அரசியல்உலகம்

பிரான்சிஸ் புக்குயாமா: வரலாறு பழிவாங்கும் போது

காலம் செய்யும் விந்தையை என்னவென்று சொல்வது. காலம் பொறுத்திருந்து நகைத்துத் திருப்பித் தாக்கும்போது அதை ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறெதெதையும் செய்ய முடிவதில்லை. வரலாறு தன்னை நகைத்தவர்களை, உலக இயல்பைக் ஏளனம் செய்தவர்களுக்கான பதிலை அதிகாரத்துடன் வழங்கிவிட்டு அமர்ந்திருக்கும் போது “எல்லோரும் வரிசையில வாங்கட” என்று அழைப்பது போல் இருக்கிறது. இந்தக் கதை சுவையானது வரலாற்றைக் காலம் சலனமெதுவுமின்றி மீள எழுதிச் செல்லும் அழகு இரசிக்க வைக்கிறது.

1991ம் ஆண்டு சோவியத் யூனியனின் உடைவும் பெர்லின் சுவரின் சரிவும் கொண்டாடப்பட்டது. அவ்வெற்றியைக் கோட்பாட்டுருவாக்கம் செய்தவர்களில் பிரான்ஸிஸ் புக்குயாமா பிரதானமானவர். அவரின் “வரலாற்றின் முடிவு” என்ற கருத்தாக்கம் கடந்த கால் நூற்றாண்டுகாலமாக முதலாளித்துவவாதிகளாலும் சோசலிச எதிர்ப்பாளர்களாலும் பெரிதும் கொண்டாடப்பட்டது. வரலாற்றின் முடிவு மார்க்ஸியத்தின் முடிவாகவும் சோசலிசத்தை கல்லறைக்கு அனுப்பிவிட்டதாகவும் புகழப்பட்டது.

கடந்த 17ம் திகதி அமெரிக்காவில் இருந்து வெளியாகும் NewStatesman பத்திரிகையில் பிரான்சிஸ் புக்குயாமாவின் நேர்காணல் வெளியாகியிருந்தது. இதில் சோசலிசம் மீண்டு வருவது தவிர்க்கவியலாதது என்று அவர் சொல்லியிருக்கிறார். இதன் மூலம் வரலாறு முடியவில்லை என்பதை அவரே ஒத்துக் கொண்டிருக்கிறார். வரலாறு பொறுத்திருந்து புக்குயாமாவைப் பழிவாங்கியிருக்கிறது.

வரலாற்றின் முடிவின் கதை
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த ஜப்பானியரான பிரான்ஸிஸ் புக்குயாமா அமெரிக்காவின் அரச மற்றும் இராணுவக் கொள்கை வகுப்பிற்கு உதவும் சிந்தனைக் குழாமான RAND Corporationஇல் பணியாற்றிக் கொண்டிருந்த வேளை 1989ம் ஆண்டு அமெரிக்காவின் வாசிங்டனில் இருந்து வெளியாகும் The National Interest என்ற இதழில் “The End of History?” என்ற கட்டுரையை வெளியிட்டார். கெடுபிடிப்போர் முடிவுக்கு வந்துகொண்டிருந்த காலத்தில் வெளியான இக்கட்டுரை கவனம் பெற்றது.

கார்ல் மார்க்ஸ் தரிசித்த வரலாற்றின் முடிவை பொதுவுடமைத்துவம் நிர்ணயிக்கவில்லை. மாறாக மாற்றுக் கருத்தியல்களை வெற்றிகொண்ட தாராண்மைத்துவமே வரலாற்றின் முடிவை நிர்ணயிக்கும் என்பதே புக்குயாமாவின் வாதமாக அமைந்தது. அவரைப் பொறுத்தவரை, தாராண்மைத்துவத்தின் மாற்றுக் கருத்தியல்களாக கருதக்கூடிய இஸ்லாமும், தேசியவாத இயக்கங்களும் கருத்தியல்களுக்கான பண்புகளை கொண்டிருக்கவில்லை. எனவே, கெடுபிடிப்போரின் முடிவுடன் சனநாயக சமாதானக் கோட்பாட்டை இறுகப் பற்றிக்கொண்ட அமெரிக்காவின் தலைமையிலான தாராண்மைத்துவ உலகம், உலகெங்கும் தாராண்மைத்துவ ஆட்சியைப் பரப்பும் தனது திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்கக் தொடங்கியது. கெடுபிடிப்போர்க் காலத்தில் மனிதநேயம் பேசிய ஐக்கிய நாடுகள் சபையும், பன்னாட்டு தன்னார்வ நிறுவனங்களும், கெடுபிடிப்போரின் முடிவுடன் அமெரிக்காவின் தலைமையிலான தாராண்மைத்துவ உலகின் தூண்களாக தம்மைக் கட்டமைத்துக் கொண்டன என்று புக்குயாமா வாதிட்டார்.

தனது கட்டுரையில் அவர் பின்வருமாறு சொன்னார்: ‘நாம் பார்த்துக் கொண்டிருப்பது வெறும் கெடுபிடிப்போரின் முடிவையோ, அல்லது போருக்கு-பிந்தைய வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதி கடந்து செல்வதையோ மட்டுமல்ல, மாறாக வரலாற்றின் முடிவை பார்த்துக் கொண்டிருக்கிறோம், அதாவது: அது, மனிதகுலத்தினது கருத்தியல் பரிணாமத்தின் முடிவுப்புள்ளியும், மனிதனது அரசாங்கத்தின் இறுதிவடிவமாக, மேற்கத்திய தாராண்மைவாத ஜனநாயகத்தின் உலகமயமாக்கலும் ஆகும்.’

தாராண்மைவாத முதலாளித்துவ ஜனநாயகம், அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் எவ்வளவுதான் முறையற்ற வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், மனிதகுலத்தின் அரசியல் மற்றும் பொருளாதார பரிணாமத்தின் அர்த்தத்தில், அது ஒரு கடந்து செல்ல முடியாத கருத்தியலைப் பிரதிநிதித்துவம் செய்கிறது என்பதில் அங்கே இனி எந்த சந்தேகமும் இருக்க முடியாது என்றவர் வாதிட்டார். முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட தாராண்மைவாத ஜனநாயகத்திற்கு, வேறெந்த நம்பகமான புத்திஜீவித மற்றும் அரசியல் மாற்றீடும் அங்கே இல்லை என்ற அர்த்தத்தில் வரலாறு “முடிந்து” விட்டது என்று புக்குயாமா தனது கட்டுரையில் குறிப்பிட்டார்.

தனது கருத்துக்களை மேலும் விரிவுபடுத்தி 1992ம் ஆண்டு வரலாற்றின் முடிவும் கடைசி மனிதனும் (End of the History and the Last Man) என்ற நூலை வெளியிட்டார். அதில் வரலாறு முடிவுக்கு வந்துவிட்டதாகவும், மேற்கத்திய முதலாளித்துவ ஜனநாயக அரசியலமைப்பே, சமூக, அரசியல், பொருளாதாரரீதியாக மனிதச் சமூகம் கண்டடைந்த உச்சம் என்றும் அறிவித்தார். அதாவது, கார்ல் மார்க்ஸ் எதிர்பார்த்ததைப் போல முதலாளித்துவ அமைப்பானது, பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மூலம் தூக்கியெறியப்பட்டு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிறுவப்படும் என்பதும், பின்னர் இந்தப் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமும் அதன் அரசும் உலர்ந்து உதிர்ந்து, ஒவ்வொருவரிடமிருந்தும் அவரது தகுதிக்கேற்பப் பெற்றுக்கொள்வது, ஒவ்வொருவருக்கும் அவரது தேவைக்கேற்ப அளிப்பது என்ற உயரிய லட்சியத்தின் அடிப்படையில் இயங்கும் கம்யூனிச, அதாவது உயர்நிலை பொதுவுடைமைச் சமூகம் பரிணமிக்கும் என்பதும் நடைமுறை சாத்தியமில்லை என்றார் புக்குயாமா. அவரைப் போன்றவர்களைப் பொறுத்தவரை முதலாளித்துவமே மனிதகுலம் கண்டடையக் கூடிய உச்சகட்ட சமூக அமைப்பு.

புக்குயாமா “வரலாற்றின் முடிவு” சோசலிசத்தின் முடிவைக் குறிக்கும் என்றார். அதேவேளை “வரலாற்றின் முடிவு” போர்களின் எண்ணிக்கை குறைவால் குணாம்சப்படுத்தப்படும் என்றும் தாராண்மைவாத ஜனநாயகம் சமாதானமாக இருந்தது என்று புக்குயாமா வாதிட்டார். அவர் ‘தாராண்மைவாத ஜனநாயகமானது பெரிதும் வலுச்சண்டை மற்றும் வன்முறை போன்ற மனிதனின் இயற்கையான உட்தூண்டல்களை கட்டுப்படுத்துகிறது என்பது வாதமல்ல, மாறாக அது உட்தூண்டல்களையே அடிப்படைரீதியாக உருமாற்றி, ஏகாதிபத்தியத்திற்கான நோக்கத்தையே அகற்றிவிடுகிறது’ என்று வாதிட்டு சோவியத் உலகுக்குப் பிந்தைய உலக சமாதானத்தை கற்பனை செய்து கொண்டிருந்த போதே, அமெரிக்கா உலகின் மேலாதிக்க சக்தியாக அதன் இடத்திற்கு ஒரு புதிய போட்டியாளர் தோன்றுவதை அனுமதிக்காது என்று தனது செயல்கள் மூலம் அறிவித்தது.

வரலாற்றின் முடிவின் பின்னரான காலம்
அமெரிக்காவை மையப்படுத்திய புதிய உலகை ஒழுங்கானது அமெரிக்க புவிசார் அரசியலின் ஒரு அத்தியாவசிய கருவியாக போரை நடைமுறையில் நிறுவனப்படுத்தியது. ஆதன்வழி அமெரிக்க உலக நாடுகளின் மீது போர் தொடுப்பதை புதிய நடைமுறையாகக் கொண்டது. இது 1990களில் ஈராக் மீதான போரில் தொடங்கி கிழக்கு ஐரோப்பாவின் சேர்பியா மீது குண்டு வீசுவது வரைத் தொடர்ந்தது. இது அமெரிக்கா தன்னை ஆக்கிரமிப்பாளனாக நிலைநிறுத்துகிறது என்பதையும் புக்குயாமா சொன்னது போல வரலாற்றின் முடிவு போரின் முடிவுக்கும் தாரண்மைவாதத்தின் சர்வவியாபகத்தும் ஏகாதிபத்திய நோக்க அகற்றலுக்கும் வழி செய்யவில்லை. மாறாக ஏகாதிபத்தியத்தின் அடுத்த கட்டத்துக்கும் கட்டற்ற சுரண்டலுக்கும் அதற்கு ஆதரவாக ஆக்கிரமிப்புக்குப் போர்களுக்கும் வழி செய்தது.

21ம் நூற்றாண்டு 9ஃ11 நிகழ்வுடன் தொடங்கி அமெரிக்காவின் ‘பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்திற்கு’ வழி செய்தது. அது ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா என விரிந்து இப்போது சிரியா என்கிற புதைகுழியில் சிக்கிச் சிதிலமாயுள்ளது. அமெரிக்காவின் கட்டுப்பாடற்ற புவிசார் அரசியல் வேட்கைகள் ஒட்டுமொத்த பூமியையும் — வான்வெளியையும் கூட— அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கான ஒரு சாத்தியமான அரங்காக ஆக்கி உள்ளது. சோவியத்திற்குப் பின்னர் வெடித்தெழுந்த ஏகாதிபத்திய இராணுவவாதத்தால் தோற்றுவிக்கப்பட்ட குழப்பங்களில் கொடுக்கப்பட்ட கொடூரமான மனித விலை எண்ணிடவியலாதது.

புக்குயாமா தாராண்மைவாத ஜனநாயகத்தின் வெற்றியை அறிவித்துப் பத்தாண்டுகளுக்கு உள்ளேயே, அது ஒவ்வொரு இடத்திலும் நெருக்கடிக்குள்ளாகி உள்ளுத. அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் அதன் நிலை மிக மோசமாகியுள்ளது அமெரிக்க அரசாங்கம் அதன் குடிமக்களை உளவுபார்ப்பது மற்றும் அவர்களது வாழ்வின் மிகத்தனிப்பட்ட அம்சங்கள் பற்றிய தகவலைத் திரட்டுவது சட்ட விசாரணையின்றி அவர்களைக் கொல்வது என அனைத்தையும் செய்கிறது.

இது ஒருபுறமிருக்க 2008ம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி புக்குயாமா வெற்றிக்களிப்பில் திளைத்த தாராண்மைவாத ஜனநாயகத்தின் ஜனநாயக மறுப்பை பொதுவெளிக்குக் கொண்டு வந்தது. இதன் இன்னொரு எதிர்வினையாக வால் ஸ்ரீட் போராட்டம் செல்வம் கொழித்த 1மூக்கு எதிரான 99மூஇன் போராட்டத்திற்கு ஒரு முகவரியைக் கொடுத்தது.

மூலதனம் ஏகபோக மூலதனமாக (இன்னொரு வகையிற் சொன்னால் ஏகாதிபத்தியமாக) வளர்ந்துள்ள நிலையில் அது தன் தேச எல்லைகளைத் தாண்ட அந்நிய நாடுகளின் உற்பத்தியையும் வணிகத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கிறது. உலகச் சந்தை மீதான ஏகபோக முதலாளிய ஆதிக்கம் மூலப் பொருட்கள் முதலாக அடிப்படையான உற்பத்திப்பொருட்கள் வரையிலானவற்றின் விலைகளைத் தாழ்த்தியும் தனது நேரடியான கட்டுப்பாட்டிலுள்ள உற்பத்திகளது விலைகளை உயர்த்தியும் மூன்றாம் உலகப் பொருளாதாரங்களைப் பின்தங்கிய நிலையில் வைத்திருந்துள்ளது. இதை அது உலகமயமாக்கிலின் மூலம் சாத்தியமாக்கியது. அதற்கு தாரண்மைவாத ஜனநாயகம் வழியமைத்தது.

உலக மயமாதலின்கீழ்ச் சில ஆசியப் பொருளாதாரங்கள் வேகமாக வளர்ச்சி கண்டன. இவ்வளர்ச்சி எவ்வளவு போலியானதென்பது 1998 அளவில் கிழக்கு ஆசியாவின் பொருளாதாரப் புலிகள் எனப்பட்ட தென்கொரியா, தாய்லாந்து, உட்பட்ட நாடுகளில் ஏற்பட்ட பயங்கரமான நிதி நெருக்கடியால் தெளிவாகத் தெரிய வந்தது. இன்றுவரை இந்த நாடுகளின் பொருளாதாரங்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியே இருந்து வருகின்றன.

அமெரிக்கப் பொருளாதாரம் கடந்த இருபது ஆண்டுகளாகவே சரிவை எதிர்கொண்டு வருகிறது. அதன் பெரிய முதலாளிய நிறுவனங்கள் தமது இலாப நோக்கில் உற்பத்தியை மட்டுமன்றி சில சேவைகளையும் ஏழை நாடுகட்கும் குறைந்த கூலிக்குப் பயிற்றப்பட்ட தொழிலாளர்களை அமர்த்தக் கூடிய நாடுகட்கும் கொண்டு சென்றன. இதன் மூலம் அமெரிக்காவினுள் அந்தத் துறைகளில் வேலைவாய்ப்புக்கள் குறைந்தாலும் மலிவு விலையிற் பொருட்களை இறக்குமதி செய்ய முடிந்தது. இதன் மூலம் அமெரிக்காவில் வேலை வாய்ப்புக்கள் குறைந்தன.

நுகர்வைப் பெருக்குவதற்காக கடன் வழங்குவதும் முதலீடுகட்கான நிதி வளத்தை அதிகப்படுத்துவதற்காக கவர்ச்சியான வட்டி வீதங்களில் பண முதலீட்டை வரவேற்பதுமாகச் செயற்பட வங்கிகள் உட்பட்ட நிதி நிறுவனங்கள் யாவும் அமெரிக்கப் பொருளாதாரத்தின் மந்தமடைவால் பெரும் நெருக்கடியை எதிர் நோக்கின. கடன்களை வாங்கினோர் அதற்காக வட்டியையும் திருப்பிக் கொடுக்க வேண்டிய தவணைத் தொகையையும் கொடுக்க இயலாது தடுமாறிய நிலையில், வங்கிகள் நெருக்கடிக்கு உள்ளாகின. இந் நிறுவனங்கள் உயிர் நிருவாகிகள் தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொண்ட பெரிய பெரிய சம்பளங்கள் பல்வேறு கையாடல்களும் ஒழுங்கீனங்களும் இவ்வாறான நெருக்கடிகளை மோசமாக்கி அமெரிக்காவின் பொருளாதாரத்தை ஒரு பெரிய இக்கட்டில் கொண்டு வந்துவிட்டுள்ளன.

சோசலிசத்தின் மீள்வருகை
புக்குயாமா சோசலிசத்தின் முடிவை அறிவித்தாலும் 1990களின் ஈற்றில் இலத்தீன் அமெரிக்காவில் ஏற்பட்ட இடதுசாரி அலையோடு தனது மீள்வருகையை சோசலிசம் அறிவித்தது. மக்கள் தங்கள் உரிமைகளுக்காக தொடர்ந்தும் போராடுகிறார்கள் என்பதையும் நம்பிக்கையும் இலத்தீன் அமெரிக்க மக்களின் போராட்டங்களும் ஆட்சி மாற்றங்களும் எமக்குணர்த்தின.

அமெரிக்காவின் கொல்லைப்புறம் எனப்பட்ட தென் அமெரிக்கா இப்போது அமெரிக்காவின் கைப்பொம்மை அரசுககைளக் கொண்டதாகவோ அமெரிக்காவிற்கு ஆதரவானதாகவோ இல்லை. உலக வரலாற்றில் மிக நீண்ட காலமாக ஒடுக்கப்பட்ட சமூகங்களாக இருந்துவந்த தென்னமெரிக்க மக்கள் இப்போது விழிப்படைந்திருக்கிறார்கள். அது உலகின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உற்சாகம் அளிக்கிறது. தென்னமெரிக்க, கரீபியன் நாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு அலை மேல் அலையாக எழுந்தவாறுள்ளது. தற்போது, தென்னமெரிக்க நாடுகளின் வளங்களைச் சுரண்டிக் கொள்ளையிட்ட வரலாறு முடிவுக்கு வரும் கட்டத்தை எட்டியுள்ளது.

ஏகாதிபத்தியமாக வளர்ந்துள்ள மூலதனம் தன் தேச எல்லைகளைத் தாண்ட அந்நிய நாடுகளின் உற்பத்தியையும் வணிகத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கிறது. உலகச் சந்தை மீதான ஏகபோக முதலாளிய ஆதிக்கம் இன்று பொருளாதார நெருக்கடியின் விளைவாகப் பெரிய சவால்களை எதிர்நோக்குகிறது. உலக அரசியலில் இராணுவமயமாக்கல் தவிர்க்கமுடியததாக, ஏகாதிபத்தியக் கொள்கையுடன் பிணைந்துள்ளது. அதனால் ஏகாதிபத்தியம் போர்களை உருவாக்குகிறது. அவை மக்கள் போராட்டங்களை மேலும் கூர்மையாக்குகின்றன.

இன்று மத்திய கிழக்கிலும் ஆபிரிக்காவிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கலகங்கள், மக்களின் எதிர்ப்புணர்வின் வெளிப்பாடுகள். பல நாடுகளில் மக்கள் போராட்டங்கள் நடக்கின்றன, மக்கள் களத்தில் நின்று போராடுகிறார்கள், உயிர்த் தியாகம் செய்கிறார்கள். ~இணைய-வழிப் புரட்சி| என்று பேசிக் கொண்டிராமல் மக்களாக ஒன்றுதிரண்டு எழுச்சியடைகிறார்கள். மூலோபாயங்களை அவர்களே வகுத்துக்கொள்ளுகிறபோது அவர்கள் வெல்கிறார்கள். இது தான் இன்றைய நிலைமை.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முன்னுரையில் கார்ல் மார்க்ஸ் சொல்வது போல, ஒவ்வொரு வரலாற்றுக் காலகட்டத்தின் பொருளாதார உற்பத்தியும் தவிர்க்க முடியாதபடி அதிலிருந்து எழும் சமுதாயக் கட்டமைப்பும், அந்தந்தக் காலகட்டத்தின் அரசியல், அறிவுத்துறை ஆகியவற்றின் வரலாற்றுக்கான அடித்தளமாக அமைகின்றன. ஆகவே, (புராதன பொதுவுடைமை அமைப்புச் சிதைந்த காலந்தொட்டு) வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது. அதாவது, சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும், சுரண்டப்படும் வர்க்கத்துக்கும் சுரண்டும் வர்க்கத்துக்கும், ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கும் ஒடுக்கும் வர்க்கத்துக்கும் இடையேயான போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது. எனினும், இப் போராட்டம் தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வரும் அதிமுன்னேறிய வர்க்கம் (பாட்டாளி வர்க்கம்), தன்னோடு கூடவே சமுதாயம் முழுவதையும் சுரண்டலிலிருந்தும் ஒடுக்கு முறையிலிருந்தும், ஈற்றில் வர்க்கப் போராட்டத்தினின்றும், நிரந்தரமாக விடுவிக்க வேண்டும். அவ்வாறு விடுவியாமல், சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து) ஒருபோதும் தன்னை விடுவிக்க இயலாது என்கிற கட்டத்தை எட்டியுள்ளது. இது தவிர்க்கவியலாமல் சோசலிசத்தை முன்னுக்குத் தள்ளியுள்ளது.

புக்குயாமாவின் ஒப்புதல் வாக்குமூலம்
அண்மைய நேர்காணலில் புக்குயாமா சோசலிசம் மீளுவது தவிர்க்கவியலாதது என்று ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதேவேளை திறந்த பொருளாதாரமும் கட்டற்ற வணிகமும் மிகவும் மோசமான விளைவுகளை உலகுக்குக் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் பொருளாதார மாதிரி உலகில் அசமத்துவத்துக்கு வழிவகுத்துள்ளதாகவும் சமூக நீதிக்கான போராட்டம் வலுப்பெற்றுள்ளதை நாம் மறுக்கவியலாது என்றும் தனது நேர்காணலில் சொல்லியிருக்கிறார்.

தனது நேர்காணலில் அவர் சொல்லுகிற ஒரு விடயம் முக்கியமானது: ‘ஒரு விடயத்தை நான் ஒப்புக் கொள்கிறேன். எனக்கு ஆச்சரியமேற்படுத்தும் வகையில் கார்ள் மார்க்ஸ் சொன்னது உண்மையாகி வருகிறது. முpகை உற்பத்தி பற்றியும் முதலாளித்துவத்தின் துர்விளைவுகள் பற்றியும் அவர் சொன்னார். அவர் சொன்னது இன்று நிரூபணமாயிருக்கிறது.”

சோசலிசம் காலங்கடந்தும் வாழும். அதை கல்லறைக்கு அனுப்பியவர்களே அதை ஏற்றுக் கொள்ளச் செய்திருப்பது தான் காலத்தின் விந்தை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *