அரசியல்உள்ளூர்

ஜனநாயகமும் இராணுவமும் என்ற இரட்டைக்குழல் துப்பாக்கி

ஆசிய அனுபங்களை முன்வைத்துச் சில குறிப்புகள்

அறிமுகம்

உலகிலும் உள்ளூரிலும் அண்மைய நிகழ்வுகளதும் நிலவரங்களதும் அடிப்படையில் நோக்கின் மனிதர்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்க இயலாதுள்ள இராணுவத்தின் பங்கு ஆராய்வுக்குரியது. போருக்குப் பிந்திய இலங்கையிலும் அண்மைய பாகிஸ்தான் பாராளுமன்றத் தேர்தலிலும் போன்று, மியன்மார், தாய்லாந்து, நேபாளம் ஆகியன உட்பட்ட பல ஆசிய நாடுகளின் ஜனநாயகக் கட்டமைப்பில் இராணுவச் செல்வாக்கு தவிர்க்கவியலாதுள்ளது. கூறிய நாடுகளில் ஒவ்வொன்றும் தனக்கேயுரிய சிவில்-இராணுவ உறவுநிலைகளைக் கொண்டது.

இப் பின்னணியில் சமூகத்திற் செல்வாக்குச் செலுத்தும் கூறாக எவ்வாறு இராணுவம் உருப்பெறுகிறது என்பதையும் அவ் விருத்தியில் எத்தகைய ஆபத்துகள் உட்பொதிந்துள்ளன என்பதையும் நாம் நோக்க வேண்டும். குறிப்பாக, இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இராணுவத்தின் முழு ஆதரவுடைய ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதைக் கவனிப்பது பொருந்தும்.

மூன்றாமுலக நாடுகளில் ஜனநாயகம் வெவ்வேறு வகைகளிற் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதைக் கொலனியாதிக்கத்திற்கு எதிரான வீரமிகு விடுதலைப் போராட்டங்களும் கொலனியத்துக்குப் பிந்திய அரசின் தன்மையும் செயற்பாடுகளும் உட்படப் பல்வேறு காரணிகள் தீர்மானித்தன. இப் பின்புலத்தில் ஜனநாயகம் இராணுவமயமாதலை நோககல் தகும்.

இலங்கை ஜனநாயகமும் வியத் மகவும் 

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் மகிந்த ராஜபக்சவின் சகோதரருமாகிய கோத்தபாய ராஜபக்ச, 2019ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கையில் எடுத்துள்ள கருவி ‘வியத் மக’ (கற்றோரின் பாதை) என்ற அமைப்பாகும். இப்போது, இலங்கை அரசியல் அடுத்தாண்டு வரவுள்ள ஜனாதிபதித் தேர்தலை மையப் படுத்துகிறது. தேர்தலில் மகிந்த ராஜபக்ச போட்டியிடமுடியாத நிலையில் கூட்டு எதிரணி வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்ததை யொட்டி கோத்தபாய ராஜபக்ச தான் போட்டியிடுதற்கான ஆயத்த வேலைகளை ‘வியத் மக’ மூலம் முன்னெடுத்துள்ளார்.

மூன்று குழுக்கள் வியத் மகவின் அடித்தளமாக உள்ளன. முதலாவது, முன்னாள் இராணுவ வீரர்கள். இவர்கள் கடந்த ஆட்சிக் காலத்தில் இராணுவத்தில் உயர் பதவி வகித்துச் செல்வாக்குடன் இருந்தவர்கள். ஆட்சி மாற்றம் இராணுவத்துள் இவர்களின் செல்வாக்கைக் கணிச மாகக் குறைத்தது. அதையொட்டி ஓய்வுபெறறோரும் விலகினோரும் இக் குழுவில் அடக்கம்.

இரண்டாவது, வர்த்தகர்கள். இவர்கள் இரு வகையினர். ஒரு பகுதியினர் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இலங்கையில் புதியதொரு முன்னிலை வர்த்தகர்கக் குழுவினராக உருவானோர். இவர்கள் ஆங்கில கொலனியப் பண்பாட்டுக்கு இசைவான ‘கொழும்பு ஏழு’ பாரம்பரிய உயர்குடியினர் அல்ல. மாறாக நடுத்தர வர்க்கத்திலிருந்து கிளைத்துச் சிங்கள பௌத்தத் தேசியவாதத்தை ஏற்போராவர். இவர்கட்கும் ராஜபக்ச குழாத்துக்கும் இருந்த நல்லுறவு அரசின் ஆதரவுடன் இவர்களைப் பெருச் செல்வர்களாகவும் வர்த்தகர்களாகவும் உயர்த்தியது. இன்னொரு பகுதியினர் தமிழர்களாயும் முஸ்லீம்களாயும் இருப்பினும் மகிந்த குழாத்துடன் தமது நெருங்கத்தின் மூலம் ஏராளமாகக் காசு பார்த்தவர்கள். அவர்களில் ஒரு தமிழ் வர்த்தகர் அண்மைய வியத் மக நிகழ்வொன்றிற் சிறப்புரை ஆற்றியமை இந்த இரண்டாவது வகையினரை அடையாளங்காட்டப் போதியது. இவ் இருவகை வர்த்தகர்கட்கும் ஆட்சி மாற்றம் உவப்பானதல்ல. இவர்கள் தமது பொருளாதார நலன்கட்காக மகிந்த ஆட்சியை மீட்க முனைகிறார்கள்.

மூன்றாவது, கற்றோர். இவர்கள் சிங்கள பௌத்த பெருந்தேசியவாத அகங்காரத்தின் பிரதிநிதிகள். இவர்கள் நாட்டின் அபிவிருத்திக்கு ஒழுங்கு முக்கியம் என நம்புவோர். மனித உரிமைகள் பற்றியோ சிறுபான்மை உரிமைகள் பற்றியோ இவர்கட்கு அக்கறை கிடையாது. இலங்கையைச் சிங்கபூராக்கத் துடிக்கும் இவர்களிற் பலர் இலங்கை வாசிகளல்ல.

இம் மூன்று குழுக்களையும் உள்ளடக்கிய அமைப்பாக வியத்மக செயற்படுகிறது. இங்கு சில விடயங்களைக் கவனிக்க வேண்டும். அரசியல் கட்சிகட்கு வெளியே உள்ள அமைப்பாக இதை ஆக்கிப் பேணுதல் மூலம், கோத்தபாய பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் ‘பொது வேட்பாளராகக்’ களமிறங்க முனைகிறார். இதனால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியோ அல்லது புதிதாகத் தோன்றிய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவோ கோத்தபாயவை உள்வாங்கும் வாய்ப்பை வியத் மக உருவாக்கியுள்ளது. அவரது இராணுவப் பின்னணியும் இராணுவத்தினரின் முழுமையான ஆதரவு என்ற பிம்பமும் இதற்கு உதவுவன.

கோத்தபாய, ஹிட்லர் போற் செயற்பட்டேனும் நாட்டுக்குச் சுபீட்சத் தைக் கொண்டுவர வேண்டும் என அஸ்கிரிய உபபீடாதிபதி தெரிவித் தமை, இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, ஜனநாயகமற்ற ஆட்சியை வழங்குவதாக உறுதியளித்து ஜனநாயகத் தேர்தலில் போட்டியிடும் வினோதத்தை முன்னறிவிக்கிறது. சர்வாதிகாரத்தை நேரடியான ஒரு தெரிவாக மக்களுக்கு வழங்குவது இலங்கை ஜன நாயகத்திற்குப் புதிது.

வியத் மகவின் பிரதான கருவிகள் இரண்டு. ஒன்று, சிங்கள பௌத்த பேரினவாதம் மற்றது இராணுவ மேலாதிக்கம். வியத் மக அமைப்பு இவ்விரண்டின் மீதுங் கட்டியெழுப்பப்படுகிறது. அதேவேளை, ‘இலங் கையின் பிரச்சனை கொள்கைகளிலில்லை. அரசிடம் நல்ல கொள்கை கள் உள்ளன. வினைத்திறனின்மையும் ஒழுங்கீனமுமே பிரச்சனைகள்’ என்றும் ‘வேலை நிறுத்தங்கள் அபிவிருத்தியைப் பாதிக்கின்றன’ என்றும் வியத் மகவினர் சொல்வர். எனவே இராணுவத்திற் காணும் ஒழுங்கு போல நாட்டு மக்களிடமும் ஒழுங்கு வேண்டும். அதை வழங்கத் தக்கவர் ஒரு இராணுவ வீரரே என்ற தோற்றம் புனையப் படுகிறது. அதே வேளை இலங்கையை சிங்கப்பூர் போல மாற்ற வேண்டின் சர்வாதிகாரத் தன்மையுடைய ஆட்சியே சரி என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

இலங்கை ஜனநாயகத்திற்கு இது புதிது. அத்துடன் பல வகைகளில் பலவீனமான ஜனநாயகமாக இருந்துள்ள நாட்டின் எதிர்காலம் மக்கள் ஆணையுடன் சர்வாதிகாரத்தை நோக்கித் திசைமாறுவது ஆய்வுக் குரியது. சுதந்திரத்துக்குப் பிந்திய இலங்கை தொடர்ந்து ஜனநாயக மாக இருந்தாலும் அது வலுவான ஜனநாயகமாக வளரவில்லை. அதன் பலவீனமான ஜனநாயகதுட் பொதிந்துள்ள சிக்கல்கள் இன்று ஜனநாயக மறுப்பை ஒரு தெரிவாக்கும் நிலையை உருவாக்கியுள்ளன.

மூன்றாண்டுக் கால ‘நல்லாட்சி’ அரசாங்கத்தை இதற்கு உதாரண மாகக் கொள்ளலாம். ஜனநாயகத்தின் காவலன் தானே என்ற பிரகட னத்துடன் பதவியேற்ற இந்த அரசாங்கத்தின் தோல்வி ஜனநாயகம் மக்களுக்குச் சேவையாற்ற இயலாதது என்ற கருத்தை உருவாக்கி யுள்ளது. தொடரான பிரசாரங்கள் மூலம் எதிர்க் கட்சிகள் அக் கருத்தை மக்களிடையே விதைத்துள்ளன. இவ்வாறு, ஜனநாயகக் கட்டமைப்புக்குள் ஒரு ஜனநாயக மறுப்புத் தெரிவை வழங்கும் சூழல் உருவாகிறது. அதற்கு இராணுவவாதமும் சிங்கள‒பௌத்த அடிப்படை வாதமும் மிக உதவுகின்றன.

சுதந்திரம் முதல் ஜனநாயகக் கட்டமைப்பைப் பேணும் ஒரு நாடு என்றளவில் இலங்கையில் இவ்வாறு ஜனநாயக மறுப்பே ஜனநாயகத் தெரிவாக முன்வரும் நிலை புதிரானது. ஆனால் இத்தகைய சிந்தனை இலங்கைக்குப் புதிதல்ல. அதை விளங்க, இலங்கை அரசியலின் தவிர்க்கவொணா அம்சமாயிருந்த பௌத்தம் எவ்வாறு அரசியற் கட்சி வடிவிற் பாராளுமன்ற அரசியலின் பகுதியானது என்பதை வைத்து விளக்கலாம்.

இலங்கையின் அரசியல் முடிவுகளில் பௌத்தம் செல்வாக்குச் செலுத்தும் மரபு இருந்தபோதும், அரசியலுக்கு மேம்பட்ட தளத்தில் பௌத்தம் தன்னை நிறுவியிருந்ததால் அது அரசியலில் நேரடியாகப் பங்குபற்றவில்லை. மேலுஞ் சரியாகச் சொல்லின் பௌத்தம் தன்னைப் பாராளுமன்றக் கட்சி அரசியலில் நேரடியாக ஈடுபடுத்தவில்லை. ஆனால், இன்று, பாராளுமன்ற அரசியலிற் பங்காளிகளாயும் அரசியற் கட்சிகளாகவும் பௌத்த பிக்குகள் இயங்குகின்றனர். இம் மாற்றம் கடந்த இருபது ஆண்டுகளுள் நிகழ்ந்தது. கட்சி அரசியலுக்கு மேம்பட் டோராகத் தெரிந்தவர்கள் எவ்வாறு அரசியல்வாதிகளாகி மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றனர் என்பது சுவையான கதை.

கதையின் காரணகர்த்தா கங்கொடவில சோம தேரர். 1990களின் நடுப் பகுதி முதல் 2003ம் ஆண்டு இறக்கும் வரை ஊடக ஓளியில் திளைத்த இத் தேரரின் தீடீர் மரணம் பௌத்த அரசியல் எழுச்சியின் தொடக்கமானது எனலாம். 2003ம் ஆண்டு ரஷ்யாவுக்குச் சென்றிருந்த வேளை சோம தேரர் இறந்தார். அவருடைய மரணம் இயல்பானதல்ல என அவருடைய சகாக்களிலும் சீடர்களிலும் பெரும்பாலோர் கருதினர். சோம தேரரின் மரணம் திட்டமிட்ட கொலை என்றும், கிறிஸ்தவ மதக் குழுக்களின் சதியின் விளைவு என்றும் பெரும்பாலான சீடர்களும் பற்றார்வலர்களும் நம்பினர். தேரரின் மர்ம மரணத்துக்கு மிஷனரிக் குழுக்களும் கிறிஸ்தவ அரசுசாரா நிறுவனங்களுமே பொறுப்பு எனக் கூறும் சுவரொட்டிகள் கொழும்பு பரவலாக ஒட்டப்பட்டன.

சோம தேரர் கிறிஸ்தவத்தையும் கிறிஸ்தவ மதமாற்றத்தையும் தீவிர மாக விமர்சித்தவர். இலங்கையில் முஸ்லிம் அரசியலையும் அவர் வன்மையாக விமர்சித்தார். அவரது மரணத்தின் போது, அதற்கு ஒரு வருடத்துக்கு முன்னர் அவர் நிறுவிய ஒரு சிறிய அரசியல் கட்சியின் தலைவராகவும் அவர் இருந்தார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள-பௌத்த அரசியல் நலன்களைக் காக்கவும் நாட்டின் தார்மீக மீழெழுச்சிக்காகவுமே தான் போட்டியிடுவதாக அவர் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். பௌத்த பிக்கு ஒருவரின் நேரடி அரசியல் பிரவேசத்தின் முதல் வேட்டு அதன் போது தீர்க்கப்பட்டது எனலாம்.

சோம தேரரின் மரணமும் மரணச்சடங்கும் பாரிய அரசியல் நிகழ்வு களாயின. அவரின் அரசியல் நம்பிக்கைகளும் நடைமுறைகளும் தீவிர வாதச் சாயல்மிக்க சிங்கள தேசியவாதக் குழுக்களுக்கு உடன்பாடாக இருந்தன. அவை, சோம தேரரின் மரணச் சடங்கைத் தங்கள் அரசியல் எழுச்சிக்கும் கிறிஸ்தவ எதிர்ப்பு எழுச்சிக்கும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தினர். பின்னர் இது மெதுமெதுவாக ஏனைய சிறுபான்மையினருக்கு எதிராக மாறியது. அதன் விதைகளை சோம தேரர் விதைத்திருந்தார்.

நாதியற்ற சிங்கள-பௌத்தர்களின் நலன்களைத் தமிழ், முஸ்லிம் வர்த் தகர்கள் கபடமாகக் கையாடுவதாக அமைதியான தொனியில் கவன மாகத் தேர்ந்த மொழியில் அவர் முன்வைத்த விமர்சனம் கண்டனம் மிக்கதாயும் அனர்த்தத்தை ஏற்படுத்த வல்லதாகவும் அமைந்தது. சிங்கள பௌத்தர்களின் பொருளாதார நலன்கள் தமிழ், முஸ்லிம் வர்த்தகர்களின் நேரடி அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளதென அவர் தனது போதனைகளில் மீளமீள வலியுறுத்தினர். அவ் வர்த்தகர்கள் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டோரென்றும் சமூகரீதியாக ஒருங்கிணைந் தோர் என்றும் அவர் சொன்னார். சிங்கள-பௌத்த வர்த்தகர்கள் அதிக செயலூக்கமும் உறுதியுமுடையோராய் இருக்க வேண்டும் என்று அவர் வேண்டினார். தொழிலதிபர்களின் சவால்களை எதிர்கொள்ளத் தயங்குவதாகச் சிறுபான்மை இன வர்த்தகர்களை அவர் கண்டித்தார்.

2025ம் ஆண்டில் சிங்கள-பௌத்தர்கள் குடித்தொகையிற் சிறுபான்மை யினராவர் என்ற கருத்தையும் சோம தேரர் பிரசாரம் செய்தார். அப் பிரசாரத்தில் அவர் முஸ்லிம் சமூகத்தைக் குறிப்பாக விமர்சித்தார். இங்கு அவர் பகுத்தறிவீனத்தின் எல்லையைத் தாண்டினார். சிங்கள-பௌத்தர்கள் குடும்பக்கட்டுப்பாடு பேணுகையில் முஸ்லிம்கள் தாராள மாகப் பிள்ளைகளைப் பெறுகிறார்கள் என்பது அவரது வாதத்தின் அடிப்படை. சோம தேரரின் நிலைப்பாட்டை இன்னொரு வகையில் நோக்கின், கொழும்பு முஸ்லிம், தமிழ் வர்த்தகர்களால் மட்டுமன்றிப் பூகோளமயமாக்கலாலும் மிரட்டுறும் சிறிய சிங்கள வர்த்தக வர்க் கத்தின் அச்சத்தையும் பாதுகாப்பின்மையையுமே சோம தேரர் வெளிப் படுத்தினார் எனலாம்.

1990களின் நடுப் பகுதியில் சுயாதீனத் தொலைக்காட்சி வழி தனது போதனைகளைத் தொடங்கிய சோம தேரரே இலங்கையில் தொலைக் காட்சி ஊடகத்தை வெற்றிகரமாகக் கையாண்ட முதலாவது இலங்கைப் பௌத்த பிக்கு ஆவார். அவரது வெற்றியும் செல்வாக்கும் தொலைக்காட்சி மூலம் அவரது போதனைகள் வழியாகக் கட்ட மைந்தன. நடைமுறைப் பௌத்தம் இந்து சமயத்திலிருந்து பெற்றுச் சில பௌத்தர்கள் பின்பற்றும் பழக்கங்கள் பற்றி அவரது கடும் விமர்சனங்கள் ஆரம்பத்தில் அவரது தொலைக்காட்சிப் போதனைகள் மிகுந்த கவனம் பெறக் காரணமாயின. இவ் வகையில் இலங்கையின் பௌத்தர்கள் அநேகர் சோம தேரரை மரியாதைக்குரிய முன்னுதாரண மான பிக்குவாயும் அச்சமற்ற சமய சீர்திருத்தவாதியாயும் நோக்கினர்.

தமிழர்க்கும் முஸ்லிம்கட்கும் எதிரான சோம தேரரின் இனத்துவ அரசியல் நிலைப்பாடுகளின் ஆபத்தை அறிந்த சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் அந் நிகழ்ச்சியை நிறுத்தியது. தனது தொலைக்காட்சியை மக்களிடம் கொண்டு செல்லும் உத்தியை நன்கு அறிந்தவரும் ஜக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்ஹவின் சகோதரருமான ஷான் விக்ரமசிங்ஹ அதை வாய்ப்பாக்கித் தனது டி.என்.எல். தொலைக் காட்சியில் தேரருக்குத் தேவையான இடத்தை அளித்தார்.

சிறு வர்த்தகர்கள், நடுத்தரச் சம்பளகாரர், சுய தொழிலாளர், பெண் கள், இளைஞர் ஆகியோரிடையே சோம தேரரின் ஈர்ப்புப் பிரதான மாகக் காணப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் அடிப்படையில் நகர, அரை-நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரும் கீழ்-நடுத்தர வர்க்கத்தினரு மாவர். சமூக நோக்கிலும் அரசியலிலும் சோம தேரர் பழமைவாதி. அப் பழமைவாதம் சமூக மாற்றத்தின் வேதனையான செயல்முறைக்கு உட்பட்ட சிங்கள சமூகப் பிரிவைக் கவர்ந்தது. அவரது மரணத்தின் பின்னர் பிறர் அதை வெற்றிகரமாகப் பயன்படுத்தினர்.

சோம தேரரின் வாழ்வு பற்றிப் பொதுவகச் சொல்லாத செய்தி ஒன்று ண்டு. பெரும்பாலான இலங்கைப் பௌத்த பிக்குகள் போல் அவர் ஒரு சிறுவனாகத் தீட்சை பெறவில்லை. ஒரு முதிர்ந்த வாலிபனாக இருபத்தைந்து வயதில் அவர் பிக்குவானார். வர்த்தக முயற்சிகளில் அடுக்கடுக்காக வந்த தோல்விகளையடுத்தே அவர் துறவு வாழ்வைத் தெரிந்தார். பிந்திய வயதில் பிக்குவான அவர் பிரிவெனாவிலோ பல் கலைக்கழகத்திலோ கற்றவர் அல்லர். அவருக்குப் பண்டித, சாஸ்த்ர வேதி, சாஸ்த்ரபதி போன்ற சம்பிரதாயமான பட்டம் எதுவும் இல்லை. பிக்குகளின் படிநிலை அமைப்புகளில் அவர் எப் பதவியும் வகிக்க வில்லை. இருந்தும், அவரது பேச்சுத் திறனும் இலாவகமாக ஊடகங் களைக் கையாளும் ஆற்றலும், அவர் கிளறிவிட்ட “சிங்கள-பௌத்தத் தின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தல்” என்ற அச்ச உணர்வும் அவரை முன்னிலைக்குக் கொண்டுவந்தன. எச் சரக்கு இலகுவாக விலையா கும் எனறு அவர் அறிந்திருந்தார்.

இன்று அரசியலில் நேரடியாகப் பங்குபெறுவோராக உள்ள புத்த பிக்குகள் வன்முறையிலும் ஈடுபடுகின்றனர். அதை இலங்கைச் சமூகம் ‘பௌத்தத்தைக் காக்கும் நடவடிக்கை’ எனும் அடிப்படையில் ஏற்கிறது. அதையொத்து, இராணுவம் இலங்கை அரசியலில் நேரடியாகப் பங்கு பெறுதற்கான அடிப்படைகள் உருவாக்கப்படுகின்றன.

அரசுக்கெதிரான போராட்டங்களும் கிளர்ச்சிகளும் நிகழ்ந்தபோதும் இலங்கை தனது ஜனநாயகக் கட்டமைப்பைப் பேணியது. 1971 தொட்டு, இலங்கையில் அரசுக்கெதிரான கிளர்ச்சிகளும் வன்முறைப் போராட்டங்களும் இடம்பெற்றுள்ளன. இவ்வாறான நிலைமைகளிற், பிற மூன்றாமுலக நாடுகள் எளிதாகச் சர்வாதிகார ஆட்சியை நோக்கி உந்தப்படுகின்றன. அதன் சான்றுகளைத் தென்னாசியவிலும் ஆசியா வின் பிற பகுதிகளி;லும் காணலாம். 1962இல் பர்மாவிலும் 1965இல் இந்தோனீசியாவிலும் 1970இல் கம்போடியாவிலும் 1972இல் ஃபிலிப் பின்ஸிலும் இராணுவ சர்வாதிகாரம் ஏற்பட்டது. பாகிஸ்தான் முதலில் 1958இலும் பின்பு 1977இலும் 1999இலும் இராணுவ சர்வாதிகாரத்துக்கு உட்பட்டது. பங்களாதேஷில் முதலில் 1975இலும் பின்பு 1982இலும்  இராணுவ ஆட்சி ஏற்பட்டது. இலங்கையும் இந்தியாவும் தமது ஜனநாயக நிறுவனங்களை இன்னும் தக்கவைத்துள்ளன. தீவிர உள் நெருக்கடிகளின் நடுவிற் பாராளுமன்ற ஜனநாயக முறை தப்பிப் பிழைத்ததும், நாடு இராணுவத்தினதோ அலுவலர் ஆட்சியினதோ அவற்றின் கூட்டினதோ சர்வாதிகாரத்துள் அகப்படாமை விதிவிலக்கே. ஆனால் நெருக்கடிகள் புதிய போக்குகட்கு வழி செய்தன.

சுதந்திரத்திற்குப் பின்னர் அரசுக்கு எதிராக நடந்த கிளர்ச்சிகளதும் கலகங்களதும் பின்னபுலத்தில் இலங்கையின் இராணுவமயமாக்கல் நிகழ்ந்தது. ஒவ்வொரு கிளர்ச்சியும் எதிர்ப்பும் அரசு இராணுவமய மாக்கலைத் தீவிரமாக்கும் வாய்ப்பாகவும் நியாயமாகவும் அமைந்தது. முப்பது-ஆண்டுக்கால யுத்தம் இராணுவத்தை அரசின் பங்காளியாக்கி யது. இருந்தும், 1962இல் ஆயுதப் படையினர் சிலர் முயன்றது போல, இராணுவம் அரசைக் கைப்பற்ற நினைக்கவில்லை. ஏனெனில் இலங் கையில் முரண்பட்ட அரசு வடிவங்கள் இரண்டின் சகவாழ்வு நடக் கிறது. பாராளுமன்ற அரசியல் என்ற அரசு வடிவமும், சர்வாதிகாரம் என்ற அரசு வடிவமும் கூடி வாழச் சமசரம் ஒன்றை ஏற்படுத்தின. பாராளுமன்ற ஜனநாயகத்தைத் தூக்கிவீசவோ ஒழிக்கவோ வேண்டும் எனச் சர்வாதிகாரம் வற்புறுத்தவில்லை. பாராளுமன்ற ஜனநாயகமும் சர்வாதிகாரத்தாற் பயனடைகிறது.

முதலாளிய ஜனநாயகமும் சர்வாதிகாரமும் முழு முரணானவையல்ல. சர்வாதிகாரம் சட்டரீதியான அங்கீகாரத்துக்கு ஜனநாயகத்தை நாடு கிறது. ஜனநாயகம் சவால்கட்கு எதிராகத் தனது நிலைப்புக்கு சர்வாதிகாரத்தைத் துணைக்கழைக்கிறது. 1970களின் இறுதிப் பகுதி யில் அறிமுகமான திறந்த பொருளாதாரக் கொள்கையும் 1990களில் இலங்கையைச் சூழ்ந்த உலகமயமாக்கலும் ஜனநாயக-சர்வாதிகார இணைவுக்கு உதவின. எனவே இலங்கையில் இரண்டும் இணங்கி நவகொலனிய தாராண்மை ஜனநாயக வடிவம் கொண்டுள்ளன.

காலம் மாறுகிறது. முதலாளியத்தின் தோல்வியும் ஜனநாயக முக மூடியோடு நவதாரளவாதத்தைத் செயற்படுத்த இயலாமையும் வீரமான தொழிலாளர் போராட்டங்களும் மக்கள் போராட்டங்களும், தவிர்க்க வியலாது, நவதாராளவாதம் ஜனநாயகத்தைப் பாவிக்க இயலாத நிலையைத் தோற்றியுள்ளன. இப் பின்னணியில் ஜனநாயகத்தின் பெயரால் சர்வாதிகார ஆட்சியை உருவாக்குமாறு நவதாரளவாதம் உந்தப்படுகிறது. இதை வேறு உதாரணங்களின் உதவியுடன் விளங்க லாம்.

பாகிஸ்தான்: ஜனநாயகமாக இராணுவம்

பொது அலுவல்களில் இராணுவச் செல்வாக்குமிக்க நாடுகளில் பாகிஸ்தானுக்குத் தனியிடம் உண்டு. அண்மைய பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் இம்ரான் கான் வென்று பிரதமரானதில் பாகிஸ்தான் இராணுவத்தின் பங்கு பெரிது. சுதந்திரத்துக்கு பிந்திய பாகிஸ்தானில் ஜனநாயகத் திற்கும் இராணுவத்திற்கும் உள்ள உறவே பாகிஸ்தான் அரசியலின் அச்சாணியாக இருக்கிறது. இவ்வுண்மை இத் தேர்தலில் மீளவும் நிறுவப்பட்டுள்ளது.

1947ம் ஆண்டு பாகிஸ்தான் சுதந்திரமடைந்தது முதல், ஆளணியிலும் செல்வாக்கிலும் இராணுவம் தொடர்ந்து வளர்ந்தது. சுதந்திரத்துக்குப் பின் காஷ்மீர் பற்றி இந்தியாவுடனும் துராந்த் எல்லைக்கோடு பற்றி ஆப்கானிஸ்தானுடனும் இருந்த முறுகலும் பிரித்தானிய இந்தியாவி லிருந்து பிரிந்து உருவான புதிய தேசத்தின் சமூகங்கட்கிடையிற் பதற்றமும் பாகிஸ்தானில் நிச்சயமின்மையை உருவாக்கின. அதே வேளை, அரசியல் முறையின் குறைவிருத்தி, ஜனநாயக விழுமியங் களை முழுதாக உள்வாங்கிய நாடாக பாகிஸ்தான் அமைய உதவ வில்லை.

1950களில் ஊச்சமடைந்த சர்வதேசக் கெடுபிடிப் போரில் அமெரிக்கத் தரப்பைப் பாகிஸ்தான் நாடியதையொட்டி, இராணுவத்தின் கரங்கள் பலப்பட்டன. தென்னாசியாவில் கம்யூனிசப் பரவலைத் தடுக்கும் பணியில் அமெரிக்காவின் அடியாளாக பாகிஸ்தான் விளங்கியது. 1954இல் அமெரிக்காவுடன் இராணுவ உடன்படிக்கையில் ஒப்பமிட்ட பாகிஸ்தான், சியாட்டோ (Southeast Asia Treaty Organization, SEATO) சென்டோ (Central Treaty Organization, CENTO) ஆகியவற்றில் இணைந்தது சோவியத் யூனியனுக்கு எதிரான இராணுவக் கூட்டிற் பங்கெடுத்தது. இந்தியாவிடமிருந்து இராணுவப் பாதுகாப்புக்கு அமெ ரிக்காவுடனான கூட்டு பயனளிக்கும் எனப் பாகிஸ்தான் எதிர்பார்த்த  இக் காலப்பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் செல்வாக்கு மிகுந்து அரசியல் வாழ்விற் தவிர்க்கவியலாதாகியது. பாகிஸ்தானின் எதிர் பார்ப்புகட்கு மாறாக 1965இலும் 1971இலும் இந்தியாவுடனான போரில் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு உதவ மறுத்ததையடுத்து இரு நாடு களதும் உறவில் விரிசல் ஏற்பட்டாலும் ஆப்கானுட் புகுந்த சோவியத் படைகளை வெளியேற்றத் தலிபான்கட்கு உதவ அமெரிக்கா பாகிஸ் தானை நாடியது. அதையடுத்து அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஏராளமான பணமும் இராணுவ உதவிகளும் வழங்கியது. சோவியத் யூனியனுக்கு எதிரான ‘புனிதப் போருக்கு’ ஆள், ஆயத உதவிக் களமாக பாகிஸ்தான் மாறியது.

கெடுபிடிப் போர் காலத்தில் அமெரிக்க இராணுவ, புலனாய்வுத் தளங்கள் பல பாகிஸ்தானில் இருந்தன. 1960ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் அமெரிக்கத் தளத்தில் இருந்து புறப்பட்ட ரு2 உளவு விமானத்தை சோவியத் யூனியான் சுட்டு வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து சோவியத் யூனியனில் உளவுபார்க்க அமெரிக்கா பாகிஸ் தானைப் பாவித்தமை அம்பலமானது. அமெரிக்கா இன்னமும் பல இராணுவத் தளங்களையும் விமானத் தளங்களையும் பாகிஸ்தானில் கொண்டுள்ளது.

அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத் தாக்குதல்களின் பின் ஆப்கா னிஸ்தான் மீது அமெரிக்காவின் போரில் அதன் பிரதான இராணுவத் தளமாக பாகிஸ்தான் பயன்பட்டது. இன்றும் பல தளங்களை அமெ ரிக்க இராணுவம் பாவிக்கிறது.

பாகிஸ்தான் வரலாற்றில் அரசியல்வாதிகள் ஊழற்காரர்களாயும் வினைத்திறனற்றோராயும் காணப்பட்டனர். எனவே இராணுவம் நம்பிக் கைக்குரியதாகத் தெரிந்தது. அத்துடன், மக்கள் இராணுவத்தை நாட் டின் மீது பற்றும் அக்கறையும் உடையதாகப் பார்க்கப் பழகிவிட்டனர். குறிப்பாக 1947இல் சுதந்திரம் முதல் 1958 வரையான 12 ஆண்டு களில் அரசியல்வாதிகள் நிலையான ஆட்சியை வழங்கத் தவறினர். 1948ம் ஆண்டு முகம்மது அலி ஜின்னா இறந்த பின் அடுத்தடுத்து நிகழ்ந்த ஆட்சி மாற்றங்கள் நிலையற்ற அரசாங்கங்களையே தந்தன.

அதைக் காரணமாக்கி இராணுவத் தளபதி அயூப் கான் 1958ம் ஆண்டு இராணுவச் சதி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். 1971ம் ஆண்டு பங்ளாதேஷ் பிரிவினையின் பின் இராணுவ ஆட்சி முடிந் தாலும், ஜனநாயக ஆட்சி ஆறு ஆண்டுகளே நிலைத்தது. 1977இல் இராணுவத் தளபதி ஸியா-உல்-ஹக் இரத்தஞ் சிந்தா இராணுவச் சதி மூலம் ஆட்சியைப் பிடித்தார். 1988இல் கொலை முயற்சி எனக் கருதப் படும் ஒரு விமான விபத்தில் அவர் சாகும் வரை இராணுவ ஆட்சி தொடர்ந்தது. 1999இல் இராணுவச் சதி மீண்டது. ஆட்சியைப் பிடித்த தளபதி பேர்வெஸ் முஷாரஃப் 2008ம் ஆண்டு பதவிவிலகும்வரை பாகிஸ்தானில் இராணுவ ஆட்சி  தொடர்ந்தது.

சுதந்திரத்துக்குப் பிந்திய 70 வருடங்களில் அரைவாசிக்கு இராணுவ ஆட்சி நடந்தது. இது பாகிஸ்தானின் அரச கட்டமைப்பில் இராணுவச் செல்வாக்கைத் தவிர்க்க இயலாதாக்கியுள்ளது. கவனிக்க வேண்டியது யாதெனில் இராணுவ ஆட்சியாளர் எவரும் பெரிதாக எதையும் சாதியாவிடினும் அரசியல்வாதிகளின் இயலாமையும் ஊழலும் காரண மாகப், பாகிஸ்தான் சமூகத்தில் இராணுவத்தின் மதிப்புத் தொடர்கிறது. குறிப்பாக, பாகிஸ்தானில் இயற்கை அனர்த்தங்களின் போது இராணு வத்தின் வினைத்திறன் மிக்க செயற்பாடு இராணுவத்தில் நம்பிக்கை யை உயர்த்தியுள்ளது. அத்துடன் இராணுத்தினர் ஒழுங்கானோரும் நம்பிக்கையானோரும் நாட்டுப்பற்றுடையோரும் எனும் படிமமும் அவர் கட்கு உதவுகிறது.

இராணுவத்தை அரசியற்படுத்தி அரசியல் அலுவல்கட்குப் பாவித்ததன் மூலம் அவர்களை சிவில் அலுவல்கட்குள் உட்படுத்திய தவறு அரசி யல்வாதிகளினது. இனத்துவ, மதக் கிளர்ச்சிகட்கு அரசியல் தீர்வு காண்பதற்கு மாறாக அவற்றை இராணுவத்தைக் கொண்டு அடக்கிய தன் மூலம் இராணுவத்தை அரசியல் வாழ்விற் பங்காளியாக்கினர். குறிப்பாக 1971ம் ஆண்டு கிழக்கு வங்காளக் கிளர்ச்சியின் போதும் 1973 முதல் 1978 வரை நீடித்த பலுக்கிஸ்தான் கிளர்ச்சியின் போதும் இராணுவம் பயன்பட்டது. சுல்பிகார் அலி பூட்டோ பலூக்கிஸ்தான் கிளர்ச்சியை அடக்கப் பாவித்த இராணுவமே அவரைப் பதவி நீக்கிச் சிறைப்படுத்தித் தூக்கிலிட்டது.

பாகிஸ்தானின் மூன்று இராணுவச் சதிகளிலும் அமெரிக்கக் கைரேகை கள் உள்ளன. குறிப்பாக, பூட்டோவின் சோசலிசப் பாங்கான நடை முறை தென்னாசியாவில் சோசலிசம் துளிர்க்க இடமளிக்கும் என அமெரிக்கா அஞ்சியது. அவரது ஆட்சிக்கெதிராகத் தூண்டிய போராட் டங்களும் இராணுவச் சதியும் அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.ஐ.ஏ.) மேற்பார்வையில் இடம்பெற்றமை ஆவணப் பட்டுள்ளது.

அதன்பின், இராணுவத் தளபதி ஸியா-உல்-ஹக் நடைமுறைப்படுத்திய இஸ்லாமாக்கற் கொள்கை மதவாதிகளின் கைகளை வலுவூட்டியதோடு தீவிர இஸ்லாமிய தேசியவாதம் வளர வழியமைத்து இராணுவத்துடன் நெருங்கிய தொடர்பைப் பேணவும் உதவியது. 1988ம் ஆண்டு இரா ணுவ ஆட்சியையடுத்த ஜனநாயக நகர்வின் போது ஆட்சிக்கு வந்த பெனஸிர் பூட்டோ இராணுவத்துடன் ஒத்துழைக்கக் கட்டாயப்பட்டார். ஒத்துழைக்க மறுத்த ஒவ்வொரு முறையும் அவர் சதிகள் மூலம் பதவி நீக்கப்பட்டார். 1985இல் பஞ்சாப் மாகாண முதலமைச்சரானவரும் இராணுவ சர்வாதிகாரி ஸியா உல்-ஹக்கின் ஆதரவாளருமான நவாஸ் ஷரிஃப் பெனஸிர் ஆட்சியைக் கவிழ்க்க இராணுவ உதவியுடன் தொடர்ந்து செயற்பட்டார். இஸ்லாமிய ஜனநாயகக் கூட்டமைப்பு எனும் வலதுசாரிக் கூட்டணி மூலம் 1990இல் பாக்கிஸ்தானின் பிரதமரான நவாஸ், பின்னர் 1993இல் பிரதமரான பெனஸிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு எதிராகப் பாக்கிஸ்தான் முஸ்லிம் லீக்கை நிறுவினார். நவாஸ் பெரும்பான்மைச் பஞ்சாபி சமூகத்தவர் என்பதும் பூட்டோ குடும்பம் சிறுபான்மை சிந்தி சமூகம் என்பதும் தேர்தல்களில் நவா ஸ{க்கு ஓரளவு உதவின. இராணுவ உளவுத்துறையின் அரசியல் சூழ்ச்சிகளின் துணையுடன் 1990களில் இரு முறை அதிகாரத்திற்கு வந்த நவாஸை இறுதியில் இராணுவத் தளபதி முஷாரஃப் இராணுவச் சதி மூலம் நீக்கினார்  என்பது கவனிக்கத்தக்கது.

2007 டிசெம்பரில் தேர்தல் பிரசாரக் கூட்மொன்றின் முடிவில் பெனஸிர் கொல்லப்பட்டார். கொலையில் முஷாரஃபின் பங்கு பற்றி வலுவான ஆதரங்கள் வெளிவந்து பெனஸிரின் கொலைக்கு அவர் காரணமான வர் என்று நீதிமன்றம் தீர்த்த போதிலும், 2016ம் ஆண்டு முஷாஃhரப் நாட்டை விட்டு வெளியேற பிரதமர் நவாஸ் ஷரிஃப் அனுமதித்தார். இது பாகிஸ்தான் இராணுவத்தின் செல்வாக்குக்கு இன்னொரு சான்று.

ஏவ்வாறாயினும் நவாஸ் ஷரிஃபுக்கும் இராணுவத்திற்கும் உறவு சுமுக மானதல்ல. அதனாலேயே 2017இல் நீதிமன்றின் உதவியுடன் அவர் பதவி நீக்கப்பட்டார். இம்ரான் கானின் அரசியலை இப் பின்புலத்தில் நோக்கத் தகும். ஊழலுக்கு எதிரான போராளி, நீதிக்கான போராளி என அரசியல் வாழ்வைத் தொடங்கிய இம்ரான் கானின் கட்சி காலப் போக்கில் வலதுசாரித் தன்மை பெற்றது. ஷரியாச் சட்டங்களை இறுக் கமாக நடைமுறைப்படுத்தல், இஸ்லாமிய நல்லாட்சியை நிறுவுதல் என இஸ்லாமியக் கடுங்கோட்பாட்டுக் கருத்துகளை முன்வைத்துத் தன்னை நல்ல முஸ்லிமாகக் காட்டினார்.

நவாஸ் ஷெரீஃபுக்கும் ஊழலுக்கும் எதிரான போராட்டம் என்ற பதா கையின் கீழ் நவாஸ் ஷெரீஃபுக்கு எதிரான பிரசாரத்திற்கும் நீதித்துறை நட வடிக்கைகளின் விதிமுறைகட்கும் இம்ரான் கான் முழு ஆதரவளித்தார்.

பாகிஸ்தானின் கடுமையான மத நிந்தனைச் சட்டங்களையும் அஹம தியா சிறுபான்மையினருக்கு எதிரான அரசுப் பாகுபாட்டையும் ஆதரிப் பதன் மூலம் இஸ்லாமிய வலதுசாரிகளை அணைத்ததோடு இராணு வத்துடன் இணைந்து செயற்படும் தகுதியுள்ள ஒரு மக்கள் தலைவ ராகத் தன்னைக் காட்டினார்.

2018 மே மாதம் New York Timesக்கு அளித்த நேர்காணலில் அவர் ஓரிடத்தில் “ஒரு ஜனநாயக அரசாங்கம் அறமுறை அதிகாரத்தால் ஆளுகிறது. உங்களிடம் அறமுறை அதிகாரமில்லாவிடின்,  உடல்சார் அதிகாரங் கொண்டவர்கள் தம்மை நிலைநாட்டுவர்” என்று நவாஸ் ஷரிஃ அரசாங்கத்திற்கு இராணுவத்தின் பயமுறுத்தல்களை நியாயப் படுத்தினார். பாகிஸ்தான் இராணுவம் நட்பானதெனவும் இராணுவத் தைத் தன்னுடன் கொண்டுசெல்ல முடியும் என்றும் நம்பிக்கை தெரி வித்தார். இவ்வாறு இராணுவ ஆசியுடன் அவர் ஆட்சிக்கு வந்ததற்கு ஆதாரங்கள் வலுவானவை. அதேவேளை, அவருக்கு அறுதிப் பெரும் பான்மையைத் தவிர்த்ததன் மூலம் அவரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் இராணுவம் வழிசெய்துள்ளது.

பாகிஸ்தான் இராணுவச் செல்வாக்கின் இன்னொரு பரிமாணமும் நோக்கற்பாலது. வர்த்தகத்தில் இராணுவம் ஆதிக்கம் செலுத்துகிறது. அயிஷா சித்திக்கா எழுதிய “இராணுவம் கூட்டுருமம்: பாகிஸ்தானில் இராணுவப் பொருளாதாரத்துள்” என்ற நூல் அது பற்றி முக்கிய தகவல்களை உடையது. 2017ஆம் ஆண்டில் இராணுவத்தின் வர்த்தக முதலீட்டின் மதிப்பு 20 பில்லியன் அமெரிக்க டொலர். 12 மில்லியன் ஏக்கர் நிலம் ஒய்வு பெற்ற, சேவையில் உள்ள இராணுவ அலுவலர் களின் உடைமையாக உள்ளது.

ஒரு துண்டுக் காணியும் இல்லாத நிலமற்ற விவசாயிகள் அதிகளவில் உள்ள நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானில் பெருமளவு நிலப்பரப்பை உடைமையாகக் கொண்ட இராணுவம் பல மறைமுக வர்த்தக நட வடிக்கைகளில் ஈடுபடுகிறது, சிமெந்து முதல் பொதிசெய்த உணவுப் பொருட்கள் வரை பல்வகை பண்டங்களை உற்பத்தி செய்யும் கம் பனிகளை நடத்துகிறது. இவ்வாறான முதலீட்டு நலன்கள காரணமாக இராணுவ அதிகாரிகள் பாகிஸ்தான் மீது தமது பிடியை இறுக்கி வைத்திருக்கிறார்கள்.

பாகிஸ்தானின் சிவில் சமூகமும், வர்த்தக சமூகமும் தேசப்பற்று இல் லாதவை, திறமையற்றவை, ஊழல் நிறைந்தவை என்ற மதிப்பீட்டை முன்வைத்து அதை நியாயப்படுத்திஇராணுவமயமாக்கலைத் தூண்டி வளர்த்து இராணுவம் தனது பொருளாதார ஆதிக்கத்தை இயலு மாக்கியது. நாடு அபிவிருத்தியடைய சர்வாதிகார ஆட்சி அல்லது இராணுவ ஆட்சி அல்லது இரண்டினதும் கலப்பான ஆட்சி வேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டுள்ளது. எந்தப் பணி யையும் சிவில் சமூகத்தையோ வர்த்தக சமூகத்தையோ விடச் சிறப் பாக இராணுவம் செய்யும் என்ற கருத்துவருவாக்கம் பாகிஸ்தான் சமூ கத்தில் உறுதியாக உள்ளது.

இராணுவத்தின் வர்த்தக முயற்சிகள் வெல்வதற்கு அரசின் மறைமுக ஆதரவு உதவுகிறது. இலவசமாக நிலம் வழங்கல், இராணுவச் சொத்துகளை வர்த்தகத்திற்குப் பாவித்தல், நிதிப் பிரச்சினை ஏற்படின் கடன் வழங்கிப் பிரச்சினையில் இருந்து காப்பாற்றுதல் எனுமாறு பல்வகை மானியக் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. இராணுவ வர்த்தகம் ஊழலுக்கும் வழிகோலுகிறது. நாட்டின் பொதுக்கடன் அதிகரிக்கும்போதும் இராணுவ வர்த்தகத்திற்கு அரசாங்க நிதி வழங் கப்படுகிறது. இது பாகிஸ்தான் இராணுவத்தின் கதை. இதிலிருந்து நாம் கற்க மிகவுண்டு.

இந்தோனீசியா: திசை சுட்டும் கதை

உலகின் அதிமோசமான சர்வாதிகார ஆட்சி இருந்த நாடுகளில் இந்தோனீசியாவுக்குச் சிறப்பிடம் உண்டு. 1965இல் இராணுவச் சதி மூலம் சுகர்னோவின் ஆட்சியை வீழ்த்திச் சனாதிபதியான இராணுவத் தளபதி சுகார்த்தோ 1998இல் பதவிவிலகும் வரையான 33 ஆண்டு கட்கு இராணுவத் துணையுடன் இந்தோனிசிய சர்வாதிகாரம் தொடர்ந் தது. 5 மில்லியன் உறுப்பினர்களுடன், ஆட்சியில் இல்லாத அதிபெரிய கம்யூனிஸ்ட் கட்சியாயிருந்த இந்தோனீசியக் கம்யூனிஸ்ட் கட்சி சர்வா திகாரம் நடைமுறைக்கு வந்து ஒரே ஆண்டில் முற்றாக அழிக்கப் பட்டது. 1965-66 காலப்பகுதியில் ‘கம்யூனிஸ்ட் களையெடுப்பு’ நிகழ்ச்சி நிரலின் கீழ் 3 மில்லியன் கம்யூனிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர். 20ம் நூற்றாண்டின் மிகப்பெரிய படுகொலையான இதுபற்றி அதிகம் பேசப் படுவதில்லை. சுகார்த்தோவிற்கு இருந்த அமெரிக்க ஆதரவும் ஆசியா வில் கம்யூனிஸ்ட் களையெடுப்புக்கு மேற்குலக ஆதரவும் இக் கொலைகளை மழுப்ப உதவின.

சர்வாதிகார ஆட்சி முடிந்து 16 ஆண்டுகளின் பின், 2014ம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் சர்வாதிகாரி சுகார்த்தோவின் மருமகனும் முன்னாள் இராணுவ லெப்டினட் ஜெனரலுமான பிரபோவோ சுபைன்டோ குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றார். மூன்று தசாப்தங்கட்கு மேல் இராணுவ சர்வாதிகாரக் கொடுமைகளை அனுபவித்த இந்தோனீசியர்கள் ஏன் இன்னொரு சர்வாதிகாரி ஜனாதி பதியாவதை விரும்பினர் என்பது ஆய்வுக்குரியது.

இன்றைய இலங்கையின் திசைவழிகளை நோக்குகையில் பிரபோவோ வின் கதை கவனிக்கத் தக்கது. அது பல இடங்களில் இலங்கையை நினைவூட்டும். இந்தோனீசிய இராணுவத்தில் பணியாற்றிய. பிரபோவோ இராணுவ உயர் பதவி பெறாதபோதும் சர்வாதிகாரி சுகார்த்தோவின் இரண்டாவது மகளைத் மணந்ததன் மூலம் தனது செல்வாக்கை உரு வாக்கினார். அதன் பயனாக அவரது சகோதரர் இந்தோனீசியாவின் முக்கிய பணக்காரர்களில் ஒருவரானார்.

2014ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட 2012ம் ஆண்டே ஆயத்தங்களைச் செய்தார். தனக்கென ஒரு அரசியற் கட்சியைத் தொடங்கினார். அதில் இராணுவத்தில் தனக்கு நெருக்கமாக இருந்த வர்கள், கடும்போக்குத் தேசியவாதப் பிரசாரகர்கள், வியாபாரிகள் ஆகியோரை இணைத்தார். அவரது பிரசாரம் இரண்டு அம்சங்களை முதன்மைப்படுத்தியது. முதலாவது இந்தோனீசியத் தேசப்பற்று. ஆட்சியில் இருப்போர் நாட்டை அந்நிய சக்திகட்கு விற்பதாகக் குற் றஞ்சாட்டினார். நாட்டின் வளங்களை அந்நியருக்கு விற்பதே நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்றார். இரண்டாவது, அர சாங்கத்தில் உள்ளோரின் ஊழலும் வினைத்திறனற்ற ஆட்சியும். ஊழலில் திளைத்த பாரம்பரிய அரசியல்வாதிகள் நாட்டை நிர்வகிக்கக் தெரியாதவர்கள் என்ற வாதத்தை முன்வைத்த அவர் அரசியல்வாதி யல்லாத ஒருவரே இந்தோனீசியாவை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல ஏற்றவர் என்று வாதித்தார்.

முரண்நகை யாதெனிற் பிரபோவோ விமர்சித்தவாறான அரசியல் செல்வாக்குள்ள பாரம்பரியத் தன்னலக்-குழு (ழுடபையசஉhல) ஒன்றிலி ருந்தே அவரும் வந்தார். அவர் பற்றி ‘வெளியாள்’ ‘வேறுபட்டவர்’ போன்ற படிமங்களை; உருவாக்கிய அதேவேளை, வாக்காளர்களைக் கவர அவர் தனது குடும்பச் செல்வாக்கையும் பாவித்தார். அவர் ஜாவாவில் செல்வாக்கும் அதிகாரமும் மிகுந்த அரசியல் குடும்பமான ‘பிரியாயி’ குடும்பத்தில் இருந்து வந்தவர். அவ்வடையாளம் அவருக்கு மரியாதையையும் செல்வாக்கையும் வழங்கியது.

சுகார்த்தோவின் ஆட்சியின்போது அவரும் அவரது சகோதரரும் வியாபாரத்தின் மூலம் ஏராளமான செல்வஞ் சேர்த்தனர். சுகார்தோவின் வீழ்ச்சிக்குப் பின் நாட்டை நீங்கி ஜோர்தானில் நீண்டகாலம் இருந்தார். தனது வியாபார நலன்களும் அரசியல் நலன்களும் உறுதிப்பட்ட நிலையில் இந்தோனீசியாவிற்கு மீண்டார்.

தான் ‘பழிவாங்கப்படுவதாக’ தனது அரசியற் பிரசாரங்களில் விடாது தெரிவித்தார். தான் நாட்டின் நன்மைக்காகச் செய்த விடயங்கட்காகத் தன் மீது ‘ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதாக’ முறையிட்டார். தனது தேர்தல் பிரசாரத்தில் சாதாரண கிராம மக்க ளின் செல்வாக்கைப் பெற அவர் மிக்க கவனங் காட்டினார். அவருடைய பிரசாரத் தூண்களாக மூன்று துறையினர் இருந்தார்கள்: சந்தை வியாபாரிகள், முன்னாள் இராணுவ வீரர்கள், சில தொழிற் சங்கங்கள்.

அவரது தேர்தல் பிரசாரத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்று அவர் ஊடகங்கள் வழியாக முன்னெடுத்த பிரசாரம். குறிப்பாகப் பாரம்பரிய தொலைக்காட்சியும் வானொலியும் அவருக்கு முக்கியங் கொடுத்தன. இவ் விளம்பரங்கட்கு ஏராளமான பணம் செலவானது. சமூக வலைத் தளங்களிலும் கவனம் செலுத்தப்பட்டது. அவரது சகோதரர் விளம்பரங் கட்கு நிதி வழங்கினார்.

தனது மேற்குலக உடை-நடை-பாவனையை மாற்றி முதலாவது இந்தோனிசிய ஜனாதிபதி சுகர்னோ அணிந்த வகையான ஆடைகளை அணிந்தார். தனது இராணுவ அனுபவங்கள், தனது செயற்பாடுகள் எனச் சுயகதைகளூடே பிரசாரத்தை முன்னெடுத்தார். இராணுவத்தில் தனது உறுதியான செயற்பாடுகளே தனது உரைகல் என்றார். ‘ஆயிரம் ஆடுகளை ஒரு சிங்கம் வழிநடத்தின் ஆடுகளும் கர்ச்சிக் கும். ஆனால் ஆயிரம் சிங்கங்களை ஒரு ஆடு வழிநடத்தின் ஆயிரம் சிங்கங்களும் செம்மறிகளாகும்’ என்றார். இவ்வாக்கியம் அவரது பிர சாரத்தின் மகுடவாக்கியமானது.

சர்வாதிகார ஆட்சி முறையே சிறந்ததும் வினைத்திறனானதும் என்றும் மேற்குலகப் பண்பாட்டின் அடையாளமான ஜனநாயகம் இந்தோனீசியா வுக்குப் பொருந்தாது என்றும் வாதித்தார். பல சிறிய கட்சிகளும், ஆட்சியில் இருந்த முன்னாட் குறுங்குழுக்காரர்களும், வர்த்தகர்களும் தேசியவாதிகளும் அவரை முற்றாக ஆதரித்தனர்.

பண பலம், இராணுவ பலம், செல்வாக்குடைய குழுக்களின் ஆதரவு எனப் பலவும் இருந்தும் பிரபோவோ தேர்தலில் தோற்றார். அத் தோல்வியும் ஆராயத் தக்கது. பிரபோவோவை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோகோ விடோடோ ஒரு பிரபல அரசியல்வாதி. தலைநகர் ஜகார்த்தாவின் மேயராகவும் பின்னர் ஆளுநராகவும் இருந்த அவர் மக்களுக்காகப் பல நலத்திட்டங்களை முன்னெடுத்தவர். அரசியல் செல்வாக்குள்ள குடும்பப் பின்னணியோ இராணுவப் பின்புலமோ அற்றவர். எனவே அவருக்குச் சாதாரண மக்கள் மத்தியில் நிறைந்த செல்வாக்கு இருந்தது. இதன் விளைவால் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பிரபோவோவைத் தோற்கடித்து ஜனாதிபதியானார்.

சர்வாதிகாரத்தாற் துன்புற்ற நாட்டில் அதே சர்வாதிகாரத்தையே அரச நிர்வாக முறையாக முன்மொழிந்த பிரபோவோ எவ்வாறு தேர்தலில் வெற்றியை நெருங்கினார் என்பதும் எச் சர்வாதி காரத்தால் இந்தோனீசியர்கள் துயரங்களை அனுபவித்தார்களோ அதையே முன்வைக்கும் ஒருவரை எவ்வாறு அவர்களால் வழிமொழிய முடிந்தது என்பதும் கவனிப்புக்குரியன. இவை அரசியலின் வினோதங்கள்.

நிறைவாக

இந்தோனீசிய அனுபவம் இலங்கைக்குப் பொருந்துகிறது. இன்னொரு புறம் பௌத்தத்தின் அரசியல் எழுச்சியை சோம தேரர் இயலுமாக்கிய வழித்தடத்தில் இராணுவ மேலாதிக்க ஆட்சியைக் கொண்டுவரும் முன்னெடுப்புகள் இப்போது இலங்கையில் தீவிரம் பெற்றுள்ளன. அது இயலுமாகும் போது, சமூகத்தின் அனைத்து அம்சங்களிலும் இராணு வம் நீக்கமற நிறைந்திருக்கும். பாகிஸ்தான் அனுபவம் அதைத் தெளிவாகக் காட்டுகிறது. பாகிஸ்தானில் இப்போது இராணுவம் எவ் வாறு ஜனநாயகத்தை கட்டமைக்கிறதோ அதே சூழல் இலங்கைக்கும் ஏற்படலாம்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய காலத்தில் சர்வாதிகார ஆட்சிகளை மாற்றிய போதேல்லாம் அவை ஜனநாயக ஆட்சியகளாக மாறவில்லை. மாறாக ஆட்சி மாற்றங்களில் 75% ஆனவை இன்னொரு சர்வாதிகாரத்தன்மையான ஆட்சியையே உருவாக்கின. அவ்வாறு உருவான புதிய சர்வாதிகார ஆட்சிகள் நிலைபெற்றுள்ளன. மாறாக, சர்வாதிகார ஆட்சியில் இருந்து தோன்றிய ஜனநாயக ஆட்சிகள் நீண்டகாலம் நிலைக்கவில்லை.

அதேபோல, உள்நாட்டுப் போருக்குப் பிந்திய ஆட்சி மாற்றங்களில் ஜனநாயகப் பண்புடைய ஆட்சிகள் நீண்டகாலம் நிலைக்கவில்லை. உள்நாட்டுப் போருக்குப் பின் சர்வாதிகாரமாக உருவான ஆட்சிகள் நீண்டகாலம் நிலைத்துள்ளன. இவை இன்னொரு செய்தியைச் சொல் கின்றன.

இப்போது இராணுவம் ஜனநாயகத்தை தனக்கேற்ற வலிய கருவி யாக்கப் பழகியுள்ளது. நாம் ஜனநாயகத்தின் பேரால் அனைத்தையும் ஏற்கப் பழகியுள்ளோம். இப்போது ஜனநாயகத்தின் தீர்மான சக்தியாக இராணுவம் உருப்பெறுகிறது. இரண்டும் ஒத்துழைக்கின்றன. வேறு வகையிற் சொன்னால் ஒன்று மற்றதை உயிர்ப்பிக்கிறது. ஒன்று மற்றதை வாழ்விக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *