அரசியல்உலகம்

யார் இந்தியன்?

குடியுரிமையின் பயன் வாக்குரிமையே எனச் சுருங்கிய நிலையில் ஒருவர் யாருக்கு வாக்களிக்கக்கூடும் என்பது அவருக்குக் குடியுரிமை வழங்குவதைத் தீர்மானிக்கும் அளவுகோலாகிறது. நாடுகள் மெதுமெதுவாகத் தமது சமூக நலன்களைத் தனியார்மயமாக்கிச் சமூகப் பாதுகாப்பு என்பது கேள்விக்குரித்தான நிலையில் குடியுரிமையின் பயன் வாக்களித்தல் என்றாகிவிட்டது. இது இன்றைய நவதாரள உலக அரசியலின் தவிர்க்கவியலாத யதார்த்தம்.

அண்மையில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் வெளியான தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (National Register of Citizens) 40 இலட்சம் மக்களின் பெயர்கள் விடுபட்டமை பாரிய பிரச்சனையாகியுள்ளது. விடுபட்டோரிற் பெரும்பாலோர் முஸ்லிம்கள். அவர்கள் பங்களாதேஷில் வந்தவர்கள் என்று கூறி அவர்களுடைய குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது. இன்று மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் இந்து இந்தியா நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவே இதை நோக்க வேண்டும்.

அஸ்ஸாமில் வசிக்கும் 3.29 கோடி மக்களில் 2.89 கோடியினர் இப் பதிவேட்டில் இடம் பெற்றுள்ளனர். 40 லட்சம் பேர் விடுபட்டுள்ளனர். அவர்களில் 2 லட்சம் பேருக்கு மட்டுமே தக்க சானறுகள் காட்டிக் குடிமக்கள் பதிவேட்டில் மீள இணையும் வாய்ப்புத் தரப்பட்டிருக்கிறது. எஞ்சியோர் அகதி முகாம்கட்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து அவர்களுடைய ‘சொந்த’ நாட்டுக்கு அனுப்பப்படுவர் என்று மத்திய அரசு சொல்லியுள்ளது. அதர்துடன், இவ்வாறான நடைமுறைகள் ஏனைய மாநிலங்களிலிலும் இடம்பெறும் என்றும் சொல்லி அரசு பீதியூட்டியுள்ளது.

நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்னெடுத்துவரும் முஸ்லிம் விரோத நிகழ்ச்சி நிரலின் பகுதியாகவே இதைக் கணிக்க வேண்டும். இப் பிரச்சனையின் தீவிரத்தை உணர அதன் அடியாழங்களைத் தேடுவது தகும்.

1826ம் ஆண்டுக்கு முன அசாம் இந்தியாவின் ஒரு பகுதியல்ல. அப்போது அது மூன்றாம் பர்மிய சாம்ராச்சியத்தின் மேற்குப் பிரதேசமாக இருந்தது. 1824இல் பர்மாவுக்கு எதிராக ஆங்கிலேயர் தொடுத்த ஆங்கிலேய‒பர்மிய யுத்தம் எனும் போரில் தோற்ற பர்மா ஆங்கிலேயருடன் யெந்தபோ உடன்படிக்கை (Treaty of Yandabo) எனப்படும் உடன்படிக்கையில் ஒப்பமிட்டது. அதன்படி பர்மீய அரசர் பகியதோவ் அசாம் பிரதேசத்தை ஆங்கிலேயரிடம் கையளித்தார். அவ்வாறு ஆங்கிலேயர் இன்னொரு நாட்டிடமிருந்து கட்டாயமாகப் பறித்து இந்தியாவுடன் இணைத்த பகுதியே அசாம் என்பது முக்கியமானது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் ஒவ்வொன்றுக்கும் இவ்வாறானதொரு கதை உண்டு. ஒரு கதையை மட்டும் இங்கு பதிகிறேன். 1891இல் பிரித்தானிய அரசு மணிப்பூர் மன்னரைப் போரில் வென்று மணிப்பூரைத் தனது ஆட்சிக் கீழ்க் கொண்டுவந்தது. ஆனால மணிப்பூர்; பிரித்தானிய இந்தியாவுடன் இணைக்கப்படவில்லை. அனைவருக்கும் வாக்குரிமை என்ற அடிப்படையில் 1948இல் மணிப்பூர் தனது முதல் தேர்தலை நடத்தியது. தேர்தலுக்குப் பின் ‘பிரஜா சாந்தி’ என்ற கட்சியின் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தது. இத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

1949 ஒக்டோபரில், மணிப்பூர் மக்களின் கடும் எதிர்ப்புக்கிடையே மணிப்பூர் இந்தியாவுடன் கட்டாயமாக இணைக்கப்பட்டது. மணிப்பூரின் மன்னர் புத்த சந்திராவை பேச்சுவார்த்தைக்கென அழைத்து, ஷில்லாங்கில் வீட்டுக் காவலில் வைத்த இந்திய அரசு, இராணுவத்தைக் குவித்து அவரை மிரட்டி, மணிப்பூரை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் ஒப்பமிட வைத்தது. மக்கள் தேர்ந்தெடுத்த அரசும் மந்திரி சபையும் கலைக்கப்பட்டன. இதுவே இந்தியா மணிப்பூரை ஆக்கிரமித்த வரலாற்றின் சுருக்கம்.

இனி அசாமின் கதைக்கு மீள்வோம். பிரித்தானிய ஆட்சிக்குட்பட்ட காலத்தில் பிரித்தானியர் வங்காளத்டதில் றெயற்படுத்திய விவசாயக் கொள்கைகளும் பொருளாதாரக் கொள்கைகளும் விவசாயிகளையும் கைவினைஞர்களையும் ஓட்டாண்டிகளாக்கின. பெருந்திரளானோர் கொலனியாட்சி புகுத்திய ஜமீந்தாரி முறையின் கீழ் அல்லலுற்றனர். அதே நேரம் ஆங்கிலேயர்கள் புதிதாக ஆக்கிரமித்த அசாமில் நிறைய வளமான நிலங்கள் இருந்தும் அவற்றின் மூலம் நில வருவாய் கிடையாததால், வங்கத்தின் கிழக்குப் பகுதி மக்களைப் புதிய நிலப்பகுதியில் குடியேறுமாறு அவர்கள் ஊக்குவித்துள்ளனர். அப்படிக் குடியேறியோர் அசாமிய நிலங்களைப் பண்படுத்தி விவசாயத்தில் இறங்கினர்.

புதிதாகக் குடியேறும் வங்காளிகளின் தொகை அதிகரித்துச் சென்ற ஒரு கட்டத்தில், 1920-ம் ஆண்டில் கொலனியாட்சி வங்க விவசாயிகளின் இடப்பெயர்ச்சிக்குக் கட்டுப்பாடு விதித்தது. அதற்கு முன் கோல்பாரா, நொகாவ்ன், காம்ரூப் போன்ற மாவட்டங்களின் முஸ்லிம்களின் தொகை அதிகரித்ததுவிட்டது. அரசின் அலட்சியமான பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாய் ஒன்றுடுத்திய இந்தியாவின் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு இடம்பெயர்ந்தவர்களே இன்று ‘சட்டவிரோதமாகக்’ குடியேறியவர்கள் எனக் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளனர்.

இத்தனைக்கும், இவர்கள் பங்ளாதேஷ் பிரிவினையின் போது தாங்கள் குடியேறிய மண்ணுக்கு விசுவாசமாக இந்திய நாட்டை நம்பி அதன் இறையாண்மையை ஏற்று அங்கேயே தங்கியவர்கள். அவர்கள் அசாமின் மொழியையும் பண்பாட்டையும் தமதாக வரித்தனர். உதாரணமாக, துப்ரி மாவட்டத்தில் முஸ்லிம்களின் சனத்தொகை 74.29மூ அவர்களுள் அசாம் மொழி பேசுபவர்கள் 70.09மூ.இது பேசப்படுவதில்லை.

பெங்காலிய முஸ்லிம்கட்கும் அசாமிய இந்துக்கட்குமிடையிலான மோதலாக மாறியுள்ள இன்றைய நெருக்கடியின் ஆரம்பம் புதினமானது. அசாமியர்களோடு முதலில் முரண்பட்டடோர் பங்ளாதேஷ் முஸ்லிம்கள் அன்றி வங்காளி பேசும் இந்துக்கள் தான்.

அசாமை இந்தியாவுடன் இணைத்த பின், அசாமின் உளநாட்டு அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கியோர் அசாமியர்களே. அத்துடன், இந்திய அரசிடமிருந்து  கிடைத்து வந்த பலன்களைப் பெருமளவு அனுபவிததோரும் நடுத்தர வர்க்க அசாமியர்களே. அரசு வேலைகளிலும் சலுகைகளிலும் அசாமிய நடுத்தர வர்க்கத்துக்குப் போட்டியாக வங்காளி பேசும் இந்துக்கள் வந்தனர். அசாமியர்களும் வங்காளிகளும் மோதிய முதல் கலவரம் 1960இல் நடந்தது. அது இரு வேறு மொழிகள் பேசும் ‘இந்துக்கட்கு’ இடையில் நடந்த கலவரம். அதில் முஸ்லிம்கட்குப் பங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து அசாம் மாணவர்கள் சங்கம் (All Assam Students Union, AASU) தொடக்கிய ‘அசாம் இயக்கம்’, முதலில் பங்ளாதேஷ் முஸ்லிம் ‘ஊடுருவிகட்கு’ எதிரானதல்ல. அது அந்நியர்கட்கு எதிரான இயக்கம் என்றே சொல்லப்பட்டது. அதற்கு, உள்ளூர் மட்டத்தில் அதிராக வர்க்க ஆதரவும் இருந்தது.

இதற்கிடையே எழுபதுகளில் இடதுசாரிகள் அசாமில் ஓரளவுக்கு செல்வாக்குப் பெற்றனர். 1974-ல் நடந்த கவுஹாத்தி மாநகரசபைத் தேர்தலில் இடதுசாரிகள் முதன்முறையாக வெற்றி பெற்றனர். பங்ளாதேஷிலிருந்து இடம் பெயர்ந்;த முஸ்லிம்களது மட்டுமின்றி வங்கமொழி பேசும் இந்துக்களதும் பல்வேறு பழங்குடியினரின் ஆதரவையும் இடதுசாரிகள் பெற்றிருந்தனர். அச் சமயம் எழுச்சிபெற்ற அசாமிய இனவாதிகட்கு அது ஒரு நெருக்கடியை உண்டாக்கியது. உள்ளுரப்; பழங்குடியினரையோ மாநிலத்துக்கு வெளியே – குறிப்பாக தில்லியில் – அரசியல் செல்வாக்குடைய வங்ககாளி பேசும் இந்துக்களையோ தமது வெறுப்புப் பிரச்சாரத்தின் இலக்காக்குவது ஆபத்தானது என உணர்ந்தனர்.

எனவே, ‘அந்நியர்கட்கு எதிரான’ என்ற நிலைப்பாடு ‘பங்ளாதேஷ் முஸ்லிம் ஊடுருவற்காரர்கட்கு எதிரான’ என மாறியது. அதையடுத்து நடந்த கலவரங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டார்கள். பிரிக்கப்படாத நாகோன் மாவட்டத்தில் 1983 பெப்ரவரி 13ம் தேதி நிகழ்ந்த நெல்லீய் படுகொலையில் மட்டும் ஏறத்தாழ 10,000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அவர்களிற் பெரும்பாலோர் குழந்தைகளும் பெண்களுமே.

இப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவருமாறு ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய மத்திய அரசாங்கம் அசாம் இயக்கத்தினருடன் 1985ம் ஆண்டு ‘அசாம் உடன்படிக்கையை’ ஏற்படுத்தியது. அதன்படி பங்ளாதேஷ் பிரிவினைக்கு முந்திய நாளான 1971 மார்ச் 24 வரை அசாமில் இருந்தோர் தொடர்ந்தும் அசாமில் இருக்க அனுமதிக்கப்படுவர். அத் திகதிக்கு பின்பு வந்தோர் திருப்பியனுப்பப்படுவார்கள்.

இதில் நோக்கற்குரியது யாதெனில் பங்ளாதேஷ் பிரிவினைக்கு இந்தியாவே தூண்டித் துணை செய்தது. பாகிஸ்தானுக்கு எதிரான முரண்பாட்டில் பங்ளாதேஷ் ஒரு கருவியாக வாய்த்தது. இந்திரா காந்தி அந்த நோக்கில் பங்ளாதேஷின் உருவாக்கத்துக்குக்காகப் பாகிஸ்தானுடன் போர் தொடுத்தார். அவ்வேளை பங்ளாதேஷிலிருந்து வந்த அகதிகள் இந்தியாவில் வரவேற்கப்பட்டனர். பாகிஸ்தானை எதிர்த்த பங்ளாதேஷின் ஷேக் முஜிபுர் ரஹ்மானை இந்தியா ஆதரித்தது. இந்திய அரசு அவருடைய ‘முக்தி பாஹனி’ இயக்கத்திற்கு ஆயுதங்களும் போர்ப் பயிற்சியும் அளித்தது. போரில் பாகிஸ்தான் தோற்று பங்ளாதேஷ் பிரிந்ததோடு அகதிகளின் நல்வாழ்வும் முடிவுக்கு வந்தது. ஷேக் முஜிபூர் ரஹ்மானின் வீழ்ச்சியையடுத்து வந்த இராணுவ ஆட்சியும் அதையடுத்த ஜனநாயக ஆட்சியும் இந்திய ஆதிக்கத்தை எதிர்த்து வந்தால், இந்தியாவிலிருக்கும் பங்ளாதேஷ் ஏழைகளை விரட்டுவதற்கு இந்திய அரசும், இந்து மதவெறியர்களும் தீவிரம் காட்டுகின்றனர்.

இன்றைய பங்களாதேஷ{ம் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலமும் மொழியாலும் இனத்தாலும்  பண்பாட்டாலும்; ஒன்றுபட்ட மக்கள் வாழும் தொடர்ச்சியான பிரதேசமாகும். மேற்கு வங்கத்தில் இந்துக்களும் கிழக்கு வங்கத்தில் முஸ்லீம்களும் பெரும்பான்மையினராயினும், இரு மதங்களைச் சேர்ந்தோரும்இரு பகுதிகளிலும் கணிசமான அளவில் வாழ்கின்றனர். வங்க தேசிய இனம் இந்தியாவின் முதிர்ந்த சில தேசிய இனங்களில் ஒன்றாகும். அதனால் அதிகம் விளக்காமலேயே இம் மக்களின் நெருங்கிய உறவைப் புரிந்து கொள்ளலாம்.

கொலனி ஆட்சியின்போது 1905இல் கர்சன் பிரபு என்ற ஆங்கிலேய வைஸ்ராய் வங்கத்தை மேற்கு, கிழக்கு என மத அடிப்படையிற் பிரித்தார். ஆயினும் பிரித்தானியரின் இப் பிரித்தாளும் சூழ்ச்சியை வங்காள மக்கள் தீரத்துடன் போராடி முறியடித்தனர். மத வேறுபாடு கடந்து வங்காளிகள் என்ற முறையில் அவர்கள் நடத்திய இப் போராட்டம் ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வாகும். ஆயினும் அதன் பிறகு இந்திய விடுதலைப் போராட்டம் இந்து மதச்சார்பாவதை பிரித்தானியர் ஆதரித்தனர். எதிர் விளைவாக முஸ்லீம் லீக் தோன்றியதோடு வங்கம் மதத்தால் பிளவுண்டது.

1979 முதல் 1985 வரை அசாமிய இனவாதிகள் நடத்திய படுகொலைகள் இன்றும் ஆறாத புண்ணாக இருக்கின்றன. வடகிழக்கில் ஊர் மட்டத்தில்; பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த மக்களிடம் ஒரு ஐக்கியம் ஏற்படலாகாது என்பதில் இந்திய ஆளும் வர்க்கம் மிகத் தெளிவாகவே உள்ளது. வடகிழக்கில் உள்ள போடோ, குக்கி, மிசோ, நாகா ஆகிய பல்வேறு இனக்குழுக்கட்கிடையே தீராத இன மோதல்களை மூட்டியது இந்திய ஆளும் வர்க்கமே.

சுமார் நூற்றைம்பது ஆண்டுகட்கு முன் வெள்ளையர் காலத்தில் அசாமில் குடியேறிய வங்காளிகளின் நிலைமை இலங்கையின் மலையகத் தமிழர்களதும் மலேசியத் தமிழர்களதும் நிலைமைகளை ஒத்ததே.

இப்போது அசாமில் நடப்பன அரசியல் நோக்கங்கட்கான திட்டமிட்ட செயற்பாடுகள். பா.ஜ.க. அரசு அசாமில் உள்ள முஸ்லிம்களின் வாக்கு தமக்கு எதிரானது என நன்கறியும். அதைக் குறைப்பதன் மூலம் தனது ஆட்சியைத் தொடர்ந்து தக்கவைக்க, இவ்வாறான ‘முஸ்லிம்; விரோதச்’ சிந்தனைகளை முன்தள்ளி முஸ்லிம்களின் வாக்குரிமையை நீக்க முனைகிறது. இதனாலேயே அசாம் பற்றிய விவாதமொன்றிற் கருத்துரைத்த பா.ஜ.க.வின் அசாம் மாநிலத் தலைவர் ‘இவ்வாறு ஒதுக்கப்பட்டு குடியுரிமை மறுக்கப்பட்டவர்கள் பொருளாதார அகதிகளாக வந்திருப்பின் அவர்கட்கு இந்தியாவில் வேலை செய்யும் உரிமத்தை வழங்கலாம், ஆனால் வாக்குரிமையை வழங்க இயலாது’ என்றார். ஆகக் குறைந்த ஊதியத்திற்கு பணியாற்றக்கூடிய கூலியுழைப்பாளிகளின் தேவையை முதலாளியம் அறியும். ஆனால் அவர்கட்கு வாக்குரிமையை மறுப்பதன் பின்னால் உள்ளவை அரசியல் நோக்கங்களே.

காலநிலை மாற்றமும் விவசாயத்தின் அழிவும் தீவிர உலகமயமாக்கமும் இந்தியா பரவலான கிராமிய இளைஞர்களை அள்ளிவந்து பெருநகரங்களில் குவிக்கிறது. மறுபுறம் பெருநகரங்களின் மிகை வளர்ச்சிக்குத் தீனிபோடத் தேவையான கூலியுழைப்பாளிகளின் தொகை கூடிக்கொண்டே போகிறது. அதனால் ஏராளமான கூலியுழைப்பாளிகள் இந்தியாவின் வட மாநிலங்களில்லிருந்து தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்கிறார்கள். அவர்கட்கெதிரான தமிழ்த்தேசியவாத வன்முறைகள் இன்று அசாமில் பா.ஜ.க. செய்வதைப் போன்றன என்பதை நினைவுபடுத்த வேண்டும்.

இன்று அசாமில் உருவாக்கப்பட்ட நெருக்கடியைப் பா.ஜ.க. அரசு திட்டமிட்டு உருவாக்கியது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 40 இலட்சம் மக்கள் தீடிரென நிர்கதிக்கு ஆளாகியுள்ளனர். முஸ்லிம் விரோதப் பிரசாரத்துடன் அசாமில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. முதலில் வைஷ்ணவ மடங்கட்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துள்ளனரென்று முஸ்லிம் அகதிகளை விரட்டியது.  2017 செப்டம்பர் மாதம் கசிரங்கா சரணாலயத்தை ஒட்டிய வனப்பகுதிகளை ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டியதாகக் கூறி 200 கட்டடங்களை இடித்துத் தள்ளினர். அதை எதிர்த்துப் போராட்டங்கள் நடந்தபோது  துணை ராணுவப் படைத் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகினர். அசாமிலிருந்து பங்களாதேஷிகளைத் துடைத்தெடுக்கும்வரை இப் பணி தொடரும் என அம் மாநில நிதியமைச்சர் அறைகூவினார்.;இப்போது 40 இலட்சம் பேர் பதிவேட்டிலிருந்து காணாமல் போயிருப்பது அதன் இன்னொரு பகுதியே.

2014ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க ‘இடருக்குள்ளாகும் அனைத்து இந்துக்களதும் தாய்வீடாக’ இந்தியா இருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தது. அதன்படி, 2016ம் ஆண்டு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின் படி முஸ்லிம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் சிறுபான்மையினராக வாழ்ந்த இந்துக்களும் சீக்கியரும் பார்சிகளும் கிறித்துவர்களும் இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறுவோர் பட்டியலில் சேர மாட்டார்கள். ஆறு ஆண்டுகள் இந்தியாவில் வசித்தால் அவர்கள் இந்திய குடிமக்களாக ஏற்கப்படுவர். அதாவது, பாகிஸ்தானிலிருந்து சட்டவிரோதமாக நுழைந்த ஒருவருக்கு ஆறு ஆண்டுகள் கழித்து இந்திய அரசு குடியுரிமை வழங்கும். ஆனால் ஆண்டாண்டுகாலமாக இந்தியாவில் வசித்தாலும் முஸ்லிமாக இருந்தால் குடியுரிமை கிடையாது என்பதையே அசாம் சுட்டுகிறது.

இன்று உலகெங்கும் தீவிர தேசியவாத வெறி செல்வாக்குச் செலுத்துகிறது. அது மேற்குலகில் மட்டுமல்ல உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று பேசப்படும் இந்தியாவிலும் நடக்கிறது என்பது கவனிப்புக்குரியது.

நான் இந்தியனா என்ற கேள்விக்கு நீ இந்துவா என்ற கேள்வியே பதிலாகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *