Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the onecom-wp domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /customers/a/4/a/nilankco.com/httpd.www/wp-includes/functions.php on line 6131 Warning: Cannot modify header information - headers already sent by (output started at /customers/a/4/a/nilankco.com/httpd.www/wp-includes/functions.php:6131) in /customers/a/4/a/nilankco.com/httpd.www/wp-content/plugins/onecom-vcache/vcaching.php on line 621 Warning: Cannot modify header information - headers already sent by (output started at /customers/a/4/a/nilankco.com/httpd.www/wp-includes/functions.php:6131) in /customers/a/4/a/nilankco.com/httpd.www/wp-content/plugins/onecom-vcache/vcaching.php on line 629 Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /customers/a/4/a/nilankco.com/httpd.www/wp-includes/functions.php on line 6131 செயற்கை நுண்ணறிவு: மனிதனை மனிதனே பலியெடுத்தல் - நிலங்கோவின் நிலம்
அரசியல்உலகம்

செயற்கை நுண்ணறிவு: மனிதனை மனிதனே பலியெடுத்தல்

மனித குல வரலாற்றின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பகுத்தறிவினதும் அறிவியல் வளர்ச்சியினதும் பங்கு பெரிது. இன்று மனிதகுலம் கண்டியிருக்கிற வளர்ச்சி அறிவியல் வளர்ச்சியின் வலிமையால் சாத்தியப்பட்டது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முதல் கற்பனை செய்து பார்க்கக்கூடிய முடியாத ஒன்று இன்று சாத்தியமாகியிருக்கிறது. அறிவியல் மிக வேகமாக கடந்த அரைநூற்றாண்டுகாலத்தில் வளர்ந்துள்ளது. இப்போது அடுத்த பத்து ஆண்டுகளில் என எதிர்ப்பு கூறக் கூட முடியாத வகையில் அறிவியல் பல திசைகளிலும் பரந்து விரிந்தது.

அறிவியல் வளர்ச்சி எப்போதும் பயனுள்ள திசையில் மட்டும் பயணித்ததில்லை. இனியும் அவ்வாறு பயணிக்காது என்பதையும் நாம் உறுதிபடச் சொல்லமுடியும். உயிர்களை காக்க உதவிய அறிவியலே பல இலட்சக்கணக்கான உயிர்களை காவுகொள்ளவும் உதவியது. உயிர்காக்கும் மருந்துகளையும் நவீன மருத்துவக் கருவிகளையும் கண்டுபிடித்த அதே விஞ்ஞானமே அணு குண்டுகளையும் இரசாயனக் குண்டுகளையும் கண்டுபிடித்தது. இவ்வாறு மனித குல வரலாற்றின் நன்மையிலும் தீமையிலும் அறிவியலுக்கு சம அளவில் பங்கு இருக்கிறது.

அறிவியலின் வரலாற்றை உற்று நோக்கின் அறிவியலின் பயணம் யாருடைய நலன்களுக்காக செயற்பட்டு வந்திருக்கிறது என்ற கேள்வி எழுவது இயல்பானது. ஆண்டாண்டு காலமாய் அறிவியல், அதிகாரத்திற்கும் ஆளுவோருக்கும் சேவகனாய் அவர்களது தேவைகளை நிறைவேற்றும் ஒன்றாய் கைகட்டி சேவகம் பார்த்திருக்கிறது. இதற்கு விஞ்ஞானிகள் பொறியியலாளர்கள் கல்வியலாளர்கள் மருத்துவர்கள் என யாரும் விதிவிலக்கல்ல. இன்றும் உலகின் முக்கியமான புதிய கண்டுபிடிப்புகள் அதிகாரத்திற்காகவும் ஆளுவோரின் நலன்களுக்காகவுமே பயன்படுகிறது. உலகின் புதிய படைப்புக்கள் முதலில் இராணுவத்தின் தேவைகளுக்காவே உருவாக்கப்பட்டு பின் பொதுபயன்பாட்டுக்கு வருகின்றன (பேஸ்புக் எவ்வாறு ஏன் பொதுப்பயன்பாட்டுக்கு வந்தது என்பது தனிக்கதை). இந்த வழித்தடத்தில் புதிதாக இணைந்துள்ளது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence). அறிவியல் அபயமா, ஆபத்தா என்ற கேள்வியை இப்போது மீண்டும் உரத்துக் கேட்க வேண்டியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு: சில அடிப்படைகள்
செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்பமானது அறிவியல் உலகில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை மறக்கமுடியாது. மனிதகுலம் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வை தரக்கூடிய வல்லமை செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்பத்திற்குண்டு. இது அறிவியல் ரீதியாக மனிதகுலம் முன்னேற்றம் அடைவதற்கான பல சாத்தியங்களை உருவாக்கியிருக்கிறது. இதே தொழிநுட்பம் ஆபத்தைத் தரக்கூடிய அழிவுக்கு இட்டுச் செல்லக்கூடிய பாதையை நோக்கியும் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை அண்மையில் வெளியாகியுள்ள அறிக்கை ஆதாரங்களுடன் நிறுவியுள்ளது. மனிதகுலத்தை மனிதனின் அனுமதியின்றி இயந்திரங்களின் தன்னிச்சையான செயற்பாடு அழித்தொழிக்க கூடியதாக இருக்கும் ஒரு எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்.

செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்பமானது மூன்று பிரிவுகளை உள்ளடக்கியது. முதலாவது ‘துணைபுரியும் நுண்ணறிவு’ (Assisted Intelligence). இது செயல்களை தன்னியக்கமயமாக்கும் (Automation) செயற்பாடாகும். இது பொதுவில் தொழிற்சாலைகளில் தொடங்கி இன்று அனைத்துத் தொழிற்றுறைகளிலும் மனிதனிற்கு இயந்திரங்களைப் பதிலீடு செய்யும் செயற்பாடாகும். இதை நாம் ஓரளவு அறிவோம். இரண்டாவது விரிவாக்கப்பட்ட நுண்ணறிவு (Augmented Intelligence). இது மனிதர்கள் வழங்கும் தரவுகள், மனித நடத்தை, மனித செயற்பாட்டுக் கோலங்கள் போன்றவற்றில் இருந்து தானாகவே முடிவெடுக்கும் ஆற்றல். மூன்றாவது தன்னாட்சி நுண்ணறிவு (Autonomous Intelligence). இது மனிதர்களின் தலையீடோ குறுக்கீடோ இன்றி இயல்பாக இயந்திரங்கள் சுதந்திரமாக முடிவெடுத்து இயங்கும் தன்மை.

இவை மூன்றும் அடிப்படையில் மனிதனால் உருவாக்கப்பட்ட ஆனால் மனிதனின் உதவியின்றிச் சிந்தித்துச் செயற்படக்கூடிய இயந்திரங்களை உருவாக்குவது தொடர்பானது. இதைச் சுருக்கமாக செயற்கையான மூளையொன்று உருவாக்கப்பட்டு சுதந்திரமான செயற்பட அனுமதிக்கப்படுதல் என அழைக்கவியலும். இதை சாத்தியமாக்குவதில் தரவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏனெனில் தரவுகளே உள்ளீடு செய்யப்பட்டு ஆராயப்படுகின்றன. திரட்டப்படும் தரவுகள் உள்ளீடு செய்யப்பட்டு இரண்டு செயன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. அதில் முதன்மையானது திரட்டப்பட்ட தரவுகளை ஆழ்நிலைக் கற்றலுக்கு உட்படுத்துவது (Deep Learning). இது தரவுகளைப் பிரித்து அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்து கோலங்களையும் நடத்தைகளையும் அறிய வல்லது. அடுத்த வகை இயந்திரக் கற்றல் முறையின் மூலம் ஆராய்வது (Machine Learning). இது இயந்திரங்களுக்கு கற்பிப்பதன் மூலம் அவை சுயமாக முடிவெடுத்து இயங்கப் பழக்குவது.

இவையனைத்தும் மனிதனுக்கு நிகராக இன்னும் சொல்லப்போனால் மனிதனிலும் மேலாக தர்க்கரீதியாகச் சிந்திக்கக்கூடிய செயலாற்றக்கூடிய இயந்திரங்களின் சாத்தியங்களைக் கோடுகாட்டி நிற்கின்றது.

மனிதகுலத்திற்கு எதிராகத் திரும்பும் தொழிநுட்பம்
செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தில் பங்கெடுக்கும் நிறுவனங்கள் மனிதகுலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்களா என்பதை அறியும் நோக்கில் நெதர்லாந்தை மையமாகக் கொண்டியங்கும் தன்னார்வ நிறுவனமான PAX (Pax for Peace) ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவுகள் கடந்த வாரம் அறிக்கையாக வெளியிடப்பட்டன. தீயதாக இருக்காதீர்கள்? ((Don’t be evil?) என்று தலைப்பிடப்பட்ட இந்த அறிக்கை மனித குலத்தின் எதிர்காலம் மிகவும் அச்சம் தரக்கூடியதாக இருக்கிறது என்பதை எதுவித ஐயத்திற்கிடமின்றி நிறுவுகிறது. நீங்கள் தன்னிச்சையாகச் செயற்படும் தானியங்கி ஆயுதத்தொழிநுட்பத்தை உருவாக்குகிறீர்களா என்ற வினாவுக்கு மைக்கிரோசொப்ட், அமேசன் போன்ற பராசுர நிறுவனங்கள் பதிலளிக்க மறுத்துள்ளன. அதேவேளை கூகிள் மற்றும் ஜ.பி.எம் ஆகியன இல்லை எனப் பதிலளித்துள்ளன.

இராணுவ பாதுகாப்பு துறையுடன் தொடர்புடைய அல்லது ராணுவ பாதுகாப்பு துறைக்கு பயன்படுத்தக்கூடிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் பணியாற்றுகின்ற உலகின் முக்கியமான நிறுவனங்களை மையப்படுத்தியே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் பணிபுரிகின்ற உலகின் முக்கியமான 50 நிறுவனங்கள் இவ்வாய்வுக் உட்படுத்தப்பட்டுள்ளனர் இந்த 50 நிறுவனங்களும் உலகில் வளர்ச்சி அடைந்த 12 நாடுகளை தளமாக கொண்டு இயங்குகின்றன இதில் பெரும்பாலானவை அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்குபவை.

அறிக்கையின்படி இந்த 50 நிறுவனங்களில் சமூகப் பொறுப்போடு அறம் சார்ந்து மனித குலத்துக்கு விரோதமில்லாமல் செயற்படும் நிறுவனங்கள் 7 மட்டுமே. 21 நிறுவனங்கள் மனித குலத்திற்கு விரோதமான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை உருவாக்கும் வேலைத்திட்டங்களில் இறங்கியுள்ளனர். ஏனைய நிறுவனங்கள் மனித குலத்துக்கு விரோதமான சேர்க்கை தொழில்நுட்ப திட்டங்களை நோக்கி நகர்ந்து வருகின்றன என்று இந்த அறிக்கை கூறுகிறது.

இந்த அறிக்கை தொடுக்கிற கேள்வி ஒன்றே ஒன்றுதான். ஒரு மனிதன் உயிர் வாழ்வதா சாவதா என்ற முடிவை யார் தீர்மானிப்பது என்பதே அந்த கேள்வியாகும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது இப்போது எந்தவித மனிதக் கட்டுப்பாடும் இல்லாமல் ஒரு இயந்திரம் தன்னிச்சையாகவே முடிவெடுத்து மனிதர்களை கொலை செய்வதற்கான ஆயுதங்களையும் தொழில்நுட்பத்தையும் உற்பத்தி செய்துவருகிறது என்று இந்த அறிக்கை கூறுகிறது.

இன்று போரியல் துறையின் மூன்றாவது புரட்சியை செயற்கை நுண்ணறிவு சாத்தியமாகியுள்ளது என்று பெருமை பேசப்படுகிறது. போரியல் துறையின் முதலாவது புரட்சி வெடிமருந்து கண்டுபிடிப்புடன் தொடங்கியது. அதன் இரண்டாவது புரட்சியை அணுவாயுதப் கண்டுபிடிப்பு தொடங்கிவைத்தது. இப்போது தன்னிச்சையான ஆயுதங்கள் அதாவது மனிதனின் கட்டளையை மீறி சுயமாக இயங்க கூடிய ஆயுதங்கள் செயற்கை நுண்ணறிவு சாத்தியமாகி உள்ளது.

இன்று செயற்கை நுண்ணறிவின் துணையால் உருவாகியுள்ள தானாகவே இயங்கும் ஆயுதங்கள் சட்ட மற்றும் அறஞ்சார் அடிப்படைகளை கேள்விக்குட்படுத்தி உள்ளன. இவை எதிர்காலத்தில் உலகின் அமைதியையும் பாதுகாப்பையும் பாரிய சவாலுக்கு உட்படுத்தும். இந்த ஆயுதங்கள் ஒரு மனிதன் உயிர் வாழ அனுமதிப்பதா அல்லது கொல்லுவதா என்ற தீர்மானத்தை தன்னிச்சையாக எடுக்கும் அதிகாரத்தை எந்திரங்களின் கைகளுக்கு வழங்குகிறது.

இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது முக்கியமான விடயம் யாதெனில் தொழில்நுட்பத்திற்கும் மனிதகுல வளர்ச்சிக்கும் இடையிலான உறவை மீள்பார்வைக்கு உட்படுத்துவதும் விவாதிப்பதும் காலத்தின் அவசிய அவசரத் தேவையாகிறது. தொழிநுட்பம் எந்த எல்லைவரை செல்ல முடியும் என்பது குறித்தும் தொழிநுட்பத்தின் அவசியம் குறித்தும் மீண்டும் ஒரு முறை ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது என்பதை இந்த அறிக்கை கோடிட்டு நிற்கிறது.

காலங்காலமாக பல்கலைகழகங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கான அனுமதி ஆய்வின் அறம் சார்ந்த விடயங்களை கணிப்பில் எடுத்தபின்னரே வழங்கப்படும். அறம் சாராத ஆய்வுகள் பொதுவில் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நிலை இன்று இரண்டு வகைகளில் மாற்றமடைந்துள்ளது. முதலாவது தொழிநுட்பத் துறைசார் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து தங்களுக்குரிய ஆய்வுகளை பல்கலைக்கழகமோ எந்த ஒரு வெளிநிறுவனமோ சாராது தமது நிறுவனத்திற்குள்ளேயே ஆய்வுகளை செய்து முடிவுகளை பெறக்கூடிய தன்னை உடையனவாய் வளர்ந்துவிட்டன. இதனால் இவர்களால் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் அறம் சார்ந்த விடயங்கள் எப்போதும் கேள்விக்கு உட்படுத்தப்படுவதில்லை. இரண்டாவது இன்று பல்கலைக்கழக ஆய்வுகளின் நிதி மூலங்களாக இந்த நிறுவனங்களே இருக்கின்றன. எனவே குறிப்பிட்ட ஒரு ஆய்வை செய்வதற்கு நிறுவனங்கள் பல்கலைக்கழகங்களுக்கு நிதி வழங்குகின்றன. அறம் சார்ந்த கேள்விகள் இருந்தாலும் அந்த அறம் சார்ந்த கேள்விகளை அந்த நிறுவனங்களினால் வழங்கப்படும் நிதி இல்லாமல் செய்கிறது. எனவே அந்த அறம் சார்ந்த கேள்விகளை பக்கத்தில் வைத்துவிட்டு பல்கலைக்கழகங்களும் அவர்களுக்கு வேண்டிய ஆய்வுகளை செய்து முடிக்கிறார்கள். நவீன முதலாளித்துவ உலகம் எல்லாவற்றையும் பண்டமாக்கிய பிறகு அறிவும் அறமும் கூட விற்பனைச் சரக்காக விட்டது.

மனிதன் தன்னைத் தானே அழிப்பதற்கு எவ்வளவு பாடுபட்டு சிந்தித்துச் செயலாற்றிக் கொண்டிருக்கிறான் என்பதை நினைக்கும் போது வியப்பாக இருக்கிறது. மனிதனைப் போல சுயநலமாக பிராணி இவ்வுலகில் எதுவுமே இருக்க முடியாது. நியாயம், அறம், மனிதநேயம் அனைத்தையும் புறந்தள்ளி இந்தக் கண்டுபிடிப்புகளை நோக்கி மனித நகர்கிறான். இதை எம்மால் புரிந்து கொள்ள முடியுமாயின் அணுகுண்டை ஏன் மனிதன் போட்டான் என்ற கேள்விக்கும் அமேசன் மழைக்காடுகளுக்கு ஏன் மனிதன் தீவைத்தான் என்பதையும் விளங்குவதில் சிரமங்கள் இரா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *