சுற்றுச்சூழல்

காலநிலை மாற்றமும் எதிர்காலமும்: குழந்தைகள் நீதி கோருகையில்

காலநிலை மாற்றத்தின் கோர விளைவுகளை எல்லோரும் அனுபவிக்கிறோம். இடைவிடா மழையும் வெள்ளமும் வரட்சியும் நீர்ப்போதாமையும் என ஒன்றுக்கொன்று முரணானவற்றை ஒருசேர நாம் அனுபவிக்கிறோம். இவற்றை வானம் பொய்த்ததென்றோ எதிர்பாரா மழை என்றோ எளிதிற் புறந்தள்ளவியலாது இவை தொடர்ந்து நடைபெறுகின்றன. ஆனால் சூழலை மாசாக்கல், புவி வெப்பநிலையை அதிகரிக்கும் செயல்கள் என எமது பூமிப்பந்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கும் காரியங்களை விடாது செய்கிறோம். எதிர்காலத் தலைமுறைகட்கு நாம் எவ்வாறான உலகத்தை விட்டுச் செல்கிறோம்? எமது பிள்ளைகளின் எதிர்காலத்தோடு அவர்களின் பிள்ளைகளதும் பேரப்பிள்ளைகளதும் எதிர்காலத்தையும் சேர்த்துக் கேள்விக்குள்ளாக்குகிறோம்.

 

அண்மையில் கொலம்பிய நீதிமன்றம் காலநிலை மாற்றம் தொடர்பான சட்டத் தொடர்பில் புதிய அத்தியாயம் ஒன்றைத் தொடக்கியது. ஏழு முதல் 25 வயது வரையான குழந்தைகளையும் இளையோரையும் உள்ளடக்கிய 25 பேர் கொண்ட ஒரு குழு கடந்தாண்டு கொலம்பிய அரசாங்கத்துக்கு எதிராகக் கொலம்பிய நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடுத்தது. அதில் கொலம்பிய அரசியல் யாப்பின்படி தங்கட்குப் பாதுகாப்பான சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் கடப்பாடு அரசாங்கத்துக்கு இருப்பதாயும் அரசாங்கம் அதைத் தொடர்ந்து மீறுவதாகவும் அவர்கள் குற்றஞ் சாட்டினர். அத்துடன் தமது அரசியல்-யாப்பு-வழி உரிமையை நிலைநாட்டுமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் கோரினர். மோசமான முறையில் தொடர்ந்து அழிக்கப்படும் அமேசன் காடுகளைப் பாதுகாப்பதைக் குறிப்பான இலக்காகக் கொண்டே வழக்குத் தொடுக்கப்பட்டது.

 

எதிர்கால சந்ததிக்கு வளமான எதிர்காலத்தை உறுதி செய்யும் பொறுப்பு வாழும் அனைவருக்கும் உண்டு என அமைந்த வழக்கின் தீர்ப்பு  காலநிலை நீதியைப் (Climate Justice) புதிய திசைவழியில் நகர்த்தியது. இவ்வாறு சுற்றுச்சூழலையும் குழந்தைகளையும் இணைத்த வழக்கு உலகில் முதலில் 1993ம் ஆண்டு பிலிப்பின்ஸில் தொடரப்பட்டது. டோனி ஒப்போசா (Tony Oposa) என்ற வழக்கறிஞர் தனது குழந்தைகளதும் குழந்தைகள் குழுவொன்றினதும் சார்பில் பிலிப்பின்ஸில் அரசியல்யாப்பில் உறுதிசெய்துள்ள நலமான சுற்றுச்சூழலில் வாழும் உரிமையை காடழிப்புகள் மீறுவதாக நீதிமன்றில் வழக்குத் தொடுத்தார். அவருக்குச் சார்ப்பாகத் தீர்த்த நீதிமன்றம் வளமானதும் நலமானதுமான எதிர்காலத்தை உறுதி செய்வது அரசின் கடமை எனவும் சுட்டிக் காட்டியது.

 

1993ம் ஆண்டுக்குப் பின் இத்தகைய முற்போக்கான தீர்ப்பு வேறெங்கும் கிடைக்கவில்லை. அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் சுற்றுச்சூழல் தொடர்பாகப் பல வழக்குகள் தொடுத்தும் அவை வெல்லவில்லை. இப்போதைய வழக்கின் முக்கியம் யாதெனில், முதலாவதாகக் தங்கள் எதிர்காலத்தை உறுதி செய்யக்கோரி குழந்தைகளே வழக்குத் தொடுத்துள்ளார்கள். இரண்டாவதாகக் காலநிலை மாற்றத்தை மையபப்படுத்தி வழங்கிய முதலாவது தீர்ப்பு என்ற வகையிலும் இது முக்கியமானது. இதற்கு முன் உகண்டா, உக்ரேன் ஆகிய நாடுகளில் வாழ்வதற்கான வளமான சுற்றுச்சூழல் என்ற அடிப்படையிற் தீர்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், நீதி வழங்கலில் காலநிலை மாற்றத்தை முக்கியமாகக் கொண்ட முதல் வழக்கு இதுவே.

 

காடழிப்பை நிறுத்த வேண்டும் என்று மட்டும் கூறாமல் ஆழ்ந்த விளக்கங்களுடன் கொலம்பிய நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. ‘உலகமும் இயற்கையும் எமக்கான பண்டங்கள் அல்ல. நாம் அவற்றின் தயவில் வாழ்கிறோம். இயற்கையும் உலகமும் நாம் வாழ்தற்கானவையேயன்றிச் சூறையாடிச் சீரழித்தற்கல்ல’ என்று அத் தீர்ப்புக் கூறியது. ‘அமேசன் மழைக்காடுகள் தனியார் சொத்தல்ல. அதன்மீது அனைவருக்கும் சட்டப்படி உரிமை உண்டு. எனவே அனைவரதும் பிரதிநிதியாயும் நிர்வாகியாயும் உள்ள அரசாங்கம் அதைப் பாதுகாத்தற்கும் அத் தொடர்பில் மக்களுக்கு வகைகூறவும் கடமைப்பட்டது’ என்றும் அது மேலுங் கூறியது.

 

சட்டத் தறையில் மிகவும் வேறுபட்டதும் புரட்சிகரமானதும் என இது கருதப்படுகிறது. ஏனெனில் அமேசன் காடுகளை அழிப்பதைத் தடுக்கக் கொலம்பிய அரசாங்கம் செயற்படாவிடத்து தனது சட்டரீதியான உரிமை மீறப்படுவதாக எக் கொலம்பியரும் நீதிமன்றை நாடலாம்.

 

அத்துடன், குழந்தைகளின் உரிமைகள், வளமான சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் என முப்பரிமாண நோக்கில் அமைந்துள்ள இத் தீர்ப்பு எதிர்காலத்தில் சட்டரீதியாக காலநிலை மாற்றத்தை அணுகும் வாய்ப்பை வழங்கியுள்ளது.

 

இவ் வழக்கின் முன்னோடித் தன்மை, காலநிலை மாற்றத்தை நீதி சார்ந்த முக்கிய காரணியாகக் கருதும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. அதையொத்த வழக்குகள் இப்போது அமெரிக்காவிலும் போத்துக்கல்லிலும் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளன. 2015ம் ஆண்டு 21 அமெரிக்கக் குழந்தைகள் காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் கேடுகளைக் நிறுத்தத் தவறியதன் மூலம் குழந்தைகளதும் பிறக்கவுள்ள தலைமுறையினரதும் எதிர்காலத்தை அமெரிக்க அரசாங்கம் கேள்விக்குள்ளாக்கியுள்ளது என வழக்குத் தொடுத்தனர். கடந்த மாதம் அமெரிக்க உயர் நீதிமன்றம் அமெரிக்க அரசாங்கத்துக்கு எதிராக் குழந்தைகள் தொடுத்த வழக்கைத் தள்ளுபடி செய்ய மறுத்தது.

 

அப்போதைய ஜனாதிபதியான பராக் ஒபாமாவின் அரசாங்கம் அவ் வழக்கைத் தள்ளுமாறு வழக்குத் தொடுபட்ட ஒரிகன் மாநில நீதிமன்றிற் கோரியது. எதிர்பாராதவாறு மாவட்ட நீதிபதி வழக்கைத் தள்ள மறுத்தார். அது அமெரிக்காவில் அதிர்வலைகளை எழுப்பியது. அதையடுத்து அமெரிக்க அரசாங்கம் உயர் நீதிமன்றில் முறையிட்டது. இப்போது அவ் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் வழக்குத் தள்ளக் கூடியதல்ல என்று கூறியதோடு வழக்கின் முக்கியத்தையும் எதிர்கால நோக்கையும் கருதின் அதைத் தள்ளுதற்கு உகந்த காரணங்களில்லை என்றும் வழக்கை விசாரிக்கும் ஓரிகன் மாநில நீதிமன்றம் இவ் விடயங்கட்குக் கவனங்காட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

 

இவ்வாறான வழக்குகளை அரசாங்கங்கள் அஞ்சக் காரணங்கள் பல. இத் தொடர்பில், அண்மையிற், “காலநிலை மாற்றங்கட்கு அரசாங்கங்களைப் பொறுப்பாளியாக்குவது எப்படி?” என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்ட கொலம்பிய நாட்டவரான கத்தலினா பயெஹொ (Catalina Vallejo) பயனுள்ள கருத்துக்களை முன்வைத்தார். காலநிலை, சக்தி மாற்ற மையத்தில் (Centre for Climate and Energy Transformation) நடந்த கலந்துரையாடலில் அரசாங்கங்கட்கு மட்டுமன்றி சட்டத்திற்கும் காலநிலை மாற்றம் சிக்கலானதும் சவலானதுமான நெருக்கடிகளைக் கொடுத்துள்ளது என்று கத்தலீனா தெரிவித்தார்.

 

மக்கள் காலநிலை மாற்றங்கள் பற்றி முன்னிலும் விழிப்போடுள்ளனர். இவ் விழிப்புணர்வுக்கு காரணங்கள் பல. அதில் பிரதானமானது அவர்கள் இப்போது முன்னில்லாதளவிற் காலநிலை மாற்றங்களை உணர்கிறார்கள். குறிப்பாகக் கடந்த பத்தாண்டுகளில் ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளிற் காலநிலை மாற்றத்தின் கோர விளைவுகள் உணரப்பட்டன. இன்று வேறுபாடின்றி உலகின் எல்லா மூலைகளிலும் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் புலனாகின்றன.

 

காலநிலை மாற்றத்தின் மோசமாக விளைவுகள் பற்றிய விழிப்புணர்வுச் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் இன்று கணிசமான தாக்கஞ் செலுத்துகின்றன. இன்னொரு புறம் அரசாங்கங்கள் எவ்வாறு பல்தேசியக் கம்பெனிகட்கும் கோடீஸ்வரர்கட்கும் தரகு வேலை பார்க்கின்றன என மக்கள் உணர்கிறார்கள். உலகம் 1% செல்வர்கட்கு எதிராக 99%  ஏனையோர் என்று தீர்க்கமாகப் பிளந்திருப்பதை அவர்கள் உணர்கிறார்கள். உலகம் இலாப வெறிக்கும் ஆதிக்க ஆசைக்கும் பலியாகிறது என்பது வெளிப்படை. இதற்கு ஒரு உதாரணம் போதும்.

 

லிபியா மீது ஆக்கிரமிப்புப் போர் ஏகாதிபத்திய எண்ணெய் நிறுவனங்களின் ஆதாயத்துக்கானது எனவும் மேற்குலக நாடுகளின் தலைவர்கள் எண்ணெய் முதலாளிகளின் நிகழ்ச்சிநிரலையே நடைமுறைப்படுத்தினர் எனவும் லிபிய ஆக்கிரமிப்பைத் தொடர்ந்த நிகழ்வுகள் காட்டின. உலகின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் லிபியாவின் பங்கு 2% ஆகும். லிபிய எண்ணெயில் கந்தகம் குறைவு என்பதால், சுத்திகரிப்புச் செலவு குறைவு. எனவே ஐரோப்பிய எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் லிபிய எண்ணெய் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருந்தன. லிபியப் பாலைவனங்களில் எண்ணெய் வளத்தை அகழ்ந்தாராந்து புதிய எண்ணெய் வயல்களில் உற்பத்தி தொடங்கின், அடுத்த பத்தாண்டுகளில் லிபிய எண்ணெய் உற்பத்தி இருமடங்காகும் என்பதால் ஐரோப்பாவின் பெரிய எண்ணெய் நிறுவனங்களே ஆக்கிரமிபைத் தூண்டி லிபிய எண்ணெய் வயல்களைத் தமதாக்கின.

 

கவனிக்க வேண்டியதெனக் கத்தலீனா சுட்டும் விடயம் ஏதெனில் நீதிமன்றங்கள் இலகுவில் இவ் எண்ணெய் நிறுவனங்கட்கு எதிராகவோ அரசாங்கங்கட்கு எதிராகவோ தீர்ப்பு வழங்கா. ஏனெனில் ஒரு அரச நிறுவனத்திற்கு எதிராக வழங்கும் தீர்ப்பு அடுக்குவிளைவுகளை (Domino Effect) ஏற்படுத்த வல்லது. இது அரசாங்கத்தைப் பெருஞ் சிக்கல்கட்குட்படுத்த வல்லது. இன்னொரு புறம் நீதிபதிகட்குக் காலநிலை நீதி புதியதொரு துறை. எனவே நீதிபதிகட்கு அதை விளக்குவது வழக்கறிஞர்களின் கடமையாகிறது. இப் பணி வழக்கறிஞர்களிடம்; கடின உழைப்பைக் கோருகிறது. இருந்தும் கொலம்பிய நீதிமன்றத் தீர்ப்பு புதிய சாளரங்களைத் திறந்துள்ளது.

 

இனிக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய வினாவுக்குத் மீள்வோம். காலநிலை மாற்றங்கள் எவ்வாறு குழந்தைகளைப் பாதிக்கின்றன என்று பார்ப்போம். முதலில் வெள்ளப் பெருக்கு எவ்வாறு குழந்தைகளைப் பாதிக்கிறது என நோக்கின், உலகெங்கும் 530 மில்லியன் குழந்தைகள் வெள்ளத்தினால் கடும் பாதிப்புகள் நிகழக்கூடிய பகுதிகளில் வசிக்கிறார்கள். அவர்களுள் 270 மில்லியன் குழந்தைகள் சுகாதார வசதியற்ற, வெள்ளப்பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய பகுதிகளில் வசிக்கிறார்கள். 100 மில்லியன் குழந்தைகள் வெள்ளப்பாதிப்புக்கு உள்ளாகக் கூடியதும் சுத்தமான குடிநீர் இல்லாததுமான பகுதிகளில் வசிக்கிறார்கள். வெள்ளப்பெருக்கு ஏற்படின் பலர் வயிற்றுப்போக்காற் சாகக்கூடிய பகுதிகளில் 400 மில்லியன் சிறுவர்கள் வாழ்கிறார்கள்.

 

வரட்சியாலும் உலகெங்கும் குழந்தைகள் மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள். வரட்சியை எதிர்நோக்கும் பகுதிகளில் 160 மில்லியன் குழந்தைகள் வாழ்கிறார்கள். 60 மில்லியன் குழந்தைகள் வரண்ட, சுத்தமான குடிநீரற்ற பகுதிகளில்; வாழ்கிறார்கள்.

 

கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 150,000 பேர் காலநிலை மாற்றங்களுடன் உறவுள்ள காரணங்களால் மரித்துள்ளனர். இவ்வாறு மரித்தவர்களில் பத்தில் ஒன்பது பேர் குழந்தைகள். விருத்தியடையும் நாடுகளில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சாவிற்குப பிரதான காரமாகக் காலநிலை மாற்றம் உள்ளது. நாளுக்கு 1,600 குழந்தைகள் வயிற்றுப்போக்கால் இறக்கிறார்கள். இப்போது ஆபிரிக்காவில் ஆண்டுக்கு எட்டு இலட்சம் குழந்தைகள் மலேரியாவால் இறக்கிறார்கள். மோசமான காலநிலை மாற்றங்களின் விளைவாக இத்தொகை 60 மில்லியனாக உயரலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

காலநிலை நெருக்கடிக்குத் தீர்வு எனக் கொண்டாடிய பாரீஸ் உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா விலகுமெனக் கடந்தாண்டு தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்துள்ளார். உலகத் திருடர்கள் இணைந்து ஒப்பனை ஒத்திகையுடன் அரங்கேற்றிய நாடகத்தின் அவலச்சுவை அமெரிக்க வடிவில் வெளிப்பட்டது. திருடர்களிடையே எழுந்த முரண்பாடுகளின் பகுதிதான் இந்த அவலமான திருப்பம் என நாம் உணர வேண்டும்.

 

உலகிற் பல வடிவங்களிலும் அளவுகளிலும் உயிரினங்கள் வாழ்கின்றன. திமிங்கிலங்கள் போன்ற அதிபெரிய உயிரினங்களும் வெறுங் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களும் உள்ளன. சில நாட்கள் மட்டுமே உயிருடன் இருப்பவை முதற் பல நூறு ஆண்டுகள் வாழவன வரை பல்வகை உயிரினங்கள் உள்ளன.

 

சுட்டெரிக்கும் பாலைவனங்களில் சில உயிரினங்கள் வாழ்கின்றன. பனி படர்ந்த கடுங்குளிர்ப் பிரதேசங்களிலும் உயிரினங்கள் வாழ்கின்றன. உணவு, வாழிடம் (ர்யடிவையவ) போன்ற பல்வேறு அம்சங்களில், பல்வேறு வகைகளில் வேறுபடும் ஏராளமான உயிரினங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடன் வாழ்கின்றன. ஒரு பிரதேசத்திற் பல்வேறு உயிரினங்கள் செழித்து வாழ்வதே உயிரினப் பன்மை. அது உயிரினப் பன்மயம், பல்லுயிர் பெருக்கம் எனும் பெயர்களிலும் அறியப்படுகிறது. இதுவரை கண்டறிந்து வகைப்படுத்திய 80 இலட்சம் உயிரினங்களும் இன்னும் கண்டறியாத, பெயரிடாத தாவர, விலங்கினங்களும், நம்முடன் வாழும் வளர்ப்பு விலங்குகளும் சேர்ந்த ஒட்டுமொத்த உயிரின வளமே உயிர்ப் பல்வகைமை (Bio Diversity).

 

சூழலியலில் (Ecology) ஒவ்வொரு உயிரினமும் இன்னொன்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது. எனவே, ஓர் உயிரினம் அழியின், அதன் விளைவு சங்கிலித் தொடராக இன்னொன்றைத் தாக்கும். காலநிலை மாற்றத்தின் அதிபெரிய அவலமும் ஆபத்தும் இதுவே.

 

நமது குழந்தைகட்கும் பேரக்குழந்தைகட்கும் சுடுகாட்டையா பரிசளித்துச் செல்வோம் என்ற கேள்வியை நாம் ஒவ்வொருவரும் நம்மையே கேட்க வேண்டும். வண்ணத்துப் பூச்சிகளும், தேனீக்களும், வண்டினங்களும், குருவிகளும், மண்புழுக்களும் பாடநூல்களில் மட்டுமே படங்களாகவும் கதைகளாகவும் இருப்பது எவ்வளவு கொடுமை என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

 

நாம் எடுக்கத் தவறிய அடியைக் குழந்தைகள் எடுத்துள்ளார்கள். அவர்கள் நீதியைக் கோருகிறார்கள். தமக்கான நீதியைக் கோருகிறார்கள். தாம் வாழ்வதற்கான உலகைக் கோருகிறார்கள். அக் கோரிக்கையின் நியாயத்துடன் எம் தலைமுறையின் அநியாயமும் இங்கு புலப்படுகிறது. நீதியை வேண்டியதன் மூலம் குழந்தைகள் எம் மீது உமிந்துள்ளார்கள். நாம் ஒவ்வொருவரும் எம்மை கேட்க வேண்டிய கேள்விகள் பல. அவ் வரிசை மிக நீண்டதும் எமக்கு மிகச் சங்கடத்தை உண்டாக்க வல்லதுமாம். எனவே, அக் கேள்விகள் ஒருபுறம் இருக்க, எமது சூழலைக் காக்க நாம் என்ன செய்கிறோம் என்ற கேள்வியை ஒவ்வொருவரும் எம்மிடமே கேட்டு, அக் கேள்வியிலிருந்து தொடங்குவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *