அரசியல்உலகம்உள்ளூர்

கேள்விகளே எஞ்சி நிற்கின்றன: ஆசியாவின் எதிர்காலம்

நாம் தனித்தவர்கள் அல்ல. உலக ஒழுங்கின் விதிகளின்படி நாம் இயங்கி ஆக வேண்டும். கடந்த ஒரு நூற்றாண்டு கால உலக ஒழுங்குகளும் அவை ஏற்படுத்திய தாக்கங்களும் உலகின் மிகச் சிறிய நாட்டின் பிரஜைகளையும்; உள்வாங்கிச் செரித்து மென்று துப்பியுள்ளது. இதற்கு நாமும் விதிவிலக்கல்ல. நாம் வாழுகிற பகுதியின் பிராந்திய அரசியல், அதைத் தாண்டிய கண்ட அரசியல், அதையும் தாண்டிய பூகோள அரசியல் என பல்பரிமாண அரசியல் படிநிலைகளில் அரங்கங்கள் நமது வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதை இலங்கையர்களான நாம் அனுபவரீதியாகக் கண்டுள்ளோம். இருபத்தியோராம் நூற்றாண்டு நாம் வாழும் ‘ஆசியக் கண்டத்தின் நூற்றாண்டாக’ அறியப்பட்டது. இது ஏற்படுத்திய எதிர்பார்ப்புகள் கொஞ்சநஞ்சமல்ல. ஆனால் இருபத்தியோராம் நூற்றாண்டு தொடங்கி இரண்டு தசாப்தங்கள் நிறைவுறவுள்ள நிலையில் ஆசியா இப்போது எங்கே நிற்கிறது என்ற கேள்வி இயல்பானது எல்லோரையும் விட ஆசியர்களாகிய எமக்கு இக் கேள்வி மிகவும் முக்கியமானது. இந்தக் கேள்விகளுக்கான பதிலே நமது எதிர்காலத்தை தீர்மானிக்க வல்லது.

ஆசிய கண்டத்தில் இப்போது என்ன நடக்கிறது என்பதை நோக்கினால் சில முக்கியமான போக்குகள் முனைப்படைந்துள்ளதை அவதானிக்கவியலும். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் அதிகரித்துள்ள வர்த்தகப் போட்டி, தென் கொரியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான முறுகலும் அதிகரித்த பதட்டமும், வடகொரியாவின் வளர்ச்சியும் அது சார் நிலவரங்களும், தென்கிழக்காசிய நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் அதிகரித்துள்ள உறவுகள், ஆப்கானிஸ்தானின் அமைதிப் பேச்சுவார்த்தைகள், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் அடாவடிகள் என ஆசியா கொதித்துக் கொண்டிருக்கிறது. எல்லோரும் நினைப்பது போல ஆசியா அமைதியாக இல்லை. ஏனைய பிராந்தியங்களைவ விட நிச்சயமின்மை அதிகமுள்ள பகுதியாக ஆசியாவே உள்ளது. ‘அமைதியான ஆசியா’ என்ற எண்ணம் எவ்வளவு தவறானது என்பதை மேற்சொன்ன சில நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

புதிய உலக ஒழுங்கு மூன்று வகையான திசை வழிகளை எடுக்க வல்லது. முதலாவது அமெரிக்காவின் செல்வாக்கு குறைந்த ஏனைய நாடுகள் செல்வாக்குப் பெற்ற நிலையிலான பல்மைய உலக ஒழுங்கு. இரண்டாவது அமெரிக்காவிற்கு போட்டியாக சீனா வளர்ந்து அமெரிக்கா சீனா ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான இரு மைய உலக ஒழுங்கு. மூன்றாவது எல்லோரையும் பின்தள்ளி சீனா முன்னிலைப்பட்ட சீன மைய உலக ஒழுங்கு. இந்த மூன்றில் எது நடந்தாலும் அதில் ஆசியாவின் பங்கு அதிகம். இன்னொரு வகையில் இம்மூன்றில் எது சாத்தியமாகப் போகிறது என்பதை தீர்மானிக்கும் சக்தியாக ஆசியாவே விளங்கப் போகிறது.

சாத்தியங்களின் சாத்தியம்
இந்தப் பின்புலத்தில் ஆசியாவின் எதிர்காலம் என்ன என்ற வினா எழுவது இயல்பானது. இவ்வினாவிற்கு மூன்று சாத்தியங்களை எதிர்வு கூறமுடியும். ஆவை மூன்றையும் சுருக்கமாக நோக்குவதன் ஊடு ஆசியாவின் எதிர்காலம் குறித்த சில கணிப்புகளுக்கு வர இயலும்.

முதலாவது சாத்தியம்: சீனா தொடர்ச்சியாக வளர்ச்சி அடைய அமெரிக்கா தேய்ந்து தனது முதன்மைப் பாத்திரத்தை உலக அரங்கிலும் ஆசியாவிலும் இழக்கும். இதைப் பல விடயங்கள் சாத்தியமாகும். குறிப்பாக அமெரிக்காவின் மோசமான உள்நாட்டு கொள்கைகள் (வரி விதிப்புக்கள், சமூகநல வெட்டுக்கள், அரசியல் நெருக்கடிகள்) வெளிநாடுகளின் மீது மேற்கொள்ளும் ஆக்கிரமிப்புக்கள், டொனால்ட் ட்ரம்ப் போன்றவர்கள் தெரிவாதல்; ஆகியவை இதற்குக் காரணமாகும்.

தனது முதன்மைப் பாத்திரத்தை இழக்கவிரும்பா அமெரிக்கா இந்த முதற் சாத்தியத்தை நன்கு அறிந்தே இப்போதிருந்தே சீனாவுடனான வர்த்தகப் போரில் ஈடுபடுகிறது. இது அமெரிக்கத் தொழிற்றுறையைப் பாதித்திருந்தாலும் தனது முதன்மையான நிலையை அமெரிக்கா தக்கவைக்கப் பாடுபடுகிறது. அதேவேளை சீனாவின் பொருளாதார வலிமையும் அண்டை நாடுகளுடனான அதனது நெருக்கமும் அமெரிக்காவின் பொருளாதார தளம்பல் நிலையும் இதைச் சாத்தியமாக்கும். இதன் விளைவால் ஆசியாவின் மீதான தனது பிடியை அமெரிக்கா இழக்க நேரும்.

ஆசியா மீதான அமெரிக்காவின் செல்வாக்கும் இராணுவ பாதுகாப்பின் மீதான கட்டுப்பாடும் சீனாவின் பொருளாதார, இராணுவ, தொழில்நுட்ப வலிமையால் பின் தள்ளப்படும். இரண்டாம் உலகப்போரை தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டில் ஆசியா மீதான தனது ஆதிக்கம் தொடர்பில் காலனியாதிக்கவாதியான பிரித்தானியா எவ்வாறு ஒரு நெருக்கடியை எதிர்நோக்கியதோ அதேபோன்றதொரு நெருக்கடியை அமெரிக்கா எதிர்கொள்ள நேரும்.

இது மிகவும் சாத்தியமான ஒன்று. ஆசியாவிற்குள் சீனா அமெரிக்காவை பின்தள்ளி தனது செல்வாக்கையும் ஆதிக்கத்தையும் நிலை நிறுத்தி வருகிறது. இது இரண்டு விடயங்களை சாதிக்கிறது முதலாவது ஆசியாவிலிருந்து அமெரிக்காவை அகற்றுகிறது. இரண்டாவது சீனாவின் பாதுகாப்பை சீனாவைச் சுற்றியுள்ள அண்டை ஆசிய நாடுகள் பார்த்துக் கொள்கின்றன. இது சீனாவின் நிலஞ்சார், கடல்சார் ஆதிக்கத்திற்கு வாய்ப்பானது.

இரண்டாவது சாத்தியம்: அமெரிக்கா தொடர்ந்தும் சீனாவுடன் போட்டியிடும் நிலையில் தொடர்தல். இதை அமெரிக்காவால் தனியே சாத்தியப்படுத்த முடியாது. சீனாவில் அதிகரிக்கும் வயதானவர்களின் சனத்தொகை, சுற்றுச்சூழல் அழிவும் அதனால் ஏற்படும் நெருக்கடிகளும், போதுமான அடிப்படை வளங்கள் இல்லாமை, பூகோள அரசியல் நெருக்கடிகள், சிறுபான்மையினரின் எதிர்ப்புகள், பொருளாதார பின்னடைவு சீனாவின் வளர்ச்சியை தடுத்து அமெரிக்காவின் நிலையை தக்க வைக்கக் கூடியன.

இவ்வாறானதொரு நிலையில் ஆசியா பிரதான மையமாக மாறும். அமெரிக்கா ஏற்கனவே ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், உள்ளிட்ட நாடுகளுடன் நெருங்கிய உறவை கொண்டுள்ளது. இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுடனான உறவுகள் மேன்மை அடைகின்றன. இதுவும் சீனாவிற்கு எதிரான முக்கியமான எதிர்ப்பு கூட்டணியை கட்டமைக்க உதவும். இந்த நிலவரம் ஆசியாவை மையமாக்கி உலகளாவிய போர்களும் நெருக்கடிகளும் ஏற்படுவதை தவிர்க்க இயலாததாகும்.

மூன்றாவது சாத்தியம்: இதன்படி சீனா முன்னிலை அடைய அமெரிக்கா தனது கூட்டாளிகளுடன் இணைந்து சீனாவுக்கு போட்டியாக ஒரு கூட்டமைப்பை உருவாக்குவது. இதில் குறிப்பாக இந்தியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளின பங்கு பிரதானமானது. இதிலும் ஆசிய நாடுகள் உலக ஒழுங்கின் எதிர்காலத்தை மட்டுமன்றி ஆசியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்க வல்ல சக்திகளாக உருவெடுக்கும்.

எதிர்காலம் குறித்த கேள்விகள்
மேற்சொன்ன மூன்று சாத்தியப்பாடுகளில் இது சாத்தியமாகும் என்ற வினாவிற்கான விடையை தேட முன் சில நிகழ்நிலைகளை விளங்கிக் கொள்வது முக்கியமானது.

கடந்த ஒரு தசாப்தத்தில் ஆசியா தன்னை பல வழிகளில் நிலைமாற்றி உள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைவடைந்துள்ள போதும் சீனாவின் உழைப்பாளர் சக்தி என்பது திறன்வாய்ந்த செயல் தெரிந்த உழைப்பாளர் சக்தியாக மாறியுள்ளது. அதிகரித்துள்ள மத்திய தர வர்க்கம் அரசாங்கத்தை வினைத்திறனுடன் செயலாற்றக் கோருகிறது. சீனா தனது “ஒரு வார் ஒரு வழி” திட்டத்தின் மூலம் மூலம் யூரேசியா முழுவதும் தனது செல்வாக்கை உறுதி செய்கிறது. தனது தொழில்நுட்ப வலிமையை நிலை நிறுத்தி வருகிறது.

கடந்த 75 ஆண்டுகளாக ஆசியாவை ஆண்டுவந்த அமெரிக்க மைய கடல்வழி பாதுகாப்பு ஒழுங்கானது இப்போது அதிகரிக்கும் சீன கடற்படை செல்வாக்காலும் சீனா உருவாக்கியுள்ள புதிய கடல் வழிப் பாதைகள் மற்றும் துறைமுகங்களின் வலியாலும் கேள்விக்கு உள்ளாகியுள்ளன. ஏற்கனவே நாம் அறிந்த சில துறைமுகங்களுக்கு அப்பால் இப்போது சீனா வட ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரிலும் கம்போடியாவின் சியலொக்வெல் பகுதியிலும் உருவாக்கும் புதிய துறைமுகங்கள் சீனாவால் கடற்பரப்பு பாதுகாப்பு தொடர்பில் விடுபட்டு இருந்த இடைவெளிகளை நிரப்புகின்றன. இது சீனாவை புதிய கடல் வழி சாம்ராஜ்யமாக உருவாக்குகின்றன. இந்தோ பசிபிக் இப்போது அமெரிக்க கடற்படையின் விளையாட்டு குளம் அல்ல.

வட-தென் கொரியா நாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள சுமூகநிலை முன்னேற்றம் அடையுமாயின் இரு நாடுகளின் இணைப்பு சாத்தியமாகும். இரண்டாம் உலகப்போரையொட்டிப் பிரிந்த பல நாடுகள் இணைந்துள்ளன (ஜேர்மனி, வியட்னாம், யெமன்). இது தென்கொரியாவில் நிலைகொண்டுள்ள 23 ஆயிரம் அமெரிக்க இராணுவத்தினரையும் இராணுவத் தளங்களையும் தென் கொரியாவில் இருந்து அகற்றும்.

இதற்கிடையில் அமெரிக்காவின் இரண்டு நெருங்கிய ஆசிய கூட்டாளிகளுக்கு இடையிலான உறவு பலவீனம் அடைந்துள்ளது. தென்கொரிய ஜப்பான் உறவு மோசமான நிலையில் உள்ளது. இரண்டு கொரியாக்களின் இணைப்பை ஜப்பான் விரும்பவில்லை. இணைந்தால் கொரியா பிராந்தியத்தில் ஜப்பானுக்கு மாபெரும் சவாலாக அமையும்.

இவை தவிர்க்கவியலாமல் சீனாவை ஆசிய பிராந்தியத்தின் முதன்மையான அரங்காடியாக மாற்றும். ஆசியாவில் உள்ள அமெரிக்காவின் கூட்டாளிகள் விரும்பியோ விரும்பாமலோ சீனாவுடன் ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். ஆசியாவை பூகோள ரீதியாக மட்டுமன்றி பொருளாதார ரீதியாகவும் ஒழுங்கமைத்து வழிநடத்தும் ஒன்றாக சீனா முன்னிலைக்கு வரும்.

ஆசியாவின் எதிர்காலம் பதில்களால் அன்றி கேள்விகளாலேயே நிறைந்துள்ளது. யதார்த்தமும் அதுவே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *