அரசியல்உலகம்

ஹுவாவே அதிகாரி கனடாவில் கைது: சண்டையில கிழிஞ்ச சட்டை

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது என்றொரு சொல்லாடல் உண்டு. அது தொடர்பில்லாத இரண்டு விடயங்களைத் தொடர்புபடுத்துவது பற்றிய நயமான குறியீடு. அரசியலில் நடக்கும் விடயங்கள் பலவற்றை இச்சொல்லாடல் மூலம் விளக்கவியலும். மேம்போக்காகப் பார்க்கும்போது தொடர்பே இல்லாதது போலத் தெரியும் விடயங்களுக்கு பின்னால் மறைந்துள்ள காரணிகள் வியப்பளிப்பன. அதுபோன்றதொரு நிகழ்வு அண்மையில் நடந்தேறியுள்ளது.

தொலைத்தொடர்பு துறையில் முன்னோடியாகத் திகழ்கின்ற ஹுவாவே என்கிற சீன நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மென்ங் வான் சொவ் கனடாவில் கைது செய்யப்பட்டமையானது இவ்வாறதொரு நிகழ்வு. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதார யுத்தம் புதிய கட்டத்தை நோக்கி நகர்கின்ற நிலையில் இக்கைதானது அதன் பகுதியாகும். இதில் கவனிக்க வேண்டியது யாதெனில் ஹ_வாவே நிறுவனம் அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளை மீறி ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டதனைக் காரணம் காட்டி அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று கனடா மென்ங் வான் சொவ்வை கைது செய்துள்ளது. மென்ங் வான் சொவ் தலைமை நிர்வாக அதிகாரி மட்டுமன்றி ஹுவாவே நிறுவனத்தின் தலைவரின் மகளும் அந்நிறுவனத்தின் துணைத் தலைவரும் ஆவார். இந்நிகழ்வு பல்கோண அரசியற் பரிமாணங்கள் எவ்வாறு ஒருபுள்ளியில் சந்திக்கின்றன என்பதை விளக்கப் பயனுள்ள நிகழ்வு.

ஹுவாவே: தொலைத்தொடர்பின் புதிய நட்சத்திரம்
உலகளாவியத் தொலைத்தொடர்புத் துறையில் அமெரிக்க நிறுவனங்கள் நீண்டகாலமாகச் செல்வாக்குச் செலுத்தி வந்தன. ஆனால் கடந்த ஒரு தசாப்தகாலமாக அந்நிலை மாற்றமடைந்து வருகிறது. குறிப்பாக நவீன தொழிநுட்பத்தினதும் ஸ்மார்ட்போனினதும் வர்த்தகத்தில் முன்னிலையில் இருந்து வந்த அமெரிக்காவின் அப்பிள் நிறுவனம் தனிப்பெருந்தலைவராக இருந்து வந்தது. இதை தென்கொரிய நிறுவனமான சாம்சுங்கின் வருகை இல்லாமல் செய்தது. ஆப்பிள் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து சீன தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாவே வேகமாக வளர்ந்து இப்போது அப்பிளை மூன்றாவது இடத்திற்குத் தள்ளி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்த முன்னேற்றம் ஸ்மார்ட்போன் விற்பனைகள் தொடர்பானது. ஹ_வாவே வெறுமனே ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்யும் நிறுவனம் மட்டுமல்ல. தொலைத்தொடர்பு துறையின் முன்னோடியாக உருவெடுத்துள்ளது. இன்று உலகளாவிய தொலைத்தொடர்புத் துறையின் நவீன தொழில்நுட்பத்தின் சொந்தக்காரர்களாக ஹுவாவே நிறுவனம் உள்ளது. உலகின் 170க்கும் மேற்பட்ட நாடுகளில் ஹுவாவேயின் தொழில்நுட்பமும் பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த பத்தாண்டுகளில் ஹுவாவேயின் வளர்ச்சி அமெரிக்கத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. தொழில்நுட்ப ரீதியில் மட்டுமன்றி பொருட்களையும் சேவைகளையும் குறைந்த விலையில் வழங்கக்ககூடிய ஒரு நிறுவனமாக ஹுவாவேயின் வளர்ச்சி போட்டியாளர்களுக்கு மிகுந்த சவாலை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக அலைபேசிச் தொழிநுட்பத்தின் அடுத்த கட்டம் என்றழைக்கப்படும் 5G தொழிநுட்பத்ததை நோக்கிய நகர்வில் ஹுவாவேயின் பங்கு முக்கியமானது. இந்த 5G உட்கட்டமைப்பை வழங்கக்கூடிய நிறுவனங்களில் முதன்மையானது ஹுவாவே. அதேவேளை இதை மிகுந்த பொருட்செலவில் இன்றி குறைந்த விலையில் வளர்முக நாடுகளுக்கு வழங்குவதற்கும் ஹுவாவே தயாராக உள்ளது. இலங்கை உள்ளிட்ட பல மூன்றாமுலக நாடுகளிற்கு மிகக்குறைந்த விலையில் 4G தொழிநுட்பத்தைச் சாத்தியமாக்கிய பெருமை ஹ_வாவேயைச் சாரும். இதன் தொடர்ச்சியாக 5Gயை நோக்கிய நகர்வுக்கு ஹுவாவே தயாராகிறது.

170,000 பணியாளர்களைக் கொண்ட இந்நிறுவனத்தில் 76,000 பேர் “ஆய்வும் அபிவிருத்தியும்” என்ற பகுதியில் பணிபுரிகிறார்கள். ஆய்வுக்கும் புத்தாக்கத்திற்கும் இந்நிறுவனம் வழங்கும் முக்கியத்துவம் இதன் வளர்ச்சிக்கு முக்கிய காரணம். இதனால் நவீன தொழிநுட்பத்தின் முன்னோடியாக வளர்ந்துள்ள ஹுவாவே உலகின் பல்வேறு நாடுகளுக்கு 5G தொழிநுட்பத்திற்கான உட்கட்டமைப்பை வழங்கும் நிறுவனமாக உள்ளது.

இந்த மாற்றங்கள் அமெரிக்காவோ அல்லது அமெரிக்கத் தொலைத்தொடர்பு நிறுவனங்களோ விரும்புகின்ற மாற்றங்கள் அல்ல. இதனாலேயே ஹுவாவே மறைமுகமாக உளவு வேலைகளில் ஈடுபடுகிறது. எனவே ஹுவாவேயின் தொழிநுட்பங்களை உலகநாடுகள் பயன்படுத்தக்ககூடாது என அமெரிக்க கடந்த சில ஆண்டுகளாகக் கோரி வருகிறது.

அமெரிக்கா – சீனா வர்த்தகப் போர்
அண்மைக்காலமாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் புதிய கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. சுpல மாதங்களுக்கு முன்னர் 250 பில்லியன் டொலர்கள் பெறுமதியான சீனப் பொருட்கள் மீது அமெரிக்க விதித்த சுங்கவரியானது. இந்தப் போரின் தொடக்கமாக இருந்தது. இதற்குப் பதிலளிக்கும் வகையில் 110 பில்லியன் டொலர்கள் பெறுமதியான அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா வரிவிதித்தது. அமெரிக்காவில் இருந்து 130 பில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்களையே சீனா இறக்குமதி செய்கிறது. அதில் 110 பில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்களுக்குத் தடை விதித்தாகிவிட்டது. மாறாக அமெரிக்கா சீனாவில் இருந்து 531 பில்லியன் பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்கிறது. இதில் தடை விதிக்கப்படாதுள்ள 281 பில்லியன் பெறுமதியான பொருட்களுள் பிரதானமானவை செல்பேசிகள், ஸ்மார்ட்போன்கள், கணிணி உபகரணங்கள் மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்கள் ஆகியவையே.

அப்பிள் போன்ற அமெரிக்க நிறுவனங்களின் தொழிற்சாலைகள் சீனாவிலேயே உள்ளன. அதன் ஸ்மார்ட்போன்கள், மடிக்கணிணிகள் உள்ளிட்டவை சீனாவிவேயே முழுமையாகத் தயாரிக்கப்படுகின்றன. எனவே அவற்றுக்கு வரிவிதிப்பது அமெரிக்க நிறுவங்களுக்கே பாதகமாக அமையும்.

சீனாவுக்கு எதிரான வர்த்தகப் போரை அமெரிக்கா தொடக்கியமைக்கு சில காரணங்கள் உண்டு. முதலாவது அமெரிக்க சீனா வர்த்தகத்தில் ஆண்டுதோறும் 262 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வர்த்தகத்தை அமெரிக்காவிலும் அதிகமாக சீனா மேற்கொள்கிறது. இது அமெரிக்க வர்த்தகத்திற்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்துகிறது. அதேவேளை சீனாவுக்கான அமெரிக்கக் கடன் படிப்படையாக அதிகரித்து இன்று 1.3 ட்ரிலியன் டாலர்களில் (1300 பில்லியன்) உள்ளது.

இரண்டாவது சீனா ஆரம்பித்துள்ள Made in China 2025 (சீனத் தயாரிப்பு 2025) முன்னெடுப்பானது 2025ம் ஆண்டளவில் சீனத் தயாரிப்புகளின் உதவியுடன் நவீன தொழிநுட்பத்தை குறைந்த விலையில் உலகெங்கும் வழங்கும் நோக்குடையது. இதை அமெரிக்கா வன்மையாக எதிர்க்கிறது. அக்டோபர் மாதம் 4ம் திகதி அமெரிக்கத் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சீனா குறித்த ஒரு பிரதான கொள்கை உரையில் சீனா அதன் சீனத் தயாரிப்பு 2025 திட்டத்தைக் கைவிட வேண்டுமென எச்சரித்தார். சீனாவின் இத்திட்டம் “தானியங்கி இயந்திரவியல், உயிரிதொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு உளவுபார்ப்பு உட்பட உலகின் மிகவும் முன்னேறிய தொழில்துறைகளில் 90 சதவீதத்தை” கையகப்படுத்துவதற்கான முயற்சி என்று குற்றஞ் சாட்டினார். ஆமெரிக்கத் துணை ஜனாதிபதியின் உரையை பல நோக்கர்கள் சீனாவுடனான ஒரு புதிய ‘கெடுபிடிப்போரின்’ உதயம் என்று குறிக்கிறார்கள்.

மூன்றாவது 2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் அமெரிக்கப் பொருளாதாரம் தடுமாறுகின்ற நிலையில் அடாவடியாக அமெரிக்கப் பொருளாதாரத்தைக் காப்பாற்ற வேண்டிய எல்லைக்கு அமெரிக்கா சென்றுள்ளது.

அமெரிக்கா முன்னெடுத்த வர்த்தகப்போரின் விளைவுகளை சீனாவின் பதில் நடவடிக்கைகளின் மூலம் அமெரிக்காவே எதிர்நோக்குகிறது. இதன் பயனாக ஒரு தற்காலிக சமாதானத்திற்கு அமெரிக்கா விரும்பியது. டிசெம்பர் மாதம் 2ம் திகதி ஜி 20 மாநாட்டின் பகுதியாக அமெரிக்க-சீனத் தலைவர்கள் இது தொடர்பில் நேரடியாகச் சந்தித்துப் பேசினார்கள். ஆனால் டிசெம்பர் 1ம் திகதி ஹுவாவேயின் தலைமை நிர்வாக அதிகாரி கனடாவில் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சீனாவுடனான பேச்சுக்கள் வெற்றியளித்திருப்பதாக தனது ட்டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். ஆனால் அவர் மென்ங் வான் சொவ்வின் கைது பற்றி அறிந்திருக்கவில்லை. இது அமெரிக்காவின் அதிகார அடுக்கில் உள்ளவர்கள் சீனாவுடன் எதுவித சமரசத்திற்கு தயாராக இல்லை என்பதுடன் சீனாவை ஆத்திரமூட்டுவதன் ஊடு இன்னொரு இராணுவ நடவடிக்கைக்கு தள்ளுவதன் உபாயமாக இதைக் கொள்கிறார்கள் என்பது தெரிய வந்தது.

மென்ங் கைது செய்யப்பட்டமை அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தக போரில் எந்தவொரு சமரசத்திற்கான சாத்தியக்கூறையும் இல்லாது செய்துள்ளது. இதனாலேயே இந்த கைது நடவடிக்கையை பிற மேற்குலக நாடுகளும் வர்த்தகர்களும் அச்சத்துடன் நோக்குகின்றனர். பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த பிரிட்டிஷ் பைனான்சியல் டைம்ஸ், இக்கைதை ‘ஆத்திரமூட்டலாக’ வர்ணித்ததுடன், ‘நியாயமான சட்ட அமலாக்கம் இல்லாமல், அதன் அரசியல் பொருளாதார முனைகளைப் பின்தொடர்வதற்காக அமெரிக்க அதிகாரத்தினது பயன்பாடு’ என்று கண்டித்தது.

அடுத்தது என்ன?
இக்கைது நடவடிக்கையோடு கவனிப்புக்கு உள்ளாக வேண்டிய இரண்டு விடயங்களை நோக்குதல் தகும். முதலாவது அமெரிக்காவில் விடுக்கப்பட்ட பிடிவிறாந்தை கனடா நடைமுறைப்படுத்தியதானது அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக கனடா செயற்படுகிறது என்பதை காட்டுகிறது. அதேவேளை அமெரிக்க – சீனப் போட்டியில் கனடா இழுபடுவது அமெரிக்கா – சோவியத் யூனியன் காலப்பகுதியை நினைவூட்டுகிறது. அமெரிக்கா மென்ங் வான் சொவ்வை நாடு கடத்தும்படி கோருகிறது. சீனா மென்ங் வான் சொவ் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அல்லாவிடின் ‘மோசமான விளைவுகளைச்’ சந்திக்க வேண்டி வரும் என்றும் கூறியுள்ளது.

ஹுவாவே நிறுவனம் சட்டவிரோதமான முறையில் ஈரானுக்குத் தொழிநுட்பத்தை விற்பனை செய்தது என்ற குற்றச்சாட்டை ஹுவாவே மறுத்துள்ளது. இந்தப் பின்னணியிலேயே வழக்கு விசாரணை கனடாவில் நடைபெற்று வருகிறது. மென்ங் வான் சொவ்விற்கு பிணை வழங்குமாறு அவரது வழக்கறிஞர்கள் கோரிய நிலையில் கனடிய அதிகாரிகள் அவர் தப்பியோடுவதற்கான வாய்ப்புகள் உள்ளமையால் அவருக்கு பிணை வழங்கப்படக் கூடாது என்று வாதிட்டனர். இந்நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட சீனாவின் வெளியுறவு துறை அமைச்சகம் “அமெரிக்கா சொன்னதற்காக, மெங் வான் சொவ் கைது செய்யப்பட்டமையானது அவரது சட்டப்பூர்வ உரிமைகளை மீறிய நடவடிக்கை ஆகும். இது சட்டத்தை புறக்கணித்த செயல். கைது செய்யப்பட்டுள்ளவர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவரது சட்டப்பூர்வ உரிமைகளை பாதுகாக்க வேண்டும். இல்லாவிட்டால், கடும் விளைவுகளுக்கு கனடா பொறுப்பேற்க வேண்டியது வரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கேட்கப்பட்ட போது அவர், “சீனாவுடன் எங்களுக்கு நல்லுறவு உள்ளது” என்று மட்டும் பதிலளித்தார். இது கனடா மிகப்பெரிய நெருக்கடியை எதிர்நோக்குகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. சீனாவில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கனடிய அமெரிக்க தொழில்முனைவர்கள், நிறுவனங்கள் சீனா கடுமையாகப் பதிலளிக்கும் பட்சத்தில் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என அஞ்சுகிறார்கள்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் தனது இராணுவ வலிமையின் மீது வைத்துள்ள அதீத நம்பிக்கையினதும் சீனாவின் பொருளாதார வலிமையைக் குறைத்து மதிப்படுவதன் வெளிப்பாட்டினதும் கூட்டுச் செயற்பாடாக இந்தச் செயலை அவதானிக்க முடியும். இதுவரை தொழிநுட்பத்தின் உதவியுடன் இராணுவ ரீதியில் அமெரிக்க வகித்து வந்த உயர்நிலை இன்று கேள்விக்குள்ளாகியுள்ளது.

ஹுவாவே மீதான நடவடிக்கைக்கு சீனா எவ்வாறு பதில் அளிக்கும் என்பதை எல்லோரும் ஆவலுடனும் அச்சத்துடனும் நோக்குகிறார்கள். ஏனெனில் 2010ம் ஆண்டு சீன எதிர்ப்பாளரான லியோ ஸியோபோவுக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசை நோர்வே வழங்கியதன் பின்னணியில் நோர்வேயுடனான இராஜதந்திர உறவுகள் நெருக்கடிக்குள்ளாகின. இதனால் நோர்வே மிகப்பெரிய பின்னடைவைக் கண்டது. சீனாவில் உள்ள நோர்வேஜியத் தூதரகம் மூடப்பட்டது. வர்த்தகத் தடைகள் விதிக்கப்பட்டன. ஆதைத் தொடர்ந்து 7 ஆண்டுகளின் பின்னரே நோர்வேயுடனான உறவை சீனா சரிசெய்தது. இதே நிலை கனடாவுக்கும் ஏற்படுமோ என்ற அச்சம் பலரிடம் உண்டு. அதையும் தாண்டி கனடா வேறுவகையில் எதிர்வினையாற்றுமோ என்ற வினாவும் உண்டு.

உலகின் புதிய இயங்குதிசையைச் செதுக்கும் ஒரு நிகழ்வாக இதை நோக்கலாம். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போட்டியில் கிழியக் போகும் சட்டை ஹுவாவேயினுடையதா அல்லது கனடாவினுடையதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *