அரசியல்உலகம்உள்ளூர்என் கண்களில்...

வரலாற்றை அறிதலும் எழுதலும்

(8.12.2014 அன்று கொழும்பில் நிகழ்ந்த பேராசிரியர் கைலாசபதி நினைவுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை காலப் பொருத்தம் கருதி)

அறிமுகம்
எந்த அறிவுத்துறையும் போல வரலாறும் உண்மையை அறிவதையே பிரதான பணியாகக் கொள்கிறது. வரலாற்றுக்கும் உண்மைக்கு மிடையிலான உறவுமுறை வேறெந்தச் சமூக-அறிவியல் துறையின தையும் விடச் சிக்கலானது. வரலாற்றின் மெய்ம்மை விடாது கேள்விக் குட்படுகிறது. இது வரலாற்றை விளங்குவதற்கு ஒரு தடைக்கல்லாக இருப்பதை மறுக்க முடியாது. சமூக அறிவியலானது செல்லுபடியான அறிவையை (valid knowledge) அடிப்படையாகக் கொள்கிறது. இவ் வடிப்படையில் விஞ்ஞானபூர்வமான அறிவின் (scientific knowledge) தேவை உணரப்படுகிறது. வரலாற்றை விளங்குதற்கான அடிப்படை யாகச் செல்லுபடியான அறிவையும் அவ்வறிவின் விஞ்ஞானப் பண்பை யையும் தெரிந்திருத்தல் அடிப்படையானது. இவ் அடிப்படையில் வரலாறு பற்றிய அடிப்படைக் கேள்விகட்கான பதில்களை விளங்குவத னூடு வரலாற்றை விளங்க இக் கட்டுரை முயல்கிறது.

அனைத்திற்கும் ‘கடந்த காலம்’ என ஒன்று உண்டு. தனிமனிதர் தொட்டு சமூகங்கள் உட்படத் தேச-அரசுகட்கும் அத்தகைய கடந்த காலம் உண்டு. அது தவிர்க்கவியலாதது. பல தருணங்களிற் கடந்த காலமே நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் சக்தி யாக இருக்கிறது. கடந்த காலங்களின் தொகுப்பே வரலாறாகிறது. ஒரு வகையில், வரலாறு கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கு மிடையிலான உரையாடலாகிறது. நிகழ்காலத்தை விளங்கவும் எதிர் காலத்தைத் தீர்மானிக்கவும் கடந்த காலம் பற்றிய அறிவும் தெளிவும் அவசியம். அதனாலேயே வரலாற்றை விளங்குவதன் தேவையைப் பேசவேண்டியிருக்கிறது.

நிகழ்காலத்தின் ஒவ்வொரு நிகழ்வினதும் காரணகாரியத் தொடர்பை விளங்குவதனூடு விளக்கமுடியாத அற்புதங்களோ விபத்துக்களோ என எதுவுமே இல்லை என்ற முடிவை அடையலாம். வரலாறு இந்த அறிதல் முறையை வேண்டுகிறது. இதுவே வரலாற்றுக்கு விஞ்ஞானத் தன்மையை வழங்குகிறது. அது வரலாறு என்றால் என்ன என்ற அடிப்படைக் கேள்வியையும் எம்மிடை எழுப்புகிறது. இக் கேள்விக்கு முடிந்தமுடிவான விடையென ஒன்று இல்லாவிடினும் செல்லுபடியான அறிவாகக் கொள்ளத்தக்க விளக்கமொன்றை வழங்கலாம். ஈ.எச். கார் முதல் எரிக் ஹொப்ஸ்பாம் வரையான வரலாற்றாசிரியர்கள் அதற்கு வரன்முறையான விளக்கங்களை வழங்கியுள்ளனர்.

அரசர்கள், அவர்தம் போர்கள், அரண்மனைச் சூழ்ச்சிகள் என்பவற் றோடு வரலாறு முடிவதில்லை. எனினும் இவையே வரலாறென எமக்குக் கற்பிக்கப்பட்டுள்ளன. பெர்டோல்ட் பிரெக்ட்டினுடைய நாடகத் திற் கல்வியறிவு பெற்ற பாட்டாளி கேட்கும் முதற் கேள்வி ‘அலெக் சாண்டர் முழு ஐரோப்பாவையுமே வென்றானே, அப்போது அவனோடு ஒரு சமையற்காரன் கூடவா இல்லை?’ என்பதாகும். வரலாறு என எங்களுக்குச் சொல்லப்பட்டதன் அபத்தத்தை இக் கேள்வி உணர்த்து கிறது. அது வரலாறு பற்றி மேலும் இரு கேள்விகட்கு வழியமைக் கிறது.

யாருடைய வரலாறு என்பது முதலாவது கேள்வி. வரலாறு என இதுவரை எங்களுக்குச் சொல்லப்பட்டவையும் எழுதப்பட்டவையும் அதிகாரத்தில் இருந்தோரின் வரலாறுகளே. அரசர்களதும் பிரபுக்க ளதும் அவர்களது பட்டாளங்களதும் கதைகளே எமக்கு வரலாறாகச் சொல்லப்பட்டுள்ளன. இவ்விடத்து, மக்கள் எங்கே போனார்கள் என்ற வினாவை எழுப்பாமல் இருக்க முடியாது. ஏனெனில் ஷாஜகான் தாஜ் மகாலைக் கட்டினார் என்றால் தாஜ்மகாலைத் திட்டமிட்டு வடிவமைத் தோரும், சாந்துபூசிய கொத்தனார்களும் ஏனையோரும் எங்கே என்பது வரலாற்றின் தன்மை பற்றிய முக்கியமான விமர்சனம்.

இரண்டாவது கேள்வி வரலாற்றை எழுதியோர் யார் என்பதாகும். அரசவைப் புலவர்களாலும் அரண்மனைப் புத்திஜீவிகளாலும் காலப் போக்கில் ஆள்வோரின் ஆலோசகர்களாலும் வரலாறு எழுதப்பட்டுள் ளது. தங்களுக்கு படியளப்பவர்களைப் புகழ்ந்து பாடி அவர்கள் காலத்தை ஓட்டினர். அவர்களது எழுத்துக்களே வரலாறாகின. இந் நிலை இன்னுந் தொடர்வதைச் சமகாலச் சூழலிற் காணலாம். இதையே ‘அறிவுத் துறையின் நேர்மையீனம்;’ என்பார் எட்வட் சயித்.

ஆதிக்க சக்திகளின் கருவியாக வரலாறு
வேலைப் பிரிவினையின் அடிப்படையில் அமைந்த நாகரிக சமுதா யங்கள் யாவினதும் வரலாறு சாராம்சத்தில் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே. ஆனால் மாக்சியச் சிந்தனையின் தாக்கம் ஏற்படு முன்பு வரலாற்றை எவரும் அவ்வாறு நோக்கவுமில்லை, பதியவும் இல்லை. வரலாற்றிற்கு அடிப்படைப் பரிமாணமும் வரலாற்று மாற்றங்களின் அடிப்படைக் காரணமும் மக்களே என்ற கருத்து மாக்சியத்தின் எழுச்சி யின் பின்னரே நிலைகொண்டது. எனினும் முதலாளியம் ஆதிக்கஞ் செலுத்தும் ஒரு உலகில் வரலாறு முதலாளிய மேன்மக்களின் சாதனைகளதும் வெற்றிகளதும் வரலாறாகப் பதிவாகிறது. அது ஒரு புறம் தனிமனிதரின் வரலாறாகவும் இன்னொருபுறம் பாராளுமன்றச் சன நாயக முறையின் விருத்தியின் பயனாக அரசியற் கட்சிகளது — குறிப் பாக அவற்றின் தலைவர்களது அல்லது தலைமைகளின் — வரலா றாகவும் முதலாளிய நிறுவனங்களதும் அவற்றின் அடையாளப்படுத்தும் பிரமுகர்களதும் வரலாறாகவும் முன்னிறுத்தப்பெறுகிறது.

அடிமைச் சமூகத்திலும் நிலவுடைமைச் சமூகத்திலும் மனித சமூகத் தின் வியத்தகு சாதனைகள் யவுமே தனி மனிதர்களது — அதாவது மன்னர்களதும் ஆளும் அதிகார வர்க்கங்களின் தலைமையில் இருந்த வர்களதும் — சாதனைகளாகப் பதியப் பட்டு, எஞ்சியுள்ள பதிவுகளாக உள்ளன. இத்தகைய பதிவுகளின் தீய விளைவுகளில் ஒன்று, வரலாற்றில் ஏற்பட்ட மாற்றங்களின் காரணங்கள் தனிமனிதர் சிலரும் அவர்கட்கிடையிலான உறவும் பகையும் என்ற பார்வையாகும். அத்து டன், ஒவ்வொரு நிகழ்விற்கும் அடிப்படையாயிருந்த சமூக அசைவுக ளும் பல்வேறு சமூகப் பிரிவுகளின் — குறிப்பாக வர்க்கங்களின் — இடையிலான முரண்பாடுகளும் பற்றிய பதிவுகள் மங்கலாக உள்ளன. எழுதப்பட்ட வரலாற்றுப் பதிவுகளிலிருந்து மறைமுகமாக ஊகித்தும் உய்த்தறிந்துமே அவற்றை அறிய முடிகிறது.

வரலாறு வெறுமனே நிகழ்வுகளின் பதிவல்ல. அதிற் பதியப்படுவன வும் விடுபடுவனவும் திரித்தோ புனைந்தோ எழுதப்படுவனவும் எவை யெவை என்பது அதிகாரம் பற்றிய கேள்வியுடன் தொடர்புடையது. எவ்வாறு ஒரு மொழியின் இலக்கண நூல் மொழி பற்றிய விவரண மாகவும் அதே வேளை செம்மொழியை வரையறுத்து மொழியின் சில கூறுகளை மறுப்பதாகவும் இருக்கிறதோ, அவ்வாறே வரலாற்று நூல்க ளும் தெரிந்தெடுக்கப்பட்ட பதிவுகளாக இருப்பதன் மூலம் சமூகத்தின் கடந்த காலத்தைக் குறிப்பிட்ட ஒரு விதமாகச் சித்தரிப்பதுடன் எதிர் காலம் எவ்வாறு அமைய வேண்டும் என வழிநடத்தவும் முற்படுகின் றன. இவ்விதமான பார்வை வரலாற்றின் நேரடியான பதிவுகள் என்று சொல்லக்கூடிய ஆவண வடிவிலான பதிவுகளில் மட்டுமல்லாமற் கலை இலக்கியங்கள், அற நூல்கள் போன்றவற்றிலும் வெளிப்படுகிறது.

நமக்குச் சொல்லப்படுவன மெய்யா பொய்யா என்பது ஒருபுற மிருக்க, அவை ஏன் குறிப்பிட்ட விதங்களிற் சொல்லப்பட்டுள்ளன என்றும் ஏன் தொடர்ந்தும் அவ்வாறு சொல்லப்படுகின்றன என்றும் சிந்திக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். எழுதப்பட்ட வரலாறு குறிப்பிட்ட சில வர்க்க நலன்களுட்; சிக்குண்டுள்ளது. எனவே சமூக விடுதலைக் கான போராட்டம், தவிர்க்க முடியாது, வரலாற்றை விடுவிக்கும் ஒரு போராட்டமாகவும் அமைகிறது. நாம் விரும்பும் ஒரு மனித சமத்துவ சமூகத்தை அடைய வேண்டின் சமூக மாற்றங்கள் எவ்வாறு நேர்ந்தன, அம் மாற்றங்களின் பின்பான இயங்கு சக்திகள் எவை, இயலுமாக்கிய சூழ்நிலைகள் எவை என்ற உண்மைகளின் அடிப்படைக் கூறுகளை எழுதப்பட்ட வரலாற்றினுள் இருந்து வடித்தெடுக்கும் தேவை நமக் குள்ளது. எனவே வரலாற்றை விளங்கிக் கொள்ளும் அவசியத்தைப் பேச வேண்டியிருக்கிறது.

வென்றவர்களே மனித சமுதாய வரலாற்றை எழுதினர். நிலமானிய சமுதாய அதிகாரத்தின் கீழ் எழுதிய வரலாறே விவரமான வரலாற்றின் நீண்டகாலத்தைக்; கொண்டது. வரலாறு பற்றிய பார்வையில் முதலாளி யத்தின் வருகை ஏற்படுத்திய மாற்றம் வரலாற்றை விரிவாக ஆராயும் வாய்பை ஏற்படுத்தியது. ஆனால் முதலாளிய வர்க்க நலன்கள் விஞ் ஞான ரீதியான வரலாற்றுப் பார்வையின் முழுமையான பிரயோகத்தை மறிக்கின்றன. வரலாறு, சமூதாயத்தின் உந்து சக்திகளான மனிதப் பிரிவுகளின் செயற்பாட்டால் உருவாகிறது என்ற அடிப்படை உண்மை யை அது மாற்றியும் திரித்தும் தனிமனிதச் செயற்பாடுகட்கு முக்கிய மளிக்கிறது. மார்க்சிய வரலாற்றுப் பார்வை, அது சார்ந்திருக்கும் வர்க் கத்தின் வரலாற்றுப் பணியுடன் இணைந்து வரலாற்றை நோக்குகிறது. மார்க்சிய வரலாற்றுப் பார்வை சமுதாய விருத்தியிலும் மாற்றத்திலும் மதம், மொழி, பண்பாடு, தேசிய உணர்வு போன்றவற்றின் பங்கை அடையாளங்; காண்கிறது. ஒவ்வொன்றும் தன்னளவிற் சமுதாயத்தின் ஆதிக்கச் சக்திகளதும் சமுதாய மாற்றத்தின் உந்து சக்திகளதும் செயற்பாட்டில் எவ்வாறு பயன்பட்டன என்று ஆராய்கிறது. இதனடிப் படையில் வரலாற்றின் பிரதான போக்கு எதுவென அது சுட்டிக் காட்டுகிறது. வரலாற்றைச் சரிவர அறிவதன் மூலம் வரலாற்றை உருவாக்க அது பங்களிக்கிறது.

வரலாற்றியலும் வரலாற்றாசிரியர்களும்
‘முழுமையான வரலாறென ஒன்று இல்லை. வரலாற்றை விளக்கு வோனே வரலாற்றை ஆக்குகிறான். நிகழ்வுகளைப் பட்டியலிடுவது மட்டும் வரலாறல்ல. அவற்றை விளக்குவதிற் தான் வரலாறு இருக் கிறது’ என்பார் வரலாற்றியலாளர் இ.எச். கார். வரலாறு ஆய்வுக் குரியதாக வளர்ந்த பின்னணியில் வரலாற்றியல் (hளைவழசழைபசயிhல) ஒரு ஆய்வுத்துறையாக உருப்பெற்றது. வரலாற்றாசிரியர்கட்கு இ.எச். கார் வழங்கிய அறிவுரை இங்கு கவனிக்கத்தக்கது: “ஒரு வரலாற்றாசிரியன் கடந்த காலத்தில் வீழ்ந்து கிடப்பதோ கடந்த காலப் பிடியிலிருந்து மீள்வதோ கூடாது. கடந்த காலத்தைத் தீர்க்கமாக உள்வாங்கிய பிறகு, நிகழ்காலத்தை விளங்குதற்கான முக்கியமான கருவியாக அதைக் கையாள வேண்டும்”. இக் கூற்று ஒருவகையில் வரலாற் றாளர்களையும் வரலாற்றியலையும் வேறுபடுத்துகிறது. வரலாற்றை எழுவோரிடமும் விளக்குவோரிடமும் ‘விஞ்ஞானப் பார்வை’ இருக்க அவசியமில்லை. ஆனால் வரலாற்றியல் தகவல்களில் விஞ்ஞானப் பார்வையை வேண்டுகிறது.

வரலாற்றியலை ஒரு ஆய்வுத்துறையாக வளர்த்ததில் மார்க்சியத் தின் பங்கு பெரிது. மார்க்ஸ் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தினூடு உலகை விளக்கினார். “மனிதர்கள் தமது வரலாற்றைத் தாமே உரு வாக்குகிறார்கள். ஆனால் அதை அப்படியே தமது விருப்பத்திற்கமைய உருவாக்குவதில்லை. தாமே தேர்ந்தெடுத்த ஒரு சூழலில் அவர்கள் அதை உருவாக்குவதில்லை. ஆனாற் கடந்த காலத்திலிருந்து நேரடி யாக வந்த, வழங்கப்பட்ட, கடத்தப்பட்ட சூழலில் அதை உருவாக்கு கிறார்கள்” என்று வரலாறு பற்றிய தனது வாதத்தை மார்க்ஸ் முன் மொழிந்தார்.

‘வரலாற்றாசிரியன் பழங்காலத்தைப் பற்றி அக்கறை உடையோ னாயினும் தான் ஆராய்கிற சமுதாயத்தின் வருங்காலத்தில் அவன் ஒரு முக்கிய பாத்திரமுடையவனாய் இருக்கிறான் என்பது வினோத மான ஒரு முரண்பாடாகும்’ என்பார் ரொமிலா தாப்பர். தாப்பர் இந்த முரணைப் பின்வருமாறு விளக்குகிறார்: ‘வரலாற்றின் பொருளைக் காண்பதில் இருவித சிந்தனைப் போக்குகள் இருக்கின்றன. தற்காலத் தேவைகளைக் கடந்த காலத்திற் காண முயல்வது ஒன்று, பழங்காலத்தின் படிமத்தை தற்காலத்தின் மீது பதிக்க முயல்வது மற் றொன்று’. இன்று நாமறியும் சமூக விஞ்ஞானத் துறையாக வளர்ந் துள்ள வரலாற்றியலின் முக்கிய கூறாக நாமிதைக் கொள்ளலாம். இச் சிந்தனைப் போக்குக்களே வரலாற்றியலின் விஞ்ஞானத்தன்மைக்குச் சவாலாகவும் இருக்கின்றன.

வரலாற்றியல் மூன்று பிரச்சினைகளைக் கொண்டது: (1) வரலாற்று அறிவின் முக்கியம் என்ன? (2) அதன் குறிக்கோள் என்ன? (3) வர லாற்று அறிவிற்கும் பிற அறிவுத்துறைகட்குமான தொடர்பு என்ன?

கோட்பாடுகளும் கொள்கைச் சொல்லாடலும் வரலாற்றாசிரியரைக் குறிப்பனவன்றி வரலாற்றைக் குறிப்பனவல்ல. வரலாற்று வரைவியலின் அடிப்படை, ஒரு வரலாற்றாசிரியர் வரலாற்றை எப்படிப் பார்ப்பது, எவற் றை இயங்கியலடிப்படையில் இணைத்துப் பார்ப்பது, எதை வரலாறா கக் கொள்வது, வரலாற்றைத் தீர்மானிக்கும் சக்திகள் எவை ஆதியன பற்றிய தர்க்கமேயொழிய வரலாற்றைப் பற்றிய தர்க்கமல்ல.

தென்னாசியச் சூழலில் வரலாற்றின் வகிபாகம்
தென்னாசியச் சூழலில் வரலாற்றை ஆராயின் அதில் இந்தியாவின் பங்கு பெரிது. இந்திய வரலாறிறின் ஒரு குறுக்குவெட்டு எமது சூழலில் வரலாறு எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பதையும் அதன் ஆபத்துக்களையும் மதவாதமும் தேசியவாதமும் ஆழ வேரூன்று தற்கான கருவியாக வரலாறு எவ்வாறு பயன்பட்டுள்ளது என்பதை அறியலாம். முதன்மையான இந்திய வரலாற்று ஆய்வாளரான டி.டி. கோசாம்பி இந்திய வரலாற்று ஆய்வுக்கு ஒரு அறிமுகம் (An Introduction to the Study of Indian History) என்ற தனது நூலில் வரலாற்றை எவ்வாறு அறிந்து எழுதுவது என்பதை இந்திய வர லாற்றுப் போக்கில் விளக்குகிறார். அவர் கால ஓட்டத்தில் உற்பத்தி யும் உற்பத்தி உறவுகளும் எவ்வாறு மாறி வந்துள்ளன என்பதையும் அந்த ஓட்டத்தின் கால வரிசையையும் (chronology) கண்டறிவதே வரலாறு என்பது என்கிறார்.

பேரரசுகளிடமிருந்தும் கொலனியத்திலிருந்தும் விடுதலையடைந்த நாடுகளிலும்; தேசங்களிலும் கடந்த இரண்டு, மூன்று தசாப்தங்களாக இன, மத அடக்குமுறைகளும் அதற்கெதிரான போராட்டங்களும் வளர்ந்துள்ளன. பேரரசுகளதும் கொலனி ஆட்சிகளதும்; நேரடி ஆட்சி யிலிருந்து நாடுகளும் தேசங்களும் விடுபட்டிருந்தாலும், முன்னைய வற்றின் அடக்குமுறையும், சுரண்டலின் பிடியும் தொடர்ந்துமிருக் கின்றன. அவை, எந்த நாட்டையோ தேசத்தையோ நேரடியாகக் கைப்பற்றாமல் அடக்கி ஆளும் நவகொலனிய முறைகளாக வளர்ந் துள்ளன. பேரரசுகளிடமிருந்தும் கொலனியத்திலிருந்தும் விடுபட்ட நாடுகளின் ஆட்சி அவ்வந் நாடுகளின் முதலாளி வர்க்கத்திடமே சென்றது. மாறிய சூழலில் அவை பெரும்பாலும் நவகொலனிய ஏகாதிபத்தியச் சார்புடன் நடந்தன. நவகொலனிய ஓடுக்குமுறையும் உள்நாட்டு முதலாளிய ஆட்சியும் உள்நாட்டில் இனமத முரண்பாடு களைக் கூர்மைப்படுத்தின. இலங்கையும் இந்தியாவும் இதற்கு விலக்கல்ல.

இர்ஃபான் ஹபீப், இந்திய வரலாறு பற்றிக் கருத்துரைக்கையில், ‘இந்திய வரலாற்றை மீள்கட்டமைக்கும் முயற்சிகள் கற்பனை வர லாறுகளாக, ஒருதலைப்பட்சமான வரலாறுகளாக மீளுருவாக்கப் பெறு கின்றன’ என்கிறார். ஒரு தனிமனிதருக்குக் கடந்த கால மோகம் என்பது எவ்வாறோ அவ்வாறே நாட்டு மக்களுக்கு வரலாறு. தவறாகத் தன்னை மகத்தானவன் என எண்ணுபவன், சில சதிகாரர்களின் வஞ்சனையால் உலகம் தனது மகத்துவத்தை ஏற்க மறுப்பதாக முடிவெடுத்தால் விளைவு எவ்வாறு இருக்கும்? வரலாறும் இவ்வாறு தவறாக விளங்கப்படுவதால் ஆபத்துக்களை உருவாக்குகிறது. இந்திய வரலாற்றிலும் இதுவே நடக்கிறது என்கிறார் ஹபீப். “பொய் வரலாறு எத்தனை உடனடிக் குறுகிய புகழாரங்களைச் சூட்டினும் அது மக்களின் ஒழுக்கநெறி எனும் உயிர் நரம்பைக் கத்தரித்து அவர்களின் முன்னேற்றத் திறனை அறுத்தெறிந்து விடும்;. எனவே எக்காரணங் கொண்டும் இவ்வாறான கதையளக்கும் வரலாறுகளை நியாயப்படுத்த லாகாது” என இந்திய வரலாறு எதிர்கொள்ளும் சவாலை விளக்கு கிறார் ஹபீப்.

இந்திய வரலாற்றியல் கொலனியாதிக்க கால வரலாற்றாசிரியர் களின் துணையுடனேயே விருத்தியடைந்தது. குறிப்பாக 19ம் நூற் றாண்டிலும் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மதவாதத்துடனும் இந்தியத் தேசியவாதத்துடனும் பின்னிப் பிணைந்தே இந்திய வரலாறு எழுதி விளக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வரலாற்றுத் திரிப்பின் உதவியுடன் இந்தியத் தேசிய அடையாளம் இந்துத்துவ அடிப்படையிற் கட்டமைக்கப்பட்டது. அது இந்துத்துவ இந்திய அடையாளத்தை அனைத்து இந்தியர்கட்கும் வழங்க முயன்றது. இவ்விடத்திற் கவனிக்க வேண்டிய விடயம் தேசிய அடையாளத்தின் வரலாற்றின் பாற்பட்ட தன்மையாகும். அதற்கு நிரந்தரப் பண்பு எதுவும் இல்லை. அது செயற்படும் கால, இடச் சூழல்கட்கு வெளியே அதற்கு எந்த முக்கிய முங் கிடையாது. தரப்பட்ட ஒரு சமூகச் சூழலில் மனிதர் தம்மை ஒரு குறிப்பிட்ட முறையில் அடையாளங் காணக் கட்டாயப்படுகின்றனர். இந்த அடையாளங் காணலில் ஒரு பகுதி அகத்தினின்றும் அதினும் முக்கியமான ஒரு பகுதி புறத்தினின்றும் வருவதை நாம் வரலாற்றில் திரும்பத் திரும்பக் காண்கிறாம்.

தேசிய அடையாளம் பற்றிய மயக்கங்கள் பலவும் தேசியத்தை வரலாற்றுக் கண்ணோட்டத்தில் நோக்கத் தவறுவதன் விளைவுகளே. தேசிய அடையாளம் ஒரு அரசியற் சக்தியாகச் செயற்படும்போது அதற்கு யதார்த்த அடிப்படை உண்டு. அதன் நியாயமும் நியாயமின் மையும் ஒருபுறமிருக்க, தேசியவாதத்தின் அரசியற் தேவைகள் அதன் யதார்த்தத்திற்கும் அப்பாலான சில புனைவுகளை உருவாக்கித் தேசிய அடையாளத்தையும் தேசிய இனத்தையும் தேசிய வரலாற்றையும் தேசியப் பண்பாட்டையும் பிற பொதுப் பண்புகளையும் அதன் வசதிக்கேற்ப வரையறுக்கத் தூண்டுகின்றன. இந்த அடையாள இலக் கணப் பண்புகள், ஒரு கால-இடச் சூழலில் உறவு பூணும் மக்களிடையே “நாங்கள்-அவர்கள்” என்ற வேறுபாட்டைக் காட்டப் பயன்படுகிறது. இந்த அடிப்படையில் நோக்கின் நிற அடையாளம், சாதி அடையாளம், பிரதேச அடையாளம் போன்ற பல அடையா ளங்களுடன் தேசிய அடையாளம் பல பொதுப் பண்புகளைக் கொண்டி ருக்கக் காணலாம். இவ்வாறான அடையாளங்கள் ஒன்றோடொன்று இணைந்து தனித்துவமான அடையாளங்களாகத் தம்மை வலியுறுத்திய சூழல்களும் வரலாற்றில் உண்டு. ரொமிலா தாப்பர் இதை விளக்கு கையில் “இந்துக்களும் முஸ்லிம்களும் இருவேறு தேசத்தினர் என்ற கற்பனா வரலாற்று உருவாக்கம் இந்தியாவும் பாகிஸ்தானும் உரு வாகக் காரணமாகியது. ஆனால் இக் கற்பனா வரலாறு பங்ளாதேஷ் பிரிவினையாற் பொய்ப்பிக்கப்பட்டது” என்றார். இந்திய வரலாறு தேசிய ஒற்றுமையின் அடிப்படையில் ஒரு பொதுப் பண்பாட்டை உருவாக்கும் கருவியாகப் பயன்பட்டது. ஒவ்வொரு தேசமும் மட்டுமன்றித் தேச மென்று தன்னைக் காட்டிக் கொள்ள வேண்டப்படும் ஒவ்வொரு சமூகப் பிரிவும் தனக்கென்றொரு தனியான அடையாளத்தை மட்டுமன்றி ஒரு வரலாற்றுத் தொன்மையையும் வலியுறுத்துமாறு தூண்டப்படுகிறது. அதன் விளைவாகப் பல மாயைகள் உருவாகின்றன. காலப் போக்கில் அவை வரலாற்று உண்மைகளாகவும் தேசிய சித்தாந்தத்தின் முக்கிய மான ஒரு பகுதியாகவும் நிலைபெறுகின்றன. இதன் விளைவுகளை நாம் பல்வேறு வடிவங்களிற் காண முடியும். மதவாதச் சக்திகளி டமிருந்து வரலாற்றை காப்பாற்றுவதே இன்று இந்திய வரலாறு எதிர் நோக்கும் அடிப்படையான சவால். இன்று இந்தியாவிற் பெருகிவரும் இந்துவச் சக்திகள் வரலாற்றைப் திரிப்பதனூடு வலுப்பெறுகின்றன.

தென்னாசியாவிற் பத்தொன்பதாம் நூற்றாண்டில், மதங்கள் தமது அடிநிலைச் சனங்களின் மட்டத்தில் இருந்த நெகிழ்விலிருந்து விலகி இறுக்கமான எல்லைகளை வகுத்தன. அவை இன்றும் விரிந்த தளத்தில் மதங்கள் இயங்க வழிகோலின. இப் பண்பு அண்மைக் காலத்திலும் தொடர்ந்தது. மதம் வரலாற்றை விளக்கும் ஒரு அடிப்ப டையாகியது. கொலனிய எழுத்துலகில் இந்திய வரலாறு இந்துக்களின் காலம், முஸ்லிம்களின் காலம், ஆங்கிலேயர் காலம் என மூன்று பகுதிகளாக வகுக்கப்பட்டது. இக் காலப்பகுப்புத் தவறானது. ஒரு சமயத்தைத் தனி அடையாளமாக்கி காலத்தைப் பகுப்பது வரலாற்றை மறுப்பதாகும் என வாதிடும் ரொமிலா தாப்பர், இந்து, இஸ்லாமிய தேசியவாதிகள் தமக்கு வேண்டிய சான்றுகளைக் கொலனிய வர லாற்று நூல்களிலி;ருந்தே பெறுகிறார்கள் என்றும் சொல்கிறார்.

இலங்கை வரலாற்றை விளங்குவதிலும் நாம் இவ்வகைச் சிரமங் களை எதிர்நோக்குகிறோம். மகாவம்சத்தை அடிப்படையாகக் கொண்டு விருத்திபெற்ற சிங்களத் தேசியவாதமும் யாழ்ப்பாண வைபவமாலை போன்றவற்றின் அடிப்படையில் வேர்கொண்ட தமிழ்த் தேசியமும் முற்றிலும் முரணான கதையாடல்களை (narratives) முன்வைத்து, அதற்கு ஆதரவாக வரலாற்றைப் பற்றிக் கொண்டன.

மகாவம்சம் கி.பி. 5ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் பௌத்தம் பின்னிடைவு கண்ட வேளை இலங்கைக்கு வந்த தேரவாத (ஹீனயான) பௌத்தத் துறவிகளால் எழுதப்பட்டதாகச் சொல்லப் படுகிறது. எனினும், மகாவம்சம், பிரித்தானியர் ஆட்சியின் போது பர்மாவிலிருந்து கொணர்ந்த ஆங்கில மொழிபெயர்ப்பாகவே இலங் கைக்கு மீள அறிமுகமானது. அதிற் தேரவாதத்திற்குப் போட்டியான பௌத்தச் சிந்தனைகட்கும் மேலாக ‘அந்நியத்’ தமிழருடனும் (பர தெமல) இருந்;த முரண்பாடுகள் அழுத்தம் பெற்றன. அண்மைய விதிவிலக்குகளாக மதச்சார்பற்ற நவீன வரலாற்றாசிரியர்கள் சிலரது ஆக்கங்களைத் தவிர்த்தால், இலங்கையின் வரலாற்றியல் சிங்களவர் இம் மண்ணின் மக்கள், பவுத்தமே அவர்களது மதம், பிற யாவும் அந்நியமானவை என்ற அடிப்படையிலேயே உள்ளது. இடையிடையே “ஆரிய சிங்ஹல” எனக் கூறப்படும் சிங்கள இனம் முழுவதும் விஜய னதும் அவனது நண்பர்களதும் வழித்தோன்றல்கள் எனப் பன்னெடுங் காலமாகப் பரப்புரை செய்யப்பட்டுள்ளது. இவை சிங்களத் தேசிய வாதத்தின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் இருப்புக்கும் இலங்கை மீதான உரிமைகோரலுக்கும் அடிப்படையாகிறது.

இதை மறுக்கும் தமிழ்த் தேசியவாதிகள், யாழ்ப்பாணத்திற் போர்த் துக்கேயரை எதிர்த்த ஒரு தமிழ் முடியரசையும் பிரித்தானியக் கொலனி யுகம் வரை நிலைத்த சிற்றரசுகளையும் சுட்டிக் காட்டுவர். ஆனால் இலங்கையிற் தமிழரிடையே பௌத்தம் செழிப்புடன் இருந்த தற்கு வலிய சான்றுகள் உள்ளன. இலங்கையின் வடக்கில் அகழ்வா ராய்வுகளின் மூலம் கண்டறியப்பட்ட டகோபாக்கள் (தூபிகள்), தம் அளவிலேனும், தென்னிலங்கையின் மாபெரும் சிங்கள பௌத்த டகோபாக்களை விடத் தமிழகத்திற் கண்டறியப்பட்டவற்றையே ஒத்தி ருக்கின்றன. இன்று சிங்களத் தேசியவாதிகளும் தமிழ்த் தேசியவாதி களும் இலங்கையில் ‘தமிழ்ப் பௌத்தம்’ இருந்தமையை ஏற்கத் தயா ராக இல்லை. அது அவர்களது கதையாடல்கட்கு நெருக்கடியைத் தரும். இந்தியாவிற் போலன்றி, இலங்கையில் மத அடையாளம் இன அடையாளத்தோடு ஒன்றுகிறது. இலங்கை வரலாறு சிங்கள-பௌத் தர்களின் வரலாறாகச் சித்தரிக்கப்பட்டு அந்த அடிப்படையிலேயே இலங்கையில் தேசிய வரலாறு கட்டமைகிறது. இது, தேசம் என்ற ஒன்றின் இருப்பை வரலாற்றில் அடையாளங்காணும் நோக்கிலன்றி, அதன் இன்றைய காட்சிப்படுத்தலை நியாயப்படுத்தும் நோக்கிலேயே தேசிய வரலாறு அதிகம் பயன்பட்டதைக் காட்டுகிறது. மனிதர் தம்மை ஒரு தேசமாக அடையாளங் காணும் கட்டாயம் எவ்வாறு ஏற்பட்டது என்பது பெரும்பாலும் மறக்கப்படுகிறது. அதன் பின்னர், அந்த அடையாளத்திற் தமது நலன்களைக் காணும் சமுதாயப் பிரிவினர் அதைத் தமது வசதிக்கேற்பக் குறுக்கவும் விரிக்கவும் முனைவதை நாம் காணலாம். சில வேளைகளில், அப் பிரிவினர் அந்த அடையா ளத்தை மிக வன்மையாக வலியுறுத்துவதையும் நாம் காணலாம். தேசிய அடையாளத்தின் தன்மையைக் காலத்துடன் மாற்றும் தேவை தேசியவாதத்தின் நெருக்கடியுடன் தொடர்புடையது. இந்த நெருக்கடி, உண்மையில், தேசிய சித்தாந்தத்தைத் தனது நோக்கத்திற்காகப் பயன்படுத்தும் ஒரு சமூகப் பிரிவினது நெருக்கடியாகும். வரலாற்றை தெளிவுற விளங்குவதன் மூலமே அதை அறிய முடியும்.

“தென்னாசியச் சூழலில் வரலாறு என்பது கடந்த காலத்தைக் கட்டமைத்தல் எனும் கொலனிய மரபின் வழி தோன்றியதாகும். அதை நாம் மீளாய்ந்தால் அது தனக்குள் தேசியவாதப் பிரதிபலிப்புக்களை உள்ளடக்கியமை நமக்குத் தெளிவாகும். தேசியவாதம் வரலாற்றுச் சூழ்நிலைகளின் விளைவாகத் தோன்றினாலும், குறிப்பாகத், தென்னா சியச் சூழலில் அது முழுச் சமூகத்தையும் உள்ளடக்கிய ஒரு தனி அடையாளத்தைக் கட்டமைத்தது. சில வேளைகளில் அது மேலோங் கிய குழுக்களின் அபிலாட்சைகளைப் பிரதிபலித்தது. காலப்போக்கில் அது வரலாற்றில் ஏற்கப்பட்ட மேலாண்மையாக மாறியது. அதனாலே யே தேசியவாதம், நாட்டுப்பற்று என்ற சொற்களின் பின் எந்தவித வர்க்க உள்ளடக்கமும் இல்லை என நினைக்கிறேன். எல்லா நாடுக ளிலும், ஆதிக்கம் செலுத்தும் சக்திகள் தங்கள் வர்க்க உள்ளடக் கத்தை அவற்றின் மீது சுமத்துகின்றன.” என்கிறார் அய்ஜாஸ் அகமட்.

வரலாற்றை விளங்குவதன் சவால்கள்
இ.எச். கார் வரலாற்றாசிரியர்கட்கு விடுத்த எச்சரிக்கை இங்கு முக்கிய மானது: “வரலாற்றாசிரியனைப் பல சுமைகள் அழுத்துகின்றன. அவற்றின் தேவைகளால் ஒரு வரலாற்றாசிரியன் எழுத்தாளன் என்பதற் குப் பதிலாக கலைக்களஞ்சியத் தொகுப்பாளனாக மாறும் அபாயம் எழுந்துள்ளது. எங்கோ தவறு நிகழ்ந்துள்ளது. சோர்வில்லாமல், முடிவில்லாமல் தகவல்களை சேகரிப்பதே வரலாற்றுக்கு அடிப்படை என்ற நம்பிக்கையில், தகவல்களே உண்மையைப் பேசிவிடும் அத னால் மேலதிகமான விவரங்களை நாம் கொள்ளக்கூடாது என்ற நம்பிக்கையிற் தான் தவறு இருக்கிறது. அந்த நம்பிக்கை உச்சத்தி லிருந்ததால் வரலாறு என்றால் என்ன என்ற கேள்வியைக் கேட்கக் கூடச் சில வரலாற்றாசிரியர்கள் நினைக்கவில்லை. சிலர் அது தேவை யில்லை என்றுங் கருதுகிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மெய்த் தகவல்களை வழிபட்டார்கள். பிறகு ஆவணங்களின் வழிபாட் டில் அது முழுமை பெற்று நியாயப்படுத்தப்பட்டது. மெய்த் தகவல்கள் என்ற கோவிலில் ஆவணங்கள் நோவாவின் தோணியாக இருந்தன. ஆவணங்களை வரலாறாக்க முயன்றார்கள்.” இந்த எச்சரிக்கை ஆழ்ந்த வாசிப்புக்குரியது.

“மேற்குலக நிறுவனங்கள் வரலாற்றை மறைக்கவும் திரிக்கவும் பின்நவீன மற்றும் கீழ்நிலைக் (subaltern) கற்கைகளை முன்னிலைப் படுத்துகின்றன. அவை வரலாற்றுக்கு விடுக்கும் சவால் பாரியது.” என்கிறார் இர்ஃபான் ஹபீப். “ஒருபுறம் உலகமயமாக்கல் முழு வீச்சில் நடைமுறையிலுள்ளது. மறுபுறம் ஒவ்வொரு நாடும் நாட்டுக்குள்ளே உள்ள ஒவ்வொரு பண்பாட்டு சமூகமும் வித்தியாசமானது. ஓவ்வொன் றினதும் வரலாறும் வேறுபட்டது என்றும் அவர்கள் சொல்கிறார்கள். கீழ்நிலை வரலாற்றாசிரியர் ரணஜித் குஹா சமூகங்கட்குத் தான் வர லாறு உண்டு என்கிறார். அப்படியானால் இந்தியாவுக்கு வரலாறு இல்லையா?” என்று வினவுகிறார் ஹபீப்.

“வரலாற்றியலாளர்கள் தீர்க்கதரிசிகள் அல்லர். வரலாற்றாசிரியர்கள் வரலாற்றின் ஒளியில் எதிர்காலத்தை கணிப்பிட்டு எதிர்வுகூற முடியாது. அது அவர்களின் பணியல்ல” என்பார் எரிக் ஹொப்ஸ்பாம். மெய்யிய லாளர் ஏர்னெஸ்ற் புளொக் (Ernest Bloch) சொன்னது போல, ‘மனிதன் நம்பிக்கையுடைய விலங்கு’. நாங்கள் எதிர்காலத்தைக் கனவு காணுகிறோம். அதற்கு நியாயங்கள் உள்ளன. வரலாற்றியலாளர் களும் ஏனையோரைப்போல எதிர்காலம் பற்றிய நம்பிக்கைகளைக் கொண்டிருக்க உரிமையுண்டு. ஒரு முக்கிய வேறுபாடு ஏதெனின் வர லாற்றியலாளர்கள் ‘விஞ்ஞான அறிவின்’ அடிப்படையிலேயே அவ்வாறு நம்பிக்கை வைக்குமாறு எதிர்பார்க்கப்படுகின்றனர். அவ்வடிப்படையில் வரலாற்றை விளங்கி எதிர்காலத்தை எதிர்கூறுவது சாதாரண மக்கள் வரலாற்றில் நம்பிக்கை வைப்பதற்கான நிகழ்தகவை அதிகரிக்கும்.

இத் தருணத்தில் வரலாற்றின் எதிர்காலம் பற்றிய கேள்வி இயல் பாக எழுகிறது. ஃபிரான்சிஸ் ஃபுக்குயாமா சோவியத் ஒன்றியத்தின் உடைவுடன் ‘வரலாற்றின் முடிவை’ அறிவித்தார். ஆனால் இருபத் தைந்து ஆண்டுகள் கடந்தும் வரலாறு முடியவில்லை என்பதை உலக நிகழ்வுகள்; நமக்கு உணர்த்தியுள்ளன. ரொமிலா தாப்பரின் வரிகளிற் சொல்லின் “மக்கள் தங்களைப் புரிந்துகொள்ளவும், கடந்த காலத் தைப் புரிந்துகொள்ளவும், சமூகத்தையும் தனிமனிதர்களையும் புரிந்து கொள்ளவும் வரலாறு அவசியம். தனி மனிதர்கள் இருக்கும் வரை எவ்வாறு சுயசரிதை அழியாதோ, அவ்வாறே வரலாறும் அழியாது.”

நிறைவாக
தென்னாசியச் சூழலிற், குறிப்பாக இலங்கையை மையப்படுத்தி, வரலாற்றை விளங்குவது இலங்கையையும் அதன் பிரதான முரண் பாடுகளைப் பற்றிய புரிதலுக்கு அவசியம். வரலாற்றியலின் ஒழுங்கு முறையான வளர்ச்சியிலும் அதை விஞ்ஞானபூர்வமாக மாற்றியதிலும் மார்க்சியத்தினதும் மார்க்சிய வரலாற்றாளர்களினதும் பங்கு பெரிது. வரலாற்று வளர்ச்சி பற்றிய மார்க்சின் பார்வை பொருள்முதல்வாத நிர்ணயிப்பைச் சமுதாயப் பரிமாணத்துக்கும் பொருந்துமாறு விரிவாக்கு வதினும் நுட்பமானது. “ஒருவர் தன்னைப் பற்றித் தான் என்ன கருது கிறார் என்பதை வைத்து எப்படி நாம் அவரைக் கணிக்க முடியாதோ, அவ்வாறே ஒரு சமுதாய மாற்றத்தின் காலத்தை அதன் உணர்வு நிலையிலிருந்து கணிக்க முடியாது” என்றார் மார்க்ஸ். வரலாறு பற்றிய இப் புரிதல் மார்க்சிய வரலாற்றியலிற் குறிப்பிடத்தக்கது.

இப் பின்னணியில் தேசிய நியாயத்தின் தேவை எமக்குரிய வரலாற்று முன்முடிவுகளின் அடிப்படையில் எமக்கு உணர்த்தப் படுகிறது. தேசிய நியாயத்தின் தேவை அவரவர்க்கு வாய்ப்பான வரலாற்றுத் தகவல்கள், வரலாற்றுப் புரட்டுகள், நம்பிக்கைகள், தொன்மங்கள் என்பவற்றின் மீது கட்டியெழுப்பப்படுகின்றன. இதுதான் இப்போது இலங்கையில் நடைபெறுகிறது. மொத்தத்தில் அனைத்துத் தரப்பு தேசியவாதிகளும் வரலாற்றியலைக் கழுவேற்றுகிறார்கள்.

தேசிய இன ஒடுக்கலுக்கு எதிரான போராட்டம் என்ற எல்லையைத் தேசிய நியாயம் தாண்டும் போது அது தேசிய மேலாதிக்கம் என்ற படிக்கட்டிற் காலை வைக்கிறது. ஐரோப்பிய வெள்ளை இனவாதமும் கிறிஸ்தவ மதவாதமும் ஐரோப்பிய தேசியவாதங்களும் யூத இன மக்களுக்கு எதிராக நடத்திய கொடுமைகளின் வரலாறு பல நூற் றாண்டுக்கால விரிவுடையது. அது ஜேர்மன் பாஸிஸமான நாற்ஸிய மெனும் வடிவில் யூதர்களை ஒடுக்கியபோது ஐரோப்பியத் தேசிய வாதங்கள் முதலில் அதைக் கண்டு கொள்ளவில்லை. ஏகாதிபத்திய நலன்கட்காக உலக வல்லரசுகள் இஸ்ரேலை உருவாக்கிய பின்பு, விடுதலைக்காக் போராடிய யூத தேசியம் ஆக்கிரமிப்பாளனாகவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களை மத்திய கிழக்கிற் காத்து நிற்கும் காவலனாகவும் மாறியது. அரபுத் தேசியவாதங்களாகத் தம் மைக் காட்டிக் கொள்ளும் பல அரபு ஆட்சிகள் பலஸ்தீன மக்களது விடுதலைக்காகச் செய்ததை விடத் தேசியத்தின் போராற் தமது நாடுகளில் தமது ஆட்சியை உறுதி;ப்படுத்தவும் தம் செல்வத்தைப் பெருக்கவும் செய்த காரியங்களே முதன்மையானவை. தேசிய நியா யத்தை வலியுறுத்தும் தேசிய நலன் பிற தேசிய இனங்களின் நலிவி லும் அழிவிலும் தன்னை மேம்படுத்தும் போக்கையுடையது. தேசிய வாதக் கண்ணோட்டத்திற், தேசிய முரண்பாடுகள் ஓயப் பிற தேசிய இனங்கள் ஒழிய வேண்டும். போர் இல்லாமல் அது இயலாது. ஹிற்லர் இவ்வாறான தேசியவாதத்தின் உச்சமான உதாரணமெனலாம்.

இந்த ஆபத்துகளை வரலாற்றின் உதவி கொண்டு மட்டுமே விளங் கலாம். “இதுவரை இருந்த சமுதாயங்கள் அனைத்தினதும் வரலாறு வர்க்கப் போராட்டங்களின் வரலாறே” என்ற கம்யூனிஸ்ட் அறிக்கை யில் ஒலிக்கும் வரிகள் வரலாற்றை எவ்வாறு விளங்கிக் கொள்வது என்பதற்கான அடிப்படையை எமக்குத் தருகின்றன. மார்க் சிய வரலாற்றியல் அதற்கான பற்றுக்கோடாக மட்டுமன்றி விஞ்ஞான முறையாகவும் இருக்கிறது. அதுவே வரலாற்றை விளங்கிக்கொள்ளும் அறிதல் முறையுமாகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *