Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /customers/a/4/a/nilankco.com/httpd.www/wp-includes/functions.php on line 6131 விபரீதங்களோடு விளையாடும் விந்தை - நிலங்கோவின் நிலம்
அரசியல்உலகம்உள்ளூர்என் கண்களில்...

விபரீதங்களோடு விளையாடும் விந்தை

அறிவியலுக்கும் அபத்தத்துக்கும் இடையிலான பிரிகோடு மிகவும் சிறியது. அறிவியலை விட அபத்தத்துக்கும் முக்கியத்துவம் அதிகமாகிப் போன உலகில் வாழ்கிறோம். பயன் யாதெனில் கொரோனாவின் இரண்டாவது அலை இப்போது உலகை ஆட்கொண்டுள்ளது. இது எதிர்பாராததல்ல. ஆனால் இன்று  ‘முன்னே ஓடவிட்டு பின்னே துரத்தும்’ வித்தையை இந்தப் பெருந்தொற்றை வைத்து ஆடிக்கொண்டிருக்கிறார்கள் அரசியல்வாதிகள்.

இந்த ஆபத்தான விளையாட்டை பெரும்பாலான நாடுகள் விளையாடுகின்றன. அவை தம் நாட்டு மக்களின் உயிரைப் பணயம் வைத்து இதை ஆடுகின்றன. இங்கே எழுகின்ற ஒரு கேள்வி, இவ்வாறானதொரு ஆபத்து பற்றி அறிவியலாளர்கள் தொடர்ச்சியாகச் சொல்லி வந்துள்ள போதும் அது செவிடன் காதில் ஊதிய சங்காகியது. இது ஏன் நடந்தது என்பதை நாம் கொஞ்சம் விரிவாகப் பார்க்க வேண்டியுள்ளது.

இவ்வாண்டு மார்ச் மாதம் தொடக்கம் கொரோனா வைரஸின் தாக்கம் உலகளாவிய ரீதியில் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. குறிப்பாக நாளொன்றுக்குப் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகுவோரின் தொடர் சாராசரியாக ஒவ்வொரு வாரமும் அதிகரித்து வந்துள்ளது. ஆனால் பாதிப்புக்கு உள்ளாகுவோர் புவியியல் ரீதியாக மாற்றமடைந்து கொண்டே சென்றமையால் இது அதிக கவனம் பெறவில்லை. குறிப்பாக ஐரோப்பாவை மையங்கொண்டிருந்த இத்தொற்று பின்னர் தென்னமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியா என வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு கண்டங்களை மோசமாகப் பாதித்தது. ஆனால் மேற்குலகில் இத்தொற்று குறைவடைந்தமையை அடுத்து உடனடியான நிலைமை வழமைக்குக் கொண்டு வரப்பட்டது (வழமைக்குத் திரும்பவில்லை, கொண்டுவரப்பட்டது). பொருளாதாரப் பாதிப்புக்களைக் காரணங்காட்டி அரசுகள் நிலைமையை சாதாரண நிலைக்குத் திரும்பின.

கொரோனாவின் முதலாவது அலையில் இருந்து அரசுகள் கற்கத் தவறிய மிகப்பெரிய பாடம் யாதெனில் மக்கள் ஒரே நேரத்தில் வாழ்வாதாரம் சார்ந்த பொருளாதாரச் சவாலையும் நோய்த்தொற்றுச் சார்ந்த சுகாதார சவாலையும் ஒருசேர எதிர்நோக்கினார்கள். இது ஏற்படுத்திய பாதிப்புக்கள் பல. இன்று இரண்டாவது அலையிலும் இதே சவாலையே மக்கள் எதிர்நோக்குகிறார்கள். குறிப்பாக தென்னாசியாவில் இதன் தாக்கம் மிகப்பெரியதாக இருக்கிறது.

கடந்த மாதம் உலக வங்கி தென்னாசியாவின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. Beaten or Broken? Informality and COVID-19 என்று தலைப்பிடப்பட்ட அந்த அறிக்கை சில முக்கியமான செய்திகளைச் சுட்டுகிறது. இவ்வாண்டு தென்னாசியப் பிராந்தியத்தின் பொருளாதாரம் 7.7%த்தால் சுருங்கும் என்றும் அதில் குறிப்பாக இந்தியாவின் பொருளாதாரம் 9.9%த்தாலும் இலங்கைப் பொருளாதாரம் 6.8%த்தாலும் சுருங்கும் என்று சொல்கிறது. அடுத்தாண்டு தனிநபர் வருமானமானது 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 6 சதவீதம் குறைவாக இருக்கும் அதேவேளை பொருட்களின் விலை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்வுகூறுகிறது. உலகின் வேறெந்தப் பிராந்தியத்தையும் விட மிக அதிகளவிலான ஏழைகள் தென்னாசியாவிலேயே உருவாவார்கள் என்று இவ்வறிக்கை கூறுகிறது.

இதன் பின்னணியிலேயே இலங்கையை நோக்க வேண்டியுள்ளது. இலங்கையின் பொருளாதார மந்தநிலை கொரோனாவின் இரண்டாவது அலையை அடுத்து இன்னமும் மோசமாகும். இலங்கையின் தொழிற்றுறையில் 70%மான தொழிலாளர்கள் முறைசாராத் தொழிலில் ஈடுபடுபவர்கள். அவர்களுக்குத் தொழிற்பாதுகாப்போ, சமூக நலன்களோ எதுவும் கிடையாது. எனவே அவர்களே இந்தத் தொற்றினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுவார்கள். இன்று இலங்கை மிகப்பாரிய இக்கட்டில் மாட்டியுள்ளது. ஒன்றில் நாடு முழுவதையும் முழு அடைப்புக்குள் கொண்டுவந்து கொரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டும் அல்லது முழு அடைப்பைச் செய்யாமல் தடுப்பதன் மூலம் பொருளாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும். இதில் எந்தப் பாதையை இலங்கை தெரியப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது.

இந்தச் சவால் இன்று எல்லா அரசுகளுக்கும் உரியது. இலாபமா மனிதாபிமானமா என்ற வினா எல்லோர் மனதிலும் உள்ளது. ஆனால் அரசுகள் எப்போதும் இலாபத்திற்கே முதன்மை இடத்தை வழங்குகின்றன. இதை இந்தப் பெருந்தொற்று தொடங்கியது முதல் எவ்வாறு அரசுகள் நடந்துகொண்டன என்பதைப் பார்த்தால் இதைப் புரிந்து கொள்ளலாம். முதலாவது அலையின் போது அரசுகள் முழு முடக்கத்தை அறிவிக்கத் தயங்கின. பின்னர் கொரோனா கட்டுக்குள் வந்தவுடன் எல்லைகளைத் திறந்து சந்தையைக் காக்க முண்டியத்தன. இப்போது இரண்டாவது அலையை எதிர்வுகூறி அறிவியலாளர்கள் முழு அடைப்பைக் கோரியபோது, அதை ஏற்க மறுத்த அரசுகள் இன்று முழு அடைப்பை நோக்கி நகர்கின்றன.

அரசுகள் ஒருபுறம் அறிவியலைக் கேலிக்கூத்தாக்குகின்றன. மறுபுறம் இலாபங்கள் குறைவுபடாமல் பார்த்துக் கொள்கின்றன. அரசுகள் கவனம் குவிப்போரின் பட்டியலில் குடிமக்கள் கடைசியிலேயே இருக்கிறார்கள். ‘அதிகாரம், இலாபம் மற்றும் பெருந்தொற்று’ (Power, Profits and the Pandemic) என்று தலைப்பிட்ட அறிக்கையொன்றை கடந்த செப்டெம்பர் மாதம் ஒக்ஸ்பாம் நிறுவனம் வெளியிட்டது. இவ்வறிக்கை சொல்கின்ற விடயங்களைச் சுருக்கமாகப் பார்க்கலாம்:

  1.  இப்பெருந்தொற்றினால் 500 மில்லியன் மக்கள் வறுமைக்குள் தள்ளப்படுவார்கள்.
  2.  முதல் ஆறு மாதங்களில் உலகளாவிய ரீதியில் 400 மில்லியன் மக்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளார்கள்.
  3.  இப்பெருந்தொற்று தொடங்கியது முதல் உலகின் முதல் 100 நிறுவனங்கள் தங்கள் சொத்துக்களை 3 ட்ரிலியன் அமெரிக்க டாலர்களால் அதிகரித்துள்ளன.
  4.  உலகின் முதலாவது பணக்காரனான அமேசன் நிறுவனத்தின் ஜெவ் பிசோஸ் அவரிடம் வேலை செய்கின்ற 8,76,000 ஊழியர்களுக்கும் ஆளுக்குத் தலா 105,000 அமெரிக்க டாலர்களை போனஸ் கொடுப்பனவாகக் கொடுத்தாலும் பிசோஸ் இந்த நோய்த்தொற்று தொடங்கமுன்னர் வைத்திருந்த சொத்து மதிப்பை விட அதிகமான சொத்துக்களையே வைத்திருப்பார்.
  5.  மார்ச் முதல் ஆகஸ்ட் வரையான 5 மாதங்களில் ஜெவ் பிசோஸின் சொத்து 92 மில்லியன் அமெரிக்க டாலர்களால் அதிகரித்துள்ளது.
  6.  அமெரிக்காவின் இறைச்சி பொதியிடும் பணியில் ஈடுபட்டுள்ள ஒன்பதில் ஒருவர் கொரோனாத் தொற்றுக்குள் ஆளாகிறார் (மொத்தமாக 27,000 பேர்). ஆனால் தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்கிய வண்ணமே உள்ளன.
  7.  உலகின் முக்கியமாக பத்து ஆடை உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் பங்குதாரருக்கு இலாபத்தின் பங்காக வழங்கிய தொகை 21 பில்லியன் அமெரிக்க டாலர்கள். ஆனார் இந்த ஆடைகளை உற்பத்தி செய்யும் மூன்றாமுலக நாடுகளில் வாழும் தொழிலாளர்கள், அடிப்படைச் சம்பளமோ, தொழில் பாதுகாப்போ இன்றி பணியாற்றுகிறார்கள்.

இந்தத் தரவுகள் சொல்லும் செய்தி யாதெனில் அரசுகள் மக்கள் நலன் சார்ந்ததல்ல என்பதே. உலகம் இயங்கிவரும் பொருளாதார முறை குறித்த அடிப்படையான வினாக்களை இவை எழுப்புகின்றன. “சந்தையே அனைத்தையும் தீர்மானிக்கும், அரசாங்கம் எல்லா விடயயங்களிலும் தலையிடக் கூடாது. அதன் மூலம்தான் உலகப் பொருளாதாரத்தை புதிய பாய்ச்சலில் கொண்டு செல்ல முடியும்” என்ற வாதம் கடந்த பல தசாப்தங்களாக முன்வைக்கப்பட்ட ஒன்று. இன்று சந்தையே அரசிடம் தலையிட்டு சந்தையைக் காப்பாற்றக் கோருகின்றன.

தனியார்மயமாக்கலின் விளைவால் பல நாடுகளில் பொதுச்சுகாதாரம், மருத்துவம், பொதுக்கல்வி, ஆகியவற்றைக் கொடுப்பது அரசுகளின் கடமை இல்லை. அனைத்தையும் சந்தையே பார்த்துக் கொள்ளட்டும் என்ற புதிய தாராளவாதக் கொள்கையின் விளைவால் மக்கள் சேவைகள் தனியாரின் கைகளுக்குக் சென்றன. இதனால் சாதாரண மக்களுக்கு இவையனைத்தும் எட்டாக் கனியாகின்றன. இன்று பெருந்தொற்று அனைத்தையும் ஆட்டங்காண வைத்துவிட நிலையில் அரசுகளே அனைத்தையும் பார்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்தப் பொருளாதாரச் சிக்கலைக் கொஞ்சம் ஆழமாகப் பார்த்தல் 2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து இன்னமும் உலகம் விடுபடவில்லை. அந்த நெருக்கடி பல்வேறு மட்டங்களில் ஏற்படுத்திய தாக்கம் இன்று ஒரு சமூக நெருக்கடியாக மாறியுள்ளது. இந்த சமூக நெருக்கடியைக் கையாள இயலாத நிலையில் தீவிரவலதுசாரிப் பாசிசத்தை அரசின் பகுதியாக முதலாளித்துவம் கட்டமைக்கிறது. அதன் இன்னொரு பாதுகாப்பான வடிவமாக தேசியவாதமும் மதமும் கிளறி விடப்படுகின்றன. இந்த தீவிர வலதுசாரி ஆட்சிகள் கொரோனாவையும் அது தொடர்பான அறிவியலையும் புறந்தள்ளுகிறார்கள். கொரோனாவைக் கட்டுப்படுத்துவதை விட்டு புதிய சிக்கல்களை உருவாக்கி மக்களைத் திசை திருப்புகிறார்கள்.

இன்று அரசுகள் மக்களின் உயிர்களோடு விளையாடுகின்றன. இந்தப் பெருந்தொற்றை ஒன்றில் கேவலப்படுத்துகிறார்கள் அல்லது கேலிக்கூத்தாக்குகிறார்கள். இன்னொருபுறம் ‘கொரோனாவுக்கான தடுப்புஊசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு….’ என்ற சொல் இன்று அரசியல்வாதிகளின், கொள்கை வகுப்பாளர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. அவ்வாறு தடுப்புஊசி கண்டுபிடிக்கப்பட்டாலும் அதன் பயன் சாதாரண மக்களைச் சேராது. அது இன்னொருவகையான அசமத்துவத்தையே உருவாக்கும். மொத்தத்தில் இங்கு நடப்பது யாதெனில் பூனைக்கு விளையாட்டு, எலிக்கு சீவன்போகிறது கதைதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *