Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /customers/a/4/a/nilankco.com/httpd.www/wp-includes/functions.php on line 6131 கொவிட் கதையாடல்-1: இன்னொரு பெருந்தொற்றைத் தவிர்க்க இயலுமா? - நிலங்கோவின் நிலம்
அரசியல்உலகம்உள்ளூர்என் கண்களில்...

கொவிட் கதையாடல்-1: இன்னொரு பெருந்தொற்றைத் தவிர்க்க இயலுமா?

கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையிலான ஊசலாட்டத்தின் நடுவே மனிதகுலம் முக்கியமான புள்ளியொன்றில் நிற்கின்றது. ஒருபுறம் கொவிட்-19 தொற்று தொடங்கி ஓராண்டாகி விட்டது. மறுபுறம் இந்தப் பெருந்தொற்றுக்கான தடுப்பு மருந்து பரிசோதனைகளின் பின்னர் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது இந்தப் பெருற்தொற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பணியை தடுப்பு மருந்தின் மீது போட்டுவிட்டு உலகம் அப்பால் நகர்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. உலக நாடுகளின் தலைவர்கள், அமைப்புக்கள் அந்தத் தொனியிலேயே பேசுகின்றன. இன்னொருபுறம் இதைச் “சீன வைரஸ்” என்று பரிகசித்துவிட்டு அப்பால் நகர்வதும் நடக்கிறது. ஆனால் இவற்றுக்கு அப்பால் நாம் எழுப்ப வேண்டிய பிரதானமான கேள்விகள் உள்ளன. அக்கேள்விகள் நம் பிள்ளைகளின், பேரக்குழந்தைகளின் எதிர்காலம் பற்றியன. அவற்றையே இந்த ‘கொவிட் கதையாடல்களில்’ அலச விளைகிறேன். இவை பல சமயங்களில் கடுப்பூட்டும், அதிர்ச்சி தரும், அச்சமடைய வைக்கும்.

இம்முறை நாம் எழுப்புகின்ற கேள்வி யாதெனில்: மனிதகுலம் இன்னொரு பெருந்தொற்றைக் கையாளுவதற்கு தயாராக இருக்கிறதா என்பதே. இன்னும் சரியாகச் சொல்வதானால் இன்னொரு பெருந்தொற்றை எம்மால் தவிர்க்க இயலுமா? இந்தப் பெருந்தொற்றையே எம்மால் கட்டுப்படுத்தவோ கையாளவோ இயலவில்லை. இந்தக் கட்டுரையை எழுதுகின்ற போது உலகளாவிய ரீதியில் 15 இலட்சம் உயிர்களை இந்த கொவிட்-19 காவு கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 70 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தொற்றுக்களையோ அதன் மோசமான வடிவமாகிய பெருந்தொற்றுக்களை எதிர்கொள்வதற்கு தயாராக நாம் இருந்ததில்லை. கடந்த இருபது ஆண்டுகளில் சார்ஸ், மேர்ஸ், ஏபோலா, சீகா போன்ற தொற்றுக்களை நாம் கண்டிருக்கின்றோம். ஆனால் அவை தங்கள் கைவரிசையைக் காட்டிவிட்டே சென்றன. ஏபோலா ஆபிரிக்காவை மையமாகக் கொண்டிருந்தது, சார்ஸ் ஆசியாவை மையப்படுத்தியது, சீகா வைரஸ் இலத்தீன் அமெரிக்காவை மையமாகக் கொண்டிருந்தது. இந்தத் தொற்றுக்கள் மேற்குலகில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இதனால் தொற்றுக்கள் குறித்த அக்கறையும் ஆய்வும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்து வந்திருக்கிறது.

மனிதகுலத்தின் அலட்சியத்தையும் அவதானமின்மையையும் இந்தக் கொவிட்-19 பெருந்தொற்று வெளிச்சம் போட்டு காட்டி விட்டது. அதேவேளை இதை நாடுகள் கையாண்ட விதம் மனிதர்களை விட இலாபமே முக்கியம் என்பதை அரசாங்கங்கள் மக்களுக்கு மீண்டுமொருமுறை உரைத்தன. அண்மையில் வெளிவந்த அறிக்கை ஒன்று தொடர்பில் உங்கள் கவனத்தைக் கோருகிறேன். இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பது ஐக்கிய நாடுகள் சபையின் Intergovernmental Science-Policy Platform on Biodiversity and Ecosystem Services (IPBES). ‘நோய்த்தொற்றுச் சகாப்தத்தில் இருந்து தப்பித்தல்’ (Escaping the Era of Pandemics) என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த அறிக்கையை உலகின் முக்கியமான 22 விஞ்ஞானிகள் இணைந்து எழுதியுள்ளார்கள். 108 பக்கங்கள் விரிகின்ற இந்த அறிக்கை அச்சம் தருவதாய் உள்ள அதேவேளை மனிதகுலத்தின் செயற்பாடுகள் குறித்த பல முக்கிய கேள்விகளையும் எழுப்புகிறது.

அவ்வறிக்கை சுட்டுகிற சில முக்கியமான விடயங்களை மட்டும் பார்க்கலாம். முதலாவதாக உலகின் ஏற்படுகின்ற தொற்றுக்கள் அனைத்தும் இயற்கையில் உள்ள நுண்ணுயிர்களின் பல்வகைமையினால் ஏற்படுகின்றன. இதில் 70மூ மான தொற்றுக்களின் மூலங்கள் விலங்குகளே. அவ்விலங்குகளுடன் காட்டுவிலங்குகள், கால்நடைகள், மனிதர்கள் ஆகியவற்றுக்கு ஏற்படுகின்ற தொடர்புகள் தொற்று நுண்ணுயிர்கள் மனிதர்களுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் கடத்துகின்றன. உலகில் இப்போது கண்டுபிடிக்கப்பட்டாத 1.7 மில்லியன் வைரஸ்கள் இருக்கின்றன. இவை பாலூட்டிகளிலும் பறவைகளிலும் உயிர்வாழ்கின்றன. இதில் 450,000 – 850,000 வரையானவை மனிதர்களுக்கு பரவக்கூடியவை எனக் கணக்கிடப்பட்டுள்ளன. இதில் இந்த வைரஸ் காவிகளில் பிரதானமானவை மனிதர்களுடன் நெருங்கிய ஊடாட்டத்தில் உள்ளன.

நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கான ஆபத்துக்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன. ஆண்டுதோறும் 5 புதிய நோய்கள் மனிதர்களைத் தாக்குகின்றன. இவை ஒவ்வொன்றும் தொற்றாகவோ பெருந்தொற்றாகவோ மாறும் ஆபத்துடையவை. இதற்கான வாய்ப்புகளை மனிதகுலம்சார் (anthropogenic) மாற்றங்கள் அதிகரித்துள்ளன. தொற்றுக்களுக்கு வனவிலங்குகளைப் பழிசொல்வது தவறானது. மனிதர்களின் செயல்களே இந்தத் தொற்றுக்கள் ஏற்படுவதற்குக் காரணமாகின்றன. குறிப்பாக மனிதனது செயல்கள் சுற்றுச்சூழலுக்கு விளைத்த கேடு முதன்மையானது.

நின்றுநிலைக்காத வகையில் இயற்கையைச் சுரண்டுவதானது – நிலப்பாவனை, விவசாய விரிவாக்கம், வனவிலங்கு வர்த்தகம், உணவுச்சங்கியிலில் வனவிலங்குகள், செறிவாக வளர்க்கப்படும் கால்நடைகள் – இயற்கையின் இயல்பான இருப்பையும் செயற்பாடுகளையும் பாதித்துள்ளது. இதன்விளைவால் கிருமிக்காவி விலங்குகள், கால்நடைகளுடனும் மனிதர்ளுடனும் உறவாட நேர்கிறது. இந்த மாற்றமே அனைத்து வகையான தொற்றுகளுக்கும் காரணமாயுள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

காலநிலை மாற்றம் தொற்று உருவாக்கத்திலும் பரவுகையிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறிப்பாக மக்களின் இடம்பெயருகை, காட்டுவிலங்குகள் புதிய இடங்களுக்குப் போதல் புதிய விலங்குகளோடு சேர்ந்து வாழுதல், அதீத காலநிலை போன்ற நோய்க்கிருமிகளின் பரம்பலுக்கும் கடத்தலுக்கும் வாய்ப்பாகின்றன.

அதேபோலவே உயிர்ப்பல்வகைமையின் இழப்பு இயற்கையின் நிலஞ்சார் அமைப்புக்களை நிலைமாற்றம் செய்கின்றது. இதன் விளைவால் சில உயிரினங்கள் மனிதருடன் மாற்றங்களை உள்வாங்கி வாழ இயல்பூக்கமடைகின்றன. இவை தம்முள் நோய்கிருமிகளை வைத்திருந்து மனிதர்களுக்கு கடத்தவல்லன. இன்னொருபுறம் மனிதர்கள், கால்நடை, வனவிலங்குகள் ஆகியவற்றில் உள்ள நோய்க்கிருமிகள் உயிர்ப்பல்வகைமையைப் பாதித்து மாற்றத்தை ஏற்படுத்தும் செயல்களும் நடக்கின்றன.

1960ம் ஆண்டுமுதல் நோய்த்தொற்றுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் சொல்கின்ற பிரதான செய்தி யாதெனில் 1960ம் ஆண்டு முதல் அறிக்கையிடப்பட்ட நோய்த்தொற்றுகளில் 30மூக்குக் காரணம் நிலப்பயன்பாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களே. காடழிப்பு, வனவிலங்குகள் வாழ்ந்த பகுதிகளில் மனிதக்குடியிருப்புகள், பயிர்கள் மற்றும் கால்நடை உற்பத்தியின் அபரிமிதமான அதிகரிப்பு, நகரமயமாதல் ஆகியன பிரதானமானவை.

நிலப்பயன்பாட்டில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் ஒரு தொடர்சங்கிலியான அனைத்தையும் பாதிக்கின்றன. குறிப்பாக நிலப்பயன்பாட்டு மாற்றம் காலநிலை மாற்றத்துக்கு முக்கிய காரணமாகிறது (காடிழப்பு, வெப்பம் அதிகரித்தல்). அதேபோல இது உயிர்பல்வகைமையின் இழப்புக்கும் காரணமாகிறது. உயிர்ப்பல்வகைமையை அழித்து அவ்விடங்களை மனிதர்களும் கால்நடைகளும் அபகரிப்பதானது தொற்றுகள் இலகுவில் மனிதர்களுக்கு கடத்தப்படுவதற்கு வாய்ப்புக்களை அதிகரிப்பதோடு தொற்றுவீதத்தையும் அதிகரிக்கிறது.

இதேபோல வனவிலங்கு வர்த்தகம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். ஆண்டுதோறும் உலகில் உள்ள வனவிலங்குகளில் 24%மானவை வர்த்தகம் செய்யப்படுகின்றன. இந்த வர்த்தகம் கடந்த 14 ஆண்டுகளில் 5 மடங்காக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் ஆண்டொன்றுக்கு சராசரியாக 20 மில்லியன் வனவிலங்குகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இவை பெரும்பாலும் செல்லப்பிராணிகளாக வளர்க்கபடுவதற்கே. 2015ம் ஆண்டு மாதமொன்று 2000 கப்பல் பெட்டிகளில் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில இப்போது இது மாதமொன்றுக்கு 13,000 பெட்டிகளாக அதிகரித்தது.

இதேவேளை காட்டுவிலங்குகளை பண்ணைகளில் வளர்க்கும் தன்மை மிகவும் அதிகரித்துள்ளது. குறிப்பாக சீனாவில் இத்தொழிலில் 14 மில்லியன் மக்கள் ஈடுபட்டுள்ளார்கள். இவை உணவுக்காக மட்டுமன்றி, மருந்துகள், வாசனைத் திரவியங்கள், தோல் ஆகியவற்றுக்காகவும் காட்டு விலங்குகள் வளர்க்கப்படுகின்றன. இதேவேளை சட்டவிரோதமான வனவிலங்கு வர்த்தகம் பல மில்லியன் டொலர் பெறுமதியானது. இதுவும் நோய்க்காவியில் பெரும்பங்காற்றுகிறது. ஆனால் இது பேசப்படும் பொருளல்ல.

இதன் பின்னணியில் இப்போதுள்ள கொவிட்-19 பெருந்தொற்றுக்கு உலகம் எவ்வாறு முகங்கொடுக்கிறது என்று நோக்கினால், இப்போதுள்ள தொற்றுத்தடுப்புச் செயல்முறைகள் தொற்று ஏற்பட்ட பின்னர் அதைத் தடுப்பது தொடர்பானது. தோற்றுத்தடுப்பு முன்தயாரிப்புக்களும் அம்முறையையே பின்பற்றுகின்றன. இவை உயிர்ப்பல்வகைமையைப் பாதிக்கின்றன. உதாரணமாக நோய்த்தடுப்புக்கான மருந்துகளும் இன்ன பிறவும் இயற்கையையே தங்கள் தேவைகளுக்காகப் பயன்படுத்துகின்றன. எனவே இது உயிர்ப்பல்வகைமையைப் பாதிக்கும்.

இங்கு கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில் மனிதர்களே இந்த நோய்த்தொற்றுகள் ஏற்படுவதற்கும் அவை பெருந்தொற்றாக மாறுவதற்கும் காரணம். மனிதர்களின் செயல்களே எதிர்காலம் குறித்த வினாக்களுக்குப் பதிலளிக்கும். இப்போது தேவைப்படுவது யாதெனில் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான கொள்கைகளும் திட்டமிடலும் மனிதப் பொறுப்புணர்வும் செயலாற்றலும்.

கொவிட்-19க்கான தடுப்பு மருந்தின் வருகையை அடுத்து கொள்கை வகுப்பாளர்களும் அரசியல்வாதிகளும் ‘புதிய வழமையில்’ இருந்து பழமைக்கு திரும்புவது குறித்துப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இது மிகவும் கவலைக்குரியது. இந்த அனுபவங்களில் இருந்து பாடங்கற்று எதிர்காலம் குறித்து சிந்திக்காமல் இறந்தகாலம் பற்றிய கனாவில் பலர் இருக்கிறார்கள். மனித மனம் விந்தையானது. தொட்டில் பழக்கம் சுடுகாட்டு மட்டும். ஆனால் சுடுகாடு போவதற்கான வழியையே மனிதகுலம் இலாபத்தின் பெயரால் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு பெருந்தொற்றிலிருந்து எம்மைக் காக்க வேண்டுமாயின் நாம் அனைவரும் பங்களிக்க வேண்டும். அரசுகளைப் பொறுப்பாக்க வேண்டும். பிளாஸ்டிக் பாவனையைக் குறைத்தல், மீள்சுழற்சி செய்தல், காடுகளைப் பாதுகாத்தல் போன்ற சின்னச் சின்ன விடயங்களை நாம் செய்வோம். பெரிய விடயங்களை பூமிப்பந்து பார்த்துக் கொள்ளும்.இந்தப் பூவுலகையா எங்கள் பேரக்குழந்தைகளுக்கு பரிசளிக்கப்போகிறோம் என்ற கேள்வியை அடிக்கடி நாம் ஒவ்வொருவரும் கேட்டாக வேண்டும்.

நவீன தொழிநுட்பம், அறிவியல், முதலாளித்துவம், ஜனநாயகம் என எல்லாம் தோற்ற ஒரு இடம் கொவிட்-19. மனிதனது பேராசையும், இலாபவெறியும், அதிகார ஆசையும் இன்னொரு பெருந்தொற்றிலிருந்து எம்மைக் காப்பாற்றும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

இன்னொரு கொவிட் கதையாடலில் சந்திப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *