காரண காரியம்
ஒரு காரியம் நடக்கும் போது
அதற்கான காரணத்தைக் கேட்கிறீர்கள் நீங்கள்
ஒரு காரணத்துக்காகத்தான்
அந்தக் காரியம் செய்வதாகச் சொல்கிறார்கள் அவர்கள்
நீங்கள் காரணந்தான் முக்கியம் என்கிறீர்கள்
அவர்கள் காரியந்தான் முக்கியம் என்கிறார்கள்
நீங்கள் காரணத்தைச் சொல்லிவிட்டு
காரியத்தைச் செய்யச் சொல்கிறீர்கள்
அவர்களோ காரியத்தைச் செய்துவிட்டு
காரணத்தைச் சொல்கிறோம் என்கிறார்கள்
காரணம் கேட்பவர்களுக்கு
காரியம் என்னவென்று புரிகிறதா?
காரியம் ஆற்றுபவர்களுக்கு
காரணம் என்னவென்று புரிகிறதா?
நீங்கள் காரணத்தைக் கேட்க
அவர்கள் ஏன் என மறுக்க
தர்க்கம் தொடர
முடிவுகளற்றுப் போக
இறுதிவரை
உங்களையும் அவர்களையும் தவிர
வேறெவருக்கும்
காரணம் பற்றியோ
காரியம் பற்றியோ
எதுவுமே தெரியாது
வழமை போலவே