அரசியல்உலகம்

சிரியாவின் இட்லிப்: வரலாற்றின் முடிவு?

நீண்ட யுத்தமொன்று அதன் கடைசிக் கட்டத்தை அடைந்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவுகொண்டு இலட்சக்கணக்கானோரை இடம்பெயர்த்த யுத்தத்தின் முடிவு நெருங்குகிறது. அவ்யுத்தத்தை யார் முன்னெடுத்தார்களோ, யார் தொடக்கினார்களோ, நடைபெற்ற அனைத்த அவலத்துக்கும் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்கள் யாரோ அவர்கள் இன்று அமைதி பற்றியும் மனிதாபிமானம் பற்றியும் பெண்கள், குழந்தைகள் பற்றியும் பேசுகிறார்கள். இதுவரை எதையும் செய்யவியலாது கட்டுண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபை இப்போது விக்கித்து நிற்கிறது.

உலகம் மாறிவிட்டது. அமெரிக்கா தொடக்கிய போரில் அவமானகரமான தோல்வியை அது நெருங்குகிறது. இது கெடுபிடிப்போருக்குப் பின்னரான உலக ஒழுங்கில் அமெரிக்கா நேரடியாகச் சந்திக்கும் மிகப்பெரிய தோல்வி இதுவாகும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் வியட்னாம் போருக்குப் பிறகு அமெரிக்கா சந்தித்துள்ள மிகப் பெரிய பின்னடைவும் தோல்வியும் சிரியாவிலேயே நடந்தேறியுள்ளது. பெர்லின் சுவரின் வீழ்ச்சியைத் தொடர்ந்த சோவியத் யூனியனின் உடைவை ‘வரலாற்றின் முடிவு’ என பிரான்ஸிஸ் புக்குயாமா அழைத்தார். அச்சொல் கம்யூனிசத்தின் முடிவை அறிவிக்கும் சொல்லாடலாக எங்கும் அதைத் தொடர்ந்த இரண்டு தசாப்தகாலத்திற்கு மேற்குலகு பயன்படுத்தி வந்துள்ளது.

இட்லிப்பை சிரியப் படைகள் விடுதலை செய்து மீளக்கைப்பற்றினால் அதை நாங்கள் வரலாற்றின் முடிவு என்று அழைக்கவியலும். இது இன்னொரு வரலாற்றின் முடிவு. அமெரிக்காவின் ஒருமைய உலகினதும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் உலகெங்கும் நினைத்ததை நினைத்தபடி செய்து வந்த வரலாற்றிற்கு முடிவு கட்டும் ஒன்றாகவும் இட்லிப் விடுதலை இருக்கும். இது குறித்துப் பார்க்க முன்னர் இப்போதைய சிரிய நிலவரத்துக்குத் திரும்புவோம்.

2011ம் ஆண்டு சிரியாவில் ஆட்சிமாற்றம் ஒன்றை ஏற்படுத்தும் நோக்குடன் அமெரிக்கா தலைமையில் நேட்டோ அங்கு கிளர்ச்சியாளர்களை உருவாக்கி சிரிய அரசுக்கெதிரான உள்நாட்டுப் போரைத் தூண்டி விட்டது. ஈராக்கில் சதாம் உசேனை ஆட்சியில் இருந்து கவிழ்ததுக் கொலை செய்தமை, லிபியாவில் ஆக்கிரமிப்புப் போரை நடாத்தி முகம்மர் கடாபியின் ஆட்சியைக் கவிழ்த்து அவரைக் கொன்றமை ஆகிய நிகழ்வுகளின் பின்னணியிலேயே சிரியா மீதான தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.

ஈராக் மற்றும் லிபியாவில் பெற்றுக் கொண்ட வெற்றிகளும் அதன்மூலம் அமெரிக்க ஜரோப்பிய எண்ணெய் நிறுவனங்கள் இவ்விரு நாடுகளிலும் உள்ள எண்ணெய் வயல்களை இலகுவாகப் பெற்றுக் கொண்டமையானது அமெரிக்காவிற்கு சிரியாவை தாக்குவதற்கான உற்சாகத்தை வழங்கியது. சிரியாவில் ஆட்சிமாற்றத்தைக் கொண்டு வரக் கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்கா முயல்கிறது. 2005ம் ஆண்டிலிருந்து அமெரிக்கா சிரியாவின் வலதுசாரி எதிர்க்கட்சிக்கு நிதியுதவி வழங்கிவருகிறது. இதை அமெரிக்காவும் அக் கட்சியும்

வெளிப்பட ஏற்கின்றன. மத்திய கிழக்கிலும் வட ஆபிரிக்காவிலும் நடந்த ‘அரபு வசந்தத்தின்’ தொடர்ச்சியாக சிரியாவில் ஆட்சி மாற்றம் தேவை என்ற கோஷம் படிப்படியாக எழுப்பப்பட்டது. அதன்படி 2011ம் ஆண்டு ‘அரசுக்கெதிரான கிளர்ச்சி’ எனத் தொடங்கப்பட்ட கிளர்ச்சியானது படிப்படியாகப் போராகி கடந்த ஐந்து ஆண்டுகளாக முழு மத்திய கிழக்கிலும் தாக்கம் செலுத்தும் நெருக்கடியாயுள்ளது.

சிரியா ஏன் குறிவைக்கப்பட்டது என்ற கேள்வி இங்கு விளங்குவதற்கு அவசியமானது. மத்திய கிழக்கில் அமெரிக்க நலன்களுக்கு மாறாகத் திகழும் நாடுகளில் ஈரானுக்கு அடுத்தபடியாக முக்கியமானது சிரியா. இதனால் மத்திய கிழக்கின் முழுமையாகக் கட்டுக்குள் வைக்கும் செயற்பாட்டுக்கு முட்டுக்கட்டையாக உள்ள சிரியாவின் அல் அசாத் ஆட்சியை அகற்ற அமெரிக்க நலன்களுக்கு அடிபணியும் ஒரு கைப்பாவை அரசாங்கத்தைக் கொண்டு அவரை பிரதியீடு செய்யும் முயற்சியின் வெளிப்பாடான சிரிய உள்நாட்டு யுத்தம் தோற்றுவிக்கப்பட்டது.

மத்திய கிழக்கில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது சிரியா மிகவும் விஷேசமான தன்மைகளை உடைய நாடு. சிரியா, மதச் சகிப்புடைய மதச்சார்பற்ற பல்லின நாடாக நீண்டகாலமாகவே இருந்துவந்துள்ளது. அதன் ஜனாதிபதி அசாத் ஷியா பிரிவிற்குட்பட்ட அலவ்வி மதப் பிரிவினராயினும் அவரது மனைவி சுன்னி பிரிவினராவர். சிரியா கணிசமான எண்ணிக்கையிற் குர்தியர்களும் ஆமேனிய கிறிஸ்தவர்களையும் உள்ளடக்கிய நாடாகும். இவ்வாறு பல்மதப் பல்பண்பாட்டுக் கோலங்களை உடைய மதச்சார்பற்ற அமைதியான நாடாகத் தொடர்ச்சியாக சிரியா இருந்து வந்திருக்கிறது.

இது சவூதி அரேபியப உள்ளிட்ட வளைகுடா முடியாட்சிகளுக்கு உவப்பில்லாதது. மேலும் இம்முடியாட்சிகளுக்கும் ஈரானுக்கும் உள்ள பிரச்சனையில் சிரியா ஈரானின் பக்கம் நிற்கிறது. இதனாலேயே சிரியாவில் அசாத்தின் ஆட்சியை அகற்ற மேற்குலகுடன் இம்முடியாட்சிகளும் கங்கணங் கட்டின.

தொடக்கத்தில் ஈராக்கிலும், லிபியாவிலும் நடைபெற்றது போல இலகுவாக ஆட்சிமாற்றமொன்றை நிகழ்த்த முடியும் என அமெரிக்கா நினைத்தது. ஆனால் கிளர்ச்சிப்படைகளால் சில இடங்களைக் கைப்பற்ற முடிந்தாலும் தலைநகர் டமாஸ்கஸ்ஸினுள் நுழைய முடியவில்லை. இப்பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ் தோன்றி சிரியாவின் பலபகுதிகளைச் சூறையாடி உலகையே ஒரு கலக்குக் கலக்கியது.

சிரியாவின் ஆட்சிமாற்றம் மட்டுமன்றி முழுமத்திய கிழக்கையும் கட்டுப்படுத்தும் நோக்குடன் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகும் அதன் பிராந்திய கூட்டாளிகளான சவூதி அராபியா, துருக்கி, பாரசீக வளைகுடா எண்ணெய் முடியாட்சிகள் மற்றும் இஸ்ரேல் ஆகியவற்றின் மேலதிக நோக்கங்களுக்காக, ஐ.எஸ்.ஐ.எஸ்.  அமைப்பை வளர்த்தனர். அதற்குத் துணையாக ஏனைய ஜிகாதிய இயக்கங்களுக்கும் உதவிகளைச் செய்து மத்திய கிழக்கைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் திட்டம் அரங்கேறத் தொடங்கியது.

ஈராக், லிபிய விடயத்தில் விட்ட பிழையை இன்னொரு முறை விடுவதற்கு இம்முறை ரஷ்யா தயாராக இருக்கவில்லை. ரஷ்யாவைப் பொறுத்தவரையில் சிரியாவில் அமெரிக்க சார்பு ஆட்சி ஏற்படாமல் இருப்பது அவசியமானது. சிரியாவில் அமெரிக்க சார்பு ஆட்சி உருவாகுமாயின் அது ரஷ்யாவின் பிராந்திய நலன்களுக்கு மட்டுமன்றி ஈரானுக்கும் லெபனானைத் தளமாகக் கொண்டியங்கும் ஹிஸ்புல்லாவுக்கும் பாரிய நெருக்கடியைக் கொடுக்கும். எனவே ஈராக் மற்றும் லிபியா விடயங்களில் அமைதியாக இருந்தது போல சிரியா விடயத்தில் ரஷ்யாவால் வேடிக்கை பார்க்கவியலாது.

ரஷ்யா தனது முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளுக்கு வெளியே கடற்படைத் துறைமுகத்தளத்தைத் கொண்டுள்ள ஒரே நாடு சிரியா. ரஷ்யா சிரியாவின் இரண்டாவது மிகப்பெரிய துறைமுகமான டார்டோஸ்சில் தனது படைத்தளத்தைக் கொண்டுள்ளது.  இதேவேளை அமெரிக்கா 38 நாடுகளில் 662 படைத்தளங்களை வைத்திருக்கிறது.

பூகோளரீதியில் சிரியாவில் அல் அசாத் ஆட்சி அகற்றப்படுவது ரஷ்யாவை அமெரிக்கா சுற்றிவளைப்பதற்கும் இஸ்லாமிய அடிப்படைவாத ஜிகாதிகள் ரஷ்யா மீது போர் தொடுப்பதற்கும் வாய்ப்பாக இருக்கும். மேலும் மத்தியகிழக்கில் எண்ணெய் வர்த்தகத்தின் அமெரிக்க ஏகபோகத்திற்கு வழிசெய்யும் இது ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனங்களின் நலன்களுக்கு குழிபறிக்கும் வேளை சிரியா ஊடாக கட்டார் புதிய எரிவாயுக்குழாயை நிறுவுவதன் மூலம் நேரடியாக மேற்கத்திய ஐரோப்பிய சந்தைகளை அணுகுவதற்கு வழிவகுக்கும்.

இப்பின்னணியில் ரஷ்யா 2015ம் ஆண்டு சிரிய யுத்தத்தில் அசாத் அரசுக்கு ஆதரவாக இறங்கியது. அதேபோல சிரியாவில் ஆட்சிமாற்றம் அடுத்ததாக ஈரானைக் குறிவைக்கும் என நன்கறிந்த ஈரான் சிரியாவுக்கு இராணுவ உதவிகளையும் ஈரான் சிறப்புப் படையணிகளையும் வழங்கியது.

இங்கு நடந்த இன்னொரு விடயம் யாதெனில் சிரிய விடயத்தில் சிரியாவுக்கு எதிரான மத்திய கிழக்கு நாடுகளும் இஸ்ரேலும் கைகோர்த்து ஆட்சிமாற்றத்துக்கு உழைத்தமையாகும். இஸ்ரேல் சிரியாவில் ஆட்சிமாற்றத்திற்கு உதவுவதைத் தொடர்ந்து லெபனானை மையமாகக்; கொண்டு இயங்கும் ஹஸ்புல்லா அமைப்பு சிரிய அரசுக்குத் தமது ஆதரவை வழங்கியது. மேற்குலக, இஸ்ரேலிய, மத்திய கிழக்கு முடியாட்சிகளின் கூட்டுக்கு எதிராக சிரியா, ரஷ்யா, ஈரான், ஹிஸ்புல்லா ஆகிய கைகோர்த்து நின்றன.

ரஷ்யாவின் இராணுவத்தாக்குதல்கள் ஒருகட்டத்தில் மிகவும் மோசமானதும் பயங்கரமானதுமான அமைப்பாகக் கருதப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சின்னாபின்னமாக்கின. இதைத் தொடர்ந்து சிரிய இராணுவம் மெதுமெதுவாக இழந்த பகுதிகளை விடுவிக்கத் தொடங்கியது. அதேவேளை வீரம் நிறைந்த போரின் மூலம் ஈரானிய சிறப்புப்படைகளும் ஹிஸ்புல்லாப் போராளிகளும் பல பிரதேசங்களை விடுவித்ததோடு ஈரானிய லெபனானிய எல்லைகளைக் காத்து நின்றனர். இன்று போர் அதன் கடைசிக் கட்டத்தை அடைந்துள்ளது.

கிளர்ச்சியாளர்களின் கடைசிப் புகலிடமாக சிரியாவின் வடமேற்குப் பிரதேசமான இட்லிப் மாறியுள்ளது. இட்லிப் மீதான தாக்குதலை சிரிய இராணுவம் தொடங்கவிருந்த நிலையில் கடந்தவாரம் ரஷ்யா, துருக்கி, ஈரான் நாட்டுத் தலைவர்கள் சந்தித்தார்கள். போர்நிறுத்தம் ஒன்றுக்கு உடன்படுமாறு துருக்கி ஜனாதிபதி எர்டோகன் விடுத்த கோரிக்கைளை ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மறுத்துவிட்டார். ‘யாருடன் நாம் பேசுவது, எதற்காகப் பேதுவது, பயங்கரவாதிகளுடன் பேசுவற்காக இருந்த வாய்ப்புக்கள் எல்லாம் முடிந்துவிட்டன. நாம் அக்கதவுகளை நீண்டகாலமாகத் திறந்து வைத்திருந்தோம். அவர்கள்தான் அக்கதவுகளை இழுத்து மூடினார்கள்’. என்று புட்டின் பதிலளித்தார்.

இப்பின்னணியில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஐ.நா பாதுகாப்புச் சபையில் இட்லிப்பில் மனிதப் பேரவலம் நடக்கும் ஆபத்து உள்ளதாகவும் இதனால் போரை உடனே நிறுத்தி மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் வாதிட்டன. இதில் பேசிய ஐ.நாவுக்கான பிரித்தானியத் தூதுவர் ‘இட்லிப்பில் பயங்கரவாதிகளை விட குழந்தைகளே அதிகம் இருக்கிறார்கள். இதனால் இட்லிப் மீது இராணுவ நடவடிக்கை எடுக்க அனுமதிக்க முடியாது’ என்றார். ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவரோ ‘ரஷ்யாவும் சிரியாவும் இட்லிப் மீதான நடவடிக்கையை பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை என்றாலும் அவர்கள் பள்ளிக்கூடங்கள், வைத்தியசாலைகள் மீது குண்டுவீசுகிறார்கள். இது தவறானது. இம்மன்றம் இதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கக் கூடாது’ என்று எச்சரித்தார்.

இதே மன்றம் தான் ஈராக்கில் பள்ளிக்கூடங்கள், வைத்தியசாலைகள் மீது அமெரிக்கக் கூட்டுப்படைகள் விமானத் தாக்குதல் நடாத்திய போதும் சரி அல்லது கொத்துக் குண்டுகள் வீசப்பட்டு நூற்றுக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்ட போதும் சரி பார்த்துக் கொண்டு சும்மா இருந்தது.

எந்தப் பிரித்தானியா குழந்தைகளுக்காகக் கவலைப்படுகிறதோ அதேநாட்டின் படைகள் ஆப்கானிஸ்தானில், ஈராக்கில், லிபியாவில், சிரியாவில் விமானத்தாக்குதல் மூலமும் படை நடவடிக்கைகள் மூலமும் கொன்ற குழந்தைகள் குழந்தைகள் இல்லையா. முரண்நகை என்னவென்றால் பள்ளிக்கூடங்கள், வைத்தியசாலைகள் மீது குண்டு வீச அனுமதிக்கக் கூடாது என்று அமெரிக்கா கோருகிறது. ஆமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் (னுசழநௌ) மூலம் பாகிஸ்தானில் எத்தனை பாடசாலைகள், வணக்கத்தலங்கள், திருமண நிகழ்வுகள், வைத்தியசாலைகள் மீது குண்டுவீசியுள்ளன. அதற்கு யாரிடமும் அனுமதி கோரப்படுவதில்லையே.

இன்று அமெரிக்காவும் மேற்குலகும் ஒரு கையறுநிலையில் நிற்கின்றன. அமெரிக்க மற்றும் பிரித்தானியப் பிரதிநிதிகளின் கூற்று அதையே சொல்கிறது. ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் பாதுகாப்புச் சபையில் உள்ள வீட்டோ அதிகாரம் எதுவித ஐநாவின் தலையீட்டுக்குமான வாய்ப்பை இல்லாமல் செய்துள்ளது.

இட்லிப்பை சிரியப் படைகள் விடுவித்தால் அது அமெரிக்காவுக்குப் பேரிடியாக இருக்கும். உலகின் மிகப்பெரிய இராணுவத்தையும் தொழில்நுட்பத்தையும் நவீன ஆயுதங்களையும் கொண்ட ஒரு நாடு போரில் அவமானகரமான தோல்வியைத் தழுவுகிறது என்றால் அதன் தாக்கம் எத்தகையது என்பதை ஒருகணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பத்து ஆண்டுகளுக்கு முன் இவ்வாறு ஒன்றைக் கற்பனை செய்து பார்த்திருக்கக் கூட முடியாது. ஏன் இப்போதும் கூட பலரால் இதை ஏற்றுக்கொள்ளமுடியாது.

ஆனால் இட்லிப்பை விடுவிப்பது அவ்வளவு இலகுவானதாக இராது. ஒருபுறம் அமெரிக்க சார்புப் போராளிகளுக்கு தப்பிஒடுவதற்கு இடமில்லை. சிரியப் படைகள் முன்னேறியபோது பின்வாங்கிப் பின்வாங்கிப் இப்போது இட்லிப்புக்கு வந்துள்ளார்கள். ஒரேவழி அவர்கள் துருக்கிக்குச் செல்வது. வேறு தெரிவுகள் அவர்கட்கு இல்லை. இதனால் தான் போர்நிறுத்தத்திற்கு துருக்கி ஜனாதிபதி எர்டோகன் கோரினார். அவரது கதை சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த கதை. சிரிய யுத்தம் தொடங்கியபோது அமெரிக்காவுக்கு ஆதரவாக சிரியாவுக்கு எதிரான குழுக்களுக்கு ஆதரவு தெரிவித்தவர். ஆனால் அமெரிக்க-சிரிய விரிசல் துருக்கிய குர்துகளுக்கு அமெரிக்கா ஆயுதமும் ஆதரவும் வழங்கி துருக்கிக்கு எதிரான போருக்கு வழிசெய்துள்ளது.

இட்லிப்பில் பிரித்தானிய உளவுத்துறையான ஆஐ-6 இராசாயனத் தாக்குதல் ஒன்றைச் செய்து அப்பழியை சிரிய அரசாங்கத்தின் மீது போடுவதற்கான ஏற்பாடுகள் நடப்பதாக அமெரிக்க செனட் சபை உறுப்பினர் ரிட்சர்ட் பிளெக் தெரிவித்துள்ளார். இதேவேளை அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் இட்லிப் விடுவிப்பைத் தவிர்ப்பதற்காக இரசாயனத் தாக்குதல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்கின்றன என கடந்த வாரம் ரஷ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

சிரிய யுத்தத்தின் போக்கு உலக அலுவல்களின் இன்னொரு பக்கத்தைக் காட்டி நிற்கிறது. ஒருபுறம் அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்பின் கீழ் புதிய திசையில் பயணிக்கிறது. அது இயலாமையின் விளைவு என எமக்கு விளங்க வேண்டும். ட்ரம்பின் அப்பட்டமான வெள்ளை இனவாதமும் அயல்நாடுகள் பற்றிய பகையுணர்வும் அமெரிக்காவின் வறுமைப்பட்ட வெள்ளை இனத்தவரிடையேமிருந்த ஏற்பைப் பெற்றன. அமெரிக்கா தனது குடிவரவுக் கொள்கையை இனவாத நோக்கிற் கட்டுப்படுத்துவது அமெரிக்கப் பொருளாதார அவலத்துக்குப் பிறரைப் பழிகூறுங் காரியமாகும்.

இன்று அமெரிக்கா தனது எதிரிகளுடன் மட்டுமல்ல தனது கூட்டாளிகளுடனேயே மல்லுக் கட்டுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் அமெரிக்காவின் உறவுக்குக் கேடாகச் சில இறக்குமதித் தீர்வைகளும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய விலகலுக்குப் பகிரங்க ஆதரவும் ஐரோப்பிய நாடுகள் மீது அழுத்தஞ் செலுத்தும் நகர்வுகளிற் சில. ~நேற்றோ| இராணுவக் கூட்டமைப்பின் செலவுகட்குக் கூடிய பொறுப்பை ஐரோப்பிய நாடுகளிடம் தள்ளியது என்பன ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கச் செல்வாக்கு வலுவிழப்பதை தெளிவாகக் காட்டுகின்றன. அதேவேளை பிரிக்ஸிட்டும் உறுப்பு நாடுகளிடையேயான முரண்பாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்தைப் பலவீனப்படுத்தியுள்ளதோடு அதன் எதிர்காலம் குறித்த வினாக்களை எழுப்பியுள்ளன.

இப்பின்னணியிலேயே சிரிய நிலவரங்களை நோக்க வேண்டும். வரலாற்றின் முடிவில் இட்லிப் நிற்கிறது. அமெரிக்காவும் மேற்குலகும் எப்பாடுபட்டும் இட்லிப்பைத் தக்கவைக்கவோ அல்லது மனிதாபிமானக் காரணிகளைக் காட்டி நேரடியாகத் தலையிட்டு மத்திய கிழக்கில் தமது செல்வாக்கை நிலைநிறுத்த முனையும். ஆனால் அதற்கு எவ்வாறு ரஷ்யாவும் ஈரானும் எதிர்வினையாற்றும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். எது எவ்வாறாயினும் இப்போது வரலாற்றின் முடிவுக்கான நேரம் என்று சொல்லக் கூடிய காலம் வந்திருப்பது சாதாரணமானதல்ல.

சோவியத் யூனியனின் முடிவை வரவாற்றின் முடிவு என்று அறிவித்தால் அமெரிக்க ஏகாதிபத்திய உலகப் பொலிஸ்காரன் பாத்திரத்தின் முடிவையும் அவ்வாறு அழைக்கவியலும். நாம் விரும்பியோ விரும்பாமலோ உலகம் மாறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *