அரசியல்உலகம்

சவூதி அரேபியா மீதான தாக்குதல்: பதட்டத்தின் பரிமாணங்கள்

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்ற முதுமொழி நாம் அறிந்தது. உலக அரசியலில் இதை இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய கெடுபிடிப் போர் காலத்தில் நாம் கண்டோம். அதன் பின்னரான உலக ஒழுங்கு அமெரிக்க மைய ஒற்றை தலைமை உலக ஒழுங்காக மாறிய நிலையில் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் உலக அரங்கில் நடாத்திய நிகழ்வுகளுக்கு கேள்வி எதுவும் இருக்கவில்லை. கடந்த இரண்டு தசாப்தங்களாக உலக அரங்கு மாறிவருகிறது. அது வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் ஒன்றல்ல பலதாய் இருப்பதை அண்மைய நிகழ்வுகள் இன்னொருமுறை காட்டியுள்ளன.

கடந்த சனிக்கிழமை சவூதி அரேபியாவின் அரம்கோ என்ணெய் நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் தாக்குதல்கள் மத்திய கிழக்கில் பதட்ட நிலையை உருவாக்கியுள்ளன. இந்தப் பதட்ட நிலை மத்திய கிழக்கை தாண்டி உலகெங்கும் எதிரொலித்தது. சர்வதேச சந்தைகள், அரசியல் ஆர்வலர்கள் எல்லோரும் பதட்டமாய் இருக்கிறார்கள். இக்கட்டுரையை எழுதுகின்ற போது நிச்சயமின்மை எங்கும் வியாபித்திருக்கிறது. எதுவும் நடக்கலாம் என்கிற அச்சம் எதையும் எதிர்வு கூற இயலாத நிலைக்கு தள்ளியுள்ளது. இதை நீங்கள் வாசிக்கும்போது ஒரு போர் தொடங்கி இருக்கவும் கூடும். சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்களின் முக்கியத்துவம் அத்தகையது.

தாக்குதலின் விளைவுகளும் எதிரொலியும்
தாக்குதல்களை அடுத்து சவூதி அரேபியா தனது எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 5.7 மில்லியன் பரல்களால் குறைத்தது. இது கிட்டத்தட்ட அதன் நாளாந்த உற்பத்தியை அரைவாசியாக குறைப்பதற்கு சமனானது. இது உலகளாவிய எண்ணெய் உற்பத்தியில் 5மூ ஆகும்.

இது உலக வரலாற்றில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டு விற்பனைக்கு வரத் தொடங்கியது முதல் ஏற்பட்ட மிகப்பெரிய விநியோக தடை ஆகும். இதற்கு முன்னர் மிகப்பெரிய எண்ணெய் விநியோகத் தடையானது 1979ஆம் ஆண்டு ஈரானிய புரட்சியை ஒட்டி நிகழ்ந்தது. அடுத்தாக 1990-91 காலப்பகுதியில் குவைத் மீதான ஈராக்கின் முற்றுகையும் அதைத் தொடர்ந்த வளைகுடா யுத்தமும் விநியோகத் தடையை ஏற்படுத்தியது. ஆனால் கடந்த வாரத்தில் ஏற்படுத்தப்பட்ட உற்பத்திக் குறைவானது இவை இரண்டை விடவும் பெரியது. இது கடந்த வார இறுதித் தாக்குதல்கள் உலகளாவிய ரீதியில் எவ்வளவு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்பதை விளக்கப் போதுமானது

திங்கட்கிழமை எண்ணெய் விலைகள் கிட்டத்தட்ட இருபது வீதம் உயர்ந்தன. 1988 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே நாளில் எண்ணெய் விலை இவ்வளவு அதிகரித்தது இதுவே முதல் முறையாகும்.

இந்த ட்ரோன் தாக்குதல்களுக்கு யெமனில் சவூதி அரேபியா நடத்தும் போரில் எதிர் தரப்பாக பங்குபற்றும் ஹெளதிப் போராளிகள் உரிமை கொண்டாடி உள்ளார்கள். ஆனால் அமெரிக்கா ஈரானை குற்றஞ்சாட்டுகிறது. அமெரிக்கா எதிர் ஈரான் என்கிற பூகோள அரசியல் நெருக்கடி இந்த தாக்குதலை மையப்படுத்தி முனைப்படைந்துள்ளது. தாக்குதலுக்கும் தங்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லை என ஈரான் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் ஈரான் வழங்கிய ஆயுதத் தொழிநுட்ப உதவியுடனே இத்தாக்குதல் நடாத்தப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் எழுதுகின்றன. அதேவேளை சில ஐரோப்பிய இராணுவப் புலனாய்வாளர்கள் இந்த ட்ரோன்கள் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள ஈராக் நிலப்பரப்பில் இருந்து ஏவப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கின்றன. அமெரிக்க ராணுவத்தினர் இவை ட்ரோன் தாக்குதல்களை அல்ல இவை ஏவுகணைத் தாக்குதல்கள் என்ன தெரிவிக்கின்றன. இவை அனைத்தும் மிகவும் குழப்பகரமான பூகோள அரசியல் அரங்கானது மத்திய கிழக்கை மையப்படுத்தி நிகழ்வதை காட்டுகிறது.

இந்தத் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த ஈரானிய ஜனாதிபதி இத்தாக்குதல்கள் சவூதி அரேபியா யெமனில் நடாத்தும் போருக்கான எதிர்வினை எனவும் அங்கு சவூதி அரேபியா முன்னெடுத்துள்ள போரை நிறுத்தியாக வேண்டும் என்றும் கோரியுள்ளார். இதேவேளை பதில் தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் இட்ட ட்விட்டர் செய்தி அதிர்வலைகளை உருவாக்கியது.

ஒரு தாக்குதல் பல கோணங்கள்
உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளரின் எண்ணையைக் குறிவைத்த தாக்குதல் எவ்வாறு பல்பரிமாண ரீதியில் விளைவுகளையும் எதிர்வினைகளையும் உருவாக்கும் என்பதை இந்த நிகழ்வு வெளிப்படுத்தியுள்ளது. உலகம் பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் இராணுவத்தின் உதவியோடு ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து பூகோள அரசியலின் பால் வழி நடக்கின்ற ஒன்றாய் இருக்கிறது என்பதை காட்டுகிறது.

இந்தத் தாக்குதல்கள் சவூதிக்கு பாரிய பொருளாதார நஷ்டத்தை உருவாக்கியுள்ளன. எண்ணெய் உற்பத்தியை அரைவாசியாக குறைக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளமை ஏற்கனவே சரிவை சந்தித்துள்ளன சவூதி பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய அடியாக இருக்கும். அதேவேளை இந்த தாக்குதலுக்குள்ளான இடங்களை மறுசீரமைப்பு அதற்காக ஏற்படும் செலவும் அதற்கு எடுக்கப்போகும் காலமும் சவூதி பொருளாதாரத்தின் தீர்மானகரமான சக்திகளாக இருக்கும். தாக்குதலை அடுத்து அதிகரித்துள்ள எண்ணெய் விலைகளின் பயன்களை ஏனைய எண்ணெய் உற்பத்தி நாடுகளே பெறும். அதேவேளை அரசியல் ரீதியிலும் என்ன செய்வது என்பதை தனித்து முடிவெடுக்க முடியாத நிலைக்கு சவூதி அரேபியா தள்ளப்பட்டுள்ளது. இதற்கான பதிலுக்கு அமெரிக்காவையே சவூதி நம்பியுள்ளது. இது இராணுவ ரீதியிலும் அயலுறவுக் கொள்கை ரீதியிலும் சவூதி அரேபியாவின் இயலாமையை காட்டி நிற்கின்றன.

ஈரானுக்கு எதிரான ஒரு யுத்த களத்தை திறப்பதற்கு அமெரிக்கா தயாராக இல்லை. ஈரானை ஓரங்கட்டி பழி தீர்க்கும் நோக்கம் அமெரிக்காவுக்கு இருந்தாலும் அதை ஒரு போரின் மூலம் சாத்தியமாக்க இயலாது என்பதை அமெரிக்கா நன்கு அறியும். இன்னொரு போரை தொடக்குவது பொருளாதார ரீதியில் அமெரிக்காவிற்கு பாரிய சவால்களை உருவாக்கும். மத்திய கிழக்கில் ஒரு போரை நடாத்த மாட்டேன் என்று சொல்லியே டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக தெரிவானார். அடுத்த ஆண்டு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக தொடர்வதற்கு அவர் விரும்புவதால் தேர்தல்களை கணிப்பில் எடுத்து போரைத் தொடக்க இயலாத நிலையில் அவர் இருக்கிறார்.

அமெரிக்காவின் பொருளாதாரம் இன்னும் தள்ளாட்டத்திலேயே இருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை இப்போது தாங்கிப் பிடிப்பது வியாபாரமோ வர்த்தகமோ அல்ல. அமெரிக்க நுகர்வோரே அமெரிக்க பொருளாதாரத்தின் மையமாக இருக்கிறார்கள். தாக்குதல்களை அடுத்து அதிகரித்துள்ள எண்ணெய் விலைகள் நுகர்வோரையே பாதிக்கும். கடந்த அரை நூற்றாண்டு காலமாக அமெரிக்கா சந்தித்த பொருளாதார சரிவுகள் ஒவ்வொன்றுடனும் எண்ணெய் விலைகள் நெருங்கிய தொடர்பு உடையவை. எண்ணெய் விலைகள் அதிகரிக்கும் போது அமெரிக்க நுகர்வோர் எண்ணெய்க்கு செலவழிக்கும் தொகை அதிகரிக்கும் பொழுது ஏனைய பொருட்களை வாங்குவது குறையும். அதேவேளை எண்ணெயை மையப்படுத்திய பொருட்களின் விலை அதிகரிக்கும். இது அமெரிக்கப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை உண்டு பண்ணும். அமெரிக்கா சீனாவுடன் முன்னெடுத்து இருக்கிற வர்த்தகப் போரின் விளைவுகளை அமெரிக்காவை அதிகம் எதிர்நோக்குகிறது.

இந்நிலையில் ஈரானுக்கு எதிரான நேரடியான போரைத் தொடுக்க அமெரிக்கா தயாரில்லை. ஆனால் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான சவூதி அரேபியா அமெரிக்காவின் பதில் தாக்குதலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கும் சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மானுக்கு இடையிலான நெருக்கம் அமெரிக்காவை ஈரான் மீதான தாக்குதலுக்கு உந்துகிறது. ஆனால் நேரடியான போர் ஒன்றை செய்யாமல் ஈரானுக்கு வெளியே ஈரானிய ஆதரவு பெற்ற தளங்கள் மீதான தாக்குதலை அமெரிக்கா தொடுக்கக்கூடும்.

அதிகரித்துள்ள எண்ணெய் விலைகள் பல வளர்முக நாடுகளை மோசமாகப் பாதிக்கும் நிலையில் மலிவாக எண்ணெய் வாங்கக்கூடிய வழிவகைகளை இந்நாடுகள் தேடுவது இயல்பானது. இவ்விடத்தில் ஈரான் மீதும் வெனிசுவேலா மீதும் அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் கேள்விக் உட்படுகின்றன. உலகின் முக்கியமான எண்ணெய் உற்பத்தியாளர்கள் ஆன இவ்விரு நாடுகள் மீது விதிக்கப்பட்ட தடைகள் காரணமாக இந்நாடுகளின் எண்ணை விற்பனை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இப்போது ஏற்பட்டுள்ள எண்ணெய் விலை அதிகரிப்பு அமெரிக்க தடைகளையும் மீறி இவ்விரு நாடுகளிடம் எண்ணையை கொள்வனவு செய்ய வேண்டிய நிலையை பல நாடுகளுக்கு ஏற்படுத்தியுள்ளது. இது இன்னொரு வகையில் அமெரிக்க மேலாதிக்கத்தை கேள்விக்கு உட்படுத்துகிறது.

இத்தாக்குதலுக்கு ஈரானிய ஆதரவு இருந்திருக்குமாயின் அதை விளங்கிக் கொள்வது கடினமல்ல. ஈரான் மீதான வலிந்த போரையும் ஆட்சி மாற்றத்தையும் அமெரிக்க சவூதி கூட்டணி ஏற்படுத்த விளைகிறது. அதேவேளை இரானின் நட்புக்குரிய அமைப்புகள் மீது தொடர்ந்தும் போர் தொடுக்கிறது. இப்பின்புலத்தில் ஈரான் ஒரு முன்னெடுப்பைச் செய்துள்ளது. இத்தாக்குதல் ஈரானிற்கு தெரியாமல் நடைபெற்றிருக்காது என ஊகிக்கலாம். ஒரு சிறிய தாக்குதல் உலகளாவிய ரீதியில் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்தே இது நடாத்தப்பட்டுள்ளது என நம்பலாம்.

இந்த தாக்குதல்கள் உலக அரசியல் ராணுவ அரங்கில் இரண்டு முக்கியமான செய்திகளை சொல்லி செல்கின்றன. முதலாவது இறைமையுள்ள நாடுகளுக்கிடையிலான போர் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பரவலாக உணரப்பட்ட நிலையில் அந்தந்த நாடுகளின் அரசு சாரா மறைமுகமாக போரை நிகழ்த்துகிறார்கள். இது உலக அரங்கில் ஒரு புதிய போக்கு. இரண்டாவது வான்வெளிக்கான ஆதிக்கப் போட்டி என்பது அதிவிரைவு போர் விமானங்களை மையப்படுத்தியதாகவே இவ்வளவு காலமும் இருந்து வந்திருக்கிறது. ஆனால் சிறிய மலிவான ஆளற்ற கண்டுபிடிக்கக் கடினமான சிறிய ட்ரோன்கள் வான்வெளி மீதான ஆதிக்கத்தை இன்னொரு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளன. அவை மோதல்களை நடத்துவதற்கான தன்மையை நிலை மாற்றியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *