அரசியல்உள்ளூர்சமூகம்

இரண்டு மன்னர்கள் இரண்டு கதைகள்: சிங்கள – தமிழ் உறவைத் தீர்மானித்த வரலாற்றின் வழித்தடங்கள்

தாயகம் 97 (ஓகஸ்ட் – ஒக்டோபர்) 2019 இதழில் வெளியாகிய கட்டுரை

அறிமுகம்
வரலாறு ஆபத்தான கருவி. அது எழுதப்பட்டுள்ள முறையிலும் அதை விளங்கிக் கொண்ட முறையிலும் ஏற்படும், ஏற்படுத்தப்படும் தவறுகள் நீண்ட பகைமைக்கும் போருக்கும் உயிரிழப்புகளுக்கும் வித்திடும். வரலாற்றின் வீபரீதத்திற்கு வரலாறு உண்டு. அந்த வீபரீத வரலாற்றையும் வரலாறே சொல்லிவிடும் அதிசயத்தைச் செய்கின்றது. வரலாறு என்பது வெறுமனே நிகழ்வுகளின் பதிவு அல்ல. அதில் எது பதியப்படுகிறது, எது விடுபடுகிறது எது திரித்தோ மாற்றியோ எழுதப்படுகிறது என்பனவெல்லாம் முக்கியமானவை. கடந்தகாலம் பற்றிய கதைகள் நிகழ்காலத்தை மட்டுமன்றி எதிர்காலத்தையும் பாதிக்கின்றன. வரலாற்று நூல்கள் எதைப் பதிவது என்பது தொடர்பில் மேற்கொள்ளும் தெரிவுகளும் அவை பதியப்பட்ட முறைகளும் சமூகத்தின் கடந்த காலத்தைக் குறிப்பிட்ட ஒரு விதமாகச் சித்தரிப்பதுடன் எதிர்காலம் எவ்வாறு அமைய வேண்டும் என்று வழி நடத்தவும் முற்படுகின்றன. இந்த விதமான பார்வை வரலாற்றின் நேரடியான பதிவுகள் என்று சொல்லக்கூடிய ஆவண வடிவிலான பதிவுகளில் மட்டுமல்லாமல் கலை-இலக்கியங்கள், அறநூல்கள், போன்ற பிற வடிவங்களிலும் வெளிப்படுகிறது. வரலாறு எழுதப்பட்டும் எழுதப்படாததுமான வடிவங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது.

பொய்கள் வரலாறாகவும் செய்திகளாகவும் நம்மிடையே உலாவுகின்றன. அவை நாளுக்கு நாள் உண்மைகளாகவும் நிச்சயமானதாகவும் மாறிவருகின்றன. இன்றைய வரலாற்றாளர்கள் இந்தப் பொய்களையும் புனைகதைகளையும் நாளை வரலாறாக எழுதுவார்கள். இதற்கெதிரான நீண்ட நெடிய அர்ப்பணிப்புள்ள போராட்டம் தவிர்க்கவியலாதது. இலங்கையின் வரலாறு, மன்னர்களுடையதும் ஆளும் வர்க்க பிரமுகர்களதும் சாதனைகளதும் மோதல்களதும் வெற்றி தோல்விகளதும் வரலாறாகவே பதியப்பட்டுள்ளதோடு இலங்கையின் தேசிய இனங்களிடையிலான ஒரு நிரந்தரப் பகைமையின் வரலாறாகவும் காட்டப்பட்டு வருகிறது. இதன் மோசமான விளைவுகளை நாம் ஏற்கனவே அனுபவித்துள்ளோம். இப்போதும் அனுபவிக்கின்றோம்.

இலங்கையின் வரலாறு: சில குறிப்புகள்
இலங்கையின் வரலாற்றின் வேர்களைத் தேடும் முன் அதன்மீதான வர்க்கப் பார்வையைத் செலுத்துவது தவிர்க்கவியலாதது. இதைச் செய்வதற்கு நாம் கிட்டத்தட்ட 250 ஆண்டுகள் பின்செல்லல் போதுமானது. இலங்கையில் நிறுவப்பட்ட கொலனியாட்சி இலங்கையின் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பில் பாரிய மாற்றங்களை உருவாக்கியது. இலங்கையில் கொலனி ஆதிக்கத்திற்குத் துணையாகக் கிறிஸ்தவ மத நிறுவனங்கள் வந்து மத மாற்றத்திலும் மத அடிப்படையிலான ஒரு இடை நிலை வர்க்கத்தின் உருவாக்கத்திலும் பங்கு பற்றின. இது பாடசாலைகள், ஆங்கில வழிக் கல்வி எனசமூகத்தில் தாழ்த்தப்பட்ட நிலையில் இருந்தவர்கள் கொஞ்சம் மேநிலை அடைய வழி செய்தது. ஆனால் இது காலப் போக்கில் புதிய சமூக முரண்பாடுகளைத் தோற்றுவித்தன.

கிறிஸ்தவத்துக்கு எதிராக பௌத்ததை முன்னிறுத்தி அதை மேம்பாடான ஒரு சமயமாக நிறுவும் முயற்சிகள் 1860களில் முனைப்புற்றன. ஆனால் கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கட்கு மாற்றாகப் பௌத்தக் கல்வி நிறுவனங்கள் உருவாக முன்னமே வடக்கில் 1849 அளவில் ஆறுமுக நாவலர் சைவப் பாடசாலை ஒன்றை நிறுவினார். மத அடிப்படையிலான பௌத்த இந்து மீளெழுச்சிகள் கொலனிய ஆட்சியைத் தூக்கி எறியாமலே தமது சமூக அடையாளங்களையும் நலன்களையும் வற்புறுத்துகிற நோக்கிலேயே நிகழ்ந்தன. இந்தப் போக்குகளுக்கு தலைமையேற்றோரது நலன்கள் அந்தந்தச் சமூகப் பிரிவின் ஆதிக்கச் சக்திகளின் நலன்களையும் தேவைகளையும் குறித்து நின்றன. இந்தியாவில் நடந்ததுபோன்ற கொலனியாதிக்கத்திலிருந்து விடுதலைகோரி வீரம்மிக்க போராட்டம் ஏன் இலங்கையில் நடக்கவில்லை என்பதை விளக்க இது உதவும்.

கிட்டத்தட்ட 1920களிலிருந்து சிங்களத்தில் பிரசுரமான இலக்கியங்களில் தமிழர்களுக்கெதிரான தீவிர கருத்துக்கள் ஊடுருவ ஆரம்பித்தன. இவற்றில் எல்லாளன் துட்டகைமுனுவின் போர் பற்றிய கதையே தேர்ந்தெடுக்கப்பட்டது. வி.பி. வத்துஹாமியின் ‘துட்டகைமுனு எல்லாள மகாயுத்த கதாலங்காரய’ என்ற நூலே இப்போக்கின் ஆரம்பமாகும். 1923இல் வெளிவந்த இக்கவிதை நூல் தமிழருக்கெதிரான மிக மோசமான விரோதத்தை வெளியிட்டது. இவ்விரோதமானது பின்னர் சிங்களக்கருத்தமைவின் பிரதான கூறாகியது.

முன்னைய வரலாற்றுச் சகாப்தங்களின் பௌத்த தனித்துவமானது பரந்த நோக்குடன் செயற்பட்டு அரசியல் எல்லைகளைப் புறக்கணித்து வெவ்வேறு அரசுகளின் சக மதங்களை அங்கீகரிக்குமளவிற்கு வளர்ச்சியைப் பிரதிபலித்தது. இருபதாம் நூற்றாண்டில் ‘சிங்கள பௌத்தர்கள்’ என்கிற ஒரு புதிய பதம் மற்றைய மதங்களைக் கடைபிடிக்கும் சிங்களவர்களிடமிருந்து வேறுபட்ட மக்கட் கூட்டத்தை குறிப்பிடுவதற்கும் பிரயோகிக்கப்பட்டது. இப்பதத்தை முதன்முதலில் உபயோகித்தவர் அநகாரிக தர்மபால. சிங்கள பௌத்த மீழெழுச்சியில் அநகாரிக தர்மபாலவின் பங்கு பெரிது. இன்று இலங்கை எதிர்நோக்கும் இனத்துவ முரண்பாடுகளின் வித்துக்களை இவரின் கருத்துருவாக்கங்களில் காண முடியும்.

பிரதேச, சாதி வேற்றுமைகளைத் தற்காலிகமாக ஒதுக்கி சிங்கள மொழி பேசும் மக்களை ஒருமைப்படுத்தக்கூடிய உணர்வு 1920களில் சாத்தியமாயிற்று. இவ்வுணர்வு, இவர்களது பண்பாட்டையிட்டு பெருமிதம் கொள்ள வைத்தது. காலனியாதிக்க எதிர்ப்பு அம்சங்கொண்ட தேசிய இயக்கத்தை இது ஊக்குவித்தாலும் சிங்கள உணர்வின் பல்வேறு அம்சங்கள் முழுமையான காலனியாதிக்க எதிர்ப்புக்கு இடமளிக்கவில்லை. அது பலவழிகளில் காலனியாதிக்க சார்பு நலன்களையும் பேண விரும்பியது. அவ்வாறே செயற்பட்டது. தர்மபால ஆரிய – திராவிட வேறுபாட்டை முன்னிறுத்தினார். புராதன சிங்கள ஆரியர்களை அபரிமிதமாக ‘என்றுமே தோற்கடிக்கப்படாதவர்கள்’ என்று விபரித்தாலும்‚ அவரது கோரிக்கை ‘பிரிட்டிஷ் பாதுகாப்புக்குட்பட்ட சுயாட்சி’யாகவே இருந்தது. அவர் சுதந்திரத்துக்கான குரல் கொடுப்பதிலிருந்து தவிர்த்தார். இலங்கையில் சுதந்திரத்துக்கான வீறுகொண்ட விடுதலைப்போராட்டமொன்று நடைபெறாமையை இதன் பின்னணியில் நோக்க வேண்டியுள்ளது.

எனினும் தங்களது மேட்டுக்குடி நலன்களையும் பிரித்தானிய விசுவாவத்தையும் இலங்கையில் சிங்கள பௌத்த அடையாளத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் தக்க வைக்க புத்திஜீவிகளும் மேட்டுக்குடிகளும் முனைந்தனர். இது சிங்கள சமூகத்தில் ஆழமான பாதிப்புக்களையும் காலனியாதிக்கதிற்கெதிரான போராட்டத்துக்கு பின்னடைவையும் ஏற்படுத்தியது. இது குறித்து விரிவாகவும் ஆழமாகவும் ஆராய்ந்துள்ள லெஸ்லி குணவர்த்தன பின்வரும் கூறுகிறார்:

‘சிங்களக் கருத்தமைவு அதன் பிரதான பிரசாரகர்களான சிங்களம் கற்றோரின் நலன்களையும் அவாக்களையும் முற்றாக வெளிப் படுத்தியது. சிங்கள பூர்ஷ்வாக்களின் தலைமையில் சிங்கள மக்களை ஒன்று திரட்டும் தன்மையான சமூகப்பணி அங்கீகரிக்கப்படுவதை சிங்களப் புத்திஜீவிகளும் அவர்தம் சிந்தனைகளும் கடினமாக்கின. இந்த ஒன்று திரட்டும் செயற்பாட்டிற்கும் மேலாக சிங்களக்கருத்தமைவு பிரிவினை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது. பரந்த தேசிய இயக்கத்தின் வளர்ச்சிக்குக் குந்தகமாக இருந்ததால் அதன் சமகால இருப்பின் நலிவுக்காலாகியதோடு, சிங்களக் கருத்தமைவானது பூர்ஷ்வாக்களைத் துண்டாடுவதற்கும் துணைபோயிற்று. இச்சிங்களக் கருத்தமைவானது தமது வர்க்கத்தையும் அரசையும் சிதைக்கும் ஒரு கருத்தமைவை வளர்ப்பதற்காக மக்களை அணிதிரட்டும் அதே வேளை தமது வர்க்க ஒருமைப்பாட்டையும் பேண வேண்டிய ஒரு சிக்கலான நிலைமையைப் பூர்{வாக்களுக்கு ஏற்படுத்தியது. தனித்துவ முரண்பாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய நெருக்கடி பூர்{வாக்களை மட்டுமன்றி ஏனைய வர்க்கத்தினரையும் பாதிக்கவே செய்தது. சிங்களக் கருத்தமைவும் இது போன்ற பிறகுழுக்களின் கருத்தமைவுகளும் முக்கியமாகத் தொழிலாளர் வர்க்கத்தினைக் கூர்மையாகப் பிளவுபடுத்தி அதன் வர்க்க உணர்வின் வளர்ச்சியைச் சிதைத்து ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின.’

இதன் வளர்ச்சிப்போக்கிலேயே சிங்கள – தமிழ் முரண்பாடு சிங்களத் தேசியவாதத்தின் பயனாக முன்னிறுத்தப்பட்டது. இதற்கு வரலாறு துணைக்கழைக்கப்பட்டது. இலங்கை மன்னர்களின் வரலாற்றில் சிங்கள-தமிழ் உறவையும் முரணையும் இரண்டு மன்னர்கள் காட்டி நின்றார்கள். அவர்களின் பெயராலேயே தமிழ் மக்களுக்கு எதிரான விரோதம் கட்டியமைக்கப்பட்டது. அதில் ஒருவர் இநத் சிங்கள-தமிழ் முரண்பாட்டுக் கதையாடலின் தொடக்கப்புள்ளி மற்றவர் அதன் முடிவுப்புள்ளி. இரண்டு பேர் பற்றிய கதைகள் பொய்களாலும் புனைவுகளாலும் நிறைந்துள்ளன. ஆனால் அவை, இன்று உண்மை என்று சிங்கள சமூகம் முழுமையாக நம்புவதற்கு ஏதுவாக தொடர்ச்சியாகக் கட்டமைக்கப்பட்டு பேணப்பட்டுப் புனிதமாக்கப்பட்டு வந்துள்ளன.

இனிக் கதைக்கு வருவோம். முதலாமவர் எல்லாளன். சிங்கள்-தமிழ் விரோதத்தினதும் தமிழரை சிங்களவர் வென்று சிங்கள பௌத்த நாட்டை மீட்ட கதையுடனேயே இனங்களுக்கிடையிலான முரண்பாட்டின் கதை தொடங்குகிறது. இந்தக் கதை இலங்கையை ஆண்ட கடைசி மன்னான ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கனுடன் முடிகிறது. இலங்கை மன்னர்களில் மிகவும் மோசமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளவர் ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கன். அவர் தமிழர் என்பது ஒவ்வொரு தடவையும் அழுத்திச் சொல்லப்படுகிறது. இவ்விரண்டு கதைகளையும் சுருக்கமாக மீள்பார்வைக்கு உட்படுத்த இக்கட்டுரை விளைகிறது.

எல்லாளின் கதை: தெரிந்ததும் தெரியாததும்
எழுதப்பட்ட இலங்கை வரலாற்றில் தமிழ்-சிங்கள முரண்பாட்டின் தொடக்கப்புள்ளியாகக் காட்டப்படுவது எல்லாளன் – துட்டகைமுனு மோதலும் அதுசார் நிகழ்வுகளுமே. உணர்ச்சி ததும்பும் வசனங்களால் துட்டகைமுனுவைப் போற்றி எல்லாளனை இகழ்ந்து தமிழருக்கெதிரான சிங்களவர்களின் வெற்றியை மகாவம்சம் கூறி நின்றது. இன்றுவரை மகாவம்வத்தின் கதையே வரலாறாக தொடர்ச்சியாகச் சொல்லப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மையை கேள்விக்குட்படுத்தியவர்கள் மிகச்சிலரே. ஒரு கட்டுக்கதையாகச் சொல்லப்பட்டது எவ்வாறு இலங்கைத் தீவின் இனக்குழுக்களுக்கிடையிலான முரண்பாட்டுக்கு உரம் சேர்க்கும் ஒன்றாக இருப்பது ஆச்சரியமே.

இலங்கை வரலாற்றை ஆழமாக ஆராய்ந்தால் இப்போது கட்டமைக்கப்பட்டுள்ளது போன்ற சிங்கள நாடு என்பது வரலாற்றுரீதியாக நிறுவ முடியாதது என்ற உண்மை விளங்கும். இப்போது சொல்லப்படுவது போன்ற ஆரிய பரம்பரையின் வழிவந்தவர்கள் சிங்களவர்கள் என்ற கருத்துருவாக்கமும் அதற்கு துணையாக இது சிங்களவர்களின் நாடு என்ற கருத்தும் வரலாற்றிலிருந்து தோன்றியதாக தெரியவில்லை. இலங்கை நாட்டிற்கு சிங்களவர்களே முழுமையான உரித்தானவர்கள் என்ற கருத்தை கட்டமைப்பதற்காக வரலாற்றின் பெயரால் நிகழ்த்தப்பட்ட கட்டுக்கதைகளில் ஒன்றுதான் எல்லாளன்-துட்டகைமுனு பற்றி இலங்கையின் வரலாற்று நூல்கள் என சொல்லப்படுபவை சொல்லியிருக்கும் கதைகளாகும். இந்த நாட்டை சிங்களவர்களுக்கு மட்டுமே உரித்தாகும் நோக்குடன் தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்களை ஆக்கிரமிப்பாளர்களாகவும் தமிழர்களாகவும் சிங்கள பௌத்தத்திற்கு எதிரானவர்களாகவும் காட்டுவதன் தேவை நன்கு உணரப்பட்டது. இதற்காக திரிக்கப்பட்ட பல வரலாற்றுச் சம்பவங்களை இலங்கை வரலாற்றில் நாம் காணலாம். அதில் முதன்மையானது எல்லாளன்-துட்டகைமுனு பற்றியும் சொல்லப்பட்டிருக்கிற கதைகள். இக்கதைகள் குறிப்பாக கடந்த அரை நூற்றாண்டு காலமாக சிங்கள மக்கள் மனதில் ஆழமாக பதிய வைக்கப்பட்டுள்ளன. இது சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின், அதன் தொடர்ச்சியான பேரினவாதத்திற்கு அடிப்படையானது. சிங்கள பௌத்த பெருந்தேசியவாத அகங்காரம் இன்று சிறுபான்மையினர் மீது குறிவைத்து தாக்குவதன் அடிப்படைகளை இலங்கை வரலாற்றில் நாம் காணலாம். எனவே இலங்கையின் இன முரண்பாட்டையும் அதன் வழித்தடத்தையும் விளங்க விரும்பும் எவரும் இலங்கையின் வரலாற்றை உற்று நோக்க வேண்டும்.

முதலில் எல்லாளன் பற்றிய செய்திகளுக்கு வருவோம். மகாவம்சம் எல்லாளன் துட்டகைமுனு யுத்தத்தை சிங்கள-தமிழ் யுத்தமாகவும் அந்நியர்களிடம் இருந்து இலங்கையையும் பௌத்தத்தையும் மீட்பதற்கான புனிதப் போராகவும் அடையாளப்படுத்துகிறது. மகாவம்சத்தின் உணர்ச்சி ததும்பும் வசனங்கள் தமிழருக்கு எதிரான ஒரு மனோநிலையை தெளிவாக காட்டுவது மட்டுமன்றி சிங்கள மேலாதிக்கத்தின் அவசியத்தை நியாயப்படுத்தி நிற்பதையும் காணலாம்.

மகாவம்சத்திற்கு முந்தைய பழைய நூலான தீபவம்சம் எல்லாளனைப் பற்றி உயர்வாக கூறுவதுடன் அவனது நீதி தவறாத இயல்பு பற்றிப் பேசுகிறது. அந்நூல் அவனைச் சோழன் என்றோ தமிழன் என்றோ இனங்காணவில்லை. பௌத்த வழிபாட்டிடங்களைத் திருத்தியமை, பௌத்த குருமாரிடம் ஆலோசனை பெற்றமை போன்றவற்றைப் பற்றியும் கூறுகிறது. இவை வரலாற்றில் மறைக்கப்பட்ட பக்கங்கள்.

தீபவம்சம் எல்லாளனை சத்திரிய குலத்தவன் என்று மட்டுமே குறிக்கிறது. ஆனால் மகாவம்சமோ உயர்குலத்தில் பிறந்தவனும், சோழ நாட்டிலிருந்து வந்தவனுமாகிய எல்லாளன் தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்தினான் என்று சொல்கிறது. எல்லாளன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். நாட்டில் அவனுக்கு ஆதரவு இருந்திராவிடின் அவ்வளவு காலம் ஆட்சிசெய்திருக்க முடியாது. ஆனால் எல்லாளனுக்கு இருந்த ஆதரவு எவ்வளவு, தமிழகத்துடனான தொடர்புகள் எவை, அந்நிய ஆதரவு இருந்ததா, படைபலம் எவ்வளவு போன்ற எந்தவொரு தகவலும் இல்லை. இவ்விடத்தில் இலங்கை வரலாற்றை ஆராய்ந்த பேராசிரியர் வில்லியம் கைகரின் கூற்றை நினைவுபடுத்தல் தகும், “இலங்கை வரலாற்றில் கூறியவையல்ல, கூறாதுவிடப்பட்டவையே சிங்கள வரலாற்றின் பாரிய பிரச்சனையாகும்”.

இவ்விடத்தில் இலங்கையின் முதன்மையான வரலாற்றாசிரியர்களில் ஒருவரான பேராசிரியர் ஐ. சிரிவீர சொன்னதொரு விடயத்தையும் உற்றுநோக்க வேண்டும். அவர் “எல்லாளனும் துட்ட கைமுனுவும் நிலப்பிரபுத்துவ அரசியல் அதிகாரப் போட்டியில் ஈடுபட்டார்களேயன்றி தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையேயான இனப் போரில் ஈடுபடவில்லை என்பதை மகாவம்சத்தைக் கூர்ந்து அவதானிப்போர் ஊகிக்கமுடியும்” என்று சொல்கிறார்.

அதேவேளை இருவருக்கும் இடையிலான யுத்தம் சிங்கள-தமிழ் யுத்தமாக நடைபெற்றிருக்கவில்லை. எல்லாளனுடைய படைகளில் சிங்களவர்கள் இருந்தார்கள். இதனாலேயே போரின் ஒரு கட்டத்தில் தமது எதிரிகளை அடையாளங் காணமுடியாமல் இருந்தமையால், துட்டகைமுனுவின் படைகள் தங்கள் சொந்த அணியைச் சேர்ந்தவர்களைக் கொன்றார்கள் என்ற குறிப்பு வருகிறது. அதேபோல துட்டகைமுனுவின் பல்லக்கைக் காவும் பத்துப்பேரில் ஒருவனுடைய பெயர் வேலு.

துட்டகைமுனு பற்றிச் சொல்லப்பட்டுள்ள விடயங்களிலும் பல மறைக்கப்பட்டுள்ளன. அதில் பிரதானமானது துட்டகைமுனுவின் இளைய சகோதரன் பற்றிய செய்திகள். இவர்களது தந்தை காகவண்ண தீசனின் மரணத்திற்குப் பின் அரியணை ஏறுவது தொடர்பில் இருவருக்கும் இடையில் புத்தளவிற்கு அருகில் உள்ள யுதகனாவ என்ற இடத்தில் நடந்த முதற் போரில் துட்டகைமுனுவை தீசன் தோற்கடித்தான். மூத்தவனான துட்டகைமுனுவே அரச பீடத்திற்கு உரியவனாக இருந்தபோதும் அவனுடைய மூர்க்கமான நடவடிக்கைகளினால் அவன் மக்களால் வெறுக்கப்பட்டான். இளையவனான தீசனே மக்களால் ஏற்கப்பட்டான். இருவருக்கும் இடையிலான போரில் அரச போர்வீரர்கள் பங்குபற்றியிருக்காமையை இதை எடுத்துக்காட்டுகிறது. காகவண்ண தீசனின் மகனின் பெயர் காமினி, அவனது கெட்ட நடத்தைகளின் விளைவால் அவன் “துட்ட காமினி” என்று அழைக்கப்பட்டான். இது பின்னர் மருவி துட்டகைமுனு ஆகியது.

இலங்கையின் முதன்மையான வரலாற்று நூல்களை நோக்கின் ‘தீபவம்சம்’, ‘மகாவம்சம்’, ‘பூஜாவலி’ என்ற மூன்று முக்கிய ஏடுகளும் துட்ட கைமுனு‒எல்லாளன் கதை தொடர்பான விபரங்களில் தம்முள் முரண்படுவதை அவதானிக்க முடியும். எல்லாளன்-துட்டகைமுனு பற்றிய கதை இவற்றில் இடம்பெற்றுள்ள விதம் இலங்கையின் வரலாற்றியலின் வளர்ச்சி பற்றியும், வரலாற்று ஆவணங்களில் புகுந்துள்ள முற்சாய்வுகள் பற்றியும் பல உண்மைகளைத் தெளிவாக்குகின்றன.

ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கன்: சொல்லாத சேதிகள்
எல்லாளன் போலவே இலங்கை வரலாற்றில் தமிழருக்கெதிரான சிங்கள மனோநிலையை வரலாற்றுரீதியாகக் கட்டமைக்கப் பயன்படுத்தப்படுகின்ற இன்னொரு பாத்திரம் இலங்கையை ஆண்ட கடைசி மன்னனான ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கனினுடையது. எல்லாளனைப் போலன்றி ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கன் வில்லனாகவும் மோசமானவனாகவும் சித்தரிக்கப்படுவதற்கான காரணங்கள் பல்பரிமாணம் கொண்டவை. கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கன் பற்றிய உண்மைகளும் பொய்களும் கலந்து வரலாறாகி பொய்மைகள் மேலோங்கி அரசியலாகியுள்ளன. இலங்கை வரலாற்றின் மிகமோசமான அரசன் என்ற சித்திரம் ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கன் மேல் எவ்வாறு தீட்டப்பட்டது. அதைத் தீட்டியவர்கள் யார், அதைப் பயன்படுத்தியவர்கள் யார், ஏன் அவ்வாறானதொரு சித்திரம் தீட்டப்பட்டது, தீட்டப்பட்ட சித்திரம் உண்மையானதா போன்ற கேள்விகள் காலங்காலமாய் கேட்கப்படாமலேயே உள்ளன.

முதலில் ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கன் பற்றிய வரலாற்றுக்கு வருவோம். கண்டி இராஜ்ஜியத்தின் கடைசிப் பகுதிகள் பற்றிய எழுத்துக்கள், வரலாறுகள் பெரும்பாலும் ஒருவருடைய எழுத்துக்களையே சான்றாகக் கொண்டுள்ளன. அது கண்டி இராஜதானியை பிரித்தானியர்கள் வெற்றிகொள்ள வழியமைந்த பிரித்தானிய ஒற்றனான ஜோன் டி ஒயிலியின் குறிப்புகளே. ஓயிலியின் குறிப்புகளுக்கு இலங்கை வரலாறெங்கும் கிடைக்கும் முக்கியத்துவம் ஒயிலியை ஒரு வரலாற்றாசிரியராக தரம் உயர்த்துகின்றன. ஆனால் ஒயிலி ஒரு வரலாற்றாசிரியன் அல்ல. மாறாக பிரித்தானிய நலன்களுக்குச் சேவையாற்றிய மிகச்சிறந்த ஒற்றன். எனவே அவனது தகவல்கள் பக்கச்சார்பானவை. இதை இலங்கை வரலாற்றை எழுதிய பலர் கவனிக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

“கொடுங்கோல் மன்னனிடமிருந்து கண்டிய மக்களை பிரித்தானியக் காலனியாதிக்கவாதிகள் காப்பாற்றினார்கள்” என்ற கதையாடலை உருவாக்க வேண்டிய தேவை பிரித்தானியர்களுக்கு இருந்தது. இது பிரித்தானியர்கள் கண்டியை இலகுவாக ஆள்வதற்கும் கண்டிய மக்களின் ஆதரவைப் பெறுவதற்கும் முக்கியமானது என அவர்கள் அறிந்திருந்தார்கள். அதற்கேற்றபடி அவர்களது குறிப்புகள் இருந்தன. அவ்வகையிலேயே ஒயிலியின் குறிப்புக்கள் நோக்கப்பட வேண்டும். ஆனால் வரலாற்றாசிரியர்கள் ஒயிலியின் நோக்கங்களை விளங்கத் தவறிவிட்டார்கள். அவர்கள் அக்குறிப்புக்களை முழுமையாக நம்பி தங்கள் வரலாற்றியலில் பயன்படுத்தினார்கள்.

1887ம் ஆண்டளவில் மகாவம்சத்தின் தொடர்ச்சியாகக் கருதப்படும் சூளவம்சத்தில் பின்னிணைக்கப்பட்ட ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கன் பற்றிய குறிப்புகள் அவரைப்பற்றிய மோசமான சித்திரத்தை வரைகின்றன. இது எவ்வாறு சாத்தியமாகியது என்று நோக்கினால் அதை எழுதிய ஹிக்கடுவே சுமங்கல தேரர் மற்றும் பண்டிதர் தேவரகித படுவன்துடாவே ஆகிய இருவரும் கரையோரப் பகுதியைச் சேர்ந்தவர்கள். இருவரும் பிரித்தானியக் காலனியாதிக்கத்தை ஆதரித்துப் போற்றியவர்கள். அவர்களுக்கு இருந்த பெயரையும் புகழையும் பிரித்தானியர்களுக்கு ஆதரவு திரட்டப் பயன்படுத்தியவர்கள். இப்படிப்பட்டவர்களின் குறிப்புக்களால் தான் இலங்கை வரலாறு எழுதப்பட்டுள்ளது என்கிறார் பேராசிரியர் கணநாத் ஒபயசேகர.

ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கன் வழங்கிய தண்டனைகளின் கொடூரம் குறித்து ஏராளமான குறிப்புக்கள் கிடைக்கின்றன. இவை இம்மன்னன் அகற்றப்பட வேண்டியவனே என்ற மனோநிலையை உருவாக்கியுள்ளன. அதேவேளை தமிழ் மக்கள் சிங்கள மக்களைக் கொடுமைப்படுத்தினான் என்ற கதையாடலை வலுப்படுத்தவும் உதவியுள்ளது. ஆனால் ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கன் காலத்திற்கு 5 ஆண்டுகளுக்கு முன் பிரெஞ்சுப் புரட்சியின் விளைவால் மன்னர், அரசி உட்பட 15,000 பேர் சித்திரவதைக்கு ஆளாகி கொல்லப்பட்டார்கள். 1815ம் ஆண்டு காலப்பகுதியில் பிரித்தானியாவில் தண்டனைகள் மிகவும் மோசமானவையாகவே இருந்தன. எனவே அரசுக்கெதிரான சதிவேலைகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் உலகெங்கும் கொடுமையானதாகவே அக்காலத்தில் இருந்துள்ளன. ஆனால் எமது வரலாறு ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கன் வாழ்ந்த காலத்தில் இருந்து அவரைப் பிரித்தெடுத்து குற்றவாளியாகக் கண்டுள்ளது. இதற்கு தமிழ் விரோதம் முக்கியமான காரணமாகும்.

இதில் கவனிப்புக்குரியது யாதெனில் சிங்கள பௌத்த மீளெழுச்சியை சாத்தியமாக்கிய அநகாரிக தர்மபால ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கன் பற்றி மிகவும் உயர்வாகப் பேசியுள்ளமையாகும். அவர் ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கனை காலனியாதிக்கவாதிகளுக்கு எதிராக வீரமுடன் போரிட்ட ஒருவராகவும் தனது மக்களுக்கு நன்மைகள் பலவற்றைச் செய்தவராகவும் இனங்காணுகிறார். அவர் ஒரு சிலரின் துரோகத்தனத்தால் வீழ்த்தப்பட்டார் என்று குறிக்கிறார். ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கனால் உருவாக்கப்பட்ட கண்டி வாவி, பேராதனைப் பூங்கா என்பன கண்டியினதும் இலங்கையினதும் முக்கியமான சின்னங்கள் என இனங் காண்கிறார்.

காலப்போக்கில் அநகாரிக தர்மபாலாவின் குறிப்புக்கள் மறைக்கப்பட்டுள்ளன. தமிழ்விரோதத்தை கட்டியெழுப்புவதற்கே ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கனும் அவர் பற்றிய கதைகளும் உதவின. கண்டி இராச்சியத்தின் மிகவும் பிரபலமான மக்களால் விரும்பப்பட்ட மன்னன் பற்றி எமக்கு வழங்கப்பட்டுள்ள சித்திரம் என்ன என்பதை ஆழ்ந்து யோசிக்க வேண்டும்.

கண்டி வாவி, பட்டிருப்பு, தலதா மாளிகை மற்றும் தாவரவியல் பூங்கா ஆகியன ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கனின் முயற்சியால் உருவானவை. ஆனால் இன்று அவர் பெயர் அதில் இல்லை. அது மறைக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் சிங்கள பௌத்த நினைவிடங்களான கருத்துருவாக்கம் செய்யப்படுகின்றன. எங்கள் வரலாற்றின் அபத்தமும் அதுவே.

கட்டுக்கதைகள் வரலாறாக: அபத்தங்களின் ஆபத்துகள்
கட்டுக்கதைகள் ஏன் வரலாறாகின்றன என்ற வினா இயல்பானது. ஆனால் வரலாறு நேர்கோட்டில் பயணிப்பதில்லை. அதை எழுதுபவர்களின் நோக்கங்களே அதன் செல்திசையைத் தீர்மானிக்கின்றன. சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் எழுச்சிக்கு சில வரலாற்றுக் கதைகள் தேவை. எல்லாவற்றிலும் மேலாக ‘தொன்மை’ முக்கியமானதாகிறது. சுpங்களவர்கள் ஏன் முன்னேறவில்லை என்பதற்கு சில சாட்டுகள் தேவை. அச்சாட்டுகள் சிங்கள் பௌத்த மனச்சாட்சியை உலுக்கக் கூடியவையாக தவறுகளை வெளியில் தேடுபவையாக இருக்க வேண்டுகிறது. எனவே வரலாற்று நிகழ்வுகள் தேசியவாதத்தைக் கட்டமைக்கும் தேவையோடு மாற்றம் பெறுகின்றன.

இதுபற்றிச் சொல்லும் பேராசிரியர் ரொமிலா தாப்பர்: ‘எல்லா தேசியவாதங்களிலும் வரலாறு ஒரு மையமான பாத்திரம் வகித்துள்ளது. ஒரு விதத்தில், கடந்த காலம் காட்டப்பட்ட விதத்திலிருந்துதான் தேசியவாதம் தனக்கான அடையாளத்தைப் பெறுகிறது. கடந்தகாலத்தை கட்டமைக்கும் செயலில், கல்விப்புலம் சாராத வரலாறாக, கடந்த காலம் வேண்டுமென்றே மாற்றப்படலாம், திரிக்கப்படலாம், தவறாகக் கூறப்படலாம். எனவே, வரலாற்றை எழுதுவோர் தமக்குத் தேவைக்கேற்ப அதை வளைப்பார்கள். இதுதான் பல நாடுகளின் வரலாறாகியுள்ளது’ என்கிறார்.

இலங்கையின் இனமுரண்பாட்டின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் வரலாறு முக்கியமான பங்காற்றியுள்ளது. குறிப்பாக எல்லாளன் மற்றும் ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கன் பற்றிய படிமங்கள் இந்த முரண்பாட்டை உந்தித்தள்ளும் காரணிகளாகியுள்ளன. சிங்கள பௌத்த மனச்சாட்சியின் வரலாற்றுக் கதையாடலின் முக்கிய பாத்திரங்களாக இவர்கள் இருவரும் இருக்கிறார்கள். அவர்கள் வீரமனிதர்கள் அல்ல வில்லன்கள். அதுவே இலங்கை வரலாற்றியலின் அபத்தம்.

விபரங்களை சேகரித்து அவற்றிலிருந்து உண்மைகளை கண்டறிந்து அந்த உண்மைகளின் அடிப்படையில் முடிவு எடுக்கவேண்டும் என்ற உயரிய அறிவுபூர்வமான பொதுக் கோட்பாடு வரலாற்று ஆய்வுக்கு மிகமிக அவசியமானதாகும். ஆனால் வரலாற்று ஆய்வுகள் அவ்வாறு இடம்பெறுவதில்லை. எனவே வரலாற்றை மீள்வாசிக்க வேண்டியதும் பொதுமக்களிடம் கொண்டுசெல்ல வேண்டியதும் அவசியமாகும். வரலாற்றைக் வெறும் கல்விப்புலச் செயற்பாடாக மட்டுமன்றி வெகுஜனங்களின் கருவியாக மாற்றுவது முக்கியம். வரலாறெங்கும் நிறைந்திருக்கும் அபத்தங்களின் ஆபத்துக்களை எதிர்கொள்ள அதுவே சிறந்த வழிமுறையாகும்.

நிறைவாக
“வரலாறெனும் கடவுளின் தேர்ச் சக்கரங்கள் தோற்றவர் பிணங்களின் மீதுதான் ஏறிச் செல்கின்றன” என்பது பிரெட்ரிக் எங்கெல்ஸின் கூற்று. இது இலங்கையின் வரலாறெழுதியலுக்கு முற்றிலும் பொருத்தமான கூற்று. கடந்த இரண்டு தசாப்தங்களில் சிங்கள மக்களின் பொதுப்புத்தி மனோநிலையில் இலங்கை வரலாறு பற்றிக் கட்டமைக்கப்பட்ட பிம்பம் தமிழ் மக்களுக்கு எதிரானது. துட்டகைமுனை தமிழரைத் தோற்கடித்து நாட்டை மீட்ட வீரனாகக் காட்டும் ஒவ்வொரு தடவையும், ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கனை சிங்கள மக்களைக் கொடுமைப்படுத்திய தமிழ் மன்னன் எனச் சொல்லும் ஒவ்வொரு முறையும் தமிழ்-சிங்கள் உறவில் நெருக்கடி அதிகரிக்கிறது. இன்று இனவொற்றுமையைச் சாத்தியமாக்க இயலாமல் இருக்கும் காரணிகளில் வரலாற்றின் பெயரால் சொல்லப்பட்ட பொய்கள் முக்கியமானவை. இதைக் களைவது கடினமான பணி. ஆனால் கட்டாயம் செய்யப்பட வேண்டிய தலையாய பணி.

1990களில் இலங்கையில் போர் உச்சமடைந்திருந்த நேரம் புகழ்பெற்ற இசைக்குழுக்களில் ஒன்றான சன்பிளவர் இசைக்குழு எல்லாளன்-துட்டகைமுனு தொடர்பான பாடல் ஒன்றை இசைத்தார்கள். கதை வடிவில் அமைந்த பாடல் அக்காலத்தில் மிகப்பிரபலம். அதுபோன்ற விடயங்கள் இப்போதும் தேவைப்படுகின்றன. பெருந்தேசியவாத அகங்காரத்திற்கெதிரான குரல்கள் அவசியமானவை. ஆதில் வரலாற்றை மீள்வாசிப்பது ஒன்று. அக்கதைப்பாடல் சுவையானது. அக்கதை யாதெனில்:

முன்பொருநான் எல்லாளன்-துட்டகைமுனு போர்க்காட்சியை நாடகமாக நடித்தார்கள். இக்காலத்தைப் போலவே அக்காலத்திலும் யுத்தக் கதைகளைக் கேட்க ஏராளமானோர் கூடியிருந்தார்கள். இந்தகாலம் போல் பலவர்ண விளக்குகள், போக்கஸ் விளக்குகள் அக்காலத்தில் இல்லை. காற்றடித்து பற்றவைத்த ஒற்றை விளக்குத்தான் மேடையின் நடுவே தொங்கிக் கொண்டிருந்தது. காலங்கள் மாறினாலும் ரசிகர்களின் ரசனை மாறவில்லை. அன்றும் சண்டைக்காட்சிகளுக்கும் நடனங்களுக்கும் பாடல்களுக்கும் தான் மவுசு இருந்தது. இன்றும் அப்படியே. இப்போது எல்லாளன் துட்டகைமுனு இடையிலான நேரடி வாள்ச்சண்டை மேடையில் அரங்கேறுகிறது. திரை விலகுகிறது. இருவரும் நேருக்கு நேர் தங்கள் வாளுடன் வருகிறார்கள். சிங்கள பௌத்தத்தைக் காக்க இதோ வருகிறேன் என்று கூவியபடி துட்டகைமுனு வருகிறான். நான் உன்னைப் கொல்வேன் என எல்லாளன் கூறுகிறான். சண்டை தொடங்குகிறது. சபையோர் ஆவலாய் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மேலே பாய்ந்த துட்டகைமுனு தனது வாளால் மேலிருந்த விளக்கைத் தாக்குகிறான். கத்திக் கூச்சல் போட்ட பார்வையாளர்கள் அமைதியாகிறார்கள்.

எதையுமே பார்க்கவியலாபடி மேடை கும்மிருட்டாகிறது. இருந்த ஒரேயொரு விளக்கையும் தற்செயலாக துட்டகைமுனு தட்டியதால் என்ன நடக்கிறது என்று எதுவுமே தெரியவில்லை. மேடையில் என்ன நடக்கிறது என்று தெரியாவிட்டாலும் பார்வையாளர்கள் தங்கள் சொந்த முடிவுகளின் அடிப்படையில் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்கிறார்கள். ஏனெனில் மேடையில் சண்டையிடும் இருவரும் தேசத்திற்காகவும், இனத்திற்காகவும் மதத்திற்காவும் சண்டையிடுகிறார்கள்.

அக்காலத்திலும் நேர்மையாக உண்மையையும் மனிதாபிமானத்தையும் விரும்புவோர் அக்காலத்திலும் இருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவரிடம் பற்றரியில் இயங்கும் பெரிய டோர்ச்லைட் இருந்தது. இதுதான் நடக்கும், அதுதான் நடக்கும் என அவர் மற்றவர்களுடன் சண்டை பிடிக்க விரும்பவில்லை. இருவரும் என்ன செய்கிறார்கள் என்பதை நானே பார்க்கிறேன் என்று நினைத்துக் கொண்டு தனது டோர்ச்லைட்டை மேடையை நோக்கி அடித்தார். சபையிலிருந்து ஒளியொன்று மேடையை நோக்கிப் பாய்கிறது. மேடையில் இருவரும் நன்றாகத் தெரிகிறார்கள். எல்லாளன் துட்டகைமுனு இருவரும் அமர்ந்திருக்கிறார்கள். பார்வையாளர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்கிறார்கள். ஆனால் டோர்ச்லைட் ஒளியில் பார்க்கும் போது எல்லாளன் விளக்கைப் பிடித்திருக்கிறான், துட்டகைமுனு அதற்கு காற்றடிக்கிறான். கொஞ்ச நேரத்தில் துட்டகைமுனு விளக்கைப் பிடித்திருக்கிறான், எல்லாளன் காற்றடிக்கிறான். அன்றும் காற்றடித்தார்கள், இன்றும் காற்றடிக்கிறார்கள். இரண்டு தரப்புத் தலைவர்களும் நாளையும் காற்றடிப்பார்கள். போர் என்பது பிச்சைக்காரனின் புண் தானே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *