அரசியல்உலகம்உள்ளூர்

கொவிட்-19 பெருந்தொற்றின் பின்னர்: உலக அரசியலின் திசைவழிகள்

அல்லைப்பிட்டியில் இருந்தவனின் தலைவிதியை அமெரிக்காவில் இருந்தவன் தீர்மானித்த காலம் ஒன்று இருந்தது. இப்போதும் அப்படித்தான் என்று நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள். காலம் மாறிவிட்டது. அவர்கள் காலவதியாகிவிட்டார்கள். கற்பனைக்கும் யதார்த்தத்துக்கும் இடையிலான இடைவெளி நூலளவே. கனவு காணலாம், அதில் தவறில்லை. ஆனால் கற்பனையில் வாழ இயலாது. ஒருவேளை அவ்வாறு வாழ முயன்றால் யதார்த்தம் உங்கள் முகத்தில் அறையும். ஆனால் பலர் கற்பனையிலும் கனவிலுமே வாழ்கிறார்கள். யதார்த்தம் அவர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு அப்பால் நகர்கிறது.

இன்றைய உலக அரசியலின் நிலையும் இப்படித்தான் இருக்கிறது. உலக ஒழுங்கு மிக வேகமாக மாறிவருகிறது. அம்மாற்றங்கள் தவிர்க்கவியலாதவை. ஆனால் இன்னமும் பழைய மாதிரியே உலகம் இயங்குகிறது என்று நினைப்பவர்களும் ஆள்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படலாம். அவ்வளவே. தமிழர்களுக்கான தீர்வு மேற்குலகத் தலைநகரங்களில் இருக்கிறது என்று நம்புகிறவர்களுக்கும் இவர்கக்கும் வேறுபாடு அதிகமில்லை.

கொவிட்-19 பெருந்தொற்றின் பின்னரான உலக ஒழுங்கு எவ்வாறு இருக்கும் என்று சிந்திக்கும் போது சில திசைவழிகளை இங்கு குறிப்பது தகும். இவை இலங்கை போன்ற நாடுகள் கணக்கில் எடுக்க வேண்டிய மாற்றங்கள். உலகமே நிதிமூலதனம் என்ற பெருஞ்சங்கிலியால் கட்டப்பட்டுள்ள நிலையில் அந்த நிதிமூலதனத்தின் அடியாளத்தில் ஏற்படும் மாற்றங்கள் பல்வேறு வடிவங்களில் இலங்கை போன்ற மூன்றாமுலக நாடுகளில் செல்வாக்குச் செலுத்தும்.

முதன்மையை இழந்த அமெரிக்கா
இந்தப்பெருந்தொற்றினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. இக்கட்டுரையை எழுதும்போது ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் கொவிட்-19ன் தாக்கத்திற்கு உள்ளாகி இறந்திருக்கிறார்கள். உலகின் தலைவன் என்ற நிலையை அமெரிக்கா இப்போது கிட்டத்தட்ட இழந்துள்ளது எனலாம். பொருத்தமாகச் சொல்வதானால் தலைமைப் பதவி சேடம் இழுக்கிறது.

அமெரிக்காவின் உலக ஆதிக்க நோக்கம் முதலாம் உலகப் போர்க் காலத்திலேயே உருவாகிவிட்டது. அந்தப் போராற் பெரும் பொருள் இழப்பையும் உழைப்பாற்றல் உடையோரின் உயிரிழப்பையும் சந்தித்த ஐரோப்பிய நாடுகளை விட மேன்மையான ஒரு பொருளாதார வல்லரசாக அமெரிக்கா வளர்ந்தது.

இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா உலக மக்களின் நலன்காக்க வேண்டிப் பங்குபற்றவில்லை. ஃபாஸிஸத்துக்கு எதிரான அப்போரில் அதிகளவிலான தியாகங்களைச் செய்த நாடு சோவியத் யூனியன் தான். மிகக் குறைவான உயிர்ச் சேதத்தையும் உடைமைச் சேதத்தையுமே சந்தித்த அமெரிக்கா அப்போரின் விளைவாக உலகின் மிக வலிய பொருளாதார, ஆயுத வல்லரசாகத் தன்னை நிலைநாட்டிக் கொண்டது.

2008ம் ஏற்பட்ட உலகப்பொருளாதார நெருக்கடி அமெரிக்காவின் முதன்மை நிலையில் ஏற்படுத்திய தாக்கம் பெரிது. ஆனாலும் அமெரிக்காவின் பொருளாதாரச் சரிவால் அமெரிக்காவின் உலக ஆதிக்கம் உடனடியாக முடிவுக்கு வராது. பிறபொருளாதாரங்களின் வளர்ச்சி அமெரிக்காவின் பொருளாதாரத்தின் செல்வாக்கையும் ஆதிக்கத்தையும் குறைக்கும் என்பது உண்மை. எனினும் அமெரிக்காவே உலகின் பெரிய போர் இயந்திரத்திற்குப் பொறுப்பாக உள்ளது. அதுவரை உலக அலுவல்களில் அமெரிக்காவில் செல்வாக்கு அதிகமாக இருக்கும். எனினும் என்றென்றைக்குமல்ல என்பதை கொவிட்-19 நிரூபித்துள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவால் உலக அலுவல்களில் நினைத்ததை செய்ய இயலவில்லை. ஈராக்கிலும் லிபியாவிலும் செய்யதை சிரியாவில் செய்ய இயலவில்லை. இலத்தீன் அமெரிக்கா நாடுகளில் தனக்கு உவப்பில்லாத ஆட்சிகளை கவிழ்த்து வந்துள்ள அமெரிக்காவால் இப்போது அதைச் செய்ய இயலவில்லை என்பதற்கு வெனசுவேலா நல்லதொரு உதாரணம். ஈரானுக்கு எதிரான மிரட்டல் பலனளிக்கவில்லை. வடகொரியாவை ஏமாற்ற முடியவில்லை.

“அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்கு முடிவுக்கு வந்துவிட்டது என்ற யதார்த்தத்தை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும்” என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் அயலுறவுகளுக்கான தலைவர் ஜோசப் போரஸ் கடந்த திங்கட்கிழமை ஜேர்மன் இராஜதந்திரிகளுடனான கூட்டத்தில் தெரிவித்தார். இது மிகவும் முக்கியமானதொரு நிகழ்வு. அமெரிக்காவின் நெருக்கடிகள் குறித்து மூடிய கதவுகளுக்குப் பின்னால் பேசப்பட்டாலும் இதுவரை மேற்குலக நாடுகளின் தலைவர்கள் யாரும் பொதுவெளியில் பேசவில்லை. இவ்வாறு பேசுவது இதுவே முதல்முறை.

“ஆய்வாளர்கள் அமெரிக்கா தலைமையிலான உலகின் முடிவு குறித்தும் ஆசியாவின் நூற்றாண்டின் வருகையும் பற்றித் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார்கள். இப்போது அது எம் கணமுன்னே அரங்கேறுகிறது. கொவிட்-19 நாம் யாருடைய பக்கத்தைத் தேர்ந்தெடுப்பது என்ற முடிவை விரைவாகச் எட்டவேண்டிய நிலைக்கு எம்மைத் தள்ளியுள்ளது” என்றார். ஜேர்மனியும் பிரான்சும் அமெரிக்காவிலிருந்து விலகிய கொள்கை வகுப்புக்களை நோக்கி நகர்ந்துள்ளன. அமெரிக்கா தலைமை வகிக்காத ஒரு உலக ஒழுங்கை நோக்கி நாம் மெதுவாக நகர்கிறோம்.

சீனா: பாதைகள் பலவிதம்
நாம் விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ உலகின் முதன்மைநிலையை சீனா அடைந்துள்ளது என்ற உண்மையை ஏற்றாக வேண்டும். சீனா இன்று தன் முதன்மைநிலையை பலவழிகளில் நிறுவுவதனூடு தன்னை நிலைநிறுத்த முனைகிறது. அமெரிக்க டாலர் மையப் பொருளாதாரத்தில் இருந்து நாடுகளை மெதுமெதுவாக சீனா வெளியே கொண்டுவருகிறது. சீனா தனது நாணயமான யுவானிலேயே நாடுகளுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. அதேவேளை அமெரிக்க டாலர் அல்லாத ஏனைய நாணயங்களிலும் வர்த்தக நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது. இதன்மூலம் டாலர் மையப் பொருளாதாரத்திற்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்துகிறது.

உலக உற்பத்திச் சந்தையின் மையமாக சீனா இருக்கிறது. இதன்மூலம் மறைமுகமாக கட்டுப்பாடு சீனாவின் கைகளிற்கு வந்து சேர்ந்துள்ளது. சீனாவில் கொவிட்-19 தொற்று வீரியம் அடையத் தொடங்கிய போது பல மேற்குலக நாடுகளில் மக்கள் பல்பொருள் அங்காடிகளில் கழிவறைக்காகிதங்களுக்கு சண்டையிட்டார்கள். ஏன் என்று யோசித்துப் பாருங்கள். இதுவொரு உதாரணம் மட்டுமே.

இந்தியாவுடனான எல்லை தவிர்த்து ஏனைய அனைத்து எல்லை நாடுகளுடனும் சீனா எல்லை உடன்படிக்கைகளை எட்டியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் சீனா தனது கடல் எல்லைகளைப் பாதுகாப்பதில் கூடிய கவனம் செலுத்துகிறது. குறிப்பாக தென்சீனக்கடலில் அமெரிக்காவின் தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களுக்கு எதிர்வினையாற்றத் தயாராகியுள்ளது.

சீனாவின் ‘ஒரு வார் ஒரு வழித் திட்டம்’ (One Road One Belt Initiative) ஆசியாவையும் ஆபிரிக்காவையும் ஐரோப்பாவையும் இணைத்துள்ளது. சர்வதேச வணிகத்தில் புதிய சாத்தியப்பாடுகளை இது திறந்து வைத்துள்ளது. தன்னை ஒரு பொருளாதார வல்லரசாக நிறுவும் முயற்சியில் இத்திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்திட்டம் பொருளாதார ரீதியில் நீண்டகாலத்திற்கு சீனாவின் முதன்நிலையைத் தக்க வைக்க உதவக்கூடும்.

இன்றைய நிலையில் முதன்மைநிலையை சீனா அடைவதற்கு இரண்டு வழிகளைப் பின்பற்றக் கூடும். முதலாவது ஆசியப் பசுபிக் பிராந்தியத்தில் முழுமையான கட்டுப்பாட்டைப் பெறுவதன் ஊடு அமெரிக்காவை ஒதுக்கி வெற்றி காண்பதன் ஊடு உலகுக்கு சீன மேநிலையை அறிவித்துக் கட்டுப்பாட்டைப் பெறலாம். இரண்டாவது வழி மூலோபாய ரீதியில் அமெரிக்காவை பலதளங்களில் பின்தள்ளி முதன்மை இடத்தைப் பிடிப்பது. இரண்டு வழிகளையும் ஒருசேர சீனா பின்பற்றவும் கூடும்.

இதைப் பார்க்கும் போது இரண்டாம் உலகயுத்தத்தைத் தொடர்ந்த கெடுபிடிப்போர் காலம் உங்கள் நினைவுக்கு வரலாம். ஆனால் இனிவரப்போகும் மிகவும் வித்தியாசமானது. சோவியத் யூனியனுக்கு பொருளாதார பலமோ, உலகப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் தேவையோ இருக்கவில்லை. ஆனால் இன்று சீனாவே உலகப் பொருளாதாரத்தின் ஊன்றுகோல். சீனா உலகின் பெரும்பான்மையான நாடுகளில் அரசியல் ரீதியாக இல்லாவிட்டாலும் பொருளாதார ரீதியில் செல்வாக்குச் செலுத்துகின்றது.

ஓன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். அடுத்த இருபது ஆண்டுகளுக்கு ஆசியப் பிராந்தியம் அனைத்துத் தளங்களிலும் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். இதனால் சீனா தனது பிடியை ஆசியாவில் இறுக்கும். ஆசியாவை முழுமையாகக் கட்டுப்படுத்துவதன் ஊடு உலக ஆதிக்கத்தை நோக்கி சீனா பயணிக்கும். அமெரிக்காவால் பொருளாதார ரீதியாக எதிர்வினையாற்ற இயலாத நிலையில் இராணுவரீதியாக எதிர்வினையாற்றும். இதன் பாதிப்புக்களை ஆசியர்களே அனுபவிப்பர். எவ்வாறு கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக ஆதிக்கப் போட்டியின் மையமாக மத்திய கிழக்கு இருந்ததோ, அதேபோல அடுத்த நூற்றாண்டு ஆசியாவே ஆதிக்கப் போட்டியின் மையமாகும். இதையும் சேர்த்தே நாம் “ஆசியாவின் நூற்றாண்டு” என்று அழைக்கவியலும்.

தேசியவாத எழுச்சியின் ஆபத்துக்கள்
கடந்த பத்தாண்டுகளில் உலகெங்கும் தேசியவாதம் மீளெழுச்சி கொண்டுள்ளது. அது குறிப்பாக அதிவலது நோக்கியதாகவும் ஃபாஸிஸ மிரட்டலாகவும் வெளிப்பட்டுள்ளது. கொவிட்-19 பெருந்தொற்று இதை வெளிப்படையாகவும் நிறுவனமாக்கப்பட்ட வகையிலும் செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளது. இன்று மக்களைக் கைவிட்டு பெருநிறுவனங்களையும் செல்வந்தர்களையும் இவ்வாறு தேசியவாத அடிப்படையிலான அரசாங்கங்களே முன்னின்று செய்கின்றன. அமெரிக்காவில் இந்த நோய்த்தொற்று வீரியம் அடைந்த கடந்த இரண்டு மாதங்களில் அமெரிக்கச் செல்வந்தர்களின் சொத்துக்கள் 15மூத்தால் அதிகரித்துள்ளன.

பெருந்தொற்றுக்குப் பின்னரான உலகின் மிக முக்கிய சவால் தீவிர வலதுசாரித் தேசிய எழுச்சியாக இருக்கும். தேசியத்தின் போர்வையில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட சூழல் இயல்பாகத் தோற்றம் பெறும். இப்போது பல மத்திய ஆசிய நாடுகளிலும் கிழக்கு ஐரொப்பிய நாடுகளிலும் இதன் குணங்குறிகளைக் காணவியலும்.

இந்தப் பெருந்தொற்று தேசியவாதம் புதிய களங்களைக் கண்டடைவதற்கு இரண்டு வழிகளில் வழியமைத்துக் கொடுத்தது. முதலாவது அரசுகள் எல்லைகளை மூடி பொருட்கள் ஏற்றுமதியை (குறிப்பாக மருத்துவத்துறைசார்) தடைசெய்து தேசியவாதத்தை வளர்த்தன. இதை திறந்த சந்தையை முன்மொழிந்து முன்னின்ற அமெரிக்கா, ஜேர்மனி போன்ற நாடுகளே செய்தன. இரண்டாவது கொவிட்-19 நெருக்கடியைக் கையாள இயலாத அரசுகள் தேசியவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு கவனத்தைத் திசைதிருப்பின. இரண்டுமே தீவிர தேசியவாதத்தின் எழுச்சிக்கும் பரவுகைக்கும் வழி செய்தன.

பெருந்தொற்று ஏற்படுத்திய பொருளாதாரப் பாதிப்புக்கள், வேலையிழப்புக்கள், மனஉளைச்சல், நம்பிக்கையீனம், நிச்சயமின்மை என்பன தேசியவாதத்தின் தீவிர வடிவங்கள் செல்வாக்குப் பெறுவதற்கான களங்களே. பெருந்தொற்றுக்குப் பின்னர் இதே தேசியவாதத்தின் பெயரால் எமது உரிமைகள் எமக்குச் சொந்தமில்லாமல் போவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.

நிறைவாக
உலகம் மாறிவிட்டது. கண்களை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டதென்று சொல்வது எவ்வளவு அபத்தமோ அதைப்போன்றதே உலக ஒழுங்கின் மாற்றங்களை ஏற்க மறுப்பதும். பெருந்தொற்றின் பின்னரான காலம் ஆபத்தானது. ஆதிக்கப் போட்டிக்கான பேரரங்கின் ஒருபகுதியாக நாடுகள் திகழும். அந்தப்போட்டி போர்களைத் தூண்டலாம். வீச்சடைந்துள்ள தேசியவாதம் சிறுபான்மையிரை ஒடுக்கவும் உரிமைகளைப் பறிப்பதற்குமான காரணியாகலாம். ஓவ்வொரு நாடும் அதன் மக்களும் அடுத்த அடியை மிகக் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். ஒருநிமிடம் கண்ணயர்ந்தாலும் பாஸிச சர்வாதிகாரம் எமக்குப் பரிசாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *