தேர்தலுக்குப் அப்பாலான ஜனநாயகம்: ஊடகக் காலத்தில் அரசின் பொறுப்புக்கூறல்
ஜனநாயகம், பொறுப்புக்கூறல், ஊடகம் ஆகிய மூன்றுக்குமிடையிலான உறவு மிகவும் சிக்கலானது. குறிப்பாக நவீன தொழிநுட்பத்தின் புதிய பரிமாணங்கள் ஊடகத்தின் வலிமையையும் இயங்குதிசைகளையும் அதிகரித்துள்ளன. ஜனநாயகத்தின் மிகப்பெரிய வாய்ப்பாகவும் சவாலாகவும் இன்று ஊடகங்களே திகழ்கின்றன. அதேவேளை அரசின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவது சார்ந்து செயற்படுவதென்பது அரசியலாகிறது. அதில் இலாபமடைவதும் அதிகாரத்தைப் பெறுவதும் ஊடகங்ளே. ஒருபுறம் அரசாங்கங்கள் தங்கள் எதிரிகளை ஊடகங்களின் உதவியோடு மிரட்டுகின்றன. மறுபுறம் தங்கள் ஊடகவலிமையால் ஊடக நிறுவனங்களை அரசுகளை மிரட்டி தமக்கு வேண்டியதைச் சாதிக்கின்றன. இந்நிலையில் அரசின் பொறுப்புக்கூறலின் எதிர்காலம் என்ன? இந்த வினாவை அடிப்படையாக கொண்டு அண்மையில் வெளிவந்த புத்தகம் “தேர்தலுக்குப் அப்பாலான ஜனநாயகம்: ஊடகக் காலத்தில் அரசின் பொறுப்புக்கூறல்” (Democracy Beyond Elections: Government Accountability in the Media Age)
இந்தப்புத்தகம் ஜனநாயகத்தை விளங்குவதற்கான இன்னொரு அணுகுமுறையை முன்வைக்கிறது. புல்கேரியா, ஜேர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகளை மையப்படுத்தியான ஆய்வுகளின் அடிப்படையில் ஊடக ஊழல்கள், பொறுப்புக்கூறல், ஜனநாயகத்தின் நெருக்கடி ஆகியவற்றை மையப்படுத்திய சட்டகம் ஒன்றை முன்வைக்கிறது. ஊடகத்தின் மையமாக ‘கேள்வியும் வழங்கலும்’ (supply and demand) இருக்கின்ற நிலையில் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் என்பது பொதுமக்களிடையே பிரதான பேசுபொருளாக இல்லை. மக்கள் விரும்புவதை ஊடகங்கள் தருகின்றன, இன்னும் சரியாகச் சொன்னால் ஊடகங்கள் மக்கள் விரும்புவதைத் தருவதாகச் சொல்கின்றன. ஜனநாயகத்தின் விழுமியங்களுக்கும் அதன் நடைமுறைக்கும் இடையிலான இடைவெளி புலனாகிற புள்ளி இது. இந்நிலையில் ஜனநாயகத்தை எவ்வாறு புரிந்து கொள்வது. தேர்தலுக்கு வெளியிலான ஜனநாயகச் செயன்முறையை நோக்கி எப்படி நகர்வது போன்ற கேள்விகளை இந்நூல் முன்வைக்கிறது. இன்றைய தென்னாசிய நாடுகளின் அரசியலைப் புரிந்துகொள்ள இந்நூல் எழுப்பும் கோட்பாட்டு ரீதியான கேள்விகள் பயனுள்ளவை.
மேலதிக தகவல்களுக்கு: https://www.palgrave.com/gp/book/9783030252939