Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the onecom-wp domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /customers/a/4/a/nilankco.com/httpd.www/wp-includes/functions.php on line 6131 Warning: Cannot modify header information - headers already sent by (output started at /customers/a/4/a/nilankco.com/httpd.www/wp-includes/functions.php:6131) in /customers/a/4/a/nilankco.com/httpd.www/wp-content/plugins/onecom-vcache/vcaching.php on line 621 Warning: Cannot modify header information - headers already sent by (output started at /customers/a/4/a/nilankco.com/httpd.www/wp-includes/functions.php:6131) in /customers/a/4/a/nilankco.com/httpd.www/wp-content/plugins/onecom-vcache/vcaching.php on line 629 Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /customers/a/4/a/nilankco.com/httpd.www/wp-includes/functions.php on line 6131 பிரெக்ஸிட்: அடுத்தது என்ன? - நிலங்கோவின் நிலம்
அரசியல்உலகம்

பிரெக்ஸிட்: அடுத்தது என்ன?

உறவுகள் எப்போதுமே தனிச்சிறப்பு வாய்ந்தவை. அவை உருவாகும் போது ஏற்படும் மகிழ்ச்சியை விட அவை பிரியும் போது ஏற்படும் வலியும், அந்தரமும், நிச்சயமின்மையும் அச்சமூட்டுவன. இந்த அச்சமே பல உறவுகள் பிரியாமல் இருப்பதற்குக் காரணமாகின்றன என்று நம்புபவர்கள் இருக்கிறார்கள். சேர்வதும் பிரிவதும் இயற்கை என்று கருதுபவர்களும் இருக்கிறார்கள். ஆனாலும் பிரிவென்பது கடினமானது.

இந்த ஆண்டின் முதலாவது நெருக்கடி நேற்று முன்தினம் அரங்கேறியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான திட்டத்தை பிரித்தானியப் பாராளுமன்றம் நிராகரித்திருக்கின்றது. பிரித்தானியாவின் நூற்றாண்டுகாலப் பாராளுமன்ற வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியை ஆளும் பிரதமர் மேயின் அரசாங்கம் கண்டிருக்கிறது. இது அடுத்தது என்ன என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

2016ம் ஆண்டு நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு ஆதரவாகப் பிரித்தானியர்கள் வாக்களித்தார்கள். இதைத் தொடர்ந்து 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் திகதி பிரித்தானியா வெளியேறும் என்பது முடிவானது. அந்த வெளியேற்றத்தை எவ்வாறு நிகழ்த்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நீண்ட காலமாக நடைபெற்று பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் எட்டப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. அத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பிரித்தானியப் பாராளுமன்றத்தின் அங்கீகாரம் அவசியம். இத்திட்டமே இப்போது தோற்கடிக்கப்பட்டுள்ளது.

காரண காரியங்கள்
வெளியேறுவதற்கான திட்டம் பிரித்தானிய நலன்களுக்கு எதிராக இருப்பதாகப் பலர் கருதுகிறார்கள். ஐரோப்பிய ஒன்றியம் வலுவாக உள்ள நிலையில் தனக்கு வாய்ப்பான ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த முனைகிறது என்பது இத்திட்டத்தின் மீதான பிரதான குற்றச்சாட்டு. இந்த திட்டம் மீதான வாக்கெடுப்பு கடந்தாண்டு டிசெம்பர் மாதம் நடைபெறவிருந்தது. இது பாராளுமன்றத்தால் தோற்கடிக்கப்படும் என்பதை உணர்ந்த பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே இவ்வாக்கெடுப்பை தள்ளி வைத்தார்.

ஒருபுறம் பிரதமர் இத்திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பது ‘பிரித்தானிய மக்களுக்குச் செய்யும் துரோகம். அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகவே வாக்களித்துள்ளார்கள்’ என்றார். மறுபுறம் இதை எதிர்ப்பவர்கள் ‘மக்கள் விலக வாக்களித்தார்களே அன்றி ஐரோப்பிய ஒன்றியத்திடம் விட்டுக்கொடுத்து எல்லாவற்றையும் இழப்பதற்கு வாக்களிக்கவில்லை’ என்று வாதிட்டார்கள்.

இந்த வாக்கெடுப்பை நோக்கிய நகர்வுகள் பிரித்தானியாவின் சட்டத்துறைக்கும் நிர்வாகத்துறைக்கும் இடையிலான மிகப்பெரிய நெருக்கடியாக உருவெடுத்தது. ‘பாராளுமன்றின் மீஉயர்தன்மை’ என்பதில் நிறுவியாக வேண்டும் என்பதை இத்திட்டத்தை எதிர்க்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதியாக நின்றனர்.

இவ்வாக்கெடுப்பு இறுதியில் நாட்டின் நலன் சார்ந்த விடயங்களில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் பாராளுமன்றுக்கே என்ற நிலையை உறுதியாக நிலைநாட்டியுள்ளது. அதேவேளை அடுத்ததாக எதைச் செய்வது என்ற கேள்விக்கான பதில் யாரிடத்திலும் இல்லை. பிரதமர் தலைமையிலான நிர்வாகத்துறையின் முனைப்புகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில் அடுத்த நகர்வை யார் மேற்கொள்ளப்போகிறார்கள். இது மேலும் பல வினாக்களுடன் சேர்ந்து எழுப்பப்படுகிறது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுமா? ஒரு பொதுத் தேர்தலை நோக்கி பிரித்தானியா நகருமா? ஏந்தவொரு திட்டமும் இல்லாமல் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுமா? இன்னொரு பிரெக்ஸிட் வாக்கெடுப்பு நடக்குமா? இத்தனை கேள்விகளையும் அண்மைய வாக்கெடுப்பு விட்டுச் சென்றுள்ளது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி முன்தள்ளுகிறது. இருந்தபோதும் அதற்குப் போதுமான ஆதரவு இல்லாத நிலையில் அது சாத்தியமாகாது. அவ்வகையில் இன்னொரு பொதுத்தேர்தலுக்கான வாய்ப்புக்கள் குறைவு. இப்போது மூன்று சாத்தியங்களே உள்ளன. முதலாவது எத்தவொரு திட்டமும் இன்றி பிரித்தானியா வெளியேறுவது. இரண்டாவது மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் திட்டத்தை திருத்துவது தொடர்பில் பேச்சுக்களை நடாத்தி திருத்திய திட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பிப்பது. மூன்றாவது இன்னொரு பிரெக்ஸிட் வாக்கெடுப்பை நடாத்துவது. இதில் என்ன நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

அதிகரிக்கும் மக்கள் போராட்டங்கள்
கடந்த வாரம் பிரித்தானியத் தலைநகர் நகரில் இடம்பெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியானது பிரித்தானியாவின் சமூகநல வெட்டுக்களுக்கு எதிரான போராட்டாமாக இருந்தது. ஒருபுறம் சமூக நல வெட்டுக்களை மீளப்பெறுமாறும் மக்களுக்கு உரித்துடையதாக இருந்த சமூக நலன்களை வழங்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினார்கள். மறுபுறம் மக்களின் நம்பிக்கையை இந்த அரசாங்கம் இழந்துவிட்டதால் பொதுத்தேர்தலை உடனடியாக நடாத்துமாறும் அவர்கள் கோரினார்கள். இதேவேளை ஆட்சியில் உள்ள பழைமைவாதக் கட்சியினரால் நடாத்தப்பட்ட கூட்டங்களில் இன்னொரு பிரெக்ஸிட் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது.

பிரெக்ஸிட் பல வழிகளில் எதிர்ப்புகளையும் அரசாங்கத்துக்கு எதிரான அதிருப்தியையும் முன்தள்ளியுள்ளது. பிரித்தானியாவின் நெருக்கடியான பொருளாதார நிலைமை, பிரெக்ஸிட்டைத் தொடர்ந்து என்ன நடக்கும் என்ற நிச்சயமின்மை ஆகியன பிரித்தானியப் பொருளாதாரத்தில் பாரிய சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளன.

இதேவேளை போக்குவரத்துத் துறைக்கான அமைச்சர் கிறிஸ் கிரேலிங் ‘இந்தத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்காது போனால் இது பிரித்தானிய ஜனநாயகத்தையே கேள்விக்குட்படுத்தும்’ என்றார். மேலும் ‘இது ஐரோப்பாவின் ஏனைய நாடுகளில் நடைபெறுவது போல தீவிர தேசியவாத ஜனரஞ்ச சக்திகளுக்கு வாய்ப்பாக அவர்களை அரசியல் அரங்கிற்கு நுழைவதற்கான கதவைத் திறந்துவிடும்’ என்று எச்சரித்தார். கீரேலிங்கின் இக்கூற்றை வன்மையாகக் கண்டித்த எதிர்கட்சிகள் ‘இயாலமைக்கு அச்சமூட்டுதல் பதிலல்ல’ என்று தெரிவித்தன.

இதனிடையே மீண்டும் ஒருமுறை இத்திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு வாய்ப்புக்கள் இல்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஆணைக்குழுவின் மினா ஆண்ட்ரீவா “நாங்கள் மேசையில் இருப்பதன் மீது மீண்டும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கவில்லை. என்ன உத்தேசிக்கப்பட்டதோ அதே இறுதியானது” என்றார்.

பிரித்தானியா இன்னொருமுறை வெளியேறும் திட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கான வழிவகைகளை சிந்திக்கையில் ஐரோப்பிய ஒன்றியமோ பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டதாகச் சொல்லி வருகிறது. பாராளுமன்றில் தோற்கடிக்கப்பட்டதைக் காரணங்காட்டி இதைவிடச் சிறந்த திட்டமொன்றுக்கு (பிரித்தானியாவிற்கு வாய்ப்பான) வாய்ப்புக்கள் இருப்பதாக பிரித்தானியப் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார். ஆனால் ஐரோப்பிய ஒன்றியமோ எந்த விட்டுக்கொடுப்புக்கும் தயாராக இல்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நிலைப்பாட்டுக்கு வலுவான காரணங்கள் உள்ளன. முதலாவது வலுவான ஒரு ஒன்றியத்தில் இருந்து நாடுகள் பிரிந்து செல்வதை ஐரோப்பிய ஒன்றியம் விரும்பவில்லை. பிரித்தானியாவின் வெளியேற்றம் ஏனைய நாடுகளின் பிரிவிற்கு வழிகோலும் என்ற அச்சம் ஐரோப்பிய ஒன்றிய ஆளும் வர்க்கத்திடம் உள்ளது. அதேவேளை பிரிந்தால் என்னவகையிலான பொருளாதார சேதங்களை எதிர்நோக்க வேண்டி வரும் என்பதை பிரித்தானிய விலகலின் மூலம் காட்ட நினைக்கிறது.

இரண்டாவது பொருளாதார ரீதியாக ஐரோப்பிய ஒன்றியம் நெருக்கடியில் உள்ள நிலையில் இவ்வாறான வெளியேற்றங்கள் மொத்தப் பிராந்தியத்தின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதிக்கும். எனவே அது குறித்த அச்சம் ஐரோப்பிய ஒன்றிய பொருளாதார வல்லுனர்களுக்கு உண்டு.

மூன்றாவது இன்று இரண்டு போக்குகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சூழ்ந்துள்ளன. ஒன்று வலதுசாரித் தேசிய ஜனரஞ்சக இயக்கங்கள் ஆட்சியைப் பிடித்து அரசாங்கங்களை அமைத்துள்ளன. இதில் பல வெளிப்படையாகவே ஐரோப்பிய ஒன்றியத்தைக் விமர்சிக்கின்றன, கேள்வி கேட்கின்றன, இணைந்து போக மறுக்கின்றன. இது இன்னொரு வகையில் ஆபத்தான திசையில் நகர்கின்றன. மற்றையது ஐரோப்பா எங்கும் எழுச்சிபெறுகின்ற உழைக்கும் மக்களின் ஆர்ப்பாட்டங்களும் சமூகநல வெட்டுக்கள், வேலைக்குறைப்புக்கள் என்பவற்றுக்கு எதிரான போராட்டங்கள். இவை ஐரோப்பிய ஒன்றியத்தை மிகவும் நெருக்கடியான நிலைக்குத் தள்ளியுள்ளன.

குறிப்பாக கடந்த சில மாதங்களாக மஞ்சள் மேலாடை இயக்கம் பிரான்ஸில் தொடங்கி பல நாடுகளுக்குப் பரவியுள்ளன. இது அரசாங்கங்கள் மீதான மக்களின் தார்மீகக் கோபத்தின் வெளிப்பாடு. இதில் ஐரோப்பிய ஒன்றியத்திற்குப் பங்குண்டு. எனவே பிரித்தானியாவிற்கு விட்டுக்கொடுப்பதானது எனைய நாடுகளுக்கும் அதே விட்டுக் கொடுப்பைச் செய்ய வேண்டி வரும்;. இது ஒன்றியத்தின் ஒற்றுமையைப் பாதிக்கும் என்பதை ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகிகள் நன்கறிவர்.

இனி….
நிச்சயமற்ற ஒரு காலத்தை நோக்கி பிரித்தானியா நகர்கிறது. இவ்வாண்டின் முதலாவது நெருக்கடி அரங்கேறியுள்ளது. நடக்கப்போவதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். எது நடந்தாலும் அது பாரிய அரசியற், பொருளாதார நெருக்கடிகளைக் கொண்டுவந்து சேர்க்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *