Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /customers/a/4/a/nilankco.com/httpd.www/wp-includes/functions.php on line 6131 சர்வதேச நாணய நிதியம்: தரித்திரத்தின் சரித்திரம் - நிலங்கோவின் நிலம்
அரசியல்உலகம்உள்ளூர்என் கண்களில்...

சர்வதேச நாணய நிதியம்: தரித்திரத்தின் சரித்திரம்

இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் இன்னொருமுறை கையேந்துவது என்று முடிவாகி நீண்டகாலமாகிவிட்டது. எப்போது அக்கடன் கிடைக்கும் என்பதே இப்போதைய பிரச்சனை. ஊடகங்களும் பொருளியல் அறிஞர்களும், அரசியல் விமர்சகர்களும் எழுப்பும் கேள்வி அதுவே. சர்வதேச நாணய நிதியத்திடம் இதற்கு முன் 16 தடவைகள் இலங்கை கடன்வாங்கியதே, அக்கடனினால் இலங்கையால் அந்நியக் கடனை அடைக்க முடிந்ததா அல்லது இலங்கை மேலும் கடனாளியாகியதா என்ற வினாவை எழுப்புவோர் யாருமில்லை. கடந்தகாலத்தில் சர்வதேச நாணய நிதியத்திடம் வாங்கப்பட்ட கடனால் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்பது பற்றிப் பேசுவாரில்லை. ஆனால் எப்படியாவது இன்னொருமுறை கடனை வாங்கிவிட வேண்டும் என்று எல்லோரும் கங்கணம் கட்டிக் கொண்டுள்ளார்கள்.

இலங்கையின் அந்நியக் கடன் பற்றியும் பொருளாதார நெருக்கடி பற்றியும் பேசுவோர் பேசாமல் தவிர்க்கின்ற சில விடயங்கள் உண்டு. அவை முக்கியமானவை. இந்த நாட்டின் இன்றைய நெருக்கடிக்கு காரணங்களை கடந்த சில ஆண்டுகளின் நிகழ்வுகளில் மட்டும் விசாரித்தறிய இயலாது. எனினும் எதிர்க்கட்சிகளும் ஆய்வாளர்களும் அனைத்து பொருளாதாரப் பிரச்சனைகளையும் 2020இல் தெரிவான அரசாங்கத்தின் தலையிற் சுமத்த முற்படுகின்றனர். இந்நெருக்கடியில் அவ்வரசாங்கத்திற்கு முக்கிய பங்குண்டு என்பதில் மறுப்பில்லை. ஆனால் அடிப்படையான சில கோளாறுகள், இந்த நாட்டை நுகர்வுப் பொருளாதாரத்தினுட் தள்ளி தேசிய உற்பத்திகட்கு குழிபறித்து அந்நியக்கடன்கட்கு உட்படுத்திய அனைத்து அரசாங்கங்கட்கும் உரியன. இது வசதியாக மறக்கப்படுகிறது.

இன்றைய நெருக்கடிக்கு உடனடிக்காரணியாக உள்ள அந்நியச் செலாவணி நெருக்கடியை எடுத்து நோக்கினால் இந்த நாட்டின் உழைப்பாளர்களில் ஐந்தில் ஒருவர் நேரடியாக அல்லது மறைமுகமாக ஒரு அந்திய நாட்டிற்காக உழைக்கின்றனர். இது இரண்டு அடிப்படையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. ஒருபுறம் உள்நாட்டுத் தொழில் விருத்தி தடைப்படுகிறது. மறுபுறம் இது அயல் உழைப்பு வருமானத்தில் முற்றாக தங்கியிருக்கும் பலரைக் கொண்ட ஒரு சமூகமாக நம்மை உருமாற்றியுள்ளது. இத்தோடு தொடர்புடையதாக அந்நியச் செலாவணிக்கு இன்னொரு பரிமாணமும் உண்டு. அது நீண்ட போரின் விளைவால் தோற்றம்பெற்ற ஒரு பலம்பெயர் சமூகம். இப்பின்னணியிலும் எழுகின்ற கேள்வி யாதெனில் இவ்வாறு பல்முனைப்பட்ட அந்நியச் செலாவணி வருமானம் நாட்டுக்கு இருந்தபோதும் இந்தப் பங்களிப்பில் எவ்வளவு நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு உதவியுள்ளது? இந்த அந்நியச் செலாவணி எங்கு செலவிடப்படுகிறது, ஏன் செலவிடப்படுகிறது. இவையிரண்டும் பின்தொடரும் கேள்விகள்.

எமது அந்நியச்செலாவணியில் பெரும்பகுதி இறக்குமதியில் செலவாகிறது. இதற்கு அடிப்படையான காரணம் எம்மிடம் உட்பொதிந்துள்ள நுகர்வுப் பண்பாடு. திறந்த பொருளாதாரத்தின் அறிமுகத்தோடு உடன்பிறந்த உலகமயமாக்கல் இந்நுகர்வை புதிய தளத்திற்கு நகர்த்தியுள்ளது. இன்று நாம் அர்த்தமற்ற ஒரு நுகர்வுப் பழக்கத்திற்கு அடிமைப்பட்டுள்ளோம். அதன் துணை விளைவுகளாகவே உணவு இறக்குமதியின் பெருக்கமும் தனியார் கல்வியும் தனியார் மருத்துவமும் கட்டுபாடின்றி பெருகும் ஆடம்பரப் பொருட்களின் நுகர்வும் அமைகின்றன. இவையனைத்துக்கும் அந்நியச்செலாவணியே பயன்படுகிறது. இவ்வாறு அந்நியச் செலாவணி வீணாகிறபோது தொடர்ச்சியான அந்நியக் கடன்கள் மூலம் நுகர்வு குறையாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.

எமது அடிப்படையான பொருளாதார நிலைப்பாடுகளில் மாற்றம் தேவை. இந்த அடிப்படைச் சிக்கல்களைத் தீர்க்காமல் எந்தவொரு கடனும் பயன் தராது. ஆனால் இந்த மாற்றத்திற்கு அரசியல்வாதிகளோ, அரசாங்கமோ தயாராக இல்லை. எல்லோருக்கும் இருக்கின்ற ஆபத்பாண்டவன் சர்வதேச நாணய நிதியம். இதனிடம் கடன்வாங்கச் சொல்லிப் விதந்துரைக்கின்றவர்கள் இதுவரை உலகில் எந்தநாட்டை சர்வதேச நாணய நிதியம் கடனில் இருந்து மீட்டது என்ற தகவலைச் சொல்வார்களா? சர்வதேச நாணய நிதியத்தால் மீட்கப்பட்ட நாடென்று எதுவுமில்லை. இரண்டு நாடுகளை உதாரணமாகக் காட்ட விரும்புகிறேன்.

முதலாவது நாடு உக்ரேன். 2014 இல் உக்ரைன் சர்வதேச நாணய நிதியத்திடம் 17 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடனாக வாங்கியது. இதற்கான விதிக்கப்பட்ட கட்டமைப்பு மாற்றங்களில் இரண்டு பிரதானமானது. முதலாவது, அரசுக்குச் சொந்தமான விளைநிலங்களைத் தனியாருக்கு விற்பனை செய்வதும், தனியாரின் நிலக் கொள்வனவு தொடர்பாக கட்டுப்பாடுகளை நீக்குவதும். இரண்டாவது உக்ரேன் உயிரியல் தொழிநுட்ப விவசாயம் (biotech farming), மரபணுமாற்றப்பட்ட பயிர்ச்செய்கை மற்றும் மான்சாண்டோவின் நச்சு பயிர்கள் மற்றும் இரசாயனங்கள் விற்பனை ஆகியவற்றுக்கு அனுமதியளித்தல். இதன்மூல் பல்தேசியக் கம்பெனிகளிற்கான வாயில்கள் திறக்கப்பட்டது. இதன் மூலம் ஐரோப்பா முழுவதிலும் மிகவும் பழமையான ஒரு விவசாய நிலம் அழிக்கப்பட்டது. இதற்கு உக்ரேனிய அரசாங்கம் உடன்பட்டது. இந்த அரசாங்கமும் ஒரு அமெரிக்கச் சதியின் விளைவால் ஆட்சிக்கு வந்தது என்பதும் கவனிப்புக்குரியது. சர்வதேச நாணய நிதியக் கடனைத் தொடர்ந்து உக்ரேனில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டமைப்பு மாற்றங்களின் விளைவால், மான்சாண்டோ, பிளாக்ராக் மற்றும் வான்கார்ட் ஆகியவை 20 மில்லியன் ஹெக்டேருக்கு மேற்பட்ட நிலங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. சுருக்கமாகச் சொல்வதாயின் இந்நிறுவனங்கள் உக்ரேன் விளைநிலங்களில் 70%க்கு மேற்பட்டதை வாங்கியுள்ளன. ஐரோப்பாவில் மிகவும் வளமான மண், இப்போது பல்தேசியக் கம்பெனிகளுக்குத் திறக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இன்னும் கடன்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் உடன்பட்டது. அதற்கு மாற்றாக, உக்ரேன் ஓய்வூதியம் மற்றும் எரிபொருள் மானியங்களைக் குறைக்க வேண்டும். இதனை ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புட்டின் எரித்தார். சர்வதேச நாணய நிதியம் வழங்க உடன்பட்ட கடன்தொகையை எதுவித முந்நிபந்தனைகளின்றி வழங்க முன்வந்தது ரஷ்யா. இதைத் தொடர்ந்து நடந்தவைக்கும் இப்போதைய போருக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இது குறித்து இன்னொருமுறை விரிவாகப் பேசலாம்.

இங்கு நான் சுட்ட விரும்புகின்ற இரண்டாவது உதாரணம் ஆர்ஜென்றினா. சர்வதேச நாணய நிதியக் கடன் ஆர்ஜென்றினாவில் தோற்றுள்ளதாக இவ்வாண்டு தொடக்கத்தில் அந்த நிறுவனமே ஏற்றுள்ளது. இது பற்றி எந்த ஊடகமும் ஆய்வாளரும் எமக்குந் சொல்லவில்லை. ஆர்ஜென்றினாவின் கதை தனியே அதற்கு மட்டும் உரியதல்ல. இது முழு மூன்றாமுலகுக்கும் உரியது. குறிப்பாகக் கடந்த நூற்றாண்டில் தென்னமெரிக்காவில் கடன் என்ற போர்வையில் சர்வதேச நாணய நிதியம் இழைத்த கொடுமைகள் ஏராளம். குறிப்பாக 1990களில் தென்னமெரிக்காவில் உலகமயமாதலும் திறந்த பொருளாதாரமும் தீவிரமாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து “கட்டமைப்புச் சீராக்கம்” எனப்படும் அரச நிருவாகத் துறையைங் கட்டுப்படுத்தலும், அரசதுறைகளைத் தனியார்மயமாக்கலும் தொடர்ந்தன. பலநாடுகளில் சர்வதேச நாணய நிதியம் பொருளாதாரக் கொள்கைகளை ஒழுங்குபடுத்திக் கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டது. இவ்வாறு சர்வதேச நாணய நிதியத்தால் வடிவமைக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டதொரு நாடு ஆர்ஜென்றினா.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆர்ஜென்ற்றினா கடும் பொருளாதார நெருக்கடிக்கு உட்பட்டது. சர்வதேச நாணய நிதியக் கடன் உட்பட பல கடன்களையும் தீர்க்க இயலாது மக்கள் மீது மேலும் சுமைகளை ஏற்றிய ஒரு நிலையில் அங்கு ஆட்சிமாற்றமொன்று நடைபெற்றது. இடதுசாரிப் போக்கான புதிய அரசாங்கம் எந்தக் கடனையும் வட்டியையும் மீளச் செலுத்துவதில்லை என்ற முடிவை மிகத் தெளிவாக எடுத்தது. இதன் விளைவால் ஆர்ஜென்றினா மீது கடுமையான சர்வதேச அழுத்தங்கள் ஏவப்பட்டது. ஆனால் பலவாறான சர்வதேச அழுத்தங்கையும் மீறி ஆர்ஜென்றினாவின் பொருளாதாரம் சிறிது சிறிதாக நெருக்கடியிலின்று மீண்டது.

அதன் பின்னர் நெருங்கிய நட்பு நாடான வெனசுவேலாவின் உதவியுடன் சர்வதேச நாணய நிதியத்திடம் வாங்கிய கடனை முழுமையாக அடைத்ததோடு சர்வதேச நாணய நிதியத்திடம் இனிமேல் கடன் வாங்குவதில்லை என்ற முடிவையும் எடுத்தது. ஆனால் இது நீண்டகாலம் நிலைக்கவில்லை. ஒருசதியின் விளைவால் தீவிர வலதுசாரி அரசாங்கம் பதவிக்கு வந்தது. புதிய சனாதிபதியின் முதற்காரியங்களில் ஒன்று சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்தியமையாகும். ஆர்ஜென்றினா நாட்டுக்குள் மீண்டும் சர்வதேச நாணய நிதியம் நுழைந்தது. மிகக்குறுகிய காலத்தில் அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது, சமூக நலவெட்டுக்கள் வரைமுறையின்றி நடைமுறைப்படுத்தப்பட்டன. இன்று இலங்கை போன்று வங்குரோத்து நிலையில் ஆர்ஜென்றினா உள்ளது. இப்போது மீண்டும் சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்துகிறார்கள். இதன் பின்னணியிலேயே ஆர்ஜென்றினாவில் சர்வதேச நாணய நிதியம் தோல்வியடைந்ததை தொடர்ந்து வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தை நோக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியம் ஆபத்பாண்டவனோ, இரட்சகனோ அல்ல. இந்த உண்மை விளங்காவிடின் இன்னலில் தொடர்ந்தும் உழல்வதற்கு நாம் கடமைப்பட்டவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *