அரசியல்உள்ளூர்

இலங்கையில் மதச்சகிப்பின்மையும் பௌத்தமும்: சில குறிப்புகள்

அம்பாறையிலும் அதைத் தொடர்ந்து திகனவிலும் முஸ்லீம்களுக்கெதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை இலங்கையின் வரலாற்றில் இன்னொரு காலகட்டத்திற்கான குறிகாட்டியாகும். இலங்கையில் மதச் சகிப்பின்மை கடந்த இருதசாப்த காலமாக தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வந்துள்ளது. குறிப்பாக அண்மைய நிகழ்வுகள் இரண்டு போக்குகளை நோக்கிய செல்திசைக்குக் குறிகாட்டுகிறது.

முதலாவது போருக்குப் பிந்தைய சூழலில் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் தனது மீளெழுச்சியைத் தக்கவைப்பதற்கான புதிய வழிகளைத் தேடுகையில் முஸ்லீம்களுடனான வர்த்தகப் போட்டி அதனுடன் கூடிய வெறுப்புணர்வு ஆகியன பல்வேறு சாட்டுகளின் அடிப்படையில் தாக்குதல்களை நிகழ்த்துவதன் ஊடு சமூகத்தில் தன்னைத் தகவமைக்கிறது.

இரண்டாவது விடுதலைப்புலிகளின் முடிவு இலங்கை அரசியலில் புதியதொரு நெருக்கடியை உருவாக்கியது. கடந்த முப்பது ஆண்டுகளாக இலங்கையின் பெரும்பான்மை அரசியலும் பௌத்த சிங்கள தேசியவாதமும் உருவாக்கி வைத்திருந்த பொது எதிரியின் அழிவு, பொது எதிரியற்ற சூழலை உருவாக்கியது. இவ்வெற்றிடம் நிரப்பப்படாமல் நீண்டகாலம் இருந்தது. முன்னெப்போதைக் காட்டிலும் இப்போது பொது எதிரியின் அவசியத்தை சிங்களத் தேசியவாதிகள் உணர்கிறார்கள். அதன்படி முஸ்லீம்கள் இப்போது பொது எதிரியாக முன்னிறுத்தப்படுகிறார்கள்.

விடுதலைப் புலிகட்கெதிரான போரின் தொடக்கத்தில், சிங்கள-பௌத்தம்  தனது முஸ்லிம் விரோத அரசியலை அடக்கி வாசித்தது. உண்மையில், யூ.என்.பி. அரசாங்கம், கிழக்கின் முஸ்லிம்களைத் தமிழருக்கெதிராகத் திரும்புமாறு ஊக்குவிக்குமளவுக்குப் போனது. அப்போது, முஸ்லிம்களை நடுநிலைப்படுத்துவது சிங்களப் பேரினவாத வேலைத்திட்டத்துக்கு முக்கியமாயிருந்தது. 1990இல் முஸ்லிம்களை வடக்கிலிருந்து விரட்டியதன் மூலம் விடுதலைப் புலிகள் முஸ்லிம்களைப் பகைத்தபின்பு, சிங்கள-பௌத்த இனவாதிகளில் ஒரு பகுதியினர் மேற்கொண்டு முஸ்லிம்களுடனான இணக்கம் தேவையில்லை என எண்ணினர். இந்நூற்றாண்டின் தொடக்க முதலாக முஸ்லிம் வணிக நிறுவனங்கள் ஓழுங்காகத் தாக்கப்பட்டுள்ளதுடன் அரசினதும் படையினரதும் துணையுடன் முஸ்லிம்களிடமுள்ளள காணிகளுக்கு உரிமைகோரப்படுகிறது. அரபு நாடுகட்குச் செல்லும் பணிப்பெண்களின் துன்புறுத்தலின் அதிகரிப்பும் (பாதிக்கப்பட்டோரில் முஸ்லிம் பெண்களும் அடங்குவரெனினும்) முஸ்லிம்கட்கு எதிரான உணர்வுகட்குத் துணையாகவுள்ள இன்னொரு விடயாகும்.

பொது பல சேன, சிங்கள-பௌத்தத்தின் எழுந்தமான விளைவல்ல. அது, தனக்கொரு பௌத்த அடையாளத்தை ஏற்றுக், கூச்சமற்ற சிங்கள-பௌத்தப் பேரினவாத வேலைத்திட்டத்தை வகுத்து, ஜாதிக ஹெல உருமயவாக வடிவெடுத்த சிஹள உருமயவின் போர்க்குணங் கொண்ட நீட்சியாகும். இதற்கு முந்தைய அரசின் அதி உயர் மட்டங்களில் ஆதரவும் பாதுகாப்பும் இருந்தது. ‘நல்லாட்சி அரசில்’ அதேவிதமான பாதுகாப்புத் தொடர்ந்தது. அதன் உறுப்புரிமை பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினரைக் கொண்டதாக உள்ளதுடன் உள்நாட்டிலும் வெளியிலும் சிங்கள-பௌத்தத் தீவிரவாதிகளை அது வெகுவாகக் கவர்ந்துள்ளது. பொது பல சேன ஒரு நவ-ஃபாசிச அமைப்பாகும். இந்தியாவில் இந்துத்துவத்துக்கு ஆர்.எஸ்.எஸ். ஏவ்வாறோ அவ்வாறே இலங்கையில் சிங்கள-பௌத்தத்துக்கு பொது பல சேன எனலாம். வேறுபாடு ஏதெனின், ஆர்.எஸ்.எஸ். அதன் அரசியற் கரத்திற்கு முந்தி வந்தது என்பதும் ஆர்.எஸ்.எஸ். பொது பல சேனவை விடச் சீராக அமைக்கப் பட்டுள்ளனது என்பதுமாகும்.

இலங்கையில் மதச்சகிப்பின்மையின் எழுச்சி மதத்தை விட வர்க்க நலன்களுடன் கூடிய உறவுடையது என்பது அரிதாகவே அடையாளங்காணப் பெறுகிறது. கொலனி ஆட்சிக் கீழ்க் கிறிஸ்துவ மிஷனரிகளின் மதமாற்றல் எற்படுத்திய பொதுசன மனக்கசப்பானது, 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியளவில் பௌத்த, சைவ மீளெழுச்சிகட்குக் காரணமாயிற்று. அம் மீளெழுச்சிகளின் முன்னோடிகள், அவர்களுடைய கிறிஸ்துவப் போட்டியாளர்களைப் போல, குறிப்பிட்ட உயர்வர்க்க நலன்களின் பிரதிநிதிகளாக இருந்தனர். வெவ்வேறு மதங்களைச் சார்ந்த மக்கள் ஒப்பிடுகையில் இணக்கத்துடனேயே வாழ்ந்துவந்தனர். இவை கணிப்பிலெடுக்கபடாத விடயங்கள். அதேபோல ஹீனாயான, மஹாயான பௌத்தப் பிரிவுகட்கிடையே இருந்துவந்த பகைமை, 20ம் நூற்றாண்டு வரை பௌத்தத்துக்கு எந்த மதத்துடனும் இருந்த முரண்களைவிடக் கடுமையானதென்பது குறிப்பிடத்தக்கது. பௌத்தப் பிரிவுகட்கிடையே இருந்துவந்த மோதல்களும், பெரும்பாலும், மதகுருமாரையும் அவர்களைச் சார்ந்தோரையுங்கொண்ட போட்டிப் பிரிவுகள்  இராச சலுகைகட்காகப் போட்டியிட்டதன்  விளைவுகளே.

எழுச்சிபெற்றுவந்த ஒரு சிங்கள பௌத்த முதலாளி வர்க்கத்தின் தேவைகட்கமையவே, மிஷனரிச் செயற்பாடுகட்கு எதிர்வினையான ஒரு அரசியல் சக்தியாக பௌத்தம் வடிவமைக்கப்பட்டது. 19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் நிகழ்ந்த பௌத்தர்களுடனான ஒரு மோதலையடுத்துக், கத்தோலிக்க சமூகம், பெரிதும் சிங்கள-பௌத்தர்களைக் கொண்டதொரு சூழலுக்குத் தன்னைத் தகவமைத்துக்கொண்டது. மேற்குக் கரைப்பகுதியில் வாழ்ந்த கத்தோலிக்கர்களிற் பெரும்பாலோரைத் தமிழுக்குப் பதிலாகச் சிங்களத்தைத் தமது வீட்டுமொழியாக்குமாறு திருச்சபை தூண்டியது.

பௌத்த மதம் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ள இலங்கையின் மூத்த மானிடவியலாளரான கணநாத் ஒபயசேகர இலங்கையில் நடைமுறையில் உள்ள பௌத்தத்தை ‘புரட்டஸ்தாந்திய பௌத்தம்’ என் அழைக்கிறார். பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் பௌத்த மதத்தில் பெரும் மாற்றம் ஒன்று நிகழ்ந்தது. அது நகரம் சார்ந்த மத்திய வகுப்பு மக்களின் மதமாக மாற்றம் பெற்றது. சிங்கள பௌத்தம் வணிக வகுப்பின் கருத்தியலாக, நகரச் சார்புடையதாக மாறுவதற்கு அநகாரிக தர்மபாலா காரணமாக இருந்தார். இதனை ஒரு மீள் கண்டுபிடிப்பு (reinvention) என்கிறார். புரட்டஸ்தாந்திய கிறிஸ்தவத்தில் இருந்து பல அம்சங்கள் பௌத்தத்தால் பெற்றுக் கொள்ளப்பட்டன. சிங்கள மக்கள் மத்தியில் கல்வினிய ஒழுக்க விதிகளை புகுத்துவதில் தர்மபாலா வெற்றி கண்டார். குறிப்பாக நகரம் சார் வணிக வர்க்கம் கல்வினிய விழுமியங்களை ஏற்றுக் கொண்டது. சுய அர்ப்பணிப்பு, சேமிப்பு, பொருள் ஈட்டுதல் ஆகியனவற்றை உள்ளடக்கிய உலகியல் வாழ்வுசேர் துறவானது (worldly asceticism) நகரம் சார் பௌத்தத்தில் ஆழ வேர் விடலாயிற்று. கணநாத் ஒபயசேகர ‘Buddhism Transformed: Religious Change in Sri Lanka’ என்ற தனது நூலில் இலங்கையில் தேரவாத பௌத்தம் அதன் தூய உருவத்தில் இருந்து மாறிச் சென்றது என்றும் பிரித்தானியக் காலனி ஆதிக்கத்தில் இம் மாற்றம் நிகழ்ந்தது என்றும் வாதிடுகிறார். இக்காலனி ஆதிக்கத்தில் எழுந்த புரட்டஸ்தாந்திய பௌத்தம் அதற்கு முன்னர் இருந்த காலனியத்திற்கு முற்பட்ட பௌத்தத்தில் இருந்து வேறுபட்டது. அது காலனிய கிறிஸ்தவ சமயத்தின் கருத்துக்களை உள்வாங்கியதோடு கிறிஸ்தவத்திற்கு எதிராகத் தோன்றிய சீர்திருத்த வாதக் கிறிஸ்;தவத்தின் சாயலில் தன்னை வடிவமைத்தது என்கிறார் ஒபயசேகர. இவ்வாறான வடிவமைப்பு காலப்போக்கில் பௌத்தம் முதலாளிய வர்க்கநிலைப்பாட்டை எடுப்பதற்கான அடிப்படைகளை இதன்மூலம் விளங்கிக்கொள்ளவியலும்.

பிரித்தானிய காலனியக் காலப்பகுதியில் பௌத்த மதத்திற்கும் நிலமானியமுறைக்கும் இடையிலான உறவுமுறையின் தன்மையை ‘பௌத்தத்தின் மீள்நிலவுடமையாக்கம்’ (Re-feudalization of Buddhism) என ஜயதேவ உயன்கொட குறிப்பிடுகிறார். பிரித்தானியக்  காலனிய ஆட்சி யின் போது முதலாளித்துவ உற்பத்தி முறையும், உறவுகளும் தோற்றம் பெறுகின்றன. இலங்கைச் சமூகம் முதலாளித்துவ சமூக மாற்றம் ஒன்றிற்கு உட்படும் இக்கட்டத்தில் பௌத்த – நிலமானிய பிணைப்பு இறுக்கம் அடைகிறது. நிலமானிய சமூகத்தின் பௌத்தம் அதன் சில அம்சங்களை உள்வாங்கி ஒரு வித இறுக்கத்தை பெறும் விநோதம் நிகழ்கிறது. இதற்கு இரு காரணங்கள் இருந்தன என்கிறார் உயன்கொட. முதலாவது பிரித்தானியக் காலனிய அரசாங்கம் பௌத்தம் தொடர்பாக பாதுகாவலர் மனப்பாங்கை கொண்டிருந்தது (paternalistic attitude). இரண்டாவது பௌத்த சமய நிறுவனங்களும் சொத்துடமையை அடிப்படையாக கொண்டிருந்தன . அவை காலனிய அரசாங்கத்திடம் எதிர்பார்த்ததும் இதற்கான பாதுகாப்புத்தான். ஆகவே காலனியமும் நிலமானியமும் சமரசம் செய்துகொண்டன என விளக்குகிறார் உயன்கொட.

அத்தோடு பௌத்த சீர்திருத்தவாதம் கிராமிய பௌத்தத்தை உருமாற்றி நகரம் சார் பௌத்தம் ஆக்கியது. நகரம் சார்ந்த வர்த்தக வகுப்பினர், மருத்துவம், சட்டம், நிர்வாகம் சார்ந்த உயர் தொழில் வகுப்பினர் ஆகியோரின் சிந்தனைக்கு ஒத்துப் போகும் மதமாக பௌத்தம் மாறியது. நகரம் சார் பௌத்தம் “சிங்களம்” என்ற இனக்குழும அடையாளத்தையும் தன்மேல் ஏற்றிக் கொண்டது. இதன்மூலம் தனது வர்க்க நிலைப்பாட்டை வெளிவெளியாக பௌத்தம் அறிவிக்கத் தொடங்கியது என்று உயன்கொட தனது ‘Religion in Context: Buddhism and socio-political change in Sri Lanka’ நூலில் குறிப்பிடுகிறார்.

இதேவேளை கணிசமான அளவில் நகர்சார் வணிகர்களையும் பெருந்தொகையான கிராமிய விவசாயிகளையும் மீனவர்களையும் கொண்ட முஸ்லிம் சமூகத்தின் மேட்டுக்குடிகளோ நடுத்தர வர்க்கத்தினரோ, 1970கள் வரை, கல்வியிலும் பணிமனை உத்தியோகங்களிலும்; போட்டியிட்ட தம்மையொத்த நிலையிலிருந்த சிங்களவருடனும் தமிழருடனும் ஒப்பிடத்தக்க அளவிற்குக், கல்வியில் முதலிடவில்லை. வணிகத் துறையில் முஸ்லிம், இந்திய வணிகர்களின் ஆதிக்கத்தைச் சிங்கள வணிக சமூகம் வெறுத்தது. இலங்கையில் நாடளாவியமுறையில் நடந்த முதலாவது இனமோதலான, 1915இன் முஸ்லிம்-விரோத வன்முறையைத் துண்டுவதில் இப் போட்டி பிரதான காரணியாக இருந்தது. முஸ்லிம்களே அம் மோதலிற் பெரிதும் பாதிக்கப்பட்டோராய் இருந்த போதும், கொலனிய ஆட்சி முஸ்லிம்களுடன் நடந்துகொண்ட முறையை விடக் கடுமையாகச் சிங்களவர்களுடன் நடந்துகொண்டது என்ற சிங்கள மேட்டுககுடி நோக்கு, சிங்கள பௌத்த மனத்தாங்கலை ஆழமாக்கியது.

முஸ்லீம்களுக்கு ஒரு காலத்திற் தமிழருடன் இயலுமாக இருந்தவிதமான சமூக ஒருமிப்பு சிங்களவருடன் ஏற்படுவதற்குத் தடையான காரணங்களுள் சிங்கள-பௌத்த தேசியம் முஸ்லிம்களைப் ‘பிறராக’ நோக்குவதும் அடங்கும். அண்மையிற் சிங்கள பௌத்தம் ஒரு அரசியற் சக்தியாக வெளிப்பட்டு குட்டி பூர்ஷ{வாப் போட்டாபோட்டிகள் இனப் பகையைக் கிளறும் இயக்க விசையானதையடுத்து, இந்த அந்நியப்படல் வலுப்பட்டுள்ளது.

முஸ்லீம்கள் மீதான வர்த்தகப் போட்டிக்கு பௌத்தம் எவ்வாறு துணைபோனது என்பதையும் அது எவ்வாறு மோதல்களுக்கு வழிவகுத்தது என்பதை அறிய இலங்கையில் பௌத்தத்தின் நிலைமாற்றத்தை அறிதல் வேண்டும். இலங்கையில் பௌத்தம் பற்றிய வரலாற்றுச் சமூகவியல் சார்ந்த முன்னோடியான ஆய்வை மேற்கொண்ட வரலாற்றாய்வாளர் லெஸ்லி குணவர்த்தன பௌத்தத்தின் நிலை மாற்றம் பற்றி ஆராய்ந்தவர். அவர் ‘சங்க’ என்ற நிறுவன அமைப்பில் கலந்திருந்த பொருளியல் தேட்டம் என்ற வேட்கை எப்படி பௌத்தத் துறவிகளை கிராமிய நிலப்பிரபுக்களாக மாற்றியது என்பதை விரிவாகவும் விளக்கமாகவும் தனது ஆய்வுகளின் ஊடு நிறுவினார். அவர் பௌத்த மதத்தில் எவ்வாறு மடாலய நிலப்பிரபுத்துவம் (Monastic Landlordism) உருவானது என்றும் அதன் குறிப்பிடத்தக்க இயல்புகளையும் தனது ஆய்வில் எடுத்தியம்புகிறார். பரந்தளவு நிலங்களின் உடமை,  குடிமக்களை நிர்வகிக்கவும், நிலங்களை பராமரிக்கவும் வேண்டிய நிர்வாகக்குழு, ஆட்சி அதிகாரத்தைத் தம் கையில் வைத்திருந்த குழுக்களுடன் பிணைப்புக்களைக் கொண்ட அடுத்தபடியினரான ஆளும் குடும்பங்களை தன்வசப்படுத்தல் ஆகிய இயல்புனனை இந்த மடாலய நிலப்பிரபுத்துவம் கொண்டிருந்ததாகச் சொல்லும் குணவர்த்தன இந்த இயல்புகளைக் கொண்ட மடாலய நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் அரசுக்கும் பௌத்த சங்கம் என்ற மத நிறுவனத்திற்கும் இடையில் நெருக்கமான, ஒன்றையொன்று தழுவிய பிணைப்பு உருவானது. இந்த நிலை – மாற்றம் அரசியலில் பௌத்தம் செல்வாக்குச் செலுத்தவும் அரசியல் பௌத்தம் (Political Buddhism) உருவாகவும் வழிவகுத்தது என்றும் சொல்கிறார்.

இங்கு உயன்கொடவின் இன்னொரு வாதமும் கவனிப்புக்குரியது. பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் அரசுக்கும் பௌத்தத்திற்கும் இடையிலான தொடர்பு அறுபட்டதென்பதே பொதுவான அபிப்பிராயம் என்றும் இது உண்மையல்ல என்று சொல்லும் உயன்கொட உண்மையில்  அரசுக்கும் பௌத்த சங்கத்திற்குமிடையிலான உறவு புதுப்பிக்கப்பட்டது என்று வாதிடுகிறார். குறிப்பாக பௌத்த நிறுவனங்களின் நில உடமையை பாதுகாப்பதில் அரசு நேரடிப்பங்கு கொண்டது. அரச அதிகாரத்தில் பௌத்த சங்கத்திற்கு உரிமையையோ, நேரடியான அரசியல் வகிபாகத்தையோ அரசு கொடுக்க வில்லையே தவிர மற்றைய அனைத்து வசதிகளும் சலுகைகளும் வழங்கப்பட்டன. ஒருவகையில் சுதந்திரத்திற்கு பின்னர் அரசியலில் பௌத்தம் நேரடியாகப் பங்குகொள்வதற்கான அடிப்படைகளை பிரித்தானிய காலனி ஆட்சி உருவாக்கியது எனலாம்.

இலங்கையில் அரசியல் பௌத்தத்தின் எழுச்சியும் அதைத் தொடர்ந்து கடந்த ஒருதசாப்தகாலத்தில் நிறுவனமாயுள்ள சிங்கள-பௌத்த தேசியவாத்தின் மீளெழுச்சியும் பொதுவெளியை அது கையகப்படுத்தியுள்ள நிலையும் ஆராயத்தகுந்தன. இவை எவ்வாறு இலங்கையின் சிங்கள-பௌத்த சமூகத்தின் பொதுப்புத்தி மனநிலையை ஆள்கின்றன என்பதும் அவை எவ்வாறு ஏகாதிபத்திய விதேசிய ஆளும் சக்திகளுக்கு வாய்ப்பாகின்றன என்பதும் ஆராயப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *