அரசியல்உலகம்உள்ளூர்என் கண்களில்...

இலங்கையின் மின்சக்தியைக் கபளீகரம் செய்யும் இந்தியா

இலங்கையர்களின் இன்றைய நெருக்கடி அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றவியலாத ஒரு அரசாங்கமும் அதை வீட்டுக்கு அனுப்பவியலாத மக்களும் பேச்சுமன்றமாய் பாராளுமன்றமும் திகழ்கின்ற ஒரு நாட்டில் எதிர்பார்ப்பதற்கு அதிகமில்லைத் தான். இந்த நெருக்கடி அனைத்து இலங்கையர்களையும் பாதித்துள்ளது. இதன் மோசமான விளைவுகளை இலங்கையின் வடக்குக்கிழக்கில் உள்ள மக்கள் எதிர்நோக்குகிறார்கள். இது சிங்களவனின் சோத்துக்கான பிரச்சனை எனக் கூவிய கனவான்கள் யாரையும் கண்ணுக்கெட்டிய தூரம்வரைக் காணவில்லை. காலிமுகத்திடல் போராட்டங்களை நகைப்புக்குள்ளாக்கியோர், ரணில் பிரதமரானவுடன் எல்லாம் சரிவரும் போராடாமல் வீட்டுக்குப் போகச் சொன்னோர் எல்லோரும் இப்போதும் வரிசையில் நிற்கிறார்கள். இலங்கையை முற்போக்கான திசையில் செலுத்துவதற்கான வாய்ப்பைத் தொலைத்தவர்கள் என்றென்றைக்கும் வரிசைகளில் நிற்கக் கடமைப்பட்டவர்கள். இந்த அரசியற் பண்பாட்டை மாற்றாமல் தீர்வு சாத்தியமில்லை என்று உணரும்வரை இந்தக் கொடுந்தண்டனையை நாமனைவரும் அனுபவிக்க நேரும்.

நெருக்கடிகள் வாய்ப்பை மக்களுக்கு மட்டும் வழங்குவதில்லை. ரணிலுக்கு பிரதமராகும் வாய்ப்பைக் கொடுத்தது. இன்ன பலருக்கு அடுத்த ஜனாதிபதிக் கனவைக் கொடுத்துள்ளது. அயல்நாடுகளுக்கு அவர்தம் நலன்களை வெற்றிகரமாக வென்றெடுப்பதற்கும் செயற்படுத்துவதற்கும் வாய்ப்பாகிறது. கடந்த 10ம் திகதி பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழு (கோப் குழு) முன்னிலையில் கருத்துரைத்த இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ.பெர்டினன்டோ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டதற்கிணங்க வடபகுதியில் 500MW ஆற்றலுள்ள காற்றாலைகளை அமைக்கும் அனுமதியை இந்தியாவின் அதானி குழுமத்திற்கு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தனக்கு உத்தரவிட்டதாகக் கூறினார். இதை மறுத்து ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். 24 மணித்தியாலங்களுக்குள் தனது கருத்தை மின்சார சபைத் தலைவர் மீளப்பெறுவதாக அறிவித்தார். சில நாட்களில் அவர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

குறித்த திட்டத்தின் படி மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் அதானி குழுமத்தின் Adani Green Energy Limited (AGEL) காற்றாலை மற்றும் சூரியசக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் உரிமத்தைப் பெற்றுள்ளது. அதானிக்கு இதை வழங்குமாறு தான் கட்டளையிடவில்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையில் மின்சார சபைத் தலைவரின் கருத்து இந்தியாவில் ஒரு புயலைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை Sunday Times பத்திரிகை குறித்த விடயம் தொடர்பில் முக்கியமான செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. அதானி குழுமத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற தகவல் பரிமாற்றங்களின் உள்ளடக்கத்தின் முக்கியமான அம்சங்களை அச்செய்தி கோடுகாட்டியுள்ளது.

கடந்தாண்டு நவெம்பர் மாதம் AGEL நிறுவனத்தின் நிறைவேற்றதிகாரி இலங்கைத் திறைசேரியின் செயலாளருக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார் அதில் “எமது நிறுவனம் 1000MW வலுவுள்ள மீள்சக்தித் திட்டங்களை விரைவான நேரத்தில் அதன் வளர்ந்து வரும் எரிசக்தி தேவைக்கு ஏற்றவாறு அமைப்பதன் மூலம் எம் நிறுவனத்தின் தடயங்களை அதிகரிக்க முன்மொழிகிறது. மேலும், AGEL நிறுவனமானது இலங்கையில் சுமார் 5GW காற்றாலை மின் திட்டங்கள் மற்றும் 2GW சூரியசக்தித் திட்டங்களை இலங்கையில் அமைக்கும். இதன் மூலம் உற்பத்தியாகும் மின்சாரமானது எம்மால் அமைக்கப்படவுள்ள இலங்கை-இந்தியா மின்சார இணைப்பு (cross border grid connection) மூலம் இந்தியாவிற்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்யும். இது இலங்கையில் கணிசமான முதலீடு மற்றும் நீண்ட கால ஏற்றுமதி வருவாயிற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும். மேலும் இவ்விணைப்பின் வழி போட்டித்தன்மைவாய்ந்த மின்சார வர்த்தகத்தை செயல்படுத்த இயலுமாகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தின் முக்கியத்துவம் பல்முனைப்பட்டது. முதலாவது இலங்கையின் தூயசக்தி நோக்கிய நகர்வானது மிகவும் மெதுவானதாக இருக்கிறது. இலங்கையின் உள்ள பல நிறுவனங்களுக்கு காற்றாலைகளையும் சூரிய மின்கலங்களையும் நிறுவுவதற்கு அரசாங்கம் தொடர்ச்சியாகத் தயக்கம் காட்டி வந்துள்ளது. பல தடைகளை உள்@ர் நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ளன. இந்நிலையிலேயே அதானி நிறுவனத்தின் இக்கடிதமானது கவனிப்புக்குரியது. இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் இவ்வாறானதொரு கடிதம் எழுதப்பட்டிருக்காது. இந்தப் பின்புலத்தின் அடிப்படையிலேயே மின்சார சபைத் தலைவரின் கருத்தை நோக்க வேண்டியுள்ளது.

இக்கடிதத்தில் கவனிக்க வேண்டிய இரண்டாவது அம்சம், அதானி நிறுவனம் இலங்கையில் தூயசக்தியை உற்பத்தி செய்து அதை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய முன்மொழிகிறது. இது மிகவும் ஆபத்தானது மட்டுமன்றி அனுமதிக்கக் கூடாததும். இவ்விடத்திலேயே இலங்கை அரசாங்கத்தின் மோசமான நடத்தையும் அதனோடு இணைந்த ஊழலும் வெளிப்படுகிறது. இலங்கை நிறுவனங்களுக்கு வழங்க மறுத்த அனுமதியை எவ்வாறு அதானி நிறுவனத்திற்கு அரசாங்கம் வழங்கியது? இலங்கையே மின்சார நெருக்கடியில் சிக்கித் தவிக்கையில் இலங்கையில் பெறப்பட்ட மின்சாரத்தை இந்தியாவுக்கு அனுப்ப யார் அனுமதித்தது? இலங்கையில் பெறப்பட்ட மின்சாரத்தை இலங்கைக்கே அதானி நிறுவனம் விற்கும் திட்டத்திற்கு எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது? இவை விடை தெரியாத வினாக்கள், ஆனால் இலங்கையர்கள் கேட்ட வேண்டிய கேள்விகள்.

மூன்றாவது மிக முக்கியமான அம்சம், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மின்கம்பங்களையும் இணைப்பையும் அதானி நிறுவனம் அமைக்கப்போவதா இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான மின் இணைப்பு என்பது கடந்த இரு தசாப்தங்களாக உரையாடப்படும் ஒரு விடயம். பல விடயங்களைக் கருத்தில் கொண்டு இலங்கை இத்திட்டத்திற்கு அனுமதி மறுத்து வந்துள்ளது. குறிப்பாக போரின் முடிவின் பின்னரான இந்தியா இவ்விணைப்புத் திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளது. இலங்கையின் தயக்கம் நியாயமானது. இவ்வாறானதொரு இணைப்பால் இலங்கைக்கான நன்மைகள் குறைவு. குhலப்போக்கில் இலங்கை மின்சாரத்திற்கு இந்தியாவை நம்பியிருக்க வேண்டியிருக்கும். இது சக்திப் பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலானது. அதேவேளை இலங்கையில் இந்திய நிறுவனங்கள் மின்உற்பத்தி செய்து இந்தியாவுக்கு அனுப்பினாலும் சரி இலங்கைக்கு வழங்கினாலும் சரி மின்சார உற்பத்தியின் மீதான இலங்கையின் ஏகபோகமும் சுதந்திரமும் இல்லாமல் போகும்.

இங்கு நேபாளத்தின் உதாரணத்தை நோக்குவது தகும். உலகில் அதிகளவான நீர்மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய ஆற்றலை உடைய நாடுகளில் நேபாளம் முதன்மையானது. ஆனால் நேபாளத்தால் இன்றுவரைத் தனது தேவைக்கான நீர்மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியவில்லை. காரணம் அதற்கான அபிவிருத்தி நடவடிக்கைகள் அங்கு நடைபெறவில்லை. நேபாள-இந்திய மின்இணைப்புக் காரணமாக நேபாளம் இன்றும் மின்சாரத்திற்கு இந்தியாவை நம்பியிருக்கிறது. இதைத் தொடருவதற்காக நேபாளத்தில் நீர்மின்சக்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த இந்தியா தொடர்ச்சியாகத் தடைபோடுகிறது. நேபாள அரசாங்கம் இந்தியாவுடன் முரண்பாட்டுப் போக்கைக் கடைப்பிடித்தால் நேபாளத்துக்கான மின்சாரத்தை மட்டுப்படுத்துவதனூடு இந்தியா செயற்படுகிறது. 2009இல் நேபாளத்தில் மாஓவாதிகள் ஆட்சிக்கு வந்த நிலையில் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் மின்சார விநியோகத்தை இந்தியா நிறுத்தியது. இந்தக் கதைதான் இலங்கைக்கும் நடக்கும் என்பதை நினைவில் கொள்வது நல்லது.

2006ம் ஆண்டு சம்பூர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோதே அங்கு அனல்மின்நிலையம் ஒன்றை உருவாக்குவதற்கான உடன்படிக்கையை இந்திய நிறுவனம் இலங்கை அரசாங்கத்திடம் கைச்சாத்திட்டது. அதன்படி உற்பத்திசெய்யப்படும் மின்சாரத்தில் ஒருபகுதி இந்தியாவுக்கு அனுப்பவும் உடன்பட்ட சரத்து அவ்வுடன்படிக்கையில் இருந்தது. மக்கள் போராட்டமும் நீதிமன்ற தடையுத்தரவும் அதை முடிவுக்குக் கொண்டுவந்தபோதும் கடந்தாண்டு அதே இடத்தில் சூரிய மின்கலங்களின் வழி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அனுமதியை இந்தியா பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆனல் மின்நிலையத்துக்கான வெளியேற்றப்பட்ட காணியிழந்த மக்கள் இன்னமும் இன்னல்களை அனுபவிக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது.

பத்திரிகைச் செய்தி அம்பலப்படுத்திய இன்னொரு ஆவணம், மன்னார் மற்றும் பூநகரியில் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கான அதானியின் நிறுவனத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் கையெழுத்தான புரிந்துணர்வு உடன்படிக்கை. அதில் “இலங்கையின் வட மாகாணத்தின் எல்லையில் உள்ள இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் மிதக்கும் சூரியகல மற்றும் காற்றாலை வசதிகளை ஏற்படுத்துவதற்காக ஆய்வு செய்ய, குறித்த நிறுவனத்திற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்கும்”. இதன்மூலம் இலங்கையின் வடபகுதியில் எல்லையற்ற அதிகாரங்களை – மின்உற்பத்தி சார்ந்து – குறித்த நிறுவனத்திற்கு இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளது. நிலங்கள் மட்டுமல்ல எங்கள் கடலும் சேர்ந்தே களவுபோகிறது. இந்தியா பற்றிய மயக்கங்கள் களைவது எப்போது.

அதானி குழுமம் காற்றாலைகளை அமைக்க அனுமதி பெற்றுள்ள மன்னார் மற்றும் பூநகரி ஆகிய பகுதிகளில் இத்திட்டங்களுக்கு மக்களின் பலத்த எதிர்ப்புகள் உண்டு. அதுகுறித்து விரிவாக அடுத்த வாரம் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *