அரசியல்உள்ளூர்

மரணதண்டனை தீர்வல்ல

மீண்டும் மரணதண்டனையை நடைமுறைப்படுத்தப் போவதாக ஜனாதிபதி அண்மையில் தெரிவித்துள்ளார். போதைப்பொருளுடன் தொடர்புபட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது சரியானது என்ற வாதம் அவரால் முன்வைக்கப்பட்டு அதற்கான முன்னெடுப்புகள் நடைபெறுகின்றன. இக்கட்டுரையை நீங்கள் வாசிக்கும் போது ஒருவேளை மரணதண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கக் கூடும்.

இலங்கையின் குற்றவியல் சட்டக்கோவையின்படி மரணதண்டனை வழங்குவதற்கான அதிகாரத்தை நீதிமன்றங்கள் கொண்டுள்ள போது 1976ம் ஆண்டுக்குப் பின்னர் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. மரணதண்டனை குற்றங்களுக்குத் தீர்வாக அமையாது என்பது ஒருபுறமிருக்க மரணதண்டனைகள் ஒருபோதும் குற்றங்களைக் குறைப்பதில்லை.

மரண தண்டனை வழங்குவதற்கு அடிப்படையாக அமைவது, அந்த வழக்கினை விசாரணை செய்யும் அதிகாரிகளின் புலனாய்வும், அதன் மூலமாகத் திரட்டப்பட்ட ஆவணங்களுமே. இலங்கை போன்ற நாடுகளில் சட்டஒழுங்கின் யோக்கியம் எமக்குத் தெரியாததல்ல.  பொலிசார் குற்ற வழக்குகளைப் புலனாய்வு செய்து, அந்த குற்றத்தின் உண்மையான பின்னணி குறித்தும், அதில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கண்டறிந்து நீதிமன்றங்களின் முன்பாக நிறுத்தி, அவர்களுக்குத் தண்டனை பெற்றுத்தரும் விதங்களை நாம் அறிவோம். பல்வேறு சந்தர்ப்பங்களில் சித்திரவதை உண்மையைப் பெறுவதற்கான கருவியாகியுள்ளது. இலங்கையின் பொலிஸ் நிலையங்களில் சித்திரவதை சர்வவியாபகமான ஒன்றாகியுள்ளது. இந்நிலையில் உண்மைகள் எவ்வாறு நிறுவப்படுகின்றன. அவ்வுண்மைகளின் அடிப்படையில் வழங்கப்படும் தீர்ப்புகள் எவ்வாறானவை என்பதெல்லாம் ஊகிக்கக் கடினமானவையல்ல.

மரண தண்டனையானது ஒரு குரூரமான தண்டனைமுறை மட்டுமின்றி, எந்த வடிவிலும் திரும்பப் பெறவே முடியாத ஒரு தண்டனையாகும். தண்டனையின் நோக்கம், சீர்படுத்துவதேயன்றி வேறெதுவுமாகவும் இருக்க முடியாது. சட்டமானது ஒருவருக்கு வாழ்வு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டுமேயன்றி, மாறாக எந்த சூழலிலும் ஒருவரது உயிரை பறித்தலுக்குத் துணையாக இருக்க முடியாது. எனவே மரண தண்டனையானது அடிப்படை மனித உரிமைகளுக்கு முரணானது.

தூக்குத் தண்டனை – முதலில் ஒரு மனிதன் திருந்தி வாழும், வாய்ப்பைப் பறித்து விடுகிறது. இரண்டாவதாக – ஒரு முறை குற்றம் செய்தவன், மீண்டும் அந்த குற்றங்களை செய்யாமல், குற்றங்களைக் கைவிட வேண்டும் என்ற முடிவுக்கு வருவதை இயலாமலாக்குகிறது. மூன்றவதாக – குற்றவாளிகளை சட்டத்தின் பாதுகாப்போடு அரசும் கொலைதான் செய்கிறது. நான்காவதாக – சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, நீங்கள் ஒருவரைக் கொலை செய்யும்போது, கொலை செய்தவரின் பழி வாங்கும் உணர்வுகளையே நீங்களும் பங்கு போட்டுக் கொள்கிறீர்கள். ஜ்ந்தாவதாக – உங்களால் திருப்பித் தர முடியாத உயிரை பறிக்கும் உரிமை உங்களுக்குக் கிடையாது. ஆறாவதாக – நேரில் கண்ட சாட்சியங்களின் அடிப்படையில், மரண தண்டனை வழங்கப்படுகிறது, ஆனால் நேரில் பார்த்த சாட்சியங்கள் சொல்லிக் கொடுத்து, தயார் செய்து பெறப்படும் சாட்சியங்களாகும்.

இனிக் தண்டனைகள் குற்றங்களைக் குறைக்கின்றன என்று வைக்கப்படும் வாதங்களுக்கு வருவோம். இன்றும் மோசமான சித்திரவதைத் தண்டனைகளையும் மரணதண்டனைகளையும் நிறைவேற்றும் நாடு சவூதி அரேபியா. அவை பெரும்பாலும் பொதுவெளியில் நிகழ்த்தப்படுபவை. கல்லால் எறிதல், சவுக்கடி, கழுத்துவெட்டுதல் என்பன அதில் சில. இவை ஆண்டாண்டு காலமாக அங்கு நடைபெற்று வருகின்றன. தண்டனைகள் குற்றங்களைக் குறைப்பதாயின் சவுதி அரேபியாவில் குற்றங்கள் குறைந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை.

மரண தண்டனை பற்றிப் பேசும் பலர் அவதானிக்கத் தவறும் இன்னொரு அம்சம் உண்டு. குற்றமிழைத்தவரைக் கொல்வது ஒருபோதும் பாதிக்கப்பட்டவருக்கான நீதியாகாது. வெறுமனே அது பழிவாங்கும் செயல். உணர்ச்சி மீறலில் ஒருவர் நிகழ்த்திய குற்றத்திற்கு திட்டமிட்ட கொலை தண்டனையாக முடியாது. நூட்டின் சட்டத்தின் ஆட்சி சரியாக இயங்குமானால், தண்டனை காலத்தில், பக்குவப்பட்ட மனிதனாக மாற்றி மீண்டும் சமூகத்தோடு இணைப்பதற்கு வழி செய்யும். அதுவே நாகரீகமான ஒரு சமூகத்தின் தேவையாகும்.  திருந்துவதற்கும் மறுவாழ்விற்குமான வாய்ப்பைப் பெற எல்லோருக்குமே உரிமை இருக்கிறது.

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரணதண்டனை என்கிற போது இது குற்றங்களுக்கு தனிநபர்களைப் பொறுப்பாக்குவதன் மூலம் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவருகிறது. இப்பிரச்சனையின் மூலம் என்ன. இதைச் செய்யச் சொன்னவர் யார். ஏன் செய்தார் போன்ற கேள்விகள் கேட்கப்படுவதோ ஆராயப்படுவதோ இல்லை. இதை வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்க்கவியலும்.

சகமனிதனின் உழைப்பைச் சுரண்டிப் பிழைக்கத் தொடங்கிய முதல் மனிதனிலிருந்து குற்றம் சமுதாய வாழ்வின் பரிக்கமுடியாத அம்சமானது. உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி நவீனமாக நவீனமாக செல்வத்தின் அளவும் அதிகரித்தது. செல்வம் அதிகரிக்க அதிகரிக்க அது அதிகமாக அபகரிக்கப்பட்டது. அதிகமாக செல்வத்தை அபகரித்தவனுக்கு அதிகாரம் பெருக்கெடுத்து. அவனது குற்றங்களும் கேள்விகளுக்கப்பாற்பட்டதாக ஆனது. அவன் படைகள் வைத்துக் கொண்டான். அரசனானான், பேரரசனானான், மக்களிடமிருந்து வெகு உயத்திற்குச் சென்று தன்னை தெய்வத்திற்குச் சமமாக நிறுத்திக் கொண்டான். சமூகத்தின் சகலத்தையும் தீர்மானித்தான். ஸ்பார்ட்டகஸ்கள்;; மரணதண்டனை பெற்றனர்.

உடமை வர்க்கங்களின் கொள்ளையால் மக்கள் ஓட்டாண்டிகளாக்கப்படுகின்றனர். அவர்களிடமிருந்து கல்வி, சுகாதாரம், வாழ்க்கைக்கான பாதுகாப்பு என அனைத்தையும் பறித்துவிட்டு கடைசியில் அவர்களுக்கு சமுதாயத்தின் மீதும் சகமனிதன் மற்றும் உறவுகள் மீதும் இருக்கும் மென்மையான உறவுகள் அழிக்கப்பட்டு ஒரு கசப்பான கரடுமுரடான வாழ்க்கைப் போராட்டத்தில் தள்ளிவிடப்படுகிறார்கள். தம்மைப் போன்றவர்களின் துயருக்கு இந்தச் சுரண்டல்முறைதான் காரணம் என்றறியாத மக்களில் ஒவ்வொருவரும் தன்னைச் சுற்றியுள்ள அனைத்து மனிதனையும் போட்டியாளனாக நோக்கத் தொடங்குகின்றனர். பெருமூலதனங்களின் பற்களால் குதறப்பட்டு விளிம்புக்குத் தள்ளப்படுகிறார்கள்.

ஓட்டாண்டியாக்கப்பட்ட மக்களின் எதிர்வினை பல்வேறு விதத்தில் நடக்கிறது. ஒரு பிரிவு தற்கொலை, பிச்சையெடுத்தல், மனப்பிறழ்வுக்காளாதல் என்று தன்னை வருத்தி அழிகிறது. ஒரு பிரிவு திருட்டு, கொள்ளை என்று சிறுசிறு தாக்குதல்களில் இறங்குகிறது. ஆனால் எய்தவன் யாரென்று தெரியாமல் தனக்கு எளிதான இலக்காக இருக்கும் எளிய ஏழை, நடுத்தர மக்களைக் குறிவைத்து தாக்குகிறது. இந்தப் பாதையில் ஒருகட்டத்தில் தொழில்முறை குற்றவாளிகளாக உருமாறுகின்றனர். இதனை ஒருவகையில் அமைப்பாக்கப்படாத, திசைவழிதெரியாத, லட்சியமில்லாத வர்க்கப்போராட்டம் எனலாம். அதனால் தான் திருட்டை மூலதனத்திற்கெதிரான முதல் தாக்குதல் என்றார் கார்ல் மார்க்ஸ்.

ஒருபக்கம் நீதி நியாயம் பேசிக் கொண்டே, மறுபக்கம் தன் சட்டவிரோத செயல்களுக்குக் கூலிப்படைகளாக இந்தக் குற்றவாளிகளை முதலாளிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர். முதலாளிகள் தமது மேஜையில் சட்டப்பூர்வ நடத்தையின் நற்சான்றிதழ்களைப் பரப்பி வைத்துக்கொண்டு, தமது இருக்கையிலோ சட்டவிரோத கோப்புகளைப் பரப்பி உட்கார்ந்திருக்கிறார்கள். தமது சுரண்டலை மறைக்க ஆளும் வர்க்கம் எப்போதுமே குற்றங்களுக்குத் தனிநபர்களையே பொறுப்பாளிகளாக்குகிறது. இதனடிப்படையிலேயே மரணதண்டனையின் அவசியம் பற்றியும் சமூகப்பாதுகாப்பு பற்றியும் பேசுகிறது. நூம் அவதானமாக இல்லாவிடின் நமது அடிப்படை உரிமைகள் இதே சமூகப் பாதுகாப்பின் பேரால் ஒன்றொன்றாகப் பறிபோகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *