அரசியல்உலகம்

மாலி: இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் புதிய களம்

போரின் களங்கள், போராட்டக்களங்கள் மட்டுமல்ல பயங்கரவாதத்தின் களங்களும் மாறுகின்றன. பயங்கரவாதமும் தனது எல்லைகளை விரிக்கிறது. இதற்கு இஸ்லாமியப் பயங்கரவாதமும் விலக்கல்ல. இன்று உலகெங்கும் இஸ்லாமியப் பயங்கரவாதம் பேசுபொருளாகியிருக்கிறது. அது இஸ்லாமிய வெறுப்புணர்வைக் கட்டியெழுப்புவதில் பங்காற்றுகிறது. ஆதன்மூலம் தமக்கான ஆதரவுத்தளத்தை இஸ்லாமியப் பயங்கரவாதம் உருவாக்குகிறது. ஓன்றையொன்று தங்கி வளர்கின்றன. இது உலகெங்கும் பாரிய சவால்களை உருவாக்கியுள்ளது. மத்திய கிழக்கில் மையங்கொண்டு மேற்குலகில் தனது கைவரிசையைக் காட்டி வந்த இஸ்லாமியப் பயங்கரவாதம் இப்போது புதிய பகுதிகளை நாடுகிறது. புதிய வழிமுறைகளைக் கையாளுகிறது. சிரியாவில் முடிந்த போர் வேறோர் இடத்தில் உற்பத்தியாகிறது.

கடந்த வாரம் மேற்கு ஆபிரிக்க நாடான மாலியின் மத்திய பகுதியில் உள்ள ஒகோஸ்சகோ கிராமத்தின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட 134 பேர் கொல்லப்பட்டார்கள். மாலியின் இனக்குழுக்களுக்கிடையிலான முரண்பாடுகளின் வெளிப்பாடே இச்சம்பவம். குடந்த இரண்டாண்டுகளில் சிறிதும் பெரிதுமான 100க்கு மேற்பட்ட இவ்வாறான சம்பங்கள் நடந்துள்ளன. இவற்றை விளங்கிக்கொள்ள சிக்கலான மாலியின் சமூகப்பொருளாதாரச் சூழலை கவனத்திற்கொள்ள வேண்டும்.

மேற்கு ஆபிரிக்க நாடான மாலி ஆபிரிக்காவின் ஏழாவது பெரிய நாடு. அல்ஜீரியா, நைஜர், புர்க்கீனா பாசோ, ஐவரி கோர்;ஸ்ட், கினி, செனகல், மொரித்தானியா ஆகிய ஏழு நாடுகளை எல்லைகளாகக் கொண்டது. இவ்வகையில் மேற்கு ஆபிரிக்காவின் ஸ்த்திரத்தன்மையில் மாலியின் பங்கு முக்கியமானது. மாலியின் நடக்கும் நிகழ்வுகள் இலகுவாக அண்டை நாடுகளைப் பாதிக்கும். மாலி நீண்டகாலம் பிரெஞ்சுக் காலனியாக இருந்து விடுதலையடைந்தது. விடுதலையடைந்தபோதிலும் தொடர்ச்சியாக பிரெஞ்சுக் கைப்பாவை ஆட்சியாளர்கள் இருப்பதை பிரான்ஸ் தொடர்ந்து உறுதிசெய்து வந்துள்ளது. உலகிலேயே தென்னாபிரிக்காவுக்கும், கானாவுக்கும் அடுத்தப்படியான அதிகளவு தங்கத்தைக் கொண்டுள்ள நாடு மாலி. யுரேனியமும் அதிகளவில் இங்கு கிடைக்கிறது. இதுவரை எண்ணெய் இறக்குமதியில் ஈடுபடும் மாலியில் வளமான எண்ணெய் வளங்கள் உண்டு. இதன் மீது மேற்குலக நாடுகள் நீண்டகாலமாகக் கண்வைத்துள்ளன. மாலியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் பிரான்ஸ் மாலியின் இயற்கை வளங்களை தொடர்ச்சியாகச் சூறையாடி வந்துள்ளது.

2011இல் லிபியாவில் இராணுவத் தலையீட்டில் பங்களித்த பிரான்ஸ் அதைத் தொடர்ந்து ஐவரி கோஸ்டில் இராணுவத் தலையீட்டை மேற்கொண்டு தனது நலன்களைக் காத்தது. 2012இல் நடைபெற்ற இராணுவச்சதி ஜனாதிபதி அமொண்டோ டோரேயைப் பதவி நீக்கியது. அதேவேளை வடக்கு மாலியில் ஏற்பட்ட கிளர்ச்சியால் வடக்கு மாலியைப் போராளிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்தப் பின்புலத்தில் 2013இல் மாலியில் தலையிட்ட பிரான்ஸ் இன்றுவரை அங்கு நிலைகொண்டுள்ளது.

மாலியில் உள்ள இனக்குழுக்களில் பம்பரா இனக்குழுவே பிரதானமானது. மாலியின் மொத்த சனத்தொகையில் பம்பரா இனக்குழுவினர் 36.5%மானவர்கள். அடுத்த முக்கியமான இனக்குழுக்களான புலானி இனக்குழுவினர் 17%மாகவும், டோகன் இனக்குழுவினர் 8%மாகவும் உள்ளனர். புலானி இனக்குழுவினர் நாடோடி மேய்ச்சற்காரர்கள். அவர்கள் முஸ்லீம் மதத்தைப் பிற்பற்றுபவர்கள், மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவின் மிகப்பெரிய இனக்குழுக்களில் புலானி பிரதானமானது. நைஜீரியா, செனகல், கம்பியா ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகளும் சியாரோ லியோனின் உப ஜனாதிபதியும் புலானி இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். அவ்வகையில் அரசியல் ரீதியாகச் செல்வாக்குள்ள குழுவாக புலானி விளங்குகிறது.

இதேவேளை டோகன் இனக்குழுவினர் விவசாயிகள், அவர்கள் பலதெய்வ நம்பிக்கை உடையவர்கள். பும்பரா இனக்குழுவினரும் விவசாயிகளே. அவர்களில் பலர் பராம்பரிய பண்பாட்டு நம்பிக்கைகளை உடையவர்கள் ஒருதொகுதியினர் இஸ்லாத்தை பின்பற்றுகிறார்கள்.

கடந்தவாரத் தாக்குதல் டோகன் வேட்டைக்காரர்களால் புலானி இனக்குழுவினரின் கிராமத்தின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலாகும். இத்தாக்குதலுக்கான பின்கதை சிக்கலானது. குடந்த பத்தாண்டுகளில் இம்மூன்று இனக்குழுக்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் அதிகரித்து வந்துள்ளன. ஆண்டாண்டுகாலமாக இக்குழுக்களுக்கிடையே பிணக்குகள் இருந்தாலும் அவை இனக்குழப் பெரியவர்கள் ஒன்றுகூடி எட்டும் முடிவுகளின் அடிப்படையில் தீர்க்கப்பட்டன. இதனால் இனக்குழுக்களிடையே சண்டை மூளவில்லை. ஆனால் காலமாற்றம், அரசின் நிர்வாக வகிபாகம், சட்டஒழுங்கு என்பன பாரம்பரிய வகைகளிலான பிணக்குத் தீர்வு முறைகளைச் செல்லுபடியாக்கின. இதனால் பிணக்குகள் முரண்பாடுகளாகி வன்முறையாகியுள்ளன. இதற்கான காரணங்கள் பல.

முதலாவது டோகன் இனக்குழு எண்ணிக்கையளவில் கணிசமாக வளர்ந்துள்ளது. இதனால் அவர்களின் விவசாயம் அதிகரிக்க புலானி இனக்குழுவின் மேய்ச்சல் நிலங்கள் குறையத் தொடங்கின. அதேவேளை காலநிலை மாற்றத்தின் விளைவுகள் மழையையும் தண்ணீரையும் நிச்சயமற்றதாக்கின. இதனால் இனக்குழுக்கள் இடம்பெயர்ந்தன. இதனால் நிலத்துக்கான போட்டி நிலவியது. அதேவேளை மாலி அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட நதியைப் திசைமாற்றும் திட்டம் இவ்வினக்குழுக்களுக்கு மிகவும் சவாலானதாக்கியது.

மாலி அரசு புலானி இனக்குழுவின் பிரச்சனைகளைக் கவனத்தில் கொள்வதில்லை என புலானி இனக்குழுவினர் மிகுந்த ஆதங்கப்பட்டனர். தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் அரசு பாரபட்சம் காட்டுவதாகவும் நினைத்தனர். இது இனக்குழுக்களிடையே தீராத பகையை உருவாக்கியது. இவ்விடத்தில் இரண்டு விடயங்களைச் சுட்ட வேண்டும்.

முதலாவது நீண்டகாலம் ஜனாதிபதியாக இருந்து இராணுவச்சதி மூலம் பதவியகற்றப்பட்ட அமொண்டோ டோரே மாலியில் உள்ள இனக்குழுக்களிடையே பல்வேறு உடன்பாடுகளை ஏற்படுத்தினார். இவை இனக்குழுக்கள் தமக்குள் போட்டியின்றி ஒற்றுமையாக வாழ வழிவகுத்தது. டோரேயின் பதவியிழப்பு இந்த உடன்பாடுகளைச் செல்லுபடியற்றதாக்கி முரண்பாட்டுக்கு வழிகோலின. வலுவில்லாத அரசாக மாலி இருந்த நிலையில் இனக்குழுக்கள் தங்கள் எல்லைகளைப் பாதுகாப்பதற்கான ஆயுதக்குழுக்களை உருவாக்கி வைத்திருக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. இன்று மாலிய இராணுவத்தால் கட்டுப்படுத்தவியலாதளவு இக்குழுக்கள் வலிமை பெற்றுள்ளன.

இஸ்லாத்தைப் பின்பற்றும் புலானி இனக்குழுவின் கவலைகளை தங்களுக்கு வாய்ப்பாக அல்-கைடா மற்றும் ஐ.எஸ் அமைப்புகள் பயன்படுத்திக் கொண்டன. குறிப்பாக மாலியில் நிகழ்ந்த ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்த பிரெஞ்சுப் படைகளின் வருகை இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்புகளுக்கு வாய்ப்பானது.

இவ்வகையில் மாலியில் இரண்டு அமைப்புகள் தோற்றம் பெற்றன. முதலாவது, ‘இஸ்லாம் மற்றும் முஸ்லீம்களுக்கான உதவிக்குழு’ என அழைத்துக்கொண்ட இக்குழு அல்-கைடாவுடன் தன்னை இணைத்து அதன் ஆதரவைப் பெற்றது. இக்குழுவே அண்டைநாடான புக்கீனா பாசோவில் உள்ள பிரெஞ்சுத் தூதரகத்தின் மீது 2018 மார்ச்சில் தாக்குதல் மேற்கொண்டது. இரண்டாவது, 2016இல் உருவான அன்சருல் இஸ்லாம் என்ற அமைப்பு ஐ.எஸ் அமைப்புடன் தன்னை இணைத்துக் கொண்டது.

புலானி இனக்குழுவினரின் ஆதரவு இவ்விரண்டு அமைப்புக்களுக்கும் உண்டு. இவ்விரண்டும் புலானியின் பெயரால் டோகன் மற்றும் பம்பரா இனக்குழுவைக் குறிவைக்கின்றனர். பம்பரா இனக்குழு அரசுக்கு நெருக்கமாக இருப்பதன் காரணமாகவும் இஸ்லாத்தைப் பின்பற்றாததாலும் அவர்களை இஸ்லாமியப் பயங்கரவாதிகள் தாக்குகிறார்கள். இவ்வாறான தாக்குதல்களுக்கான எதிர்த்தாக்குதலே கடந்தவாரம் இடம்பெற்ற நிகழ்வாகும்.

மாலியில் ஐக்கிய நாடுகள் சபையின் பணிக்குழு (United Nations Multidimensional Integrated Stabilized Mission in Mali -MINUSMA) உள்ளது. இதன் ஒரு பகுதியாகவே ஐ.நா. அமைதிகாக்கும் படைகள் மாலியில் நிலைகொண்டுள்ளன. இப்படைகளுக்கு இலங்கையும் இராணுவத்தினரை அனுப்பியுள்ளது. ஐ.நா. அமைதிகாக்கும் படைகளின் வரலாற்றில் மிகவும் மோசமான இழப்பைச் சந்தித்துள்ள ஒரு நடவடிக்கையாக மாறியுள்ளது.

மாலியில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற நிலையும் அல்-கைடா மற்றும் சகாராப் பகுதிக்கான ஐ.எஸ் அமைப்பு ஆகியவற்றின் காலூன்றலும் அண்டை நாடுகளையும் பாதித்துள்ளது. 2016ம் ஆண்டு முதலான காலப்பகுதியில் புக்கீனா பாசோவில் இருநூறுக்கும் மேற்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. அண்டை நாடான நைஜரிலும் இவ்வாறான தாக்குதல்கள் இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்புக்களால் நிகழ்த்தப்பட்டுள்ளன.

சிரியாவில் முடிந்துள்ள யுத்தமும் லிபியாவின் ஸ்த்திரமற்ற தன்மையும் ஈராக்கின் அரசியற் பொருளாதார நெருக்கடிகளும் பலவழிகளில் இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்குத் தூபம் போடுகின்றன. இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் மையம் மத்திய கிழக்கில் இருந்து ஆபிரிக்கா நோக்கி நகர்கிறது. ஆபிரிக்காவின் வறுமை, பொருளாதார அசமத்துவம், மோசமடையும் வாழ்க்கைத்தரம் என்பன இஸ்லாமியத் தீவிரவாதச் செயற்பாடுகளுக்கு வாய்பான களமாகியுள்ளன. எண்ணெய்க்கான போட்டிக்குப் பயன்பட்ட இஸ்லாமியத் தீவிரவாதம் இப்போது கனிமவளங்களுக்கான சுரண்டலுக்கான காரணியாவது தற்செயலானதல்ல.

2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி பார்க்கானே நடவடிக்கை என்ற பெயரில் 3000 பிரெஞ்சு இராணுவத்தினர் ஆபிரிக்காவின் சாகேல் பகுதியில் இராணுவ நடவடிக்கையொன்றைத் தொடங்கினார்கள். ‘பயங்கரவாதத்திற்கு எதிரான’ நடவடிக்கை எனத் தொடங்கப்பட்ட இந்த இராணுவத் தாக்குதல்கள் ஐந்து மேற்கு ஆபிரிக்க நாடுகளில் (மாலி, புர்க்கீனா பாசோ, நைகர், சாட், மொரித்தானியா) இன்றும் தொடர்கின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை சாட் இராணுவத்தினர் மீது பொக்கோ ஹராம் அமைப்பு நடாத்திய தாக்குதலில் 23 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். சாட் இராணுவம் மீது நடாத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலாக இது கொள்ளப்படுகிறது. இதில் கவனிக்கப்பட வேண்டியது யாதெனில் நைஜீரியாவை மையமாகக் கொண்டியங்கும் பொக்கோ ஹராம் அமைப்பு பிரான்ஸ் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட பார்க்கானே நடவடிக்கைளின் விளைலால் முற்றாக அழிக்கப்பட்டு விட்டது என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் இது நிகழ்ந்துள்ளது.

பத்தாண்டுகளுக்கு முன்னர் மிகுந்த அமைதியான பூமியாக இருந்த ஆபிரிக்காவின் பல பகுதிகள் இன்று யுத்தக்காடாகியுள்ளன. அவர்களின் இலாபவெறி ஆபிரிக்காவைக் குதறித்தின்ன வருகிறது. மத்திய கிழக்கில் அரங்கேறிய காட்சிகள் இனி ஆபிரிக்காவில் அரங்கேறக் காத்திருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *