அரசியல்உலகம்

2019: எதிர்பார்த்துக் காத்திருத்தல்

இன்னொரு ஆண்டு எம்முன்னே விரிகிறது. எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் நிறைந்ததாக அது இருக்கிறது. நடக்கும் என்பார் நடக்காது. நடக்காது என்பார் நடந்துவிடும்.எதிர்காலத்தை எதிர்வுகூற விளையும் ஒவ்வொரு தடவையும் இந்தச் சொற்றொடரை நான் நினைத்துக் கொள்வது உண்டு. எதிர்காலத்தைக் கணிப்பது கடினம். அதிலும் அரசியலில் எதிர்காலத்தைக் கணிப்பது இன்னமும் சிரமம். நிச்சயமின்மைகளால் நிரம்பி வழியும் ஒன்றன் திசைவழிகள் குறித்து நிச்சயமாகச் சொல்வது சவால் மிக்கது. ஆனால் அது முடியாத காரியமுமல்ல. சாத்தியங்களையும் சாத்தியமின்மைகளையும் கணிக்கவியலும். ஆய்வறிவாளனின் கலையும் திறனும் அங்கேதான் ஒளிந்துள்ளது. இவ்வாண்டு நாம் எதை எதிர்பார்த்துக் காத்திருக்கப் போகிறோம். இக்கேள்வியே இக்கட்டுரையின் அடிநாதம்.

2019 இல் எதிர்பார்க்கப்படும் சில முக்கியமான விடயங்களையும் சில முக்கிய எதிர்வுகூறல்களையும் இக்கட்டுரை நோக்க விளைகிறது. அதேவேளை இவ்வாண்டு செல்வாக்குச் செலுத்தும் இரண்டு முக்கியமான சிந்தனையாளர்கயையும் அடிக்கோடிட்டுக் காட்ட முனைகிறது.

தேர்தல்கள் தீர்மானிக்கும் எதிர்காலம்
இவ்வாண்டு சில முக்கிய தேர்தல்களால் நிரம்பியுள்ளது. ஆசியாவின் இரண்டு பெரிய நாடுகளில் நடைபெறவுள்ள தேர்தல்கள் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. அதில் முதலாவது இந்தியா, இரண்டாவது இந்தோனேசியா. இந்தியத் தேர்தல்கள் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. நிறுவனங்களுக்கும் பல்தேசியக் கம்பெனிகளும் முதலீட்டு சாதக பாதகங்களை, ஆபத்துக்களின் அளவுகளை பட்டியலிடும் பல நிதியில் ஆய்வு நிறுவனங்கள் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க மீண்டும் வெல்வதற்கு வாய்ப்புகள் நிறைய இருப்பதாகவும் அது இந்தியாவில் முதலிட்டுள்ள நிறுவனங்களுக்கு வாய்ப்பானது என்றும் எதிர்வுகூறியுள்ளது. அதேவேளை காங்கிரஸ் கட்சியானது தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையில் உள்ளதால் ஒருவேளை காங்கிரஸ் கூட்டணி வென்றாலும் அது தற்போது நரேந்திர மோடியின் முன்முயற்சியால் இந்தியாவில் சிறப்புடன் இயங்கும் திறந்த சந்தையின் விதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் உள்ளாக்கும் என்று கவலை வெளியிட்டுள்ளன. மோடியின் ஆட்சி மீளாத பட்சத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை நீடிக்காது என்றும் இது அந்நிய முதலீடுகளுக்கு பின்னடைவைக் கொடுக்கும் என்றும் இந்த ஆய்வாளர்கள் கருத்தில் கொள்கிறார்கள். இந்தியப் பாராளுமன்றத் தேர்தல் மதச்சார்பற்ற இந்தியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வல்லது.

உலகின் நான்காவது சனத்தொகை கூடிய நாடாகவும் முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடாகவும் உள்ள இந்தோனேசியாவில் இவ்வாண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. மாற்றப்பட்ட தேர்தல் முறையின் கீழ் ஜனாதிபதி, உப ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரே தேர்தலின் கீழ் தெரிவுசெய்யப்படுகிறார்கள். 2014ம் ஆண்டு தேர்தலில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட அதே இரு நபர்களே இம்முறையும் போட்டியிடுகிறார்கள். ஒருவர் ஜனாதிபதியாகத் தெரிவான ஜோக்கோ விடோடோ மற்றவர் பிரபோவோ சுபைன்டோ. இதில் சொல்லவொரு கதை உண்டு.

உலகின் அதிமோசமான சர்வாதிகார ஆட்சி இருந்த நாடுகளில் இந்தோனீசியாவுக்குச் சிறப்பிடம் உண்டு. 1965இல் இராணுவச் சதி மூலம் சுகர்னோவின் ஆட்சியை வீழ்த்திச் சனாதிபதியான இராணுவத் தளபதி சுகார்த்தோ 1998இல் பதவிவிலகும் வரையான 33 ஆண்டு கட்கு இராணுவத் துணையுடன் இந்தோனிசிய சர்வாதிகாரம் தொடர்ந் தது. 5 மில்லியன் உறுப்பினர்களுடன், ஆட்சியில் இல்லாத அதிபெரிய கம்யூனிஸ்ட் கட்சியாயிருந்த இந்தோனீசியக் கம்யூனிஸ்ட் கட்சி சர்வா திகாரம் நடைமுறைக்கு வந்து ஒரே ஆண்டில் முற்றாக அழிக்கப் பட்டது. 1965-66 காலப்பகுதியில் ‘கம்யூனிஸ்ட் களையெடுப்பு’ நிகழ்ச்சி நிரலின் கீழ் 3 மில்லியன் கம்யூனிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர். 20ம் நூற்றாண்டின் மிகப்பெரிய படுகொலையான இதுபற்றி அதிகம் பேசப் படுவதில்லை. சுகார்த்தோவிற்கு இருந்த அமெரிக்க ஆதரவும் ஆசியா வில் கம்யூனிஸ்ட் களையெடுப்புக்கு மேற்குலக ஆதரவும் இக் கொலைகளை மழுப்ப உதவின.

சர்வாதிகார ஆட்சி முடிந்து 16 ஆண்டுகளின் பின், 2014ம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் சர்வாதிகாரி சுகார்த்தோவின் மருமகனும் முன்னாள் இராணுவ லெப்டினட் ஜெனரலுமான பிரபோவோ சுபைன்டோ குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றார். மூன்று தசாப்தங்கட்கு மேல் இராணுவ சர்வாதிகாரக் கொடுமைகளை அனுபவித்த இந்தோனீசியர்கள் ஏன் இன்னொரு சர்வாதிகாரி ஜனாதி பதியாவதை விரும்பினர் என்பது ஆய்வுக்குரியது. 2019ம் ஆண்டு இந்தோனேசியர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதேவேளை இலத்தீன் அமெரிக்காவிலும் இரண்டு தேர்தல் பிரதானமானவை. முதலாவது பொலிவியா. இங்கு ஜனாதிபதித் தேர்தல் இம்மாதம் 27ம் திகதி நடக்க இருக்கிறது. பாராளுமன்றத் தேர்தல் ஒக்டோபர் மாதம் நடக்கவுள்ளது. இலத்தீனமெரிக்காவில் வீசிய இளஞ்சிவப்பு அலை ஓய்ந்து பல நாடுகளில் தீவிர வலதுசாரிகள் பதவிக்கு வந்துள்ள நிலையில் எஞ்சியுள்ள ஒரு சிலரில் ஈவோ மொறாலஸ் முக்கியமானவர். குறிப்பாக காஸ்ரோ, சாவேஸ் ஆகிய இருவரின் மறைவுக்குப் பின்னர் இலத்தீன் அமெரிக்க முற்போக்கு இடதுசாரி இயக்கத்தின் முகமாகவும் பழங்குடிகளின் நேரடிப் பிரதிநிதியாகவும் மொறாலஸ் உள்ளார். அவரது எதிர்காலத்தை மட்டுமன்றி இலத்தீன் அமெரிக்கப் பழங்குடிகளின் உரிமைக்கான போராட்டத்தையும் இத்தேர்தல் தீர்மானிக்கும்.

ஆர்ஜென்டீனாவில் இவ்வாண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் முக்கியமானது. 2003ம் ஆண்டுமுதல் இடதுசாரிச் சார்புடைய அரசாங்கத்தைக் கொண்டிருந்த ஆர்ஜென்டீனா, அதன் ஜனாதிபதி கிறீஸ்டீனா கேர்ச்சனர் 2015ம் தேர்தலில் பங்குபற்ற முடியாமையையடுத்து வலதுசாரி வேட்டபாளரான மொறேசியோ மக்ரி ஜனாதிபதியானார். அவரது ஆட்சிக்காலத்தில் ஆர்ஜென்டீனா பொருளாதார நெருக்கடியில் தள்ளாடுகிறது. ஏற்கனவே இருந்த சமூகநல அரசை மாற்றி திறந்த கட்டற்ற பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதன் துர்விளைவுகளை இப்போது ஆர்ஜென்டீனா எதிர்நோக்குகிறது. இன்னுமொரு இடதுசாரி அலைக்கான தொடக்கப்புள்ளியாக ஆர்ஜென்டீனாவில் நடந்துவரும் போராட்டங்களும் எதிர்வரும் தேர்தலும் அமையுமா என்பது கவனிப்புக்குரியது.

இவை இப்படியிருக்க இவ்வாண்டு ஐரோப்பியப் பாராளுமன்றத் தேர்தலும் நடைபெறவிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் என்றுமில்லாத நெருக்கடியில் சிக்கித் தவிக்கையில் தீவிர வலதுசாரிக் கட்சிகள் இந்த தேர்தலில் எவ்வாறு பங்களிக்கப் போகின்றன. அவர்களது ஆதரவுத் தளம் எவ்வகையானது. இம்முடிவுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலம் தொடர்பில் முக்கியமானவை என்பதை மறுப்பதற்கில்லை.

ஐரோப்பிய ஒன்றியம்: கேள்விக்குறியோடு
ஏராளமான கேள்விக்குறிகளோடு இவ்வாண்டுக்குள் ஐரோப்பிய ஒன்றியம் கால்பதிக்கிறது. ஒன்றியத்தில் இருந்து விலகுவதாக முடிவெடுத்த பிரித்தானியா என்ன செய்யும். பிரெக்ஸிட் என்னவகையில் செயல்வடிவம் பெறும். ஏற்கனவே உடன்பட்ட அடிப்படைகளுக்கு பிரித்தானியப் பாராளுமன்றம் அங்கீகாரம் கொடுக்குமா? இல்லையாயின் அடுத்தது என்ன? இன்னொரு பிரெக்ஸிட் வாக்கெடுப்பு நடக்குமா? நடந்தால் அதன் முடிவுகள் எவ்வாறு இருக்கும்? நடக்காவிட்டால் இந்த நெருக்கடியை எவ்வாறு தீர்ப்பது? இவை அனைத்தும் பிரெக்ஸிட்டோடு தொடர்புடைய வினாக்கள்.

மறுபுறம் இன்னொரு பொருளாதார நெருக்கடியை ஐரோப்பிய ஒன்றியம் இவ்வாண்டு எதிர்நோக்குமா என்பதே அனைத்து ஐரோப்பியர்களதும் கவலையாக இருக்கிறது. கடந்த முறை கிறீஸ் சரிந்தது போல இம்முறை இத்தாலி, போத்துக்கல் என பல நாடுகள் அடுக்கடுக்காகச் சரியக் காத்திருக்கின்றன. குறிப்பாக வலதுதேசியவாத ஜனரஞ்சக் கட்சிகளின் அரசாங்கமாக உள்ள இத்தாலி அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றிய நடைமுறைகளுக்கு ஒத்துழைக்க மறுக்கிறது. இதனால் இவர்களது வரவுசெலவுத்திட்டத்தை ஏற்க ஐரோப்பிய ஒன்றியம் மறுத்துள்ள நிலையில் அதை அலட்சியம் செய்வதாக இத்தாலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. அளவுக்கதிகமான கடன், நலிவடைந்துள்ள வங்கிகள், சீரழிந்துள்ள பொருளாதாரக் கட்டமைப்பு, ஜனரஞ்சக திட்டங்களைச் செயற்படுத்தும் அரசாங்கம் என இன்னொரு பொறிவுக்கான அனைத்தையும் இத்தாலி கொண்டுள்ளது. பொறியுமா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் உண்டு.

மூன்றாவது ஐரோப்பிய ஒன்றியத்தின் நீண்டகாலக் கூட்டாளியான அமெரிக்காவுடன் இணைந்து வலுப்பெற்றுள்ள நேட்டோ இராணுவ அமைப்பிலிருந்து விலகி ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தனியான இராணுவக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று ஜேர்மனியும் பிரான்சும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு எத்தகையதாக இருக்கும்? அதேவேளை நேட்டோவின் எதிர்காலம் என்ன? அமெரிக்கா விதித்துள்ள வரிகள் எவ்வாறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை நீண்ட நோக்கில் பாதிக்கும்? அமெரிக்காவுடன் போட்டி போடும் நிலைக்கு ஐரோப்பிய ஒன்றியம் தன்னை உயர்த்திக் கொள்வதா இல்லையா? இவை பதில் தெரியாத வினாக்கள்.

நான்காவது ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பியக் கண்டம் தழுவிய ஜனநாயகமாக்கலையும் ஜனநாயகம் குறித்த உரையாடலையும் முன்தள்ள நினைக்கிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் தீவிர வலதுசாரி அலையும் ஜனரஞ்சகவாதத் தேசியமும் முன்னிலைக்கு வந்துள்ளன. இவை எவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயகமாதலைக் கேள்விக்குள்ளாக்கும். எதிர்வரும் தேர்தலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்ப்பாளர்கள் வெற்றி பெற்றுவிடுவார்களா? அப்படி நடந்தால் எதிர்காலம் என்ன? தேர்தலில் வாக்களிப்பு வீதம் எவ்வாறு இருக்கும்? குறைந்த வாக்களிப்பு வீதம் ஒன்றிய எதிர்பாளர்களுக்குகு வாய்ப்பாகுமா? ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது ஐரோப்பியர்களுக்கு எவ்வாறு நம்பிக்கையைக் கட்டியெழுப்புவது? இக்கேள்விகள் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சூழ்ந்துள்ளன. இவற்றுக்கான பதில்களே இவ்வாண்டின் நிறைவில் ஐரோப்பிய ஒன்றியம் எங்கு இருக்கிறது என்பதைத் தீர்மானிக்கும்.

சீனா: அடுத்த கட்டத்துக்கு நகர்தல்
உலகின் முதன்மையான நாடு என்ற கட்டத்துக்கு சீனா நகர்கிறது என்பதை கடந்தாண்டு நடந்த இரண்டு விடயங்கள் குறித்தன. முதலாவது அமெரிக்கா சீனா மீது விதித்த வரிகளும் தொடக்கிய வர்த்தகப் போரும். இரண்டாவது அமெரிக்கத் தேவைக்காக கனடாவில் ஹ_வாவே நிறுவனத்தின் தலைமை அதிகாரி கைது செய்யப்பட்டமை. இவை இரண்டும் சீனா தனது உயர்நிலையை நோக்கி நகர்கிறது என்பதைக் காட்டி நிற்கிறது. அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தகப் போரில் சீனா முன்னிலை வகிக்கும். இது அமெரிக்காவை விட வலுவான பொருளாதார வல்லரசாக சீனா வளர்ந்துள்ளது என்பதைக் கட்டியம் கூறும். சீனாவின் பொருளாதார பலம் அதனது தலையிடா அயலுறவுக் கொள்கையுடன் சார்ந்தது.

உலக அலுவல்களில் சீனா காட்டியுள்ள அக்கறையும் குறிப்பாக ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் நடைபெற்றுள்ள சீன முதலீடுகளும் கட்டுமானங்களும் அரசியல் அரங்கில் சீனாவுக்கு முதன்மையான இடத்தை வழங்கியுள்ளன. திணிப்பில்லாத, வலுவைப் பயன்படுத்தாமல் பொருளாதார உதவிகளை மையப்படுத்தி உலக நாடுகளில் குறிப்பாக மூன்றாமுலக நாடுகளில் சீனா தனது செல்வாக்கை வளர்த்துள்ளது. தனது மென்வலு இராஜதந்திரத்தின் பலன்களை (soft power diplomacy) இவ்வாண்டு சீனா அதிகமாக அறுவடை செய்யும். இது ஒருபுறம் உலக அலுவல்களில் சீனாவின் குரல் தவிர்க்கவியலாமல் போவதற்கு வழிசெய்யும். மறுபுறம் அமெரிக்கா மெதுமெதுவாக ஓரங்கட்டப்படுதல் நடக்கும்.

அரசியல், பொருளாதாரம் ஆகிய இரண்டு முக்கிய வெளிகளுக்கு அப்பால் தொழில்நுட்பத் துறையில் சீனா இவ்வாண்டு ஒரு பெரிய பாய்ச்சலை நிகழ்த்தும். இது தொழில்நுட்பத் தொழிற்றுறையில் சீனா அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கான பாதையை உலகுக்குக் காட்டும். தொலைத்தொடர்புத் துறையின் அடுத்த கட்டமான 5G தொழில்நுட்பத்தின் முன்னோடி சீனாவின் ஹுவாவே நிறுவனமே. அதேபோல கைத்தொலைபேசிகள், மடிக்கணிணிகள் என வலுவான நிறைவான சேவையை உடைய பொருட்களை சீன நிறுவனங்கள் மிகக்குறைந்த விலையில் உற்பத்தி செய்கின்றன. இது இத்தொழிற்றுறையில் முன்னிலையில் இருந்த அமெரிக்க மேற்குலக நிறுவனங்களுக்கு பாரிய இடியாகவுள்ளது. இதன் காரணமாக ஒருபுறம் சீனப் பொருட்கள் மேற்குலகிற்குள் வராமல் தடைசெய்யப்படுகின்றன. எந்த திறந்த சந்தையையும் கட்டற்ற வர்த்தகத்தையும் மேற்குலகு முன்மொழிந்ததோ அதையே இன்று மேற்குலகு மீறுகின்ற நிலையும் வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதிக்கப்படுவதையும் காண்கிறறோம். அவ்வகையில் தொழில்நுட்பத் துறையில் சீனா தன்னை ஒரு முன்னோடியாக நிலைநிறுத்தி முன்னிலை பெறுகின்ற ஆண்டாக இவ்வாண்டு இருக்கும்.

இரு சிந்தனையாளர்கள்
இவ்வாண்டு இரண்டு சிந்தனையாளர்களின் சிந்தனைகள் முக்கிய கவனம் பெறுவதோடு உலக நாடுகளில் பொதுவெளிகளை நிரப்பும். மக்களின் இயங்கு திசையில் செல்வாக்குச் செலுத்தும். அவ்வாறு கவனம் பெறும் முதலாமவர் நோம் சோம்ஸ்கி (Noam Chomsky). உலகின் தலைசிறந்த மொழியியலாளர்களில் ஒருவராக அறியப்பட்ட பேராசிரியர் நோம் சோம்ஸ்கி மொழியியலுக்கு அப்பால் ஏகாதிபத்திய எதிர்ப்பு, முதலாளித்துவம், ஊடகத்துறை தொடர்பாக முக்கியமான பங்களிப்பை ஆற்றியுள்ளார். அவர் எழுதிய சம்மதத்தை உற்பத்தி செய்தல்: ஊடகத்துறையின் அரசியற் பொருளாதாரம் (Manufacturing Consent: The Political Economy of the Mass Media) என்ற நூல் எவ்வாறு ஊடகங்கள் அரசுகளுக்கு வேண்டிய மக்களின் சம்மதத்தை தனது கருத்துருவாக்கத்தின் மூலம் உருவாக்குகின்றன என்று ஆராய்கிறது. இந்நூல் பொதுப்புத்தியில் கருத்து ஒப்புதலை உருவாக்குவதில் எவ்வளவு நுணுக்கமாக ஊடகங்கள் பங்களிங்கின்றன என்பதை ஆழமாக நோக்குகிறது. இன்று ஊடகங்களின் மீதான நம்பிக்கையீனம், மாற்று ஊடகவெளிகள் கூட மெதுமெதுவாகக் கைப்பற்றப்பட்டு கட்டுப்பாட்டுக்கு உள்ளாகுதல், கட்டற்ற இணையம் என்ற பிம்பம் பேஸ்புக் மற்றும் கூகிள் மீதான விசாரணைகளின் பின்னணியில் உடைபட்டுள்ள நிலையில் சோம்ஸ்கியின் கருத்துக்கள் இவ்வாண்டு மிகப்பெரிய விவாதப் பொருளாகும். சோம்ஸ்கியின் இந்நூல் இன்றைக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. அந்நூல் வெளியானபோது அமெரிக்காவின் ஊடகத்துறையை 50 நிறுவனங்கள் தம் கைகளில் வைத்திருந்தன. இன்று வெறும் 6 நிறுவனங்களே அமெரிக்காவின் மொத்த ஊடகத்துறையையும் கட்டுப்படுத்துகின்றன. உலக நாடுகளில் எல்லாம் இதுவே நடக்கிறது. ஒருசில பராசுர நிறுவனங்கள் ஊடகம் முதற்கொண்டு அனைத்தையும் கட்டுப்படுத்துகின்றன.

நாம் எதை நம்ப வேண்டும்? எதை சந்தேகிக்க வேண்டும்? எதை நேசிக்க வேண்டும்? எதை வெறுக்க வேண்டும்? எதைப் படிக்க வேண்டும்? எதை யோசிக்க வேண்டும்? எதை ரசிக்க வேண்டும்? எதை வாங்க வேண்டும்? எங்கு வாங்க வேண்டும்? எப்படி வாங்க வேண்டும்? எதை உண்ண வேண்டும்? எதை உடுத்த வேண்டும்? என நம் வாழ்வின் சகல அம்சங்களையும் அ முதல் ஃ வரை கட்டளையிடுகிற எஜமானனாக இன்றைய ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இது எவ்வாறு நிகழ்ந்தது என்பதை சோம்ஸ்கியின் நூல் விளக்கியுள்ளது. இன்னொருமுறை இதை இன்னமும் ஆழமாக நோக்கலாம்.

இவ்வாண்டு கவனம் பெறும் இரண்டாமவர் ஜோன் பெல்லமி பொஸ்டர் (John Bellamy Foster). சமூகவியற் பேராசிரியரான இவர் நாம் எதிர்நோக்கும் சுற்றுச்சூழல் நெருக்கடிகள், காலநிலை மாற்றங்கள் என்பவற்றுக்கும் முதலாளித்துவத்துக்கும் இடையிலான உறவைப் பற்றிய ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டவர். முன்னெப்போதும் இல்லாதளவு காலநிலை மாற்றத்தின் விளைவுகளை மனித குலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ள போதும் இன்றுவரை இதற்கான சரியான நடவடிக்கைகளை மனிதகுலம் எடுக்காதது ஏன்? இக்கேள்வியை தனது ஆய்வுகளின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இவரது சூழலியல் வெடிப்பு (The Ecological Rift), மற்றும் முடிவற்ற நெருக்கடி (The Endless Crisis) ஆகிய நூல்கள் மிகுந்த கவனம் பெற்றுள்ளன.

காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகள் இவ்வாண்டு உலகெங்கும் உணரப்படும். இதில் பாதிக்கப்படுகின்ற சாதாரண மக்கள் முதலாளித்துவ இலாப வெறிக்கும் மனித குலத்தின் மீது அக்கறையற்ற அரசுகளுக்கு எதிராகவும் கிளர்ந்து எழுவார்கள். அப்போது ஜோன் பெல்லமி பொஸ்டரின் சூழலியற் புரட்சி (Eco-Revolution) என்ற கருத்தாக்கம் கவனம் பெறும். இவ்வாண்டு மக்கள் எதிர்ப்புகளைக் கட்டுவதற்கான தளமாக சூழலியல் அமையும். அப்போது ஜோன் பெல்லமி பொஸ்டரின் சிந்தனைகள் அவ்வுரையாடல்களில் தாக்கம் செலுத்தும்.

நிறைவாக
இவ்வாண்டு பொருளாதார ரீதியிலும் சூழலியல் ரீதியிலும் மிகுந்த சவாலான ஆண்டாக இருக்கும். இது அரசியல் ரீதியான நிச்சயமின்மைகளை உருவாக்கும். அரசியல் என்பது எதிர்வுகூறக் கடினமானது. 2019 எத்தனையோ ஆச்சரியங்களைத் தன்னுள் உட்பொதித்து வைத்துள்ளது. காலத்தின் கோலங்கள் ஒவ்வொன்றாகக் கட்டவிழும் போது இப்பத்தி முடிந்தவரை அதை உள்ளடக்க முயலும் என்ற நம்பிக்கையில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *