Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the onecom-wp domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /customers/a/4/a/nilankco.com/httpd.www/wp-includes/functions.php on line 6131 Warning: Cannot modify header information - headers already sent by (output started at /customers/a/4/a/nilankco.com/httpd.www/wp-includes/functions.php:6131) in /customers/a/4/a/nilankco.com/httpd.www/wp-content/plugins/onecom-vcache/vcaching.php on line 621 Warning: Cannot modify header information - headers already sent by (output started at /customers/a/4/a/nilankco.com/httpd.www/wp-includes/functions.php:6131) in /customers/a/4/a/nilankco.com/httpd.www/wp-content/plugins/onecom-vcache/vcaching.php on line 629 Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /customers/a/4/a/nilankco.com/httpd.www/wp-includes/functions.php on line 6131 ஜோர்ஜ் ஃபுளோய்ட்: அதிகாரத்துக்கெதிரான போராட்டத்தின் குறியீடு - நிலங்கோவின் நிலம்
அரசியல்உலகம்உள்ளூர்

ஜோர்ஜ் ஃபுளோய்ட்: அதிகாரத்துக்கெதிரான போராட்டத்தின் குறியீடு

அதிகாரம் என்றென்றைக்குமானதல்ல. மாற்றங்கள் வந்தே தீரும். உலக வரலாற்றில் நிலைத்திருந்த சாம்ராஜ்யங்கள் என்று எதுவுமல்ல. கீரேக்கர் தொடங்கி அமெரிக்கர் வரை யாரும் விலக்கல்ல. மாற்றங்கள் வருவதற்குக் காலமெடுக்கும். ஆனால் அந்த மாற்றங்களை ஒரு சிறுபொறி தொடக்கி வைக்கும். அது காட்டுத்தீயாய் பரவும். ஆதிகார அடுக்குகளை அசைக்கும். மக்களை சிந்திக்க வைக்கும். நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் இடையிலான பிரிகோடு மிகத் தெளிவாக இருக்கும். இது மக்களின் தெரிவை மிக இலகுவாக்கும். அவ்வாறான ஒரு சிறுபொறியே இப்போது பற்றியுள்ளது. ஆனால் இது காட்டுத்தீயாகுமா, கானால் நீராகுமா, காவால் போராகுமா, காணாமல்தான் போகுமா?

கடந்த ஒருவாரத்தில் அமெரிக்காவில் பொலிஸ் வன்முறையால் கொல்லப்பட்ட ஜோர்ஜ் ஃபுளோய்ட்டிக்கு நீதிவேண்டி உருவாக்கம் பெற்றுள்ள ‘கறுப்பு உயிர்களும் முக்கியம்’ போராட்டம் அமெரிக்காவைத் தாண்டி உலகளாவியத் தன்மையைப் பெற்றுள்ளது. இந்த உலகளாவிய போராட்டமும் அதற்கான எதிர்வினைகளும் பல முக்கியமான செய்திகளைச் சொல்கிறது. இன்று கொவிட்-19 பெருந்தொற்று பற்றிய செய்திகள் இரண்டாம் பட்சமானவையாக மாறிவிட்டன. இந்தப் போராட்டங்களே பேசுபொருளாகியுள்ளன. இது இரண்டு வகையான தன்மைகளைக் கொண்டது.
1. இந்தப் போராட்டங்கள் உரிமைகளுக்கான போராட்டங்களின் இன்னொரு அத்தியாயத்தைத் தொடக்கி வைத்துள்ளது என்ற வகையில் முற்போக்கானது.
2. இந்தப் போராட்டத்தை வன்முறையாகக் காட்டுவதோடு கொவிட்-19 பெருந்தொற்றைக் காரணமாக்கி அரசுகள் அளவுக்கதிகமான அதிகாரங்களை சத்தமில்லாமல் தன்வசப்படுத்துகிறது.

இதேவேளை கொவிட்-19 குறித்த கவனம் குறைவடைந்துள்ளது. பெருந்தொற்று மெதுமெதுவாகக் குறைவடைந்துள்ளது என்ற மனோநிலை உலகெங்கும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மை அதுவல்ல. இந்தப் பெருந்தொற்றுத் தொடங்கியதுமுதல் ஒரே நாளில் அதிகம் பேருக்கு இந்தநோய்தொற்று ஏற்பட்டது இந்த யூன் மாதம் 5ம் திகதியே ஒரேநாளில் 130,500க்கும் மேற்பட்டோர் நோய்த்தொற்றுக்குள்ளாகினர். அதற்கடுத்தபடியாக அதிகூடியளவானோர் நோய்த்தொற்றுக்கு ஆளாகிய நாட்கள் முறையே யூன் மாதம் 4ம் திகதியும் 6ம் திகதியும். ஆனால் இவை கவனம் பெறவில்லை. தொற்றுக்கு ஆளாகுவோர் எண்ணிக்கை மே மாதத்தின் இறுதிப்பகுதியில் குறைவடைந்தது இப்போது பெருமளவில் அதிகரித்துள்ளது. இது மிகவும் கவலைக்குரியதும் அச்சத்துக்குரியதுமான ஒரு விடயம். அரசுகள் இதை மறைக்க முயல்கின்றன.

அதேவேளை ‘கறுப்பு உயிர்களும் முக்கியம்’ போராட்டம் பெற்றுள்ள முக்கியத்துவம் இன்றைய காலகட்டத்தில் அவசியமானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இன்று உலகளாவிய ரீதியில் நிலவுகின்ற அசமத்துவம், புறக்கணிப்பு, வறுமை, வேலையின்மை எனப் பல்வேறுபட்ட நெருக்கடிகளின் வெளிப்பாடாகவும் இந்தப் போராட்டங்களின் உலகளாவிய தன்மையை விளங்கிக் கொள்ளவியலும்.

உலகளாவும் போராட்டங்கள்
இந்தப் போராட்டங்கள் ஜோர்ஜ் ஃபுளோய்ட்டிக்கு நீதிவேண்டியும் கறுப்பின மக்களின் உயிர்களை மதிக்கக் கோரும் போராட்டங்களாக மட்டும் இருக்கவில்லை. இவை ஒவ்வொரு நாடுகளிலும் அந்தந்த நாடுகளின் உள்ளார்ந்த பிரச்சனைகளையும் உள்ளடக்கியிருந்தது. அவ்வகையில் அவை சர்வதேசத் தன்மையை மட்டும் கொண்டதாக மட்டும் இல்லாமல் தேசியப் பிரச்சனைகளையும் பேசுவதாக அமைகிறது. இந்தப் போராட்டங்கள் தொடர்வதற்கும் நிலைப்பதற்கும் பல்வேறு தளங்களில் ஆதரவு பெறுவதற்கும் இது காரணமாகிறது.

உதாரணமாக ஜேர்மனியில் நடைபெற்ற போராட்டங்களில் இலட்சக்கணக்கானோர் பங்குபற்றினர். ஜேர்மனியில் 25க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டங்கள் இடம்பெற்றன. அப்போராட்டங்கள் நவ-நாஜியினரையும் அவர்தம் செயற்பாடுகளையும் வன்மையாகக் கண்டித்தன. இனவெறியாலும் நிறவெறியாலும் ஜேர்மனியில் பலியானவர்கள் நினைவுகூரப்பட்டனர்.

இதேபோன்று பிரான்ஸில் நடைபெற்ற போராட்டங்கள் அகதிகளின், குடியேற்றவாசிகளின் உரிமைகளைப் பாதுகாக்க கோரியது. குடியேற்றவாசிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்தது. இதேபோல பிரித்தானியாவில் பங்குபற்றியோர் «இனவெறி ஒரு வைரஸ்» என்ற பதாகையை முன்னிலைப்படுத்தினர். இதேபோன்ற போராட்டங்கள் இத்தாலி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரியா என ஐரோப்பாவின் முக்கிய இடங்களில் நடந்தது. ஸ்கன்டினேவிய நாடுகளும் இதற்கு விலக்கல்ல என்பதை அந்த நாடுகளின் தலைநகரங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் எடுத்துக்காட்டின. குறிப்பான நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் சிறிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் 15,000 பேர் பங்குபற்றினர். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அனைத்து நாடுகளின் அரசுகளின் எதிர்வினை இரண்டு விதமாகவே இருக்கிறது. ஒன்றில் பொலிஸ் வன்முறையையும் ஏனைய முறைகளையும் பயன்படுத்தி இந்தப் போராட்டங்களைத் தடுத்தல் அல்லது பெருந்தொற்று பரவும் என்று அச்சமூட்டுவதன் மூலம் போராட்டங்களைத் தடைசெய்தல், அனுமதி மறுத்தல்.

அரசுகள் இந்தப் போராட்டங்கள் வெறுமனே ஜோர்ஜ் ஃபுளோய்ட்டிக்கு நீதிவேண்டியதாக மட்டும் அல்ல என்பதை நன்கு அறியும். மக்களிடையே ஏற்பட்டுள்ள வெறுப்புணர்வும் கோபமும் இயலாமையுமே இந்த வழிகளில் வெளியாகிறது என்பதை உணர்ந்துள்ள அரசுகள் பல்வேறு வழிகளில் இந்தப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று இது உலகளாவிய போராட்டமாக மாறியுள்ளது. இந்தக் கட்டுரையை எழுதும் போது 2500க்கும் அதிகமான நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன, அவற்றுக்கு எதிரான பொலிஸ் வன்முறையும் அரங்கேறியுள்ளது. மையநீரோட்டத்தில் உள்ள அரசியல்வாதிகளும் போராட்டக்காரர்களும் இருவேறு அந்தங்களில் நிற்கிறார்கள் என்பதை இந்தப் போராட்டங்கள் உணர்த்தி நின்றன.

ஃபாசிச மிரட்டலை நோக்கிய நகர்வு
இன்று அரசுகள் இரண்டு நெருக்கடிகளை ஒருசேர எதிர்நோக்குகின்றன. முதலாவது கொவிட்-19 பெருந்தொற்றும் அது ஏற்படுத்தியுள்ள நெருக்கடிகளும் இரண்டாவது இந்த ஆர்ப்பாட்டங்கள் மக்கள் திரட்சியையும் ஒன்றிணைவும் சாத்தியமாக்கி அரசின் வகிபாகத்தைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. இந்த இரட்டை நெருக்கடியைக் கையாளுவதற்கு அரசுகள் மெதுமெதுவான ஃபாசிசத்தை நோக்கி நகர்கின்றன. ஆனால் இது கவனம் பெறத் தவறுகிறது.

வரலாறு சொல்கிற பாடம் யாதெனில் பொதுவாக நாமறிந்த் ஃபாசிசம், ஐரோப்பிய முதலாளிய நெருக்கடியால் முதலாம் உலகப் போரின் பின் தோன்றி இரண்டாம் உலகப் போரின் முடிவு வரை ஐரோப்பாவின் பெரும் பகுதியில் ஆதிக்கஞ் செலுத்தியது. ஃபாசிசத்தை வரலாற்று ரீதியில் ஆராய்ந்த கெயோர்கி டிமித்ரொவ் சொல்கின்ற பின்வரும் விடங்கள் கவனத்திற்குரியன. அவர்:
ஃபாசிசத்தினதும் ஃபாசிச சர்வாதிகாரத்தினதும் விருத்தி, வரலாற்று, சமூக பொருளாதார நிலைமைகட்கு அமையவும் தேசியத்தின் குறிப்பான பண்புகள் சார்ந்தும் ஒரு நாட்டின் சர்வதேசத் தகைமை சார்ந்தும் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வடிவங்களைப் பெறுகிறது’ என்று வாதிட்டார்.

இன்று குறிப்பாக மேற்குலகில் நவ-ஃபாசிசம் மீள்உயிர்ப்புப் பெற்றுள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு முந்திய பாஸிசத்தின் பிற்போக்கு, இனவாத, பேரினவாத, இடதுசாரி-விரோத சாராம்சத்தைப் பேணுவதும் வலுவான பாஸிசக் குணவியல்புகளைக் கொண்டதுமான நவ-ஃபாசிசம் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய நிகழ்வாகும். அதிதீவிர தேசியவாதமும் இனவாதமும் இனவுணர்வு முற்சாய்வுகளைப் பாவிப்பதோடு தேவைக்கேற்ப சனரஞ்சக அரசியலிலும் இறங்குவதான போக்கு ஐரோப்பிய நவ-ஃபாசிசத்தின் முக்கிய அம்சங்களாயின.

ஜனநாயகத் தோற்றங்காட்டும் மேற்குலக நாடுகளில் ஆழ ஊடுருவியுள்ள இனவெறியும் நிறவெறியும் பலருக்கு அதிர்ச்சியைக் கொடுக்கிறது. ஆனால் மேற்குலக சமூகங்களில் இது எப்போதுமே இருந்துவரும் ஒன்று. இந்த நெருக்கடி போன்ற பாரிய பிரச்சனைகள் உலகைத் தாக்கும் போது அவை வெளிப்படையாகவே தங்களை அடையாளங் காட்டுகின்றன.

அமெரிக்காவும் ட்ரம்பும் எதிர்காலமும்
ஐக்கிய அமெரிக்காவின் பெரிய ஃபாசிச ஊற்றுக்கண் ஏகபோக முலதனத்தின் முழுக் கட்டுப்பாட்டுள் உள்ன அரசாகும். அது சனநாயகத்தினதும் சுதந்திரத்தினதும் அவற்றினும் முக்கியமாக அமெரிக்க வாழ்க்கை முறையைப் பாதுகாப்பதினதும் பெயரில் நாட்டினுள்ளும் வெளியிலும் ஒரு ஃபாசிச வேலைத்திட்டத்தை முன்னெடுக்கிறது. இதை நாட்டுக்குள்ளேயும் வெளியிலும் அது தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்திருக்கிறது. இதற்கான அரசியல் ஆதரவு அரசியல் கட்சிகளின் பேதமின்றிக் கிடைத்துள்ளது. இதன் பின்னணியில் பார்த்தால் அமெரிக்க வலதுசாரி கிறிஸ்தவ அடிப்படைவாத எழுச்சி தற்செயலல்ல. 1964ம் ஆண்டு குடியரசுக் கட்சியின் சார்பில் சனாதிபதித் தேர்தலிற் போட்டியிட்டுத் தோற்ற பரி கோல்ட்வாட்டரும் (Barry Goldwater) 2016ம் ஆண்டு சனாதிபதித் தேர்தலில் அக் கட்சியின் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பும் (Donald Trump) இனவெறிப் பிறழ்வுகளல்ல. அவர்கள் அமெரிக்கச் சமூகத்தை ஊடுருவும் பிற்போக்கான வெள்ளை மேம்பாட்டுச் சித்தாந்தத்தின் பிரதிநிதிகளாவர்.

இந்தப் போராட்டங்கள் எதிர்த்திசையில் இயங்கும் ட்ரம்ப் போன்றவர்களின் அரசியல் எதிர்காலத்திற்கு வாய்ப்பாகவுள்ளது. போர்க்குணமுள்ள அதி-தேசியவாத, அடிப்படைவாதக் கட்சிகள் ட்ரம்ப் போன்றவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றார்கள். இது அதிதீவிர வலது தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதற்கும் தேர்தல்களில் வெற்றிபெறுவதங்குமான வாய்ப்பை வழங்கியுள்ளன. ட்ரம்பின் மீள்வருகை இப்போதைய நிலையில் மிகவும் சாத்தியமானதொன்றாகவே தெரிகிறது.

ஜோர்ஜ் ஃபுளோய்ட் இன்று அதிகாரத்துக்ககெதிராகக் குரல் கொடுக்கும் அனைவருக்குமான குறியீடாக மாறியுள்ளார். மாற்றங்கள் நடக்கும் என்று பலர் எதிர்பார்க்கிறார்கள். மாற்றங்களைச் சாத்தியப்படுத்தக்கூடிய மந்திரக்கோல் யாரிடமும் இல்லை. ஆனால் போராட்டம் மட்டுமே உரிமைகளை வெல்வதற்கான வழி என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். வறுமைதான் குற்றத்தினதும் போராட்டத்தினதும் ஊற்றுக்கண் என்றார் அரிஸ்டோட்டில். இப்போது வறுமை குற்றமாக அல்ல வெல்வதற்கான போராட்டமாக எம்முன்னே விரிந்துள்ளது. நாங்கள் ஒவ்வொருவரும் ஜோர்ஜ் ஃபுளோய்ட்டே. உரிமை மறுக்கப்பட்ட தமிழனும், காஷ்மீரியும், குர்திஷ்களும், பாலஸ்தீனியர்களும் ஜோர்ஜ் ஃபுளோய்ட்டே. இந்தப் போராட்டம் ஒடுக்கப்பட்ட உரிமை மறுக்கப்பட்ட ஒவ்வொருவருடையதும் போராட்டம். அந்த உண்மை எமக்கு விளங்கவேண்டும். அதிகாரமையங்களில் கையேந்தி காத்திருக்கும் இழிநிலையை நாம் நிறுத்தவேண்டுமாயின் ஒன்றிணைவோம், போராடுவோம், அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *