சுற்றுச்சூழல்

வளர்ச்சியா? மகிழ்ச்சியா?

மகிழ்ச்சியின் அளவுகோல் எது என்ற கேள்விக்கான விடை மிகவும் சிக்கலானது. மகிழ்ச்சி என்பது பண்பறி ரீதியானது. அதை அளவுகோல்களின் அடிப்படையில் அளவிடவியலாது. பண்பறி ரீதியானவை அகவயமானவை. ஆவை ஆளாளுக்கு வேறுபடுபவை. இத்தனை சிக்கல்களைக் கொண்டுள்ளமையால் மகிழ்ச்சியை அளவிடவியலாது. வளர்ச்சியை அளவிடலாமா என்ற கேள்விக்கு பொருளியல் நிபுணர்கள் ஆம் என்று பதிலளிக்கின்ற போது, எது வளர்ச்சி என்பதற்கு பொதுவான ஒருமித்த வரைவிலக்கணம் இன்னமும் இல்லை. பொதுவில் பொருளாதார வளர்ச்சியே வளர்ச்சி என அறியப்படுகிறது. அவ்வகையில் வளர்ச்சி மகிழ்ச்சியைத் தருமா என்பது இவ்விரண்டும் சார்பான பிரதான வினா. இதை இன்னொரு வகையில் ‘பணத்தால் சந்தோசத்தை வாங்கவியலுமா?’ என்றும் கேட்டிடவியலும்.

இன்று வளர்ச்சி பற்றி அதிகம் பேசப்படுகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சியே அந்நாட்டின் அபிவிருத்தியின் அடிப்படை என்று கருதப்படுகிறது. மொத்த தேசிய உற்பத்தியே வளர்ச்சியின் அளவுகோலாகக் கொள்ளப்படுகிறது. ஆனால் பூட்டான் தேசம் மட்டும் வளர்;ச்சியல்ல மகிழ்ச்சியே பிரதானம் என்று வாதிடுகிறது. அதனை நடைமுறையிலும் நிரூபித்துள்ளது. பூட்டானின் இந்த வாதம் வளர்ச்சியால் மகிழ்ச்சியை அளவிட இயலுமா அல்லது மகிழ்ச்சியால் வளர்ச்சியை அளவிட இயலுமான என்ற கேள்வியை எழுப்பியது. இது வளர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் இடையிலான உறவையும் முரணையும் பற்றிய கதை.

1979ம் ஆண்டு பூட்டானின் மன்னர் ஜிக்மி சிங்மி வாங்சக் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியாவுக்கு வந்தபோது பம்பாய் விமான நிலையத்தில் ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்விகளைக் கேட்டனர். அப்போது ஒரு ஊடகவியலாளர் “பூட்டான் ஏன் மொத்த தேசிய உற்பத்தியில் ஏன் பின்தங்கி இருக்கிறது” என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த பூட்டானின் மன்னர் “எமக்கு மொத்தத் தேசிய உற்பத்தியில் நம்பிக்கை கிடையாது. எமக்கு மொத்தத் தேசிய மகிழ்ச்சியே மிகவும் முக்கியமானது” எனப் பதிலளித்தார். இக்கூற்று வெறுமனே ஒரு கூற்றாக அக்காலத்தில் கருதப்பட்ட போதும்கூட காலப்போக்கில் வளர்ச்சியை எவ்வாறு அளவிடுவது. மோத்த தேசிய உற்பத்தி மட்டுமே வளர்ச்சியின் அளவுகோலாக இருக்க முடியுமா? மொத்தத் தேசிய உற்பத்தியை மையமாகக் கொண்டு மகிழ்ச்சியை அளவிடமுடியமா போன்ற கேள்விகள் மெதுமெதுவாக வெளிப்படத் தொடங்கின. 1990களின் இறுதிப் பகுதியில் பூட்டானினால் முன்வைக்கப்பட்ட ‘மொத்தத் தேசிய மகிழ்ச்சி’ என்ற கருத்தாக்கம் கவனிப்புக்குள்ளாகத் தொடங்கியது.

தென்னாசிய நாடுகளில் ஒன்றாகிய பூட்டான், இந்தியாவையும் சீனாவையும் எல்லைகளாகக் கொண்ட நிலத்தால் சூழப்பட்ட நாடாகும். ஏழரை இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட பூட்டான் ஆசியாவின் ஊழல் குறைந்த நாடாகவும் பொருளாதாரச் சுதந்திரம் அதிகம் உள்ள நாடாகவும் விளங்குகிறது. வேகமான பொருளாதார வளர்ச்சி உடைய நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது.  நீர்மின் நிலையங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சார விற்பனை இதன் பிரதான வருமானமாக உள்ளது. மிகவும் பின்தங்கிய நாடுகளில் ஒன்றாக விளங்குவதனால் பொருளாதார அபிவிருத்தி என்பது மிகவும் கடினமானது. வறுமையிலும் பூட்டானியர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்களது மகிழ்ச்சி என்பது அதிகரித்திருக்கிறது. எனவே பொருளாதார அடிப்படையில் மகிழ்ச்சியை அளவிடாதீர்கள் என்பதே பூட்டான் மன்னரின் வாதமாக இருந்தது.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அளக்கும் பிரதான அளவுகோலாக அந்நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தி (GDP) கருதப்படுகிறது. இது இந்த ஆண்டு கடந்த ஆண்டைவிட எவ்வளவு சதவிகிதம் வேறுபடுகிறது என்பதன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. மொத்தத் தேசிய உற்பத்தி என்பது ஒருநாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தியாகும் அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகளின் சந்தை மதிப்பு ஆகும். இது ஒரு நாட்டின் பொருளாதார வலுவை குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். ஆனால் மொத்தத் தேசிய உற்பத்தியின் அளவை வைத்து நாட்டு மக்களின் வாழ்நிலை பற்றி ஒரு முடிவுக்கு வர இயலாது. மக்கள் வாழ்நிலை என்பது, என்ன உற்பத்தி செய்யப்பட்டுள்ளது, அது பல்வேறு பகுதி மக்களுக்கு எந்தெந்த அளவில் கிடைத்துள்ளது போன்ற அம்சங்களை உள்ளடக்கியதாகும். இருப்பினும், இன்றைய பொருளியல் அளவுகோல்களில் மொத்தத் தேசிய உற்பத்தியின் ஆண்டு வளர்ச்சி விகிதம் ஒரு முக்கிய குறீயீடாகக் கருதப்படுகிறது.

மொத்தத் தேசிய உற்பத்தியை வளர்ச்சியின் குறியீடாகக் கொண்டால் அது கடந்தாண்டை விட இவ்வாண்டு எவ்வளவு வளர்ந்துள்ளது என்றே கணக்கிடுகிறது. எனவே வளர்ச்சி என்பது தொடர்ச்சியான அதிகரிப்பு என்ற அடிப்படையைக் கொண்டது. இன்னொரு விதத்தில் வளர்ச்சி என்பது வெறுமனே பொருளாதாரம் சார்பானதாக மட்டுமே கொள்ளப்படுகிறது. இன்று வளர்ச்சி என்பது நுகர்வுடன் நெருங்கிய தொடர்புடையதாகி விட்டது. எவ்வளவு இருந்தாலும் போதாது என்ற மனோபாவம் நுகர்வை வெகுவாக அதிகரித்துள்ளது. வளர்ச்சி என்பது அதிகமான நுகர்வு என்ற நிலையை உருவாக்கி விட்டுள்ளது. இவ்வகையில் அதிக நுகர்வு வளர்ச்சி என்றும் அதுவே மகிழ்ச்சி என்றும் எமக்குச் சொல்லித் தரப்படுகிறது.

இவ்விடத்தில் சார்ள்ஸ் டாவினுக்கு நடந்தவொரு சம்பவத்தை நினைவுகூர்வது பொருத்தம். டார்வின் தனது ஆய்வுகளின் போது ஒரு புராதனப் பழங்குடி இனத்தைச் சந்தித்தார். வழக்கமாக மனித மாமிசம் தின்னாத அவர்கள் பஞ்ச காலத்தில் மட்டும் தங்கள் இனத்தைச் சேர்ந்த வயது முதிர்ந்த கிழவிகளையே கொன்று தின்கிறார்கள். தாங்கள் தின்றது மட்டுமின்றி, தங்கள் வேட்டை நாய்களின் பசியைத் தீர்ப்பதற்காகவும் கிழவிகளைக் கொன்றார்கள். அதிர்ச்சியுற்ற டார்வின் “நாய்க்கு மனிதனைத் தீனியாக்குகிறீர்களே” என்று கேட்டபோது அவர்கள் இரண்டே வரிகளில் பதில் சொன்னார்கள்: “நாய்கள் வேட்டைக்குப் பயன்படும்.; கிழவிகள் பயன்பட மாட்டார்கள்.” தன்னைக் கொல்ல வரும் எதிரியாகவோ அல்லது தன்னால் கொன்று தின்னப்பட வேண்டிய உணவாகவோ சக மனிதனைக் கண்டு கொண்டிருந்த விலங்கு நிலையிலிருந்து, மனிதன் உருவாகிக் கொண்டிருந்த காலம் அது. தனது பசி, தாகம், உறக்கம், வேட்கை ஆகியவற்றைத் தீர்த்துக் கொள்வதற்காக எதையும் செய்யலாம் என்றெண்ணிய காலம் அது. இதைத்தான் செய்யலாமென்ற ஒழுக்கம், மதிப்பீடுகள் போன்றவை தோன்றாத காலம்.

இன்று நாம் வெகுதூரம் வந்து விட்டோம். எனினும் நுகர்வும் பயன்பாடும் மட்டுமே மகிழ்ச்சியைத் தீர்மானிக்கிறது என்ற ‘நுகர்வியல் பண்பாடு’தான் இன்று கோலோச்சுகிறது. உண்பதிலும், உடுத்துவதிலும், அழகியல் ரசனையிலும் இன்னபிற நடவடிக்கைகளிலும், பல அன்றாட மகிழ்ச்சிகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவைதான் அறுதியான மகிழ்ச்சிகளா? இது எம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள்.

பிற மக்களின் துன்பங்கள், ஆசைகள், விருப்பங்கள் ஆகியவை பற்றி அக்கறையில்லாமல், தனது மகிழ்ச்சி ஒன்றே லட்சியமாக இருக்க எவ்வளவுதான் ஒரு மனிதன் முயன்றாலும், அது சாத்தியமாதில்லை. எந்த வம்பும் வேண்டாமென்று எவ்வளவுதான் நடைபாதையில் ஒதுங்கி, ஒதுங்கிச் சென்றாலும், எங்கிருந்தோ வரும்; கல்லோ, சுடுசொல்லோ தலையைப் பிளக்கும். ‘சமுதாயத்தில் இருந்து கொண்டே அதிலிருந்து சுதந்திரமாக இருக்க முடியாது’ என்ற உண்மையை நேரடியாக மண்டையில் உறைக்க வைக்கும். இதைத்தான் ‘மகிழ்ச்சி என்பது போராட்டம்’ என்று கார்ள் மார்க்ஸ்; அன்றே கூறிவைத்தார்.

இன்று நுகர்வே வளர்ச்சியின் அடிப்படையாகவும் மகிழ்ச்சியின் அடிப்படையாகவும் கொள்ளப்பட்டிருக்கிறது. இப்பூவுலகைப் பற்றி கவலைப்படுகின்றவர்கள், தற்போது முக்கியமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது வெறும் பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சனை மட்டுமல்ல. மாறாக அடிப்படையாக சமூக, பொருளாதார அமைப்பில் மாற்றம்  கொண்டு வர வேண்டும் என்பதுடன் இணைந்ததாகும். 2050இல் உலக மக்கட்தொகை 900 கோடியை தொட்டுவிடும். தற்போதுள்ள வளங்கள் 140 கோடி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய இயலும். ஆப்போது நாம் என்ன செய்யப் போகிறோம். வளர்ச்சியின் பெயரால் நாம் இப்பூவுலகை சிதைத்துக் கொண்டிருக்கிறோம்.

இன்று ஏகபோக பல்தேசியக் கம்பெனிகள்; நவீன ராஜ்யம் ஒன்றை உருவாக்கியிருக்கின்றன. அது ஒட்டுமொத்த மனித சமூகத்தையும், இயற்கையையும், ஒட்டுமொத்த பூமிப்பந்தையும் தனது காலனியாக மாற்றியிருக்கிறது. அதன் மூலமாக மனித குலத்தின் விலை மதிக்க முடியாத படைப்பாக்கத்திறன்களையெல்லாம் அப்பட்டமான லாபம் சம்பாதிக்கிற பண்டங்களாக மாற்றியிருக்கிறது. நமது படைப்பாக்கத்திறன், நமது அறிவு மற்றும் நமது கற்றுக் கொள்ளும் ஆர்வம் ஆகியவை நம்மை மேம்படுத்திக் கொள்வதற்கான தகுதிகளாக பார்க்கப்படவில்லை; மாறாக ஒவ்வொரு மனிதனையும் சக மனிதனிடமிருந்து, சமூகத்திடமிருந்து, இயற்கையிடமிருந்து தனிமைப்படுத்தி வெறுமனே உற்பத்திப் பண்டங்களாக மாற்றியுள்ளது. மனித மாண்புகளை இப்படி மலினப்படுத்தியிருப்பது என்பது நிச்சயமாக தொழில்நுட்பம் சார்ந்தது அல்ல் அது முற்றிலும் முதலாளித்துவத்தின் குணமே ஆகும். ஒரு புதிய வகை கார்ப்பரேட் குணாம்சம் வலுவாக வேரூன்றி இருக்கிறது. அது தொழில்நுட்பத்தின் மீது எதேச்சதிகாரமான கட்டுப்பாட்டைச் செலுத்துகிறது. இந்த வகை கார்ப்பரேட் மயம் என்பது இன்னும் அறிவுப்பூர்வமாக, இன்னும் வேகமாக, இன்னும் ஊடுருவிச் செல்கிற தன்மை கொண்டது. ஒட்டுமொத்த மனித குலத்தையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்கிற ஏகாதிபத்தியத்தின் அதிகார வெறியும், மேலும் மேலும் லாபம் என்கிற கொள்ளை வெறியும் தொழில்நுட்பம் சார்ந்த சமூகத்தின் அனைத்து அம்சங்களையும் முற்றிலும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சிக்கிறது.

தொழிநுட்பம் அனைத்துக்குமான தீர்வைத் தரும் என்ற அசட்டுத்தனமான நம்பிக்கை எம்மிடம் விதைக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் மனிதன் எதிர்நோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வுகளை மனிதனே கண்டுபிடித்தது போல இப்பிரச்னைகளுக்கும் தீர்வை மனிதன் கண்டுபிடித்து விடுவான் என்று நினைப்பது நம்பிக்கை என்று ஒருபுறம் கொண்டாலும் மறுபுறம் முட்டாள்தனம் என்றும் கொண்டிடவியலும்.

மேற்கத்திய பொருளாதாரங்கள் தொழில் சமூகங்களாக இருந்த நிலையிலிருந்து மாறி தொழில் வளர்ச்சிக்குப் பிந்தைய சமூகங்களாக வளர்ச்சி பெற்றிருக்கின்றன. இது அடுத்த கட்ட மாற்றத்தை நோக்கி மிக வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது.

ஒருபுறத்தில் ஏற்கனவே போராடிப் பெற்ற அனைத்துவிதமான உரிமைகளும் பறிக்கப்பட்டு வரும் நிலையில், ‘உரிமைகள் பெற்றிருப்பதே ஒரு உரிமை’ என்ற நிலைக்கு உலகின் பெருவாரியான மக்களை முதலாளித்துவம் தள்ளியிருக்கிறது. மறுபுறத்தில் அனைத்துவிதமான தொழில்நுட்ப வளர்ச்சியையும் முற்றிலும் தனது லாபத்திற்கு பயன்படுத்திக் கொள்ளவும் முதலாளித்துவம் தீவிரமாகப் பயணத்தை தொடங்கியிருக்கிறது.

தொழில் மூலதனம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள – தனது லாபத்தை மேலும் மேலும் பெருக்கிக் கொள்ள நிதிமூலதனமாக மாறி உலகெங்கிலும் எல்லைகளை உடைத்துக் கொண்டு பயணித்தது. நிதி மூலதனம் அளவிட முடியாத தாக்குதலை உலகெங்கிலும் ஏழை, எளிய மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்த கட்டமாக அது தனது லாப எல்லையை மேலும் விரிவுபடுத்திக் கொள்ளும் பொருட்டு தொழில்நுட்ப மூலதனமாக உருமாற்றிக் கொண்டுள்ளது. இன்றைக்கு இந்த உலகையே ஆட்டுவிக்கும் அம்சமாக தொழில்நுட்ப மூலதனம் மாறியிருக்கிறது. இது நுகர்வுக்குச் சேவகம் செய்கிறது. விளம்பரங்கள் புதிய யுத்திகளில் புதிய கருவிகளின் ஊடு கடத்தப்படுகிறது.

இவை அடிப்படையான கேள்வியொன்றை எழுப்புகின்றன: மகிழ்ச்சியை எவ்வாறு அளவிடுவது? வெறுமனே பொருளாதாரக் குறிகாட்டிகள் மகிழ்ச்சியை அளவிடா. வளர்ச்சி மகிழ்ச்சியை அளவிடா. இவை நாம் கருத்தில் கொள்ள வேண்டிய வினாக்கள். பூட்டான் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடையாத நாடாகவிருக்கலாம். ஆனால் அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பூட்டான் எங்களுக்குச் சொல்கின்ற செய்தி என்ன?

ஓடி ஓடி மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்து பணத்தைச் சேர்த்தாலும், அப்பணம் மகிழ்ச்சியைக் கொண்டுவரா. மகிழ்ச்சி என்பது சேர்த்து வைத்த சொத்திலோ பணத்திலோ, மாடமாளிகைகளிலோ தங்கியில்லை. மகிழ்ச்சி எங்கே இருக்கிறது என்ற கேள்வியை நாம் இன்னொருமுறை எம்மை நாமே கேட்டுக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *