அரசியல்உலகம்

2019ம் ஆண்டின் சிந்தனையாளர்கள்: காலத்தை வரையும் தூரிகைகள்

உலக வரலாற்றில் சிந்தனையாளர்களுக்கு தனியிடம் உண்டு. அரசனுக்கு வால் பிடித்த சிந்தனையாளர்கள் முதல் அரசனைக் கேள்விகேட்ட சிந்தளையாளர்கள் வரை எல்லா வகையிலுமான சிந்தனையாளர்களை உலகம் பார்த்திருக்கிறது. உலகின் திசைவழியைச் செதுக்குவதில் சிந்தனையாளர்களுக்குத் தனியிடம் உண்டு. சோக்கிரட்டீஸ் தொட்டு மக்கியாவலி வரையானவர்களின் கதை ஒன்றென்னால் ரூசோ முதல் மார்க்ஸ் வரையானவர்களின் கதை இன்னொன்று. உலக வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் சிந்தனையாளர்கள் தவிர்க்கவியலாதவர்களாக இருந்திருக்கிறார்கள். அலெக்சாண்டரின் எழுச்சி, பிரெஞ்சுப் புரட்சி, உலகையே புரட்டிய ரஷ்யப் புரட்சி என அனைத்திலும் சிந்தனைகளும் அதிலும் குறிப்பாக தத்துவத்தின் நடைமுறையும் முக்கியமானவையே.

உலகின் அயலுறவுக் கொள்கைகள் தொடர்பாக வெளிவரும் இதழ்களில் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் Foreign Policy சஞ்சிகையானது பிரதானமானது. 1970ம் ஆண்டு அமெரிக்க அரசறிவியலாளரும் ‘நாகரீகங்களிடையான மோதல்’ என்ற கருத்தாக்கத்தின் சொந்தக்காரனான சாமுவேல் ஹண்டிங்கனினால் உருவாக்கப்பட்டது. 2010ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் உலகின் முக்கியமான 100 சிந்தனையாளர்களை Foreign Policy சஞ்சிகையானது பட்டியலிட்டு வருகிறது. அவ்வகையில் 2019ம் ஆண்டுக்கான 100 சிந்தனையாளர்கள் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

இப்பட்டியலை வெளியிடத் தொடங்கி இவ்வாண்டுடன் பத்தாண்டுகள் முடிவடைகின்றன. அதனை நினைவுகூர்ந்து பத்துப் பிரிவுகளில் பிரிவுக்குப் பத்துப் பேராக 100 பேர் பட்டியலிடப்பட்டிருக்கிறார்கள். இதில் உள்ள அனைவரையும் இப்பத்தியில் நோக்க முடியாவிட்டாலும் சில முக்கியமான நபர்களையும் அதற்கான காரணங்களையும் குறிப்பிடலாம் என நினைக்கிறேன்.

உலகின் பலவான்கள்
இந்தப் பட்டியலின் முதலாவது பிரிவு பலவான்கள் (The Strongman) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் முதன்மையான இடத்தை ஜேர்மனியின் சான்சலர் அங்கெலா மேக்கல் பெற்றுக் கொண்டுள்ளார். இந்தப் பட்டியலிடல் தொடங்கியது முதல் எட்டாவது தடவையாக இந்தப் பட்டியலில் (2017 மற்றும் 2018 நீங்கலாக) மேக்கல் இடம்பெறுகிறார். இது இரண்டு செய்திகளைச் சொல்கிறது. முதலாவது வலுவின் மூலம் தனக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்ளும் ஒரு நாடாக ஜேர்மனி வளர்கிறது. நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஐரோப்பிய ஒன்றியத்தை கூட்டாக வைத்திருப்பதில் ஜேர்மனி பங்கு பெரிது. இவை இரண்டுக்காகவும் முதன்மையான இடத்தை மேக்கல் பெற்றிருக்கிறார். இன்னொரு வகையில் உலக விவகாரங்களில் அமெரிக்காவின் சரியும் செல்வாக்கை இது காட்டுகிறது.

மூன்றாவது இடத்தில் அலிபாபா நிறுவனத்தின் உரிமையாளர் ஜக் மா (Jack Ma) இருக்கிறார். இலத்திரனியல் வர்த்தகத்தின் மூலம் உலகளாவிய ரீதியில் பொருட்கள் விற்பனையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவர் இவர். அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்களுக்குப் போட்டிய ஒன்லைன் வியாபாரத்தைத் தொடங்கி இன்று யாருமே எட்டமுடியாத உயரத்தை இவர் அடைந்துள்ளார். மேற்குலகம் தவிர்க்கவியலாமல் தங்களுக்கு வெளியிலானவர்களின் வெற்றிக்கதையை ஏற்றுக் கொள்ளவேண்டிய நிலைக்கு வந்திருக்கிறது.

நான்காவது இடத்தில் #MeToo இயக்கம் பட்டியலிடப்பட்டிருக்கிறது. உலகளாவிய ரீதியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை பொதுவெளிக்குக் கொண்டு வந்ததோடல்லாமல் அது பற்றிய கலந்துரையாடலுக்கு அது வழிவகுத்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஐந்தாவது இடத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டீன் லகார்ட் இருக்கிறார். இது இன்னமும் உலக விடயங்களில் குறிப்பாக மூன்றாமுலக நாடுகளின் விடயங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் அசைக்கமுடியாத பிடியைக் காட்டுகிறது.

ஆறாவது இடத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டியை உறுதிப்படுத்துவதற்கான ஆணையாளர் மார்கரீட்டே வெஸ்டாகர் இடம்பெறுகிறார். கடந்தாண்டு உலகின் தலையாய பல்தேசியக் கம்பெனிகளான அப்பிள், கூகிள், பேஸ்புக் உள்ளிட்ட அனைத்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டி விதிகளை மீறியமைக்காக அபராதம் விதிக்கப்பட்டது. இதை சாத்தியமாக்கியமைக்கான இவர் இப்பட்டியலில் உள்ளதாக Foreign Policy சஞ்சிகை சொல்கிறது. இது சொல்லாமல் சொல்லும் செய்தி என்னவெனின் முதலாளித்துவ விதிகளையே பெருமுதலாளிகள் மீறுகிறார்கள். கார்ள் மார்க்ஸ் எதிர்வுகூறியபடி சுறாக்கள் மீன்களைத் தின்று திமிங்கிலங்கள் ஆகின்றன. இது முதலாளித்தவ இயக்கவிதிகளுக்கு நெருக்கடியைக் கொடுக்கிறது. இதனால் இதனைத் தடுக்க நவதாராளவாதம் தாரளவாத ஜனநாயகத்தின் பேரால் போராடுகிறது.

40 வயதிற்குள் நானிலம் போற்றும்
இந்தப்பட்டியலில் கவனிக்க வேண்டிய இன்னொரு பிரிவு 40 வயதிற்குள் உள்ள சிந்தனையாளர்கள் வரிசையாகும். இவ்வாண்டுப் பட்டியலிலலேயே மிகவும் சுவையான பத்துப்பேரைக் கொண்ட பிரிவு இதுவாகும். இதில் முதலிடத்தில் இருக்கும் நியூசிலாந்தின் பிரதமர் ஜசிந்தா அன்டேன், பெண்உரிமைகளின் முக்கியமான குறிகாட்டியாக இருக்கிறார். அதேவேளை ஆறாவது இடத்தில் இருக்கும் அயர்லாந்தின் பிரதமர் லியோ வரட்கர் இந்தியத் தந்தைக்குப் பிறந்தவர், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர். கத்தோலிக விழுமியங்கள் செல்வாக்குச் செலுத்தும் நாட்டில் இவர் இத்தகைய உயர்ந்த இடத்துக்கு வந்திருப்பது மாறிவரும் சமூகங்களையும் இவரது முயற்சியையும் எடுத்துக்காட்டுகிறது.

இதற்கு மறுபுறத்தில் அதிவலது தீவிர நிலைப்பாட்டை உடைய 30 வயதில் நாட்டின் தலைவரான ஆஸ்திரியாவின் சான்சிலர் செபஸ்டியன் கூர்ஸ் ஐரோப்பாவில் அதிதீவிரவலதின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார். 30 வயதில் நாட்டின் தலைவரான இவர் ஒருபுறம் இளையோரின் அரசியல் பங்கெடுப்பின் முன்னுதாரணமாகவும் மறுபுறம் அதிதீவிர வலது மற்றும் குடியேற்ற எதிர்ப்பு நிலைப்பாடுகள் இளந்தலைமுறையினரிடமும் உள்ளன என்பதன் குறிகாட்டியாகவும் உள்ளார். நான்காவது இடத்தில் சவூதி அரேபியாவின் இளவரசர் முகமட் பின் சல்மான் இருக்கிறார். இவரும் முன்னையவருக்கு சளைத்தவரல்ல.

இப்பட்டியலில் மூன்றாவது இடத்தை வடகொரியாவின் தலைவர் கிம் யொங்-உன் பெற்றுள்ளார். வடகொரியா அயலுறவுக் கொள்கையில் கைக்கொள்ளும் முதிர்ச்சியான செயற்பாடுகளாக இவர் இடம்பெற்றுள்ளதாக சஞ்சிகை குறிப்பிட்டாலும் கிம் யொங்-உன் தனது செயற்பாடுகளால் மேற்குலகை ஆச்சரியப்பட வைத்துள்ளார். முட்டாள் என்றும் அறிவிலி என்றும் சில ஆண்டுகளுக்கு முன் மேற்குலக ஊடகங்களாலும் அமெரிக்க அதிபராலும் கேலிக்குள்ளாக்கபட்ட நிலையில் அமெரிக்க அதிபரே அவரைச் சென்று சந்திக்க வேண்டிய நிலையை நோக்கி அயலுறவுக் கொள்கையை நகர்த்தி வெற்றிபெற்றுள்ளார்.

பாதுகாப்பின் காவலர்கள்
உலகப் பாதுகாப்பின் முக்கியமான சிந்தனையாளர்களில் முதலிடம் ஈரான் இராணுவத்தின் உளவுச்சேவையின் தலைவர் குவாசிம் சுலைமானிக்கு வழங்கப்பட்டுள்ளது. இது பலவகைகளில் முக்கியமானது. முதலாவது மேற்குலகு பாதுகாப்புத் துறையின் தலைசிறந்த சிந்தனையாளராக ஈரானின் இராணுவத்தில் ஒருவரைத் தெரிகிறதென்றால் அந்தநபர் கொஞ்சம் விஷேசமானவர் தான். இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஈரானின் இரகசிய இராணுவ நடவடிக்கைகளை வழிநடத்திய இவரின் சுவடுகள் இன்று சிரியாவில் வலுவாக ஊன்றியுள்ளன. ஐ.எஸ்ஸின் தோல்வியை சாத்தியமாக்கியதில் இவரின் பங்கு பெரிது.

இதே வரிசையில் இரண்டாம் இடத்தில் ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சரும் ஐந்தாவது இடத்தில் அமெரிக்க விமானப்படை முன்னெடுக்கும் விண்வெளிப் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டமான SpaceXன் தலைவரும் உள்ளார்கள். அதேவேளை ஏழாவது இடத்தில் ரஷ்ய பிரதமர் விலாடிமிர் புட்டினின் நெருங்கிய ஆலோசகர் விலாடிஸ்லாவ் சுர்கோவ் இருக்கிறார். நவீன சமூக வலைத்தள உலகில் நெருக்கடிகள், தடைகள், இருட்டடிப்புகளைத் தாண்டி கடத்த வேண்டிய செய்தியைக் கடத்தும் வித்தை தெரிந்தவராக இவர் அறியப்படுகிறார். இன்று நவீன சைபர் யுத்தத்தில் ரஷ்யா வகிக்கும் முதன்மைப் பாத்திரத்தில் இவரின் அடையாளம் தவிர்க்கவியலாதது.

பாபா ராம்தேவ்: கைதேர்ந்த வியாபாரி
2019ம் ஆண்டுக்கான சிந்தனையாளர்கள் பட்டியலில் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்த பெயர் இந்தியாவின் கார்ப்பரேட் சாமியர்களில் ஒருவரான ‘பதஞ்சலி யோகா’ புகழ் பாபா ராம்தேவ். இவர் பொருளாதாரமும் வியாபாரமும் என்ற பிரிவில் ஏழாவது சிந்தனையாளராகப் பட்டியலிடப்பட்டிருக்கிறார். இவரைப் பற்றி Foreign Policy சஞ்சிகை என்ன சொல்லியிருக்கிறது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்:

“பாபா ராம்தேவ் இந்தியாவின் நன்கறியப்பட்ட அதிகாரம்மிக்க மனிதர்களில் ஒருவர். தனது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலமும் தனது ஆயுர்வேத ஒப்பனைப் பொருட்களின் சாம்ராஜ்ஜியம் மூலமும் இந்தியாவின் மத்தியதர வர்க்கத்தின் ஆரோக்கத்தை வணிகமாக்கியவர். அவரது அரசியல் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. அவருக்கும் பி.ஜே.பிக்கும் இருக்கும் உறவு மிகவும் நெருக்கமானது. இவ்வாண்டு தேர்தலிலும் இவரது செல்வாக்கும் மில்லியன் டொலர்கள் பெறுமதியான செல்வமும் பாதிப்பைச் செலுத்தும். இவரது பெயரைக் குறித்துக் கொள்ளுங்கள். ஒருநாள் இந்தியாவின் அதியுயர் பீடத்தில் இவர் அமரக்கூடும்”

பழங்குடிகளின் மூலிகை அறிவைத் தேடி விற்கும் அயோக்கியன் என்று இந்திய நீதிமன்றமே இவரைக் கண்டித்திருக்கிறது. இவரது மோசடிகள் தனியே ஒரு கட்டுரை எழுதுமளவுக்கு பெரியவை. இதன் முரண்நகை என்னவென்றால் இந்தியாவின் நன்கறியப்பட்ட ஆன்மீகவாதி நல்ல வியாபாரியாக பொருளாதார சிந்தனையாளராகப் பட்டியலிடப்பட்டிருக்கிறார். இவர் மக்களை ஏமாற்றுகிறரா அல்லது மதம் மனிதர்களை ஏமாற்றுகிறதா என்ற கேள்விக்கான பதிலை உங்களிடமே விட்டு விடுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *