இலக்கியம்கட்டுரைகள்

ஈழத்து இலக்கியமும் சமூக விடுதலையும்: சில குறிப்புக்கள்

அறிமுகம்

இன்றைய ஈழத்து இலக்கியச் சூழல் இலக்கிய நோக்கிலும் சமூக அசைவியக்கத்திலும் புதிய மாற்றங்களைக் கண்டிருக்கும் அதே வேளை, இலக்கியம் சமூக மாற்றத்திற்கான முக்கிய இயங்குதளமாக மாறியிருக்கிறது. சமூக விடுதலைக்கான இயங்குதளங்கள் செயற்படமுடியாத, செயற்படாத நிலையில், குறிப்பாகப் போருக்குப் பிந்திய இலங்கைச் சூழலில், இலக்கியத்தின் பங்கு முக்கியமாகிறது. குறிப்பாக, மக்களுக்கான இலக்கியங்கள் எனுமடிப்படையில், ஈழத்து இலக்கியம் இன்று புதிய திசைவழிகளை வேண்டுகிறது. ஏனெனில் உலகின் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் முக்கியமான போராட்டக் கருவியாக இலக்கியம் எப்போதும் இருந்திருக்கிறது@ இப்போதும் இருக்கிறது.

பண்பாட்டு இடைவெளிக்குள் சிக்குண்டு, பண்பாட்டு மௌனம் பேணுபவர்களாக எல்லோரும் வாழும் ஒரு சூழலிலேயே புதிய திசைவழிகட்கான தேவையைப் பேசவேண்டியிருக்கிறது. அனைத்து அதிகாரங்களின் முன்னும் வாய்பேசா மௌனியாய் இருந்து, அதிகாரம் தனது அடையாளத்தை  n;நருக்கடிக்குட்படுத்துகையிற்ம் இருட்டறைக்குள் இருந்து வெளிவந்த ஒருவரைப் போற் சமூகத்தை எதிர்கொள்ளும் மனநிலை இன்று பரவலாக உள்ள இச் சூழலில், மார்ட்டின் நெய்மோலரின் ‘அவர்கள் என்னைத் தேடி வந்தபோது….” எனத் தொடங்கும் கவிதை நினைவுக்கு வருகிறது. இந்த நிலையில் மக்களையும் மக்களின் மனங்களையும் மீட்கப் புதிய வழிமுறைகள் தேவைப்படுகின்றன. அதற்கான முக்கியமான ஒரு கருவியாக இலக்கியம் அமைகிறது. இலக்கியம் மனிதர்களோடு ஊடாடுகிற போதிலும்,  வாழ்க்கையும் இலக்கியமும் வெவ்வேறு. இந்தப் புதிரான சமன்பாட்டைத் தம் இருப்பிலும் எழுத்திலும் ஏககாலத்திற் தீர்த்துக்கொள்ள முயலும் பலருக்கு அது சமப்படாமற் போய்விடுகிறது. இரண்டும் ஒன்றோடொன்று முரண்பட்டும் ஒன்றையொன்று வழிநடத்தியும் நகரும் அபாயமான விளையாட்டாகத் தொடர்கின்றன. ஆனால் இலக்கியம் மக்களுக்கானதாக மாறும்போது இந்தப் புதிரான சமன்பாடு எழுத்தாளனுக்கு வாய்ப்பது உண்மையே.

