அரசியல்உலகம்உள்ளூர்

கொவிட் கதையாடல்-2: பெருந்தொற்றின் பின் உள்ளூராட்சிகளின் எதிர்காலம்

இந்த பெருந்தொற்று இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காவு கொண்டிருக்கிறது அதேவேளை இன்னும் எத்தனையோ மில்லியன் கணக்கான மக்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. இன்று பாதுகாப்பாக இருந்தபடி இந்தக் கட்டுரையை நீங்கள் வாசிப்பதற்கு ஏதுவாக பலர் தங்கள் சேவைகளை நல்கி இருக்கிறார்கள். அவர்கள் குறித்து நாம் சிந்தித்து இருக்கிறோமா என்ற வினாவுடன் தொடங்க விரும்புகிறேன்.

இந்நோய்த்தொற்று பரவத் தொடங்கியது முதல் இதைத் தடுப்பதற்கு பாடுபட்டவர்கள் மிகவும் சாதாரண பணிகளில் ஈடுபட்டிருக்கும் மக்களே. மருத்துவர்கள், தாதியர், மருத்துவத் துறை சார் பணியாளர்கள் என்போர் முக்கியமானவர்கள். இன்றும் நாம் பத்திரமாக இருப்பதற்கு காரணம் அவர்களைப் போலவே இன்னும் எத்தனையோ துறைகள் தொடர்ச்சியாக இடைவிடாது பணியாற்றியமையே. நமது குப்பைகளை அன்றாடம் சேகரிப்போர் கால்வாய்களை சுத்திகரிப்போர், குடிநீர் வசதிகளை உறுதிப்படுத்துவோர், பொது சுகாதாரத்தை பாதுகாப்போர், சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பாக வைத்திருப்பதற்குப் பொறுப்பானோர் என இன்றுவரை கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டிருப்போர் ஏராளம். இது வருந்தத்தக்கது.

அரசுகள் கொள்கை அளவில் என்ன முடிவுகளை எடுத்தாலும் என்ன திட்டங்களை வைத்தாலும் அவை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதிலேயே அதன் வெற்றி தோல்வி தங்கியுள்ளது. இந்தப் பெருந்தொற்றை வெற்றிகரமாக கையாண்ட நாடுகளில் வெற்றி இன்றுவரை கவனம் பெறாமல் போயிருக்கின்ற மிக எளிமையான மனிதர்களின் கடுமையான பணியின் விளைவானது.

கொண்டாடப்படாத இந்த எளிய மனிதர்கள் அவர் தம் பணிகளை நாம் நோக்குவது அவசியமானது. இவ்விடத்தில் தான் உள்ளூராட்சி அமைப்புகளின் தேவையும் பயனும் முக்கியத்துவமும் கணிப்பில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாக அமைந்துள்ளது. ஒரு நகரமோ அல்லது கிராமமோ அதன் அடிப்படை சேவை வழங்குனர்களாக உள்ளுராட்சி அமைப்புகளே இயங்குகின்றன. உலகின் பல நாடுகளில் கொவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதில் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக உள்ளூராட்சி அமைப்புக்கள் மாறி இருக்கின்றன.

இது தொடர்பில் இம்மாதம் 10ம் திகதி முதல் 14ஆம் திகதி வரையான ஐந்து நாட்கள் இடம்பெற்ற ஒரு சர்வதேச ஆய்வரங்கில் கலந்துகொள்ளக் கிடைத்தது. கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னரான உலகில் உள்ளூராட்சிகளின் எதிர்காலத்தை மீள்சிந்தித்தல் (Rethinking the Role of Local Governments in a Post Covid-19 World) என்ற தலைப்பில் அமைந்த சர்வதேச ஆய்வரங்கை கேரள மத்திய பல்கலைக்கழகமும் (Central University of Kerala) கேரளாவில் அமைந்துள்ள கிராமிய முகாமைத்துவ மையமும் (Centre for Rural Management) இணைந்து ஒழுங்குபடுத்தியிருந்தன. இது பெருந்தொற்றுக்குப் பின்னரான காலப்பகுதியில் உள்@ராட்சிகளின் எதிர்காலம் குறித்த பல கேள்விகளை எழுப்பியது. ஆசிய ஆபிரிக்க அமெரிக்க ஐரோப்பிய அனுபவங்களை பல ஆய்வாளர்கள் பகிர்ந்துகொண்டார்கள். இந்த ஆய்வரங்கு பெருந்தொற்று போன்ற பேரிடர்களை கையாள்வதற்கு உள்ளுரட்சி மன்றங்களின் தேவையை ஆய்வு ரீதியில் முன்னிறுத்தி நின்றது. இந்த ஆய்வரங்கில் பேசப்பட்ட சில முக்கிய விடயங்கள் நமது சூழலுக்கும் பொருந்துவன.

ஆட்சி அதிகாரம் என்பது எப்போதும் மேலிருந்து கீழ் நோக்கியதாகவே இருந்து வந்திருக்கிறது. சாதாரண மக்கள் வாக்களிப்பது என்ற ஒரு சனநாயக கடமைக்கு அப்பால் அரசியலில், ஆட்சியில், திட்டமிடலில், கொள்கை வகுப்பில், நடைமுறைப்படுத்தலில் என எதனிலும் பங்குபற்றுவது இல்லை. இதனால் அரசியலுக்கும் சாதாரண குடிமகனுக்கும் இடையிலான இடைவெளி என்பது மிகவும் அதிகம். அவ்வகையில் ஒரு குடிமகன் தான் வாழும் பகுதியின் தன்னைச் சூழ்ந்துள்ள மக்களின் பயனுள்ள எதிர்காலம் குறித்த இடையீடுகளைச் செய்வதற்கு வாய்ப்பாக அமையப்பெற்ற அமைப்பே உள்ளூராட்சி மன்றங்கள் ஆகும். இன் மன்றங்களின் தன்மையும் அதிகாரமும் செயற்பாடும் நாட்டுக்கு நாடு வேறுபடும். அதிலும் குறிப்பாக ஒற்றையாட்சி நாடுகளில் அவை இயங்கும் தன்மைக்கும் சமஷ்டி ஆட்சி நாடுகளில் அவை இயங்கும் தன்மைக்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு. இருப்பினும் ஒற்றையாட்சி முறையில் ஒரு குறைந்தபட்ச அதிகாரத்தை கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனும் உணர்வதற்கு இந்த உள்ளூராட்சி மன்றங்கள் பயனுள்ளவை. அதேபோல அப்பகுதியின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் அரசாங்க அலகாக நிர்வாக இவற்றின் பணி முக்கியமானது.

இந்தப் பெரும் தொற்றுக் காலத்திலும் முன்னிலையில் நின்று முதல் பதிலளிப்பாளர்களாக உள்ளூராட்சி மன்றங்களின் பணி முக்கியமானது. இது அதிகாரப் பன்முகப்படுத்தலின் அவசியத்தை உணர்த்தி நிற்கின்றது. அதிகாரப் பன்முகப்படுத்தல் சரிவர நடைபெற்ற இடங்களில் வலுவான உள்ளூராட்சிகள் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பயனுள்ள அதேவேளை உயிர்காக்கும் பணியைச் செய்துள்ளன. இருப்போருக்கும் இல்லாதோருக்கும், வசதி படைத்தோருக்கும் வசதி அற்றோருக்கும் இடையிலான போராட்டமாகவே இந்தப் பெருந்தொற்றுக்காலம் இருக்கிறது. அவ்வகையில் இல்லாதவர்களின் நலன்களைக் காப்பது யார் என்ற கேள்வி எழுகிறது. அதை முந்திக்கொண்டு இல்லாதவர்களின் நலன்கள் என்ன என்ற கேள்வி முன்னெழுகிறது. இவ்விரு கேள்விகளும் உள்ளூராட்சிகளின் தேவையை உணர்த்தி நிற்கின்றன.

இந்தக் கேள்விகளின் அடிப்படை ஒன்றுதான். உலகளாவிய ரீதியில் பண்பட்ட எண்ணக்கருவாக வளர்ச்சியடைந்துள்ள சனநாயகம் சாதாரண மக்களுக்கு உரித்துடையாகியுள்ளதா. அதை அவர்களுக்கு உரித்துடையதாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எவை, அதில் உள்ளூராட்சிகளின் பங்கு என்ன.

உலகளாவிய நாடுகளில் கொவிட்-19யை எதிர்கொள்வதன் பெயரால் உள்ளூராட்சிகளின் செயற்பாட்டுக்கு அவசியமான பன்முகப்படுத்தல் எவ்வாறு பங்கப்பட்டிருக்கிறது என்பது தொடர்பில் 5 முக்கிய போக்குகளை அவதானிக்க முடியும்:

முதலாவது கட்சி சார்ந்த உள்ளூராட்சிச் செயற்பாடுகள். குறிப்பாக ஆட்சியதிகாரத்தில் இருக்கும் கட்சி தான் ஆட்சி செய்கின்ற உள்ளூராட்சிகளின் செயற்பாடுகளையும் கட்சிசார்ப்பாக மாற்றி சேவை வழங்குதல் கட்சி நடவடிக்கையாக மாற்றம் பெறுகின்றது. கிழக்காசிய நாடுகளும் சில ஆபிரிக்க நாடுகளும் இதற்கு நல்ல எடுத்துக் காட்டுகள்.

இரண்டாவது, பன்முகப்படுத்தல் என்பதன் பெயரால் உள்ளூராட்சிகளுக்கான அதிகாரத்தை தனியாரின் கைகளின் வழங்குவதன் ஊடு பொதுச்சேவைப் பயன்பாடு என்பது தனியார்மயமாக்கப்படுவது பல மேற்குலக நாடுகளில் நடந்தது. வயோதிப இல்லங்களில் நடந்த அளவுகடந்த கொவிட்-19 மரணங்கள் இந்த முறையின் தோல்வியைக் காட்டியுள்ளது. அதேவேளை இவ்வாறான பன்முகப்படுத்தல்கள் உள்@ர் சனநாயகம் என்பதன் பெயரால் பொதுச்சேவைகளை தனியார்மயப்படுத்தலுக்கு வாய்ப்பாக்கின்றன. சுவீடன், பிரித்தானிய என்பன இதற்கு உதாரணங்கள்.

மூன்றாவது, பன்முகப்படுத்தலின் பெயரால் ஆட்சியதிகாரம் சிலரின் கைகளில் குவிந்திருக்கின்றது. இது ஆட்சிச் சட்டக்த்தின் கீழே இருக்கின்ற அதிகாரமும் மேலுள்ள அதிகாரமும் இணைந்து குறுங்குழுவாக ஆட்சியையும் அதிகாரத்தையும் கட்டற்ற ஊழலையும் சனநாயகத்தின் பெயரால் அனுமதிக்கிறது. இது பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் ஒரு வடிவிலும் மத்திய கிழக்கிலும் வட ஆபிரிக்காவில் இன்னொரு வடிவிலும் அரங்கேறுகின்றன.

நான்காவது, பன்முகப்படுத்தலை பெருந்தேசியவாதம் ஆட்கொண்டிருக்கிறது. பெருந்தேசியவாதத்தின் குணங்குறிகள் உள்@ராட்சிகளைப் பாதிக்கின்றன, அவற்றின் செயற்பாடுகளுக்கு ஊறு விளைவிக்கின்றன. இந்தியாவில் நடந்தேறும் செயல்கள் இதற்கு நல்லதொரு சான்று.

ஐந்தாவது, பெருந்தொற்றைக் கட்டுப்படுவதன் பெயரால் மத்திய அரசின் முழுக்கட்டுப்பாட்டிலான செயற்பாடுகள் உள்ளூராட்சிகளை செயலற்றனவாக ஆக்கிவிட்டன. இதற்கு இலங்கை ஒரு உதாரணம்.

இவற்றை மையப்படுத்தி நாம் உள்ளூராட்சிகளின் எதிர்காலம் குறித்துப் பேசத் தொடங்க வேண்டும். அவ்வாறு பேசுவதாயின் அதன் தொடக்கப்புள்ளியாக “உள்ளூர் சனநாயகம்” அமைதல் வேண்டும். இவ்விடத்தில் “சனநாயகம்” என்பதால் குறிக்கப்படுவது என்ன என்பது பற்றிய தெளிவான பார்வை முக்கியமானது. சனநாயகம் என்ற கருத்தியல் எம்மை எவ்வாறு வந்தடைந்தது என்று நோக்குவோமாயின், எமது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் கருத்தியலே சனநாயகம் பற்றிய எமது புரிதலை வடிவமைப்பதுடன் சனநயாகம் என்ப தை முதலாளிய சனநாயகத்திலிருந்து சமூக‒பண்பாட்டு முறையிலும் வரலாற்று வழியாகவும் உருத்திரிந்த ஒன்றாகவே காணவேண்டியுள்ளது. இன்று எமக்குப் போதிக்கப்படுகின்ற சனநாயகம் முதலாளித்துவ சிந்தனையை தனது அடிநாதமாகக் கொண்டுள்ள திறந்த சந்தை, கட்டற்ற வர்த்தகம், அரசுகளின் சுருங்கிய வகிபாகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை.

இன்று அடித்தள மக்களுக்கானதாக உருவாக்கப்பட்ட உள்ளூராட்சி முறைமையும் அதுசார் அமைப்புகளும் தோல்வியடைவதற்கும் செயற்படாமைக்கும் காரணம் அவை “முதலாளித்துவ சனநாயகக்” கட்டமைப்பின் வழி உருவாக்கப்பட்டதாலேயே. இன்று எழுந்துள்ள நெருக்கடிக்கான எதிர்வினையை வினைத்திறனுள்ள வகையில் ஆற்றிய உள்ளூராட்சிகளில் “மக்கள் சனநாயகக்” கூறுகள் உட்பொதிந்திருத்ததை அவதானிக்கலாம். சமூக நீதிக்காகவும் நீதியும் சமத்துவமும் கொண்ட சமுதாயம் ஒன்றுக்காகவும் போராடுபவர்களுக்கு, சனநாயகம் என்பது குறிப்பான அர்த்தத்தைக் கொண்டது. அந்தச் சனநாயகத்தை, மக்கள் சனநாயகம் என்று அழைப்பது தகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *