அதிபன்முகப் புலம்பெயர் சமூகம்: பிரித்தானியாவில் தமிழ் குடியேற்றவாசிகளின் அன்றாட அடையாளப்படுத்தல்
பிரித்தானியாவில் வாழும் தமிழ் குடியேற்றவாசிகளின் அடையாளம் என்ன. அவர்கள் எவ்வாறு தங்களை அடையாளப்படுத்துகிறார்கள். அவ்வடையாளப்படுத்தல்களின் பன்முகத்தன்மையை எவ்வாறு விளங்கிக் கொள்வது. ஆகிய வினாக்களை ‘அதிபன்முகப் புலம்பெயர் சமூகம்: பிரித்தானியாவில் தமிழ் குடியேற்றவாசிகளின் அன்றாட அடையாளப்படுத்தல்’ (Superdiverse Diaspora: Everyday Identifications of Tamil Migrants in Britain) என்ற இந்தப் புத்தகம் ஆராய்கிறது.
குறிப்பாக ஈழத்தமிழர் என்ற அடையாளம் பொதுமையாக்கப்பட்டுள்ள நிலையில், நடைமுறையில் மக்கள் தங்களை அவ்வாறு இனங்காண்கிறார்களா? அவர்களுக்குள் அதிகம் இருப்பது ஒற்றுமைகளா வேறுபாடுகளா அதற்கான அகப் புறக்காரணிகள் என்ன போன்ற வினாக்களை இந்தப் புத்தகம் எழுப்புகிறது.
தமிழர்கள் என்ற பொது அடையாளப்படுதல்களுள் உட்படும் இலங்கை, இந்திய, மலேசிய, சிங்கப்பூர் தமிழர்களை உள்ளடக்கிய இந்த ஆய்வானது தமிழர் என்ற பொது அடையாளத்தின் சாத்தியங்களை ஆராய்கிறது.
விடுதலைப்புலிகளின் தோல்வியின் பின் அரசியல் தளத்தில் இத்தமிழ்ச்சமூகத்தின் செல்திசைகள் குறித்த சில முக்கியமான அவதானிப்புக்களைச் செய்கிறது.
இந்தப் புத்தகத்தின் நிறைவு வரிகள் சொல்கிற செய்தி வலுவானது
“பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழ்ச்சமூகம் என்பது அழகியலும் தார்மீகமும் ஒருங்கே கொண்டதொரு சமூகம். அதேவேளை வெவ்வேறுபட்ட சூழல்களில் வெவ்வேறுபட்ட அடையாளப்படுத்தல்களைக் காட்டுகின்ற ஒன்றுடன் ஒன்று போட்டி போடுகின்ற, இணைந்து செயல்படுகின்ற, உதவுகின்ற, வேற்றுமைகளுடன் சேர்ந்து வாழ்கின்ற தமிழ் என்ற உணர்வால் ஒன்றுபடுகின்ற ஒரு சமூகம்.”
இந்த அவதானம் முக்கியமானது. குறிப்பாக புலம்பெயர் தமிழ்ச்சமூகம் என்பது பலர் விளங்கிக் கொண்டுள்ளவாறு ஒற்றைப் பரிமாணம் கொண்டதல்ல என்பதை விளங்குதல் முக்கியமானது. அதைப் பிரித்தானிவை மையப்படுத்தி விளக்குகின்ற இந்நூல் புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தின் பல்வகைமை பற்றி அறிய விரும்புவோர் வாசிக்க வேண்டியதொரு நூல்.
மேலதிக தகவல்களுக்கு:https://www.palgrave.com/gp/book/9783030283872