சமூக மாற்றத்திற்கான இயங்குதளங்கள் விடாது மாறிவருகின்றன. இன்றைய உலகமயமாக்கற் சூழலில் மக்களை ஒன்றுதிரட்டும் வழிமுறைகள் அருகி வருகின்றன. புதிய வழிமுறைகளைத் தேடுவதும் புதிய இயங்கு தளங்களை நோக்கிக் செல்வதும் இன்றைய தேவைகளாக உள்ளன. ஈழத்தின் இன்றைய சூழலில் பண்பாட்டுத் தளச் செயற்பாடும் மாற்றமும் முன்னெப்போதையும் விட முக்கியமானவாயுள்ளன. மக்களை ஒன்று திரட்டுவது கடினமானதாயும் சிக்கலானதாயும் மாறியுள்ள ஒரு சூழலிற் பண்பாட்டுத் தளத்திலான செயற்பாடுகளே மக்களைச் சென்றடையக்கூடிய வழிமுறைகளாகவும்  மக்களை ஒன்றுதிரட்டக்கூடிய மூலோபாயங்களாகவும் உள்ளன. இந்நிலையில், திட்டமிட்ட பண்பாட்டுத் தளச் செயற்பாடுகள் அவசியம். எந்தவொரு செயற்பாடும் மக்களை எவ்வளவு தூரம் சென்றடைகிறது என்பதே அதன் வெற்றியைத் தீர்மானிக்கிறது. எனவே தெளிவாகவும் இலகுவாகவும் சென்றடையும் வழிவகைகளைத் தேட வேண்டும். இதனாற்தான் இலக்கியத்தின் பங்கும்; பங்களிப்பும் பற்றிப் பேசவேண்டியுள்ளது. இலக்கியத்தைப் பற்றி மட்டுமன்றிச், சமூகத்தையும் நிகழ்நிலைகளையும் பற்றிய தெளிவைப் பற்றியும் நடப்பன பற்றிய புரிதலைப் பற்றியும் பேசவேண்டியுள்ளது. அப் புரிதல்களே சமூக விடுதலைக்கு இலக்கியங்கள் ஆற்றவேண்டிய பங்குபணிகளை உணர உதவும்.

 

நெறிமுகம்

ஒரு சமூகத்தின் முக்கியமான அடையாளமாக மொழி இருக்கிறது. மொழியின் அழகியலையும் மொழியையுஞ் செழுமைப்படுத்துவனவாக இலக்கியங்கள் அமைவது இயல்பு. சமுதாய வளர்ச்சி மொழியைப் பாதிக்கிறது. சமுதாய வளர்ச்சியிலும் மாற்றத்திலும் மொழி முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு மொழி அதன் சமுதாய வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கத் தவறும்போது தன் சாவை எதிர்நோக்குகிறது. நடைமுறையே மொழியின் வளத்தையும் வளர்ச்சியையும் நிர்ணயிக்கிறது. இவ்வாறிருக்க, மொழி பற்றிய விறைப்பான பார்வைகள் ஒருபுறமும் பிறமொழிகளை கண்மூடித்தனமாக கலப்பது மறுபுறமுமாகப் பண்டிதர்களும் நவீனம் பேசுவோரும் மொழியின் சாவை விரைவுபடுத்தி, மொழியைக் கழுவேற்றுகிறார்கள். இது தமிழுக்கு மிகப் பொருந்தும். ஆயினும் இங்கு சொல்ல வேண்டிய ஒரு விடயம் உண்டு. எந்த மொழியாலும் அதன் சமுதாயச் சூழலின் மாற்றங்கட்கு ஈடுகொடுக்க முடியும். அவ்வாறு ஈடுகொடுக்க இயலாமற்போகத் தேவையில்லை. ஏனெனிற் புதிய சமுதாயமும் அதனுடன் தொடர்பான புதிய சிந்தனைகளும் சமுதாயத்தின் உறுப்பினர்களாலேயே உருவாகின்றன. தேவைகளையொட்டி மொழியில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவற்றைச் சரிவர உள்வாங்குவதோடு தனது அடிப்படைகளையும் பேணுவதன் மூலம் மொழி வாழும்.

இது ஒருபுறமிருக்க, இலக்கியங்களை அரசியல் நீக்கித் தமது படைப்புகளை அரசியலற்றன என படைப்பாளிகள் அறிவிப்பதும் ஒரு போக்காகியுள்ளது. குறிப்பாகப், போருக்குப் பிந்திய சூழலிற் தங்களது படைப்புக்களை அரசியலற்றன எனக் கூறும் அதேவேளை, தங்களது படைப்புக்கள் சமூகத்தைப் பிரதிபலிப்பதாகவும் சொல்கிறார்கள். எத்தகைய ஒரு முரண்நகை இது! உண்மையில் இது ஒரு நோய். தங்களை “அரசியல் கடந்த” படைப்பாளிகளாக்கும் ஒரு முயற்சியின் வெளிப்பாடே இது. பிரச்சனைகளும், இன்னல்களும், அடக்குமுறையும் நிறைந்த ஒரு சமூகத்தைப் பிரதிபலித்து இலக்கியம் படைப்பவரால் அரசியலற்று இலக்கியம் படைக்கலாம் என்பது எவ்வளவு பெரிய பொய்யோ, அத்தகைய படைப்பெதுவும்  சாரமற்ற வெற்றுச்சரக்கு என்பது அதேயளவு மெய். இவ்விடத்திலேயே மக்கள் இலக்கியத்தின் தேவை பற்றியும் சமூக மாற்றத்தில் அதன் பங்கு பற்றியும் பேச வேண்டியிருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகள் யாவற்றுக்கும் சாட்சியாக இருப்பவை பப்லோ நெருடாவின் கவிதைகள். நெருடாவின் கவிதையின் உள்ளாந்த கூறுகளில் ஒன்று அரசியல். தனது கவிதையில் இருந்து அரசியலைப் பிரிக்க விரும்புகிறவர்கள் கவிதையின் எதிரிகள் என்று நெருடா சொன்னார். மக்களுக்காக பாடியதால் நெருடா பிரச்சாரக் கவிஞன் என்று தூற்றப்பட்டார். மக்களுக்காகத்; தொடர்ந்து எழுதுவதன் மூலம் அவர் தன்னை மக்கள் கவிஞனாக நிறுவி நிலைநிறுத்தினார். இவ்வாறு, சமூக அக்கறை என்பது படைப்பாளியின் அளவுகோலாகிறது.

மக்களுக்கான கலை இலக்கியங்கள் எனும் போது மக்களைச் சென்றடையும் பண்பு முக்கியமாகிறது. மக்கள் பரவலான வரவேற்கும் கலை-இலக்கிய வடிவங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கும் விடுதலைக்குமான ஆக்கங்களை வழங்குவதும் மக்களை நேரடியாக ஈடுபடுத்தக்கூடிய கலை-இலக்கிய வடிவங்களை ஊக்குவிப்பதும் மக்கள் சார்ந்த முக்கிய இலக்கியப் பணிகள. எவரும் விளங்கற்கரிய, வலிந்து கடினமாக்கிய படைப்புக்களை உயர்வாகவும் தெளிவும் எளிமையுங் கொண்டவற்றைத் தாழ்வாகவும் எண்ணி மயங்கும் போக்கு சில புத்திஜீவிகளது சிந்தனைகளில் இறுகிக் கிடக்கிறது. மக்களுக்கு எட்டாதவை மக்களுக்கான இலக்கியங்களாகா. இப் பின்னணியில் இன்றைய சூழலின் சில அம்சங்களைக் கருத்திற்கொள்வது கலை இலக்கியத்தின் தேவையையும் புதிய இயங்குதளங்களின் அவசியத்தையும் விளங்க உதவும்.

  • வன்முறைசாரா இயக்கங்கள் பல ஆண்டுகளாக எல்லா ஜனநாயக நிறுவனங்களின் கதவுகளையும் தட்டிக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் அவை வெறுப்புடன் நிராகரிக்கவும் அவமதிக்கவும் படுகின்றன. ஆயினும் அகிம்சை பற்றித் தொடர்ந்து பேசப்படுகிறது. மக்கள், தவிர்க்கவியலாது, தங்கள் போராட்ட உத்திகளை மாற்றிக்கொள்ள விரும்புவார்கள். மக்களின் முன் வேறு தெரிவுகட்கு இடமில்லாமற் செய்யப்பட்டிருக்கிறது. அகிம்சையைப் போதிப்போர், கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் விலக்கி வைத்து, உடனடி நிகழ்வுகளின் மீதும் நிகழ்காலத்தின் மீதுமே கவனங் குவிக்கிறார்கள். இது பிழையானது மட்டுமன்றி மோசடியானதுமாகும். தகவற் தொடர்பு, சந்தை எனும் இரு புதிய சூத்திரங்கள் அடையாளப்படுத்தும் ஒரு யுகத்தில், “நவீனமாக இருப்பது” என்பது “தகவமைத்துக் கொள்வது அல்லது அடிபணிவது” என்ற ஒற்றை விதிக்குக் கீழ்ப்படிவதேயாகும் என இவர்கள் சொல்கிறார்கள். இன்றைய உலகப் பொருளாதாரத்தில், வெகுசன ஊடக நிறுவனங்கள் மிகப் பெரிய நிறுவனங்களாக இருக்கின்றன. சமூகம் எப்படி இருக்கிறது என்பதை அல்லாது, அது எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்ற மிகப் பெரிய கண்ணாடியை அவை கொண்டுள்ளன. தகவல் “திரட்டும்” பல்தேசியக் கம்பெனிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வெகுஜன ஊடங்களின் ஆதிக்கத்துக்குட்பட்ட இந்த யுகத்தில் அகிம்சைப் போராட்டம் சாத்தியமா என்ற கேள்வி மீண்டும் மீண்டும் எழுகிறது.

 

  • உலகப் புகழ்பெற்ற நாடகாசிரியர் அரியேல் டோர்கு;மன் கேட்டதை நினைவுகூரல் தகும். “ சித்திரவதைப்பட்டோரும் சித்திரவதையாளர்களும் எவ்வாறு ஒரே இடத்திற் சமாதானாமாக வாழமுடியும்? ஒடுக்குமுறையாற் பீதியுண்ட ஒரு நாட்டில் இன்றளவும் வெளிப்படையாகப் பேசுதற்குப் பயம் எங்கெங்கும் நிறைந்திருக்கையில், அந்த நாட்டை எவ்வாறு வேதனையிலிருந்து மீட்க முடியும்? பொய்யே வழமையாகிவிட்ட போது உண்மையை எட்டுவது எப்படி? நாம் வரலாற்றின் கைதிகளாகாமல் எதிர் காலத்தை உயிர்ப்புடன் வைத்துக் கொள்வது எப்படி? வருங்காலத்திலும் இவை நேரலாம் எனக் கருதாமல்; அதை முற்றாக மறுத்தல் எவ்வாறு இயலும்? சமாதானத்தை உறுப்படுத்த உண்மைகளைத் தியாகம் செய்யத்தான் வேண்டுமா? கடந்த காலத்தை நாம் மறுக்கும் போதும் நிராகரிக்கும் போதும், உண்மை நம்மிடம் வந்து முணுமுணுக்கையிலும் கதறுகையிலும் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்? எல்லாவற்றையும் விட மிகப் பெரிய மனத்துயர் யாதெனில், தேசத்தில் ஜனநாயக நிலையை உருவாக்கும் மனோநிலையை அழித்துவிடாமல் இவ்விடயங்களை நாம் எதிர்கொள்வது எவ்வாறு?”

 

  • மதம் ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு மதவாத ஃபாசிசத்தை அடைய எப்போதுமே முயலும். அவ்வாறான ஒரு நிலையை மதம் எட்டும் பட்சத்தில் மதச்சார்பான சட்டமூலங்களை நிறைவேற்றுவதும் எனைய மதங்களையும் நம்பிக்கைகளையும் தடுப்பதும் போன்ற செயற்பாடுகட்கான முயற்சிகள் முழுவீச்சுடன் மேற்கொள்ளப்படும். ஆனால், அப்போதும் ஜனநாயகமும் மதச்சார்பின்மையும் மறுக்கப்படாதது போல ஒரு தோற்றம் காட்டப்பட்டபடும். மதச்சார்பற்ற சக்திகள் தமக்குள் அணிதிரளவிடின் மேற்சொன்ன அபாயங்கள் நிகழுங் காலம் தொலைவில் இல்லை. உடனடியான வெளிப்படையான விவாதம் ஒன்றே இம் முன்முயற்சிகட்கான உடனடித் தேவை. அது மதச்சார்பற்ற சக்திகள் என்பவற்றுடன் நின்றுவிடலாகாது அதற்கப்பாலான நேசசக்திகளை ஒருங்கிணைக்கின்ற, ஒன்றுசேர்க்கின்ற ஒரு பணி எம்முன் உள்ளது. ஏனெனில் மதச்சார்பின்மை எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதைக் கடந்த காலம் தெளிவாகக் காட்டியுள்ளது.

 

  • மதவாதச் சக்திகள் கலாசார மற்றும் சமூகத் துறைகளுட் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. இது மிக ஆபத்தானது. மதவாதிகள் பண்பாட்டையும் சமூகத்தையும் மதத்தின் ஒரு பகுதியாக கட்டமைக்கின்றனர். இதனாலேயே பெரும்பான்மையோர் மதச் சார்பற்று இருந்தாலும், மதவாதச் சக்திகள் வெல்லக் கூடியதாக இருக்கிறது. இது அபாயகரமானது. மதமும் பண்பாடும் வேறுபாடற்றவை, இரண்டும் அடிப்படையில் ஒன்றே என்ற தோற்ற மயக்கத்தை உருவாக்குவது மதவாதிகளின் இன்றைய தந்திரமாக உள்ளது. மேலும், மதவாத அரசியலுள் மக்களை அணிதிரட்டுவதும் இங்கு நிகழ்கிறது. உலக வரலாற்றில் மத, பண்பாட்டு முன்னேற்றங்கள் சமுதாய முன்னேற்றத்தோடு பின்னிப்பிணைந்தே இருந்து வந்துள்ளன. அதைக்கொண்டு பண்பாட்டு ஒருமைப்பாட்டுக்கு மதமூலாம் பூசும் செயற்பாடுகள் நடந்தேறுகின்றன. அதனாலேயே “பிரிக்க முடியாத கூறுகளின் உருமாற்றம்” என அதை அந்தோனியோ கிராம்ஷி குறிக்கிறார்.

 

  • மதச் சார்பின்மைக்கான செயற்பாடுகளும் ஜனநாயகத்திற்கான போராட்டமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாதவை போற் தெரியலாம். ஆனால் அது உண்மையல்ல. மனித உரிமைக்காகப் போராடும் அனைவரும் மதச் சார்பின்மைக்காகப் போராடுகிறார்கள். ஜனநாயகத்தின் அவசியத்தை வலியுறுத்தும் அனைவரும் மதச்சார்பின்மையின் அவசியத்தையும் வலியுறுத்துகிறார்கள். மதவாதத்திற்கெதிரான போராட்டம் பிரசாரத்துடன் மட்டும் நிற்கமுடியாது அது பண்பாட்டு அணிதிரட்டலை நோக்கி நகரவேண்டும். பண்பாட்டு அணிதிரட்டலே மதச்சார்பின்மைக்கான போராட்டத்தை முன்னெடுக்கச் சிறந்த வழிமுறையாகும். மத நம்பிக்கைகளில் ஊறிப்போயுள்ள சமூகத்தை மீட்டெடுக்கச் சிறந்த மூலோபாயம் பண்பாட்டு அணிதிரட்டலே.

இப் பின்னணியிலேயே ஈழத்து இலக்கியத்தின் அவசியத்தையும் புதிய இயங்குதளங்கட்கான வழித்தடங்களையும் தேட வேண்டியுள்ளது. குறிப்பாகச் சமூக விடுதலையை அடையும் பாதையில் இலக்கியத்தின் பணி தவிர்க்கவியலாதாவதோடு அடையாளங்களைத் தாண்டி மனிதர்களை ஒன்றிணைக்கும் பணியை இலக்கியங்கள் செய்ய வேண்டியுள்ளது. ஆனால் அவ்வாறான படைப்புக்கட்கு எதிர்ப்புக்களும் முத்திரை குத்தல்களும் இடம்பெறுகின்றன. சமுதாய உணர்வுக்கோ மனித இன மேம்பாட்டுக்கோ, மனித சமத்துவத்துக்கோ போராடும் குரல்கள் செவ்வியற் கலைகளிலிருந்து மட்டுமல்லாமல், உன்னதமானவை என்று கொண்டாடப்படும் அண்மைக்காலப் படைப்புக்களினின்றும் கவனமாகக் களையப்படுகின்றன.

அடக்குமுறையும் சுரண்டலும் உள்ள வரை, எதிர்ப்பும் போராட்டமும் இருக்கும். எதிர்ப்பும் போராட்டமும் கலை இலக்கிய வடிவங்கள் ஊடாகவும் எப்போதும் தம்மை வரலாற்றில் வெளிப்படுத்தி வந்துள்ளன. போராட்ட இலக்கியம் என்பது எதிர்ப்பு இலக்கியத்தின் வளர்ச்சி பெற்ற வெளிவெளியானது வடிவம். அது தெளிவான போராட்ட இலக்குகளை உடையது. போராட்டத்திற்கான வழியைக் காட்டுவது.

இலக்கியத்தை விடுதலைப் போராட்டத்திற்கு ஏற்ற ஒரு வலுவான கருவியாக்குவது எவ்வாறு என்ற கேள்வியின் அடிப்படையில் இலக்கியத்தை அணுகும்போது, நமக்குச் சில தீர்வுகள் கிட்டுகின்றன. வெளிவெளியாகவே இவ்வாறான உணர்வுபூர்வமான நோக்கின்றிப் படைக்கப்படும் சமூகச்சார்பானதும் மக்களது நலன் சார்ந்ததுமான ஆக்கங்களுடன் இத் தீர்வுகள் முரண்பட அவசியமில்லை. ஏனெனில் ஒவ்வொரு படைப்பாளியினதும் சமூகப் பார்வை அவரது ஆக்கங்களிற் தன் முத்திரையைப் பதித்தே இருக்கும். அப்படியானால் விடுதலைப் போராட்ட இலக்குடைய ஒரு மக்கள் இலக்கியக் கோட்பாட்டுக்கெனச் சிறப்பான ஒரு அணுகுமுறை தேவையா என்ற கேள்வி எழுகிறது.

மக்கள் இலக்கியம் என்பதை மக்களின் நன்மைக்கான இலக்கியம், மக்களை விழிப்பூட்டும் இலக்கியம், மக்களைக் கிளர்ந்தெழுந்து போராடத் தூண்டும் இலக்கியம், மக்களால் உருவாக்கப்படும் மக்கள் நலனுக்கான இலக்கியம் என்று சொல்லலாம். எனவே, மக்கள் இலக்கியத்திற்கு அவசியமான பண்பு அத்தகைய இலக்கியம் மக்களிடமிருந்து அந்நியப்படாமையே. மக்களை விடத் தன்னை உயர்வாகக் கருதுகிற படைப்பாளி மக்கள் இலக்கியம் படைப்பது கடினம். ஏனெனில் அவருடைய கருத்தில், மக்கள் அவரையொத்த படைப்புத்திறன் அற்றவர்களாக மட்டுமன்றி, அவருடைய படைப்பைச் சரியாக உணரும் திறன் அற்றவர்களாகவும் இருப்பர். எனவே மக்களுக்கான இலக்கியங்களை நாம் படைப்பது தேவையாகின்றது.

 

நிறைமுகம்

இங்கு நாம் பேசுகிற சமூக விடுதலை தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் கைக்கெட்டாத தூரத்தில் இருப்பது போன்ற தோற்றத்தைத் தருமாறான நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. கடந்த முப்பதாண்டுகளுள் இலங்கையின் தமிழ் நடுத்தர வர்க்கத்தினர் இடையே கர்நாடக இசை, பரத நாட்டியம் போன்ற துறைகளில் அக்கறை பெரிதும் வளர்ந்துள்ளது. பல லட்சங்கள் செலவிட்டு, அரங்கேற்றங்கள் ஆடம்பரமாக நடைபெறுகின்றன. இங்கு இசையும் நடனமும் பற்றிய ஈடுபாட்டை விடப் போட்டி, அந்தஸ்து மனோபாவங்களே இயக்குஞ் சக்திகளாக இருந்துவந்துள்ளன. அவை சமூக விடுதலையை வேண்டும் மக்கள்திரளுக்கான நற்குணங்களல்ல.

கிராமச் சூழலிலிருந்து புலம் பெயர்த்து என்.ஜி.ஓக்களாலும் அரச நிறுவனங்களாலும் நகரங்களில் மேடையேறுகிற கிராமியக் கலைகளும் தமது இடப் பெயர்வுடன் சேர்ந்து தமது சமூக அடையாளத்தையும் சமூகப் பணியையும் இழந்து பண்பாட்டு வணிகத்தின் பகுதியாகி விடுகின்றன. எனினும் நம் முன்னே ஒரு புறம் நவீனத்துவத்தின் பேரால் ஒரு வகையான இசை, நாட்டிய மரபுகள் ஒரு கும்பற் கலாச்சாரமாக வளர்க்கப்படுகின்றன. அவற்றில் இளையோர் திரள்திரளாகப் பங்குபற்றினாலும் அவை எவ்விதமான சமூக நோக்கும் பார்வையும் அற்று இளைய தலைமுறையினரைச் சீரழிவுப்பதையிலேயே இட்டுச் செல்ல முனைகின்றன. இன்னொரு புறம், மரபின் பேரால் சமூகத்துடன் எவ்விதமான ஒட்டும் உறவும் அற்றவாறு மேடைக் கவர்ச்சியுடன் சேர்த்து ஒரு பாரம்பரிய இசையும் நடனமும் நமக்குப் பரிமாறப்படுகின்றன. இதன் மூலம் இலங்கையைச் சேர்ந்த கலைஞர்களின் விருத்திக்கோ — முக்கியமாகச் சமூக உண்ர்வுடைய கலைப் படைப்புகளின் உருவாக்கத்திற்கோ — நன்மை இல்லை என்பதுடன், அவை பாதகமான சமூக விளைவுகளையே ஏற்படுத்துகின்றன.

சமூக விடுதலை என்பது பண்பாட்டு விடுதலையும் ஆகும் என்பதை நினைவில் கொள்ளல் நன்று. ஏனெனில் ஒன்றில்லாமல் மற்றது இல்லை. படைப்பாளிகள் இதை நினைவிற் கொள்ள வேண்டும். புதிய பண்பாட்டை உருவாக்குவதற்கான பணியில் இலக்கியம் முன்னிற்க வேண்டும். அப்போதுதான், பண்பாட்டுச் சீரழிவிலிருந்து சமூகங்களை மீட்டுருவாக்க முடியும். அவ்வாறு மீட்டுருவாக்கிய சமூகங்களே சமூக விடுதலைக்கான போராட்டத்தில் முக்கிய பங்காற்றுவன. அவ்வகையில், இன்று ஈழத்துத் தமிழ் இலக்கியம் முக்கியமான திருப்புமுனையில் நிற்கிறது எனவும் அதேவேளை சமூக விடுதலைக்கான முன்னிபந்தனைகளில் ஒன்றாக மக்கள் இலக்கியங்களின் தேவை உணரப்படுகிறது எனவும்    உறுதியாகச் சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *