தால் மிகப்பெரிய வெற்றி கண்டது. இதை அரசாங்கமோ, ஒழுங்கமைப்பாளர்களோ எதிர்பார்க்கவில்லை. ஹர்த்தாலுக்கு கிடைத்த மக்கள் ஆதரவு அனைவரையும் வியக்க வைத்தது. காலை 11 மணியளவில் நாடே ஸ்தம்பித்துப் போனது. ஹர்தாலுக்கு கிராமப்புறங்களில் கிடைத்த ஆதரவும் வரவேற்பும் அரசை நடுங்கவைத்தது. முக்கியமாக தோட்டப்புறங்களில் தலைவர்களின் சொல்லையும் மீறி அரைவாசிக்கு மேற்பட்ட தோட்டத்தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாமல் ஹர்த்தாலுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை பிரகடனங் செய்தது. இலங்கையின் இருபதாம் நூற்றாண்டு வரலாற்றில் 1915 சிங்கள-முஸ்லீம் கலவரத்தின் பின்னர் ஹர்தாலின் போதே அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதன்கீழ் 1500 பேர் கைது செய்யப்பட்டனர். இடதுசாரிக் கட்சிகளின் அலுவலகங்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. பொலிஸ் இராணுவ அராஜகத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் காயமுற்றனர். போலிஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 12 பேர் கொல்லப்பட்டார்கள்.

மறுநாள் பிரதமர் கொழும்புக் கடலில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் இருந்தபடி பதவிவிலகினார். இந்த ஹர்த்தாலின் பயனை அறுவடை செய்து பண்டாரநாயக்க பிரதமரானார். மக்கள் மயப்பட்ட மாற்றமொன்றை ஏற்படுத்துவத்துவதற்கான வாய்ப்பு பறிபோனது. ஹர்த்தால் போராட்டத்தை மேலுஞ் சில நாட்களேனும் தொடர்ந்து நடத்தி அதன் மூலம் மக்களை அரசியல் மயப்படுத்தியிருக்க இயலும். அங்கே இதை ஒழுங்குபடுத்திய தலைமைகள் செய்யத் தவறின.

1953 ஹர்த்தால் சில முக்கிய பாடங்களைச் சொல்கிறது. முதலாவது, ஹர்த்தாலை ஒழுங்கு செய்த தலைமைகள் ஒரு நாட் போராட்டத்திற்கு மேலாக எதையுமே திட்டமிட்டிருக்கவில்லை. அதற்கு அடுத்ததாக என்ன செய்வது என்று இந்த வேலைநிறுத்தத்திற்கு தலைமையேற்றவர்களுக்குத் தெரியவில்லை. இரண்டாவது, யாரும் எதிர்பாராதவிதமாக ஹர்த்தாலுக்குக் கிடைத்த ஆதரவை ஒரு பொதுத்தளத்தில் சமூகமாற்றத்திற்காகக் கட்டமைக்கும் வலு ஒழுங்கமைப்பாளர்களிடம் இருக்கவில்லை. குறிப்பாக ஹர்த்தாலுக்கு கிடைத்த அமோக ஆதரவைக் கண்ட அரசாங்கம் கலங்கி நின்ற வேளையில் அதைப் பயன்படுத்தி மக்கள் நலநோக்கிலான மாற்றமொன்றை நிகழ்த்த இத்தலைமைகள் தயாராக இருக்கவில்லை.

மூன்றாவது, 1947 முதல் பாராளுமன்றக் கதிரைகளை நிரப்பிப் பழக்கப்பட்ட இடதுசாரித் தலைமைகளுக்கு மக்கள் போராட்டம் கிளர்ச்சியாக விருத்தியடைவது குறித்த அச்சங்கள் இருந்தன. எனவே பாராளுமன்றத்துக்குள் தீர்வைத் தேடுவது அவர்களது அந்தஸ்துக்கும் அதிகாரத்தைக் தக்கவைப்பதற்கும் பொருத்தமானதாய் இருந்தது. எனவே ஒரு வெகுஜன புரட்சிகர மக்கள் இயக்கத்தை வளர்தெடுப்பதில் அவர்கட்கு மனத்தடைகள் இருந்தன. நான்காவது, மாற்று அரசாங்கம் குறித்த சிந்தனைகள் எதுவும் இருக்கவில்லை. மக்கள் போராடி அரசைப் பணியவைக்கவும் அவசரகாலச் சட்டத்தை அகற்றவும் தயாராக இருந்தார்கள். ஆனால் அதற்கு போராட்டத்தை வழிகாட்டியோர் தயாராக இருக்கவில்லை.

ஐந்தாவது, போராட்டத் தலைமைகளின் தவறுகள் வலுவான மாற்றாக பண்டாரநாயக்க தன்னை நிலைநிறுத்த உதவியது. இது சிங்களப் பேரினவாதத்தின் அடித்தளத்தில் இலங்கையை அழைத்துச் செல்ல வாய்ப்பாகியது. ஆறாவது, இந்த ஹர்த்தாலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தாமை தொழிற்சங்க முற்போக்கு இயக்கங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவானது. இதன் பின்னர் நாடுதழுவிய அரசாங்கத்துக்கெதிரான அனைத்து மக்களையும் ஒன்றுதிரட்டிய போராட்டமொன்றிற்கான வாய்ப்பு இல்லாமலே போனது.

இந்தப் பாடங்கள் தற்போதைய போராட்டத்திற்கும் பொருந்தி வருவன. இப்போராட்டங்கள் கருத்தியில் ரீதியாக விரிவடையவேண்டும். ஜனாதிபதியையும் பிரதமரையும் வீட்டுக்கு அனுப்புவதற்கு அப்பால் சிந்திக்க வேண்டும். இனப்பிரச்சனை இன்றைய நெருக்கடியில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் பற்றிய பார்வை அவசியம். இதைப் பொருளாதாரப் பிரச்சனைக்கு வெளியே பரந்த தளத்தில் அனைவரின் உரிமைக்கானதாக மாற்ற வேண்டும். இதன் களங்கள் காலிமுகத்திடலுக்கு வெளியே விரிவடைய வேண்டும். கிராமங்களுக்குப் பரவலாக்கப்படவும் நெருக்கடியின் பன்முகத்தன்மை பேசப்படவும் வேண்டும். இவை தற்போதைய அவசரத் தேவையாகின்றன. ஏனெனில் இதுபோன்றதொரு வாய்ப்பு எங்கள் வாழ்வில் இன்னொருமுறை வராமலேயே போய்விடவும் கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *