சுற்றுச்சூழல்

செங்கடலைப் போர்த்திய விவசாயிகள்

அரசுகள் மக்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத போது மக்கள் அடுத்த தேர்தல்கள் வரைப் பொறுத்திருப்பதில்லை. உழைக்கும் மக்களின் கோரிக்கைகள் அவர்களது வாழ்வா சாவா என்கிற பிரச்சனை. அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாதவர்கள் அடுத்த தேர்தல்கள் வரைப் பொறுத்திருக்கவியலாது. தேர்தல்கள் ஒருபோதும் தீர்வைத் தருவதில்லை என்பதை மக்கள் நன்கறிவர். ஜனநாயகம் அதன் முகமூடிகளைத் தொலைத்து ஆண்டுகள் பல கடந்துவிட்டது. போராடுவதே வழி என்று மக்கள் நன்கறிவர். அவ்வாறு அவர்கள் போராடும் போது அரசுகள் ஸ்தம்பிக்கும், நிலை தடுமாறும், அவதூறு பரப்பும், தேசத் துரோகிகள் எனப் பட்டஞ்சூட்டும். அவற்றால் போராடுவோர் துவண்டுவிடுவதில்லை. இழப்பதற்கு இனி எதுவுமே இல்லை என்றவனுக்கு போராடுவதைத் தவிர வழி வேறேது.

திங்கட்கிழமை இந்தியாவின் மும்பாய் நகரையே விவசாயிகளின் போராட்டம் உலுக்கியது. வெறும் பெட்டிச் செய்தியாக்கி இச்செய்தியை ஊடகங்கள் கடந்து போயின. ஆனால் இந்தப் போராட்டம் சொல்லுகிற செய்தியும் செய்து காட்டியுள்ள விதமும் உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவன. அதற்கு எதிரான எதிர்வினைகளும் பொதுப்புத்தி மனோநிலை மத்தியதர வர்க்கத்தின் அலட்சியத்தை எடுத்துக்காட்டுவன.

மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தின் நாசிக் நகரில் இருந்து மார்ச் 6ம் திகதி செவ்வாய்கிழமை 30,000 விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி மும்பாயை நோக்கி நீண்ட நடைபயணத்தைத் தொடங்கினர். அப்பயணத்தில் வழிவழியே ஏனைய விவசாயிகளும் இணைந்து கொள்ள 60,000 பேர் 180 கிலோ மீட்டர் தூரத்தை நடந்து ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பாயை வந்தடைந்தனர். 40 பாகை செல்சியஸ் வெயிலில் கால்களில் செருப்பு எதுவுமின்றி வெறுஞ்காலுடன் பெண்களும் குழந்தைகளும் வயதானவர்களும் இடைவிடாது 180 கிலோ மீட்டர் தூரத்தை நடந்தே கடந்திருக்கிறார்கள் என்றால் இந்த அருஞ்செயலை என்னவென்று சொல்வது. ஊடக ஒளியில் ஸ்ரீதேவியின் மரணத்தை சல்லடை போட்டு ஆராய்ந்தவர்களுக்கு இந்த எளிய மக்களின் தியாகமும் மனஓர்மமும் போராட்ட உணர்வும் விளங்கப் போவதில்லை.

இன்னொரு விவசாயிகளின் போராட்டம் எனக் கடந்துபோகவியலாதளவுக்கு இந்தியாவின் வர்த்தகத் தலைநகரையே உலுக்கியிருக்கிறது இவ்விவசாயிகளின் எழுச்சி. சிவப்புக் கொடிகளைக் கைகளில் ஏந்தி சிவப்புத் தொப்பிகளை அணிந்து மக்கள் நடந்து வந்தது இந்தியாவின் வர்த்தகத் தலைநகரை செங்கடல் போர்த்தியது போல இருந்தது என்று எழுதுகிறார் ஒருவர்.

இந்தியாவில் விவசாயிகள் நீண்டகாலமாக நெருக்கடிகளை எதிர்நோக்கிவருகிறார்கள். பருவநிலை மாற்றங்களின் விளைவால் ஏற்பட்டுள்ள வரட்சி, தொடர்மழை, வெள்ளப்பெருக்கு என்பன விவசாயிகளுக்கு பாரிய சவாலாகியுள்ளன. அதேவேளை அரசாங்கத்தால் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் ஒரு தொகுதியினராக விவசாயிகள் இருந்து வருகிறார்கள். இந்தியா திறந்த பொருளாதாரத்தை ஏற்று அறிமுகப்படுத்திய முதல் 10 ஆண்டுகளில் (1991 முதல் 2001) ஒன்றரைக் கோடி விவசாயிகள் இல்லாமல் போயுள்ளார்கள் என இந்திய மத்திய திட்ட ஆணைக்குழுவின் அங்கமான ‘பயன்பாட்டு மனித வள ஆராய்ச்சி மையத்தின்’ (Institute of Applied Manpower research) அறிக்கை தெரிவிக்கிறது. அதே அறிக்கை அடுத்த பத்தாண்டுகளில் மேலும் 77 இலட்சம் விவசாயிகள் விவசாயத்தில் இருந்து விலகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தபடுவதற்கு முந்தைய பத்தாண்டுகளில் (1981 முதல் 1991 வரை) விவசாயிகளின் தொகை 9.2 கோடியிலிருந்து 11 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட முதல் இருபது ஆண்டுகளில் நாளொன்றுக்கு சுமார் 2035 விவசாயிகள் விவசாயத்தில் இருந்து காணாமல் போகிறார்கள். அதாவது ஒவ்வொரு மணித்தியாலத்துக்கும் 85 விவசாயிகள் விவசாயத்தில் இருந்து விலகிச் செல்கிறார்கள். இதே இருபதாண்டு காலப்பகுதியில் 270,940 விவாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள். இதன்படி சராசரியாக நாளொன்றுக்கு 37 விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். உலகமயமாக்கலும் திறந்த சந்தைப் பொருளாதாரமும் இந்தியாவுக்கு அளித்த பரிசுகள் இவை.

கடந்த பத்தாண்டுகளில் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது. குறைந்தபட்சம் நிலம் வைத்து நேரடியான பயிர் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களின் தற்கொலைகளை மட்டுமே விவசாய தற்கொலைகள் என்று மாநில குற்றப்பதிவு ஆணையம் கணக்குக் காட்டுகிறது. விவசாய கூலிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் தற்கொலைகளை கணக்கிலெடுத்துக் கொள்வதில்லை. அரசு தரும் கணக்கின் படியே கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 62 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதில் பெரும்பாலான விவசாயி தற்கொலைகள் மகாராஷ்ர மாநிலத்திலேயே நடக்கினறன.

இந்தியாவின் நகர்புறஞ்சார மக்கள் தொகையில் 70%பேரின் வாழ்வாதாரம் விவசாயத்திலேயே தங்கியுள்ளது. மொத்த இந்தியாவின் உழைப்பாளர்களில் 50%க்கு மேலானவர்கள் விவசாயத்தையே நம்பியிருக்கிறார்கள். விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில்  7வது இடத்தில் இந்தியா இருக்கிறது. இருந்தபோதும் மாறிமாறி ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சி அரசாங்கங்கள் தொடர்ச்சியாகவே விவசாயிகளைப் புறக்கணித்து வந்துள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பாஜக  விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வோம். விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயிப்போம். விவசாயிகள் தற்கொலைகள் தடுத்து நிறுத்தப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் அளித்த வாக்குறுதியின் படி விவசாயிகளின் எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில விவசாயிகள் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். வேலை நிறுத்ததிலும் ஈடுபட்டனர். அப்போது பேச்சு வார்த்தை நடத்திய அரசு கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தது. ஆனால் அதன் பின்னரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் திரண்ட விவசாயிகள் இனி கோரிக்கை நிறைவேறாமல் போராட்டத்தை கைவிடுவதில்லை. இது வாழ்வா சாவா போராட்டம் என்ற முடிவுக்கு வந்தனர். அதன் அடிப்படையில் செங்கொடிகளோடும், தலையில் சிவப்பு தொப்பிகளுடனும் திரண்ட விவசாயிகள் நாசிக்கில்  இந்த வீரம்செறிந்த  போராட்டத்திற்கான முதல் அடியை எடுத்து வைத்தனர். பல்வேறு பகுதியில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் செங்கொடிகளோடு தங்களையும் இந்த போராட்டத்தில் இணைத்துக் கொண்டனர்.

விவசாயிகளது பேரணி தொடங்கியது முதல் வழியெங்கும் விவசாயிகளுக்கு பல்வேறு தரப்பு மக்களும் ஆதரவளித்தனர். தங்களால் முடிந்த உணவு, தண்ணீர் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை விவசாயிகளுக்கு செய்தனர். ஞாயிறன்று விவசாயிகளின் பேரணி மும்பையை வந்தடைந்தது. திங்களன்று காலை சட்டமன்றத்தை முற்றுகையிடுவது என்பதில் விவசாயிகள் உறுதிகாட்டினர். அதேவேளை திங்களன்று காலை மாணவர்களுக்கு தேர்வு என்பதால் அவர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாத வகையில் காலை 11 மணிக்கு மேல் மும்பை ஆசாத் மைதானத்தில் இருந்து சட்டமன்ற வளாகத்தை நோக்கி சென்று முற்றுகையிடுவது என முடிவு செய்து அறிவித்தனர்.

திங்களன்று அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலச்செயலாளர் அஜித்நாவ்லே தலைமையில் 20 பேர் கொண்ட விவசாய பிரதிநிதிகள் மகாராஷ்ர முதல்வருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் விவசாயிகள் முன்வைத்த பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். அப்போது விவசாயிகள் வழக்கம்போல் வாய் மொழி உத்திரவாதத்தை ஏற்க முடியாது. ஏற்கனவே இதுபோன்று விவசாயிகளுக்கு அளித்த எந்த உறுதிமொழியையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை. ஆகவே எழுத்துபூர்வமாக இந்த இந்த கோரிக்கைகளை ஏற்கிறோம் என கொடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்தனர்.

வேறு வழியின்றி முதல்வர் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துபூர்வமாக உறுதியளித்தார். மேலும்; நடைபயணமாக வந்திருக்கும் விவசாயிகளை அவர் அவர் ஊருக்கு திரும்ப அரசு தேவையான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையும் ஏற்கப்பட்டது. கொடுத்த உறுதிமொழியினபடி அரசு  கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் இதைவிட  பன்மடங்கு விவசாயிகளோடு நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம் எனத் தீர்மானித்த விவசாயிகள் தங்கள் முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவித்தனர்.

இதேவேளை மகாராஷ்ர அரசு விவசாயிகளின் பேரணி தொடங்கிய நாள்முதல் இப்போராட்டத்தைச் கொச்சைப்படுத்தும் செயலில் இறங்கியது. முதல்வர் பட்நாவிஸ் வந்திருப்பவர்கள் விவசாயிகள் அல்ல இவர்கள் அனைவரும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் என்று முதலில் தெரிவித்திருந்தார். இதேவேளை பாஜக பாராளுமன்ற உறுப்பினரான பூணம் மகாஜன் போராடுபவர்கள் மாவோயிஸ்ட்கள் எனவும் ‘பயங்கரவாதிகளைக் கவனிக்க வேண்டிய முறையில் கவனிக்க வேண்டும்’ எனவும் தெரிவித்தார். இந்தியாவின் பிரதான ஊடகங்கள் விவசாயிகளின் பேரணி தொடங்கியபோது அதுகுறித்து செய்திகள் எதனையும் வெளியிடவில்லை. விவசாயிகளின் போராட்டம் பொதுவெளிக்கு வராமல் அவை பார்த்துக் கொண்டன.

ஆறுநாட்கள் இடைவிடாது நடந்த விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் விவசாய விளை பொருட்களுக்கு கட்டுபடியான விலையை உத்தரவாதப்படுத்துமாறு கோருகிறார்கள்.  வங்கிகள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் வாங்கியுள்ள கடனை தள்ளுபடி செய்க என்கிறார்கள். வன உரிமைச் சட்டத்தின்படி வனப்பகுதியில் காலம் காலமாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளை வெளியேற்றக்கூடாது, அவர்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு அரசே விலையை நிர்ணயம் செய்யவேண்டும், விவசாயிகளின் விளைபொருட்களை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்யவேண்டும் ஆகியவற்றைத்தான் அவர்கள் கேட்கிறார்கள்.

அதேபோல விவசாயத்திற்கான முதல் தேசிய அளவிலான ஆணையம் பரிந்துரைத்து பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கோருகிறார்கள். விவசாயம் மற்றும் விவசாயிகளின் நிலை குறித்து அறிவதற்காக 2004 ஆம் ஆண்டு விவசாயத்திற்கான தேசிய ஆணையத்தை டாக்டர் எம.எஸ். சுவாமிநாதன் தலைமையில் அமைக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு விவசாயத்திற்காக அமைக்கப்பட்ட முதல் ஆணையம் இதுவாகும். இவ்வாணைய அறிக்கை பத்துப் பிரதான பரிந்துரைகளைச் செய்தது. அதன்படி பயிர் மற்றும் கால்நடை சார்ந்த அடிப்படைப் பிரச்சினைகளை எதிர்கொள்ளவதற்கு நிலச் சீர்திருத்தம் என்பது மிகவும் அவசியமானது என்றும் பிரதான விவசாய நிலம் மற்றும் வனப்பகுதிகள் விவசாயம் அல்லாத நோக்கங்களுக்காக பெருநிறுவனங்களுக்கு திசைத்திருப்பப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை இயற்கை இடர் காலங்களில் விவசாயக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு காப்பீட்டு வசதிகள், சுகாதார மற்றும் மருத்துவ வசதிகள் கட்டாயமாக்கப்பட வேண்டும் அவ்வறிக்கை பரிந்துரைக்கிறது.

இதேவேளை விவசாயிகளின் கடன்தள்ளுபடிக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. இது இந்தியப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்றும், கடன் வாங்கியோர் கடன்களைக் கட்டியே ஆக வேண்டும், அதுவே நியதி என்றும் பலர் இணையவெளிகளில் கருத்துத் தெரிவித்து வருவதோடு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். இந்திய மத்திய வங்கியின் புள்ளிவிபரங்களின்படி பிரதான தொழிற்றுறைகளுக்கு (விவசாயம் உட்பட) வழங்கப்பட்டுள்ள கடனின் அளவு 992,400 கோடி இந்திய ரூபாய்கள். அதில் அறவிடமுடியாக்கடன் 6% மட்டுமே. அதேவேளை பிரதானமற்ற தொழிற்றுறைகளுக்கு வழங்கப்பட்ட கடன் 26,800,000 கோடி இந்திய ரூபாய்கள். அதில் அறவிடமுடியாக்கடன் 21%. விவசாயிகளினால் திருப்பிச் செலுத்த முடியாதுள்ள மொத்தக் கடன் 59,000 கோடி. ஆனால் இந்தியாவின் புகழ்பெற்ற சாராய வியாபாரி விஜய் மல்லையா வேண்டுமென்று செலுத்தாமல் விட்ட கடன்தொகை மட்டும் 56,621 கோடி. அண்மையில் வெளிச்சத்துக்கு வந்த பஞ்சாப் வங்கியின் நீரவ் மோடி மோசடித்தொகை 11,500 கோடி ரொட்டோமக் பேனா நிறுவனத்தின் முதலாளி விக்ரம் கோதாரி செலுத்தாத வங்கிக்கடன் 3,700 கோடி. இதேபோல கோடிக்கணக்கில் வேண்டுமென்று கடன் செலுத்தாமல் வங்குரோத்தானதாக அறிவித்த நிறுவனங்கள் பல. செலுத்தக்கூடிய வசதிகள் இருந்தும் திட்டமிட்டு வங்கிக்கடன்களைச் செலுத்தாத பெருவியாபாரிகள் 9,063 பேர் என இந்திய மத்திய வங்கி அறிவித்துள்ளது. இவர்களிடமிருந்து பெறப்படவேண்டிய அறவிடமுடியாக் கடன் மட்டும் 110,050 கோடி.

இதிலே கவனிக்க வேண்டியது யாதெனில் விவசாயம் இந்தியாவின் பிரதானமான தொழிற்றுறையாக, வாழ்வாதாரமாக இருக்கின்றபோதும் அவற்றுக்கு வழங்கப்படும் கடன்களின் அளவு மிகக்குறைவானது. பிரதானமற்ற தொழிற்றுறைகளுக்கே வங்கிகள் கடன்களை வழங்குகின்றன. விவசாயிகள் காலநிலை மாற்றங்களால் பாதிக்கப்படுகிறார்கள், வங்கிகள் நியாய விலையில் அன்றி அதிகவட்டிக்கே விவசாயிகளுக்குக் கடன் வழங்குகிறது. தனது உற்பத்திப்பொருட்களுக்கான நியாய விலை இன்மையால் அடிமாட்டு விலைக்கு தனது உற்பத்திகளை விற்க விவசாயி தள்ளப்படுகிறான். பல்தேசியக் கம்பெனிகள் அவனது நிலத்தையும் உற்பத்தியையும் கபளீகரஞ் செய்கின்றன. இத்தனை நெருக்கடிகளினால் தான் விவசாயியால் தான் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடிவதில்லை. அதனாலேயே கடன்களை தள்ளுபடி செய்யக் கோருகிறான்.

நீரவ் மோடி கொள்ளையடித்துவிட்டு வெளிநாட்டில் இருக்கிறார். பிரதமர் மோடி அவரை டவோஸ் பொருளாதார மாநாட்டில் சந்தித்து உரையாடுகிறார். மல்லையா இன்னமும் ஜோராக உலகெங்கும் தனது தனிப்பட்ட படகில் சுற்றி வருகிறார். ஆயிரங்களில் கடன்வாங்கி மழைபொய்த்து நியாய விலை கிடைக்காத விவசாயியின் கடனை தள்ளுபடி செய்வதுதான் இந்தியப் பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என எம்மை நம்பச் சொல்கிறார்கள்.

இந்தவாரம் மும்பாயை சிவக்க வைத்த போராட்டம் மகாராஷ்ர மாநில அரசை மண்டியிட வைத்துள்ளது. இது போராடும் உழைக்கும் மக்களுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. விவசாயிகளே எந்தவொரு விவசாயமையப் பொருளாதார நாட்டினதும் உயிர்நாடி. அவர்களைப் புறந்தள்ளிவிட்டு விலகிச் செல்வோமாயின் எமக்கான சவக்குழியை நாமே தோண்டுகிறோம். இயற்கை விவசாயம் ஒழிக்கப்பட்ட ஒருநாளில் மரபணுமாற்றப்பட்ட உணவுகளை உண்டபடி நோயாளர்களாய் எமது எதிர்கால சந்ததி இருப்பதற்கு நாம் அனுமதிக்கப் போகிறோமோ என்பதை நாம் எல்லோரும் எமக்குள் கேட்டாக வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *