அரசியல்உலகம்

வெனசுவேலா: இன்னொரு அந்நியத்தலையீடு

அயற்தலையீகள் ஆரோக்கியமானவையல்ல. அவை எந்த நியாயத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்டாலும் அவை ஒருநாட்டின் இறைமையைக் கேள்விக்குள்ளாக்கும் செயல்கள். ஆனால் உலகெங்கும் அயற்தலையீடுகள் நடந்தவண்ணமுள்ளன. அவை பல்வேறு முகாந்திரங்களின் கீழ் நடந்தேறுகின்றன. இவை வேறுபாடின்றிக் கண்டிக்கப்பட வேண்டியவை. எம்மத்தியில் அயற்தலையீடுகளை கூவி அழைப்போர் இருக்கிறார்கள். அதைத் தீர்வுக்கான வழியாகக் காண்போர் அது தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் ஆபத்தைக் காணத் தவறுகிறார்கள். அவர்கள் அந்த ஆபத்தை இனங்காணும் போது காலம் கடந்திருக்கும்.

வெனசுவேலாவில் இப்போது சதிப்புரட்சி ஒன்று மெதுமெதுவாக அரங்கேறுகிறது. வெனசுவேல ஜனாதிபதி நிக்கலஸ் மடூரோவைப் பதவிவிலகுமாறு அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் கோரியுள்ளன. இந்த நெருக்கடியின் பின்கதை மற்றும் முன்கதை என்பவற்றைச் சுருக்கமாகப் பார்த்துவிடலாம்.

உலகின் எண்ணெய் வளம் அதிகமாக உள்ள நாடுகளில் வெனசுவேலாவிற்கு தனியிடம் உண்டு. உலகில் கணக்கிடப்பட்டுள்ள எண்ணெய் வளங்களில் அதிகமான எண்ணெய் வளத்தைக் கொண்ட நாடு வெனசுவேலா. மத்திய கிழக்கு நாடுகள் எல்லாம் பின்னால் வருபவை. 1918ம் ஆண்டு எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது முதல் இந்நாட்டு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. 1918 முதல் 1998 வரையான எண்பது ஆண்டுகளில் வெனசுவேலாவின் எண்ணெய் ஏற்றுமதி பல்மடங்கு அதிகரித்தது. ஆனால் 70மூதமான வெனசுவேலர்கள் ஊட்டச்சத்து குறைவினால் அவதிப்பட்டார்கள். 55மூமானவர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்தார்கள். அமெரிக்க நிறுவனங்கள் எதுவித பிரச்சனையுமின்றி மிகக்குறைந்த விலையில் எண்ணெய் பெற்றுக் கொண்டிருந்தன.

1998இல் ஆட்சியைப் பிடித்த ஹுயுகோ சாவேஸ் எண்ணெய்க் கிணறுகளைத் அரசுடமையாக்கினார். அதன்மூலம் பெறப்பட்ட வருவாயை மக்களுக்கு அளித்தார். ஐந்து ஆண்டுகளில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்கள் 55%இலிருந்து 22%மாகக் குறைந்தனர். அன்றுமுதல் அமெரிக்கா வெனசுவேலாவில் ஆட்சிமாற்றத்துக்காகத் துடித்து வருகிறது. சாவேஸின் தீடீர் மரணத்தைத் தொடர்ந்து பதவியேற்ற நிக்கலஸ் மடூரோ தனது ஆட்சிக்காலத்தின் போது பொருளாதாரச் சவால்களை எதிர்கொண்டார். குறைவடைந்த சர்வதேச சந்தை விலைகள், வெனசுவேலா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் என்பன வெனசுவேலப் பொருளாதாரத்தைப் பாதித்தன. இதன் விளைவால் தேர்தலில் மடூரோ தோல்வியடைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்தாண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் மடூரோ 68%மான வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். இது தேர்தல்கள் மூலம் வெனசுவேலாவில் ஆட்சிமாற்றம் சாத்தியமில்லை என்பதை உணர்த்தியது.

இதன் பின்னணியில் கடந்த சில மாதங்களாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்க சார்பு தன்னார்வ நிறுவனங்களின் நிதியுதவின் கீழ் நடாத்தப்பட்டன. இது வெனசுவேலாவில் அரசுக்கெதிரான மக்கள் கிளர்ச்சி என்று சொல்லப்பட்டது. ஊடகங்களும் அவ்வாறே எழுதின. ஆனால் ஜனாதிபதி மடூரோவைப் பதவியிலிருந்து அகற்ற முடியவில்லை. இந்நிலையில் கடந்தமாதம் 23ம் திகதி வெனசுவேலப் பாராளுமன்றின் தலைவர் ஜூவான் குவைடோ தன்னை ‘வெனசுவேலாவின் இடைக்கால ஜனாதிபதி’ என்று அறிவித்து பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அவர் கடந்தாண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்கள் முறையாக நடத்தப்படவில்லை என்றும் இதனால் சட்டத்தின் அடிப்படையில் தான் இடைக்கால ஜனாதிபதியாகப் பதவியேற்பதாக அறிவித்தார். ஆனால் வெனசுவேல அரசியலமைப்பின் படி ஜனாதிபதி இறந்து அல்லது பதவிவிலகினாலே அப்பதவி வெற்றிடமாகும். ஆவ்வாறு ஆகும்போது அப்பதவிக்குத் தகுதியானவர் உப ஜனாதிபதியே. இந்த நகைச்சுவை நாடகம் அரங்கேறிய சில மணித்தியாலங்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜூவான் குவைடோவை வெனசுவேல ஜனாதிபதியாக அங்கீகரிப்பதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து பல்வேறு மேற்குலக நாடுகள் அவரை அங்கீகரித்தன. ஆனால் மடூரோவே நாட்டின் ஜனாதிபதியாக இருக்கிறார். அவருக்கு இராணுவத்தின் முழுமையான ஆதரவு இருக்கிறது. இவ்வாறான ஒரு நெருக்கடியில் வெனசுவேலா சிக்கவைக்கப்பட்டுள்ளது.

ஈராக்கில் தொடங்கி லிபியாவில் தொடர்ந்து சிரியாவில் தோல்விகண்ட அமெரிக்காவின் ஆட்சிமாற்றச் சூத்திரம் இப்போது வெனசுவேலாவில் அரங்கேறுகிறது. ‘ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது’, ‘மனிதாபிமானத் தலையீடு’ என்பன இங்கும் பேசப்படுகின்றன. வெனசுவேலா அமெரிக்காவுக்கு பலவழிகளில் தலையிடியாக உள்ளது. எனவே அங்கு ஆட்சிமாற்றம் தவிர்க்கவியலாததாகிறது.

வெனசுவேலாவின் எண்ணெய் மீது அமெரிக்கா கண்வைத்துள்ளது. இதனை இப்போதைய அமெரிக்க ஆட்சியாளர்கள் மறைக்கவில்லை. கடந்த மாதம், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் தொலைக்காட்சி நேர்காணலில் “அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் உண்மையில் வெனசுவேலாவில் உள்ள எண்ணெய் திறன்களில் முதலீடு செய்து உற்பத்தி செய்ய முடியுமானால், அது அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு பெரிய வேறுபாட்டை ஏற்படுத்தும். அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியில் வெனசுவேல எண்ணெய் மீதான செல்வாக்கு மிகப்பெரிய பங்களிக்கும்” என்று தெரிவித்தார்.

இதேவேளை வெனசுவேலாவின் மீது சீன, ரஷ்யச் செல்வாக்கு அதிகரித்துள்ளது. தன் கொல்லைப்புறத்தில் அதிகரிக்கும் இச்செல்வாக்கை மிகப்பெரிய அச்சத்துடன் அமெரிக்கா நோக்குகிறது. இதனால் வெனசுவேலாவில் ஆட்சிமாற்றம் மூலம் தனது செல்வாக்கை மீள நிலைநிறுத்த அமெரிக்கா விரும்புகிறது.

இவ்விரண்டு நோக்கங்களுக்காகவும் அமெரிக்கா வெனசுவேலாவில் எந்த எல்லைக்கும் செல்ல தயாரக உள்ளது. இதனாலேயே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ‘இராணுவத் தலையீட்டுக்கான வாய்ப்புக்கள் இல்லாமல் இல்லை’ என மடூரோவை எச்சரித்தார். இதேவேளை அமெரிக்க அயலுறவுச் சிந்தனைமுகாமைச் சேர்ந்த சிந்தனையாளர்கள் தற்போதைய கட்டமானது மடூரோ வெளியேறுவதற்கான பாதையைக் கட்டமைக்கிறது. இப்பாதையைத் தேர்தெடுத்து மடூரோ வெளியேறாவிட்டால் ஈராக்கில் சதாம் ஹ_சைன், லிபியாபில் முகம்மர் கடாபி ஆகியோரின் வரிசையில் மடூரோவும் இடம்பெறுவார் என்று எழுதுகிறார்கள். அதேவேளை இவர்கள் சிரியாவின் அல் அசாத்தை தங்கள் வசதிக்காகத் தவிர்க்கிறார்கள். இங்குதான் மிகப்பெரிய செய்தி ஒளிந்துள்ளது.

அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஈராக்கிலும் லிபியாவிலும் செய்ததை சிரியாவில் செய்ய முடியவில்லை. அதற்கு மிகப்பெரிய தடையாக இருந்தது ரஷ்யாவும் அதன் கூட்டாளிகளான ஈரானும் ஹிஸ்புல்லாவுமே. இப்போது வெனசுவேல நிலவரங்களில் ரஷ்யா முக்கிய பங்கு வகிக்கக்கூடும். ரஷ்யாவின் பெரிய எண்ணெய் முதலீடுகள் வெனசுவேலாவில் உள்ளன. அதை இழக்க ரஷ்யா தயாராக இராது. எனவே தற்போது அமெரிக்கா அரங்கேற்றும் சதிப்புரட்சி அவ்வளவு எளிதாக முடிவடையப் போவதில்லை.

கடந்த பத்தாண்டுகளில் சீனா வெனசுவேலாவில் வலுவாக முதலிட்டுள்ளது. கடன் வழங்கியுள்ளது. சீன முதலீடுகள் வெனசுவேல எண்ணெய் உற்பத்தியுடன் தொடர்புபட்டவை. அத்துடன் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் கல்வி, தொழிநுட்பம், போக்குவரத்து, சுகாதாரம் எனப் பலதுறைகளுக்கு விரிந்துள்ளன. வெனிசுவேலாவில் ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்காவின் பிரயத்தினத்தின் அடிப்படையானது சீன மற்றும் ரஷ்ய செல்வாக்கை ஒழிப்பதை இலக்காகக் கொண்ட “இலத்தீன் அமெரிக்காவிற்கு முக்கியத்துவம்” என்ற அமெரிக்காவின் அயலுறவுக் கொள்கையின் பகுதியாகும்.

இதை அமெரிக்கப் பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் கியூபா, வெனிசுவேலா மற்றும் நிக்கரகுவா ஆகியவற்றை ‘கொடுங்கோண்மைக் கூட்டாளிகள்’ என விவரித்ததோடு இந்நாடுகளில் ஏற்படுத்தப்படும் ஆட்சிமாற்றங்களே சீன, ரஷ்ய ஆதிக்கத்துக்கெதிரானதாகவும் அமெரிக்க சார்புடையதாகவும் இலத்தீன் அமெரிக்காவைக் கட்டமைக்க அடிப்படையானது என்றார். சுருக்கமான அமெரிக்கா தனது கொல்லைப்புறத்தைக் காப்பாற்றாமல் கிழக்கு ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் எதிரான போராட்டத்தை நடாத்தவியலாது என்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளது. எனவே தனது கொல்லைப்புறத்தைக் காக்கப் படாதபாடு படுகிறது.

ஜனநாயகத்தைக் காப்பது என்ற கோஷம் மிகுந்த கேலிக்குரியதாக உள்ளது. மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஒருவர் இருக்ககையில் பாராளுமன்றத்தின் தலைவர் தன்னை ஜனாதிபதியாக தன்னிச்சையாக அறிவித்தால் அவரை நாட்டின் ஜனாதிபதியாக அங்கீகரிப்பது எந்தவகை ஜனநாயகம். இதையும் ஜனநாயகத்தின் பெயரால் அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் நியாயப்படுத்துகின்றன.

தன்னை ஜனாதிபதியாகப் பிரகனப்படுத்தியுள்ள ஜூவான் குவைடோ சர்வதேச நாடுகள் மனிதாபிமான உதவிகளை வழங்கவேண்டும். அதை மேற்கு நாடுகளுடன் தான் ஒழுங்குபடுத்துவதாகவும் அவ்வாறு கிடைக்கும் உதவிகளை வெனசுவேல இராணுவம் தடுக்கக்கூடாது என்றும் கூறுகிறார். இதற்கு செவிசாய்த்து பல நாடுகள் எல்லைப்பகுதியில் உதவுவதற்குத் தயாராக உள்ளன. இராணுவம் அதை அனுமதிக்கவில்லை. ஜூவான் குவைடோவினதும் உதவி அனுப்பத் தயாராகவுள்ள நாடுகளினதும் செயற்பாடுகள் சர்வதேச சட்டங்களையே கேள்விக்குள்ளாக்குகின்றன.

வெனசுவேலாவில் இன்று ஏற்படுத்தப்பட்டுள்ள நெருக்கடி முழு இலத்தீன் அமெரிக்காவையே போருக்குள் தள்ளிவிடும் அபாயத்தை எதிர்நோக்கியிருக்கின்றது. அமெரிக்கா தனக்கு உதவியாக வெனசுவேலாவின் அண்டை நாடுகளான பிரேசில், கொலம்பியா ஆகியவற்றைச் சேர்த்துள்ளது. குறிப்பாக பிரேசிலின் புதிய ஜனாதிபதி வெனசுவேல ஆட்சி மாற்றத்தை ஆதரிக்கிறார். அதேவேளை மெக்சிக்கோ, நிகரகுவா, கியூபா ஆகியன வெனசுவேலாவுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன. எனவே முடிவுறாத நீண்ட உள்நாட்டுப் போருக்கான ஆயத்தங்கள் மெதுமெதுவாக அரங்கேறுகின்றன. வெனசுவேலாவில் நடப்பது முழு இலத்தீன் அமெரிக்காவின் எதிர்காலத்தையே தீர்மானிக்க வல்லது. அந்நிய உதவியைக் கோருவோர் கவனத்துடன் கற்க வேண்டிய இன்னொரு பாடம் இங்கே நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *