அரசியல்உலகம்

“மஞ்சள் மேற்சட்டை”: மக்கள் போராட்டத்தின் புதிய குறியீடு

மக்கள் வீதிக்கு இறங்குவது இயல்பானதல்ல. ஆனால் வீதிக்கு இறங்கியவர்களை ஏமாற்றுவதும் என்றென்றைக்குமானதல்ல. கடந்த ஒரு தசாப்த காலமாக அரசுகளுக்கெதிரான மக்களின் அதிருப்தியும் வெறுப்பும் தொடர்ச்சியாக அதிகரித்து வந்துள்ளன. குறிப்பாக நவ-தாராளவாதத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக இருந்து வந்துள்ளது. இந்தக் கோபத்தின் வெளிப்பாடுகள் இப்போது ஐரோப்பாவின் பெரிய தேசங்களில் இருந்து வெளிப்படும் போது அவை இன்னொரு பரிமாணத்தை எட்டுகின்றன. புதிய மக்கள் போராட்டங்களுக்கு உந்துகோலாக அமைந்து விடுகின்றன.

தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களின் விளைவால் பிரான்ஸ் மிகுந்த நெருக்கடியில் உள்ளது. குறிப்பாக “மஞ்சள் மேற்சட்டை” அணிந்த போராட்டக்காரர்கள் பிரான்ஸையும் தாண்டி உழைக்கும் மக்களின் போராட்டத்தின் குறியீடாக உள்ளார்கள். ஐரோப்பாவில் உருப்பெற்றுள்ள பொருளாதார நெருக்கடிகளினதும் இலாபமீட்டல் வெறியினதும் குறியீடாகவே இந்தப் போராட்டங்களைக் கருதல் வேண்டும். இந்த மஞ்சள் மேற்சட்டை போராட்டக்காரர்கள் ஐரோப்பாவெங்கும் கனன்று கொண்டிருக்கும் அரசுகளுக்கு எதிரான மக்களின் கோபத்தினதும் எதிர்ப்பினதும் பிரதிநிதிகளாக உள்ளனர்.

மஞ்சள் மேற்சட்டையின் கதை
பிரான்சில் எரிபொருள் விலை அதிகரிப்புகளுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட “மஞ்சள் மேற்சட்டை” இயக்கமானது இன்று பிரான்சையும் அதன் அண்டை நாடுகளையும் நிலைகுலைய வைத்துள்ளது. இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் 10ம் திகதி சமூக ஊடகங்களில் பாரிஸை சேர்ந்த இரண்டு ட்ரக் ஓட்டுநர்கள் ‘எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிரான தேசிய அளவிலான மறியல்’ செய்வதே இதை எதிர்ப்பதற்கு நாம் எடுக்க வேண்டிய முதலாவது நடவடிக்கை என்ற ஒரு யோசனையை வெளியிட்டனர். இந்த யோசனைக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெருகியது. இதுவே “மஞ்சள் மேற்சட்டை” இயக்கமாக உருவெடுத்தது. முதற்கட்ட மறியல் போராட்டத்தில் 200,000க்கும் அதிகமானோர் பங்குபற்றினர். இதன் வெற்றி தொடர்ச்சியான போராட்டங்களுக்கு வழிகோலியுள்ளது.

இந்த போராட்டத்தின் இடைவிடாத இயக்கமும் அதற்கான மக்கள் ஆதரவும் பிரான்ஸ் எங்கும் பரவியுள்ள சமூகக் கோபத்தின் வெளிப்பாடாகும். இந்த இயக்கமானது, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் எரிபொருள் வரி அதிகரிப்புகளுக்கு எதிரான சிறு வணிகர்கள், டிரக் முதலாளிகள்-ஓட்டுநர்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய பரந்துபட்ட கூட்டணியின் வெளிப்பாடாக இருக்கிறது.

இந்த போராட்டங்களின் அடிப்படையில் மூன்று விடயங்களைப் புரிந்து கொள்ளல் அவசியம். முதலாவது இன்று உலகலாவிய ரீதியில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படுவதற்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதன் பகுதியாக இதை நோக்க வேண்டும். இரண்டாவது இந்த போராட்டங்கள் சமூக வலைத்தளங்களின் ஊடு ஒன்றிணைக்கப்படுவதால் அதற்கெதிரான நடவடிக்கைகளில் பிரான்ஸ் அரசாங்கம் இறங்கியுள்ளது. மூன்றாவது இளந்தலைமுறையின் அரசுகளிற்கெதிரான எதிர்ப்பு அரசாங்கங்களை மிகுந்த நெருக்கடிக்குள் தள்ளியுள்ளன. அதை “மஞ்சள் மேற்சட்டை” இயக்கத்தின் செயற்பாடுகளில் இளைஞர்களின் பங்களிப்பு கோடு காட்டியுள்ளது.

இன்று உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலையேற்றங்கள் நடைபெறுகின்றன. அவை பல்வேறு வடிவங்களில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக பிரான்ஸ் எரிபொருளுக்கான வரியை அதிகரித்திருக்கிறது. இந்த வரி அதிகரிப்பானது சூழலியல் மேம்பாட்டிற்கு நிதி அளிப்பதற்காக என்று பிரான்ஸ் சொல்கிறது. இதேவேளை பல்கேரியாவில், எரிபொருள் விலையேற்றங்கள், பழைய அல்லது அதிக சூழல்மாசுபடுத்தும் கார்களுக்கு அபராத வரிகள் அதிகரிப்பு, மற்றும் வாகனக் காப்பீட்டு தொகைகளின் அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் அந்நாட்டின் பிரதான சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். எரிபொருள் விலையேற்றங்கள் மறைமுகமாகவும் நேரடியாகவும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.

“மஞ்சள் மேற்சட்டை” இயக்கத்தின் செயற்பாடுகள் சமூக வலைத்தளங்களின் உதவியுடன் ஒருங்கிணைக்கப்படுவதால் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் சமூக ஊடக தணிக்கை குறித்து திட்டமிட பேஸ்புக்குடன் சந்திப்புகள் நடத்தி இதைக் கட்டுப்படுத்துவது குறித்து விவாதித்தார். அத்துடன் தலைநகர் பாரிஸில் யுனெஸ்கோவால் (UNESCO) ஏற்பாடு செய்யப்பட்ட இணையப் பயன்பாடு குறித்த நிகழ்வில் பேசுகையில் ஜனாதிபதி மக்ரோன் இணைய பேச்சு சுதந்திர பயன்பாட்டின் காரணமாக உலகம் பேரழிவின் விளிம்பில் இருக்கிறது என்றார். இணையம் ஆரம்பத்தில் ஒரு ‘அருமையான வாய்ப்பாக’ இருந்தது என்றாலும், இப்போது ‘அது நமது ஜனநாயக சமூகங்களுக்கு ஓர் அச்சுறுத்தலாகவும் மாறி வருகிறது’ என்றார். இதன் மூலம் அவர் பேச்சுச் சுதந்திரத்தையும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தையும் கேள்விக்குட்படுத்தினார்.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில் எவற்றையெல்லாம் ஜனநாயகத்தின் கருவிகள், உயர்ந்த மனித உரிமை நடத்தைகள் என்று மேற்குலக ஜனநாயகங்கள் கூறிவந்தனவோ இன்று அவற்றையே அவை அதே ஜனநாயகத்தின் பெயரால் விமர்சிக்கின்றன. இன்று அரசாங்கங்கள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடியின் மோசமான நிலைமையையே இது காட்டி நிற்கின்றது.

பிரான்ஸில் எரிபொருள் விலைகள் இவ்வாண்டு 20 சதவீதம் அதிகரிக்கபட்டன. அதேவேளை அதற்கு மேலதிகமாக அறிமுகப்படுத்தப்பட்ட வரிகள் இந்தப் போராட்டத்தைத் தூண்டின. இப்போராட்டங்களின் விளைவால் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட வரிகளைத் தற்காலிகமாக நிறுத்துவதாகச் சொன்ன மக்ரோன் அரசு பின்னர் முடிவுறாத போராட்டங்களின் விளைவால் அவ்வரிகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. ஆனால் போராட்டங்கள் முடியவில்லை. இப்போராட்டங்களின் பிரான்ஸின் செல்வம் படைத்த 1%க்கு எதிரான மக்களின் போராட்டமாகும். எரிபொருட்கள் மீதான வரிவிதிப்பு இப்போராட்டத்தை உந்தித்தள்ளிய நிகழ்வு மட்டுமே.

இந்த “மஞ்சள் மேற்சட்டை” போராட்டக்காரர்கள் வளங்கள் மக்களிடையே மீளப்பங்கீடு செய்யப்பட வேண்டும் என்றும், சம்பளங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், ஆண்டாண்டு காலமாய் மக்களிடம் இருந்து கொஞ்சஞ் கொஞ்சமாகப் பிடுங்கப்பட்ட சமூக நலன்கள் மீள வழங்கப்பட வேண்டும் என்று கோரியே தங்கள் போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்.

பிரான்ஸ் ஜனாதிபதி பெரும் செல்வந்தர்களுக்கு வழங்குகின்ற வரி-வெட்டுக்கள், சலுகைகள் என்பன ஏற்படுத்துகின்ற பொருளாதாரத் தாக்கத்தை வரிகளின் பேரால் உழைக்கும் மக்களின் தலைகளில் கட்ட முனைகிறார். அதேவேளை இராணுவப் பெருக்கத்திற்கு நூறு பில்லியன் கணக்கில் செலவிட பிரான்ஸ் கொண்டிருக்கும் திட்டங்களுக்கான செலவுகளையும் வேறு வடிவங்களில் சாதாரண பிரான்சியர்கள் மேல் திணிக்கும் போக்கை கடந்த ஓராண்டாக பிரான்ஸ் மக்கள் பார்த்து வந்திருக்கிறார்கள். 2018 தொடங்கியது முதலாக, பிரான்சின் மிகவும் வசதியான 13 பில்லியனர்கள் தமது செல்வத்தில் 23.67 பில்லியன் யூரோக்களை சேர்த்துள்ளனர், இதன்மூலம் பிரான்ஸ் உலகிலேயே அதிகவேகத்தில் பில்லியனர்கள் பணத்தைப் பெருக்கிக் கொள்ளும் நாடாக ஆகியிருக்கிறது.

இந்தப் போராட்டங்கள் மரபார்ந்த ஒழுங்குபடுத்தப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளில் இருந்து விலகியதாகவும் சுயாதீனமானதாயும் நிகழ்ந்து வருகிறது. இத்தன்மையானது வழமையாக அறியப்பட்ட ‘வலது’ மற்றும் ‘இடது’ ஆகிய இரண்டு அணிகளில் இருந்து விலகி ஒரு கலந்த நிலையில் இருப்பது அதிகார வர்க்கத்திற்கு பாரிய நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது. இந்தப் போராட்டங்களில் வலுவான தொழிலாள-உழைக்கும் வர்க்கத்தின் குணவியல்புகள் இருக்கின்ற அதேவேளை தீவிர வலதின் சில இயல்புகளையும் இதில் உள்ளடங்கியுள்ளதையும் நோக்க வேண்டும். தொடர்ச்சியான வலுவான மக்கள் நோக்கிலான இடதுசாரி முற்போக்கு சக்திகளின் செயற்பாடு இன்மையையே இது குறிகாட்டுகிறது.

அடிப்படையில் இந்தப் போராட்டங்கள் சமூகக் கோபத்தின் விளைவாகும். இதனை நன்கறிந்தமையாலேயே பிரான்ஸ் அரசாங்கம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வன்முறையைப் பயன்படுத்தப் போவதாக அச்சுறுத்துகிறது. “எங்கேனும் மறியலால் பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகளுக்கோ அல்லது சுதந்திர நடமாட்டத்திற்கோ ஆபத்து இருக்குமானால், நாங்கள் தலையிடுவோம்” என்று சொன்ன பிரான்சின் உள்துறை அமைச்சர், “ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்யும் வழக்கம் கொண்ட எந்த தொழிற்சங்கமும் இதனை ஒழுங்கமைக்கவில்லை. உதாரணமாக, ஒரு ஆர்ப்பாட்டம் என்றால், நீங்கள் போலிஸ் அலுவலகத்தில் அதைக் குறித்து தெரிவிக்க வேண்டும். ஆனால் இப்போது, மிகவும் வெகு சிலரே அவற்றை அறிவிக்கின்றனர். இவ்வாறு அறிவிக்கப்படாத ஆர்பாட்டங்கள் தடைசெய்யப்படும்” என்றார்.

பிரான்சில் கல்வித்துறைப் போராட்டங்கள்
பிரான்சில் நீண்டகாலமாக கல்வித்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டங்களும் இப்போதைய போராட்டங்களுடன் தொடர்புபட்ட முக்கிய போராட்டங்களாகும். மக்ரோன் அரசாங்கத்தின் 2019 கல்வி நிதிநிலையறிக்கைக்கு எதிராக நவம்பர் 12 அன்று பிரான்ஸ் எங்கிலும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 2011க்கு பின்னர் முதன்முறையாக தொழிற்சங்கங்கள் தேசிய அளவிலான ஒரு கல்வித்துறை வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன என்பது இங்கு கவனிப்புக்குரியது.

இந்த வேலை நிறுத்தத்தின் பகுதியாக அனைத்து ஆசிரியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடாமல் இரண்டு இடைநிலைப் பாடசாலை ஆசிரியர்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையிலும் நான்கு ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களுக்கு ஒருவர் என்ங விகிதத்திலும் பங்குபெற்றிருந்தனர்.

அரசாங்கப் பாடசாலையில் 2,650 ஆசிரியர்களையும் தனியார் துறையில் இன்னுமொரு 550 பேரையும் நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டுள்ள 400 பேரையும் வேலையில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவை ஆசிரியர்களும் ஏனைய கல்வித்துறை சார்ந்தோரும் எதிர்க்கிறார்கள். இதில் முக்கியமானது யாதெனில் அடுத்த மூன்று ஆண்டுகளில் பாடசாலைகளில் இணையும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் 40,000 மாணவர்களால் அதிகரிக்கப்படவுள்ள நிலையிலேயே இந்த வேலை இழப்புக்களை பிரான்ஸ் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. அதேவேளை முழுநேர நிரந்தர ஆசிரியர்களுக்குப் பதிலாக ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை பணிக்கமர்த்தும் ஆலோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இவையே ஆசிரியர்களின் எதிர்ப்புக்குக்கான காரணங்களாகும்.

இதேவேளை உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சில நாட்களுக்கு முன்னர் தலைநகர் மத்திய பாரிஸில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்களையும் கட்டாய இராணுவ சேவையை மக்ரோன் மீண்டும் திணிப்பதையும் கண்டனம் செய்த அவர்கள் “மஞ்சள் மேற்சட்டை” ஆர்ப்பாட்டங்களுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். இவை இளந்தலைமுறையினரின் ஆட்சிக்கெதிரான எதிர்ப்பைக் தெளிவாகக் காட்டுகிறது.

உண்மை யாதெனில் ஐரோப்பிய ஒன்றியம் கடந்தாண்டு நடாத்திய “தலைமுறை எது?” கருத்துக் கணிப்பின் முடிவுகளின்படி ஐரோப்பிய இளைஞர்களில் பாதிக்கும் மேற்பட்டோரும் பிரெஞ்சு மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினரும் தற்போதுள்ள அமைப்புமுறைக்கு எதிரான ஒரு “வெகுஜன எழுச்சி”யில் இணைவதற்கு விருப்பம் கொண்டிருக்கிறார்கள். இதன் பின்னணியிலேயே பிரெஞ்சு அரசாங்கம் அனைவருக்கும் கட்டாய இராணுவ சேவை நடைமுறையை மீள அறிமுகப்படுத்துவாக அறிவித்துள்ளது. அதன் மூலம் இளைஞர்களைப் பணிவுள்ள நாட்டுப்பற்றாளர்களாக மாற்றலாம் என அது நினைக்கிறது. பிரான்சின் இந்நடவடிக்கை தனியானதல்ல.

கட்டாய இராணுவ சேவையின் கதை கொஞ்சம் சுவையானது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அரசாங்கங்கள் கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. 1991இல் சோவியத் ஒன்றியத்தின் உடைவும் கெடுபிடிப் போரின் முடிவும் பல நாடுகளில் கட்டாய இராணுவ சேவை நிறுத்தப்பட வழிகோலியது. அதன்வழி பிரான்ஸ் 1997 இல் கட்டாய இராணுவ சேவையை முடிவுக்குக் கொண்டுவந்தது. ஸ்பெயின் (2001), இத்தாலி (2005), போலந்து (2008) மற்றும் ஜேர்மனி (2010) ஆகியவை பின்தொடர்ந்தன. கடந்த ஆண்டு சுவீடன் தனது எல்லைப்பகுதியில் ரஷ்யாவுடனான உறவு சுமூகமாக இல்லை என்பதை; காரணம் காட்டி கட்டாய இராணுவ சேவையை மீள அறிமுகப்படுத்தியது. இப்போது அச்சுவட்டை பிரான்ஸ் பின்பற்றுகிறது. ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய நாடுகள் இதைத் தொடரும் என எதிர்பார்க்கவியலும்.

ஆனால் ஐரோப்பியர்களிடையே கட்டாய இராணுவ சேவைக்குக் திரும்புவதற்கு பலத்த எதிர்ப்பு இருக்கிறது. 2015 இல் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்று பிரெஞ்சு மக்களில் வெறும் 29 சதவீதம் பேர் மட்டுமே தமது நாட்டுக்காக போருக்குச் செல்வதற்கு உடன்படுவார்கள் என்று தெரிவித்தது. 2017இல் நடாத்தப்பட்ட “தலைமுறை எது” என்ற கருத்துக்கணிப்பின் படி 60 சதவீதம் பேர் அதைச் செய்வதற்கு மறுப்போம் என்று பதிலளித்துள்ளனர். இவையனைத்தும் அரசுகளுக்கெதிரான கோபத்தின் வெளிப்பாடுகளாகும். மறுபுறம் அரசாங்கங்கள் ஏதோவொரு வகையில் மக்கள் எதிர்ப்பை அடக்க முனைகின்றன என்பதையும் வெளிப்படுத்துகின்றன.

மஞ்சள் மேற்சட்டை: தாக்கத்தின் திசைவழிகள்
மஞ்சள் மேற்சட்டை இயக்கத்தின் போராட்டங்கள் வெறுமனே தனியான போராட்டம் அல்ல. அது ஐரோப்பாவிலும் அதற்கு வெளியிலும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எதிர்ப்புணர்வின் வெளிப்பாடுகள் ஆகும். பெல்ஜியத்தில், பிரெஞ்சு ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாய் ஆர்ப்பாட்டக்காரர்கள் எண்ணெய் சுத்திரிகரிப்பு மையங்களை முற்றுகையிட்டனர், அதேநேரத்தில் எரிபொருள் வரியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பல்கேரியா மற்றும் சேர்பியாவிலும் வெடித்திருக்கின்றன. கிரீசில் படகு நிறுத்தப் போராட்டங்களும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான பொதுத்துறை வேலைநிறுத்தம் ஒன்றும் நடந்து கொண்டிருக்கின்றன. ரொமேனியாவின் தலைநகர் புக்காரெஸ்டில் இரயில் துறை வேலைநிறுத்தம்; ஜேர்மனியில் அமேசன் மற்றும் ரைன்எயர் நிறுவனங்களின் வேலைநிறுத்தங்கள் என்பன நடைபெற்று வருகின்றன.

இவை ஐரோப்பாவுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டவை அல்ல. எகிப்திய ஜனாதிபதி சீசி மஞ்சள் மேற்சட்டை விற்பனையைத் தடை செய்துள்ளார். எகிப்திய சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்கை கவிழ்த்த 2011 புரட்சியின் எட்டாவது ஆண்டுதினம் ஜனவரி 25 நினைவு கூரப்படவுள்ள நிலையில் அத்தினம் முடியும் வரை மஞ்சள் மேற்சட்டைகளை விற்கக் கூடாது என போலிஸ் உத்தரவிட்டிருக்கின்றது. மஞ்சள் மேற்சட்டை இப்போது குறியீடாகியுள்ளது.

கடந்த வாரம் பெல்ஜியத்தின் தலைநகர் புரூசெல்ஸில் நடந்த “மஞ்சள் மேற்சட்டை” ஆர்ப்பாட்டத்தை போலிஸ் வன்முறையாக ஒடுக்கியது, நெதர்லாந்து, பல்கேரியா மற்றும் ஈராக்கிலும் கூட ஆர்ப்பாட்டக்காரர்கள் மஞ்சள் சீருடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈராக்கின் பாஸ்ரா நகரில் அசுத்தமான குடிநீர் மற்றும் மோசமான நகர சேவைகளுக்கு எதிராக ஒரு “மஞ்சள் மேற்சட்டை” போராட்டம் நடைபெற்றதற்குப் பின்னர், தலைநனர் பாக்தாத்தில் நடைபெற்ற போராட்டத்திலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பாஸ்ரா ஆர்ப்பாட்டங்களுடன் ஐக்கியத்தைக் காட்டுகின்ற விதத்தில் மஞ்சள் சீருடைகள் அணிந்திருந்தனர்.

ஆபிரிக்காவிலும் இதன் தாக்கம் செல்வாக்குச் செலுத்துகிறது. புக்கீனா பாசோவில் இவ்வாறான போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கும் முகநூல் குழு செயற்படத் தொடங்கியுள்ளது. இதேபோலவே துனீசியாவில் “சிவப்பு சீருடைகள்” என்ற சமீபத்தில் உருவாக்கப்பட்ட ஒரு முகநூல் குழு துனிசிய அரசியல் அமைப்புமுறையின் தோல்வியையும் ஊழலையும் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக வறுமைக்குள் தள்ளும் அரசாங்கத்தின் கொள்கையையும் கண்டனம் செய்ததோடு போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக துனிசிய ஆசிரியர்கள் அண்மையில் நடாத்திய வேலைநிறுத்தங்களின் தொடர்ச்சியாக இதை நோக்க வேண்டியுள்ளது. அல்ஜீரியாவில் “மஞ்சள் மேற்சட்டை” அணிந்த போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரான்சில் தோற்றம் பெற்ற “மஞ்சள் மேற்சட்டை” இயக்கமானது இன்று பிரான்சின் முன்னாள் காலனிகளிலும் அண்டை நாடுகளிலும் என கண்டந்தாண்டிய செல்வாக்கைப் பெற்றதொரு இயக்கமாகியுள்ளது. மக்களின் கூட்டு வெளிப்பாடாகவும் பாரம்பரிய அரசியல் முறைகளைக் கடந்த வெளிப்பாட்டுக் கருவியாகவும் இதை நோக்க வேண்டியுள்ளது. 1%க்கு எதிராக 99%மான மக்கள் பேச ஆரம்பித்துள்ளார்கள். இது வரவேற்கத்தக்கது. உலகை 99%க்கு உரியவர்களுக்குரியதாக மாற்றியாக வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *