அரசியல்உலகம்உள்ளூர்

இந்திய – சