அறிமுகம்சமூகம்நூல் அறிமுகம்

ஜனநாயகத்தை மீள்வடிவமைத்தல்

போருக்குப் பிந்தைய இலங்கையில் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய அரசின் அவசியம் பற்றியும் அதன் ஜனநாயகத் தன்மை பற்றியும் பேசப்படுகிறது. ஆனால் அடக்குமுறையும் புறக்கணிப்பும் ஒதுக்கப்படுதலும் சமூகத்தின் பல்வேறு நிலைகளில் பல்வேறு வடிவங்களில் நடந்தேறுகின்றன. இதை கோட்பாட்டு ரீதியிலும் நடைமுறை நிகழ்வுகளின் அடிப்படையிலும் விளங்கிக்கொள்ளல் ஜனநாயகத்தை மீள வடிவமைக்க வேண்டிய தேவையின் அவசியத்தை வலியுறுத்தி நிற்கிறது. ஆவ்வடிப்படையில் இலங்கையின் மிகமுக்கியமான அரசியல் விஞ்ஞானியான ஜெயதேவ உயன்கொட மற்றும் நெலூபர் டி மெல்லினால் தொகுக்கப்பட்ட ‘Reframing Democracy: Perspectives on the Cultures of Inclusion and Exclusion in Contemporary Sri Lanka’ (ஜனநாயகத்தை மீள்வடிவமைத்தல்: நிகழ்கால இலங்கையில் உள்ளீர்ப்பு மற்றும் புறக்கணிப்புப் பண்பாடு பற்றிய கண்ணோட்டம்)  புத்தகமானது கட்டாயம் வாசிக்கப்பட வேண்டியது.

மூன்றாமுலக நாடுகளில் மேற்கத்தைய அடிப்படைகளை மையப்படுத்திய ஜனநாயகம் என்ற கருத்துருவாக்கம் பொருந்தி வருகிறதா அல்லது மூன்றாமுலகச் சூழலுக்கேற்ப அது மீள்வடிவமைக்கப்பட வேண்டுமா என்ற கேள்வியை மையப்படுத்தியாக இப்புத்தகம் இருக்கிறது. அவ்வகையில் இலங்கைச் சமூகத்தை அதன் அரசியலை ஜனநாயக கண்ணோட்டத்தில் நோக்குகிற இப்புத்தகம் ஆழ்ந்த வாசிப்பைக் கோரி நிற்கிறது.

போருக்குப் பின்னரான இலங்கைச் சூழலில் இலங்கை அரசை மறுசீரமைக்க வேண்டிய தேவையின் அவசியத்தையும் ஜனநாயகத்தின் பெயரால் பெரும்பான்மை ஆட்சியானது எவ்வாறு சிறுபான்மையினரின் உரிமைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை இந்நூல் அன்றாட வாழ்வியில் ஜனநாயக நடவடிக்கைகளின் வகிபாகத்தின் ஊடு இலகுவாக விளக்கிச் செல்கிறது.

இலங்கையில் நாளாந்த நடவடிக்கைகளில் ஜனநாயகம் எவ்வாறு செயல்வடிவம் பெறுகிறது என்பது பற்றிய ஆழமான ஆய்வுகளை உள்ளடக்கிய கட்டுரைகளின் தொகுப்பாக இப்புத்தகம் அமைந்திருக்கிறது. தேயிலைத் தோட்டங்கள், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம், உள்ளுராட்சி சபைகள், மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் என இலங்கைச் சமூகத்தின் வெவ்வேறு படிநிலைகளில் வாழ்பவர்களின் வாழ்க்கைமுறை அவர்களின் ஜனநாயக நடவடிக்கைகளை களஆய்வுகளின் ஊடாக ஆய்வுக்குட்படுத்தும் இந்நூலானது இலங்கையின் வெவ்வேறு சமூகப் பிரிவுகளின் வாழ்நிலைகள் பற்றிய குறுக்குவெட்டுத் தோற்றத்தைத் தருகிறது. இவ்வகையில் இலங்கையில் ஜனநாயகம் பற்றிய புரிதலுக்கு வாசிக்கப்படவேண்டிய ஒன்றாக இதைச் சொல்வேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *