Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /customers/a/4/a/nilankco.com/httpd.www/wp-includes/functions.php on line 6131 Covid-19: கியூபா கைகொடுக்கும் பொழுதுகள் - நிலங்கோவின் நிலம்
அரசியல்உலகம்

Covid-19: கியூபா கைகொடுக்கும் பொழுதுகள்

இன்று உலகம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடி புதிரானது. கண்ணுக்குத் தெரியாத பொது எதிரியோடு போரிடும் யுத்தம் போன்றது. கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள சிக்கல்களும் சவால்களும் பல்பரிமாணமுடையவை. எந்த உலக ஒழுங்கு உலகை கடந்த அரைநூற்றாண்டுக்கு மேலாக ஆட்சிசெய்யதோ அது இன்று அவலப்பட்டு நிற்கின்றது. அது அமைத்த விதிகள், நெறிமுறைகள் குறித்தெல்லாம் அக்கறை கொள்ள யாருக்கும் நேரமில்லை. இன்று ஏதாவதொரு வழியில் தீர்வுகளை நோக்கியே எல்லா அரசுகள் ஓடுகின்றன. உயிரிழப்புக்களைத் தவிர்ப்பதும் நோய்த்தொற்றைக் குறைப்பதுமே பிரதான நோக்காயுள்ளன. பொருளாதாரத்தைக் காப்பாற்றுங்கள், நடைமுறையில் உள்ள விதிகளை உலக ஒழுங்கைக் காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கைகள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காய்.

கொரோனா நோய்த்தொற்று ஏற்படுத்தியுள்ள நெருக்கடிக்கான தீர்வுகளுக்கான வழி பல வகைகளில் சோசலிசம் நோக்கிய திருப்பமாகவே இருக்கிறது. இதை ஏற்றுக்கொள்வதற்கு முதலாளித்துவத்தின் செல்வச்செருக்கில் ஊறித் திளைத்தவர்கள் தயாராக இல்லை. அவர்கள் சோசலிச வன்மத்தை ஊடகங்களிலும் சமூக ஊடகப் பொதுவெளிகளிலும் கக்குகிறார்கள். எனவே இது குறித்துக் கொஞ்சம் சொல்லியாக வேண்டியுள்ளது. பாஞ்சாலியின் அழைப்புக்குக் கிருஷ்ணன் வந்தது போல 2009இல் அமெரிக்கா வரும் என்று எழுதியும் சொல்லியும் அவலத்திற்குத் தள்ளியோர் நிறைந்த சமூகத்திலேயே நாம் வாழ்கிறோம் என்பதைத் துயரத்துடனும் எரிச்சலுடனும் நினைவூட்ட வேண்டியுள்ளது. அவலமும் நிச்சயமின்மையும் அச்சமும் நிலைகொண்டுள்ள இந்தக் காலத்தில் எமக்குத் தேவையானது நம்பிக்கையூட்டும் கதைகளே.

இத்தாலியின் உதவிக்கு வந்த கியூபா
இந்த நோய்த்தொற்றினால் அதிகமான உயிரிழப்புக்களைச் சந்தித்துள்ள நாடு இத்தாலி. இந்த நோய்த்தொற்று பரவத் தொடங்கியவுடனேயே ஐரோப்பிய ஒன்றியத்திடமும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிடமும் உதவிகளைக் கேட்டது. ஆனால் யாருமே உதவ முன்வரவில்லை. ஏனைய நாடுகள் ஓரளவு உதவிகளைச் செய்திருந்தால் இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்திருக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஏராளமான மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் இந்த நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில் மருத்துவப் பணியாளர்களும் மருத்துவர்களும் இல்லாமல் இத்தாலி மிக மோசமான நிலையில் இருக்கிறது.

இந்நிலையிலேயே இந்தவாரம் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட இத்தாலியின் லொம்பாடி நகருக்கு 50க்கும் மேற்பட்ட கியூபா மருத்துவர்களும் ஏனைய மருத்துவப் பணியாளர்களும் வருகை தந்துள்ளனர். அவர்களை விமானநிலையத்தில் இத்தாலியர்கள் எழுந்து நின்று வரவேற்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலிக்குக் கைகொடுத்துள்ள நாடு கியூபா. இத்தாலிக்கு அனுப்பப்பட்டுள்ள மருத்துவக்குழுவானது கொரோனா வைரஸிற்கு எதிராகப் போராடுவதற்காக அனுப்பப்பட்ட ஆறாவது கியூப மருத்துவக் குழுவாகும். ஏற்கனவே வெனசுவேலா, நிக்கரகுவா, ஜெமேக்கா, சுரினாம், கிரனடா ஆகிய நாடுகளுக்கு கியூப மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இத்தாலி கியூப மருத்துவர்களை வரவேற்று ஏற்றுக் கொண்டுள்ளமை பலவழிகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. உலகின் முதன்மையான முதலாளித்துவ நாடுகளில் ஒன்று ஒரு குட்டி கரீபியத் நாடுகளிடம் உதவியை நாடி நின்றமை குறிப்பானது. அதுவும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு கடந்த அறுபது ஆண்டுகளாக உட்பட்ட ஒரு நாடு இன்று உதவிக்கரம் நீட்டுகிறது. அமெரிக்காவால் முடியாததை, ஐரோப்பாவால் முடியாததை கியூபா செய்து காட்டுகிறது.

கியூபாவின் மனிதாபிமானமும் மருத்துவமும்
மார்ச் மாதம் 12ம் திகதி பிரித்தானியாவுக்குச் சொந்தமான சொகுசுக்கப்பல் (MS Braemar cruiseship) ஒன்றில் இருந்த 50 பேருக்குத் கொரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து குறித்த கப்பலை ஒரு நாட்டின் துறைமுகத்தில் நிறுத்தி பயணிகளை மீள அனுப்ப முடிவு செய்யப்பட்டது. கப்பல் இருந்த இடத்திற்கு அண்மையில் இருந்த நாடு பஹாமாஸ். எனவே அங்கு நங்கூரமிட அனுமதி கோரப்பட்டது. பிரித்தானியர்களைப் பிரதானமாகக் கொண்ட பிரித்தானியக் கப்பலை, பிரித்தானிய முடியின் கீழ் உள்ள நாடான பஹாமாஸ் அனுமதிக்க மறுத்துவிட்டது. பிரித்தானிய வெளியுறவுத் துறையின் கடும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. பிரித்தானிய அரசியின் ஆட்சியின் கீழ் உள்ள பஹாமாஸின் நிலைப்பாடு பிரித்தானியாவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. 1063 பேருடன் (682 பயணிகள், 381 பணியாளர்கள்) செல்ல இடமின்றி இக்கப்பல் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தது.

இந்நிலையிலேயே மார்ச் 18ம் திகதி கியூபா இக்கப்பலை தனது துறைமுகத்தில் நங்கூரமிடவும் பயணிகளை நாட்டுக்குள் ஏற்கவும் உடன்பட்டது. இதையடுத்து கப்பல் நங்கூரமிடப்பட்ட போது பயணிகள் “நன்றி கியூபா, நாங்கள் உங்களை விரும்புகிறோம்” என்ற பதாகைகளை ஏந்தியிருந்தனர். பயணிகள் இறக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின்னர் பிரித்தானியாவுக்கு விமானத்தில் அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த அனுபவம் குறித்து கருத்துத் தெரிவித்த பயணி ஒருவர்:
“எங்களுக்கு யாரும் உதவ முன்வரவில்லை. கையறுநிலையின் உச்சத்தை நாம் உணர்ந்தோம். இங்கேயோ நோய்த்தொற்றுக்கு உள்ளாகி பலியாகிவிடுவோமோ என்று அஞ்சினோம். கியூபா நீட்டிய உதவிக்கரமே எங்களை இன்று உயிருடன் வைத்துள்ளது. கியூப மக்கள் வெறுப்புடன் எங்களை எதிர்கொள்வார்கள் என்று எதிர்பார்த்தோம். மாறாக அன்புடன் அவர்கள் எங்களை வரவேற்றார்கள். ஒரு ஏழைநாடு தங்கள் இதயத்தை எங்களுக்காகத் திறந்ததை மிகுந்த நன்றியுடன் நினைவுகூர்கிறோம்”.

மனிதாபிமான மருத்துவத்தின் பகுதியாக பிரேசில் நாட்டில் வறுமைக்குட்பட்ட பகுதிகளில் கடமையாற்றிக் கொண்டிருந்த 8,000 கியூப மருத்துவர்களை கடந்தாண்டு பிரேசிலில் பதவிக்கு வந்த புதிய வலதுசாரி ஜனாதிபதி பொல்சனாரோ திருப்பி அனுப்பினார். அதேபோல பொலிவியாவில் சதியின் மூலம் கடந்தாண்டு ஜனாதிபதி ஈவோ மொராலஸ் பதவிகவிழ்க்கப்பட்டதை அடுத்து அங்கு பணியாற்றிய 700 கியூப மருத்துவர்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.

இன்று பிரேசில் கொரோனா தொற்றைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறது. எந்த மருத்துவர்களை பிரேசில் ஜனாதிபதி திருப்பி அனுப்பினாரோ அவர்களை மீளவும் வந்து பிரேசிலில் அப்பாவி மக்களுக்காகப் பணியாற்றம்படி கடந்தவாரம் அவர் வேண்டினார்.

இப்போதைய கியூபாவின் இன்னொரு பேசுபொருள் Interferon Alpha 2B என்ற கியூப மருந்து. கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் குறித்த மருந்தானது சீனாவில் தொற்றுக்குள்ளான நோயாளிகளைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட மருந்துகளில் ஒன்று. சீனாவின் தேசிய உடல்நல ஆணைக்குழுவினால் (Chinese National Heath Commission) பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளில் ஒன்று. கொரோனாவிற்கான தடுப்புமருந்துகளாக இருக்கக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் பரிசீலிக்கும் நான்கு மருந்துகளில் இதுவும் ஒன்று.

இது கொரோனா நோய்த்தொற்றுக்கான முழுமையான மருந்து அல்ல. இன்றுவரை அதற்கான மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் இந்த மருந்து வினைத்திறனுடன் செயலாற்றுகிறது என்பதை உலக சுகாதார நிறுவனம் ஒத்துக் கொள்கிறது. அதனாலேயே இம்மருந்தை அது பரிசீலிக்கிறது.

கொரோனாவுக்கான மருந்து உற்பத்தி என்பது பலகோடி அமெரிக்க டாலர்கள் பெறுமதியுள்ள ஒரு வியாபாரம். மருந்து உற்பத்திக் கம்பெனிகள் இதற்காகவே தடுப்புமருந்தைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்று முண்டியடிக்கின்றன. கடந்தவாரம் இதற்கான மருந்தைக் கண்டுபிடிப்பதில் முன்னேற்றம் கண்டுள்ளதாக ஜேர்மன் நிறுவனம் அறிவித்தத்தையடுத்து அமெரிக்க ஜனாதிபதி அந்த மருந்தை பெருந்தொகை பணத்திற்கு அமெரிக்காவுக்கு மட்டும் என பிரத்தியேகமாக விற்பனை செய்யக் கோரிய செய்தி வெளியானது. இது ஜேர்மனியில் கடுமையான எதிர்வினைகளைச் சந்தித்தது.

கியூபாவின் மருத்துவ உதவிகள் புதிதல்ல. குறிப்பாக 2014ம் ஆண்டு ஆபிரிக்க நாடுகள் எபோலா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியபோது கியூபா தனது மருத்துவப் பணியாளர்களை அனுப்பி ஆபிரிக்காவில் இந்த வைரஸ் தாக்கத்த்தைக் கட்டுப்படுத்தியது. கியூபாவின் இந்தச் செயல் எபோலா உலகளாவிய வைரஸ் தாக்கமாக உருமாறாமல் காப்பாற்றியது. இதற்காக கியூபாவிற்கு ஐ.நா. நன்றிசொன்னது.

அமெரிக்காவின் தீவிர வலதுசாரி சோசலிச எதிர்ப்பு இதழதன டைம் இதழ் 2014 நவம்பர் மாத இதழில் “Why Cuba Is So Good at Fighting Ebola” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியது. அக்கட்டுரை இவ்வாறு நிறைவு பெறுகிறது:
“கியூப மாதிரி சர்வதேச சமூகத்திற்கு வலுவான செய்தி ஒன்றைச் சொல்கிறது. மிக எளிமையான மக்களே உலகளாவிய மக்கள் நலனுக்கு வினைத்திறனுடன் கூடிய நின்றுநிலைக்கக்கூடிய பங்களிப்பைச் செய்கிறார்கள். ஏனையோர் நோய்கள், தொற்றுகள் வரும்போது தயாரில்லாமல் திணறிப் போகிறார்கள். கியூபா சொல்லும் பாடம் உலகளாவிய மருத்துவமும் திட்டமிடலும் முன்நோக்கிய பார்வை கொண்டதாகவும் மருத்துவ, உடல்நல அமைப்புகளை வலுவாக்கியதாகவும் இருத்தல் வேண்டும். பேரிடர்கள் வரும்போது விழித்து எழுவதாக அமையக்கூடாது”.

கியூபா கொரோனா நோய்த்தொற்றுக்குப் பாற்பட்ட நாடல்ல. ஆனால் ஏனைய உலகநாடுகள் ஆபத்தில் இருக்கும் போது மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்யத் தயங்கவில்லை. இன்று உலகளாவிய ரீதியில் 90,000 கியூப மருத்துவர்கள் உலகின் 107 நாடுகளில் பணியாற்றுகிறார்கள். அவர்கள் உலகின் மிக எளிய மக்களின் மருத்துவ உடல்நலன் சார் தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்கள். கியூப மருத்துவர்களினதும் மருத்துவப் பணியாளர்களினதும் உதவிகளை வேண்டி நிற்பது உலகின் எளிய உழைக்கும் மக்களே. விரைவுணவுகளைத் தின்று செரித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பும் அயோக்கியர்களுக்கு இதன் பெறுமதி விளங்காது. நாளை அவர்களது உயிர் காக்க ஒரு கியூப மருத்துவரோ அல்லது கியூப மருந்தோ தேவைப்பட்டால் அதை முதலில் பெற்று உயிரைக் காக்க முண்டியடிப்பதும் இந்த அயோக்கியர்களே.

1967ம் ஆண்டு பொலிவியாவில் சேகுவேராவைச் சுட்டுக் கொன்ற மரியோ தெரோன் கண்பார்வை இழந்து துன்பப்படுகையில் 2007ம் ஆண்டு பொலிவியாவில்; தங்களது கண் சிகிக்சை முகாமில் தெரோனுக்கு சத்திரசிகிக்சை செய்து அவருக்குக் கண்பார்வையை மீள அளித்தவர்கள் கியூப மருத்துவர்கள்.

எதிரிகளுக்கும் வைத்தியம் பார்ப்பது தான் கியூப மருத்துவம். சோசலிசம் கற்றுத் தந்த பாடம் அது. ஃபிடல் காஸ்ரோ காட்டிய வழியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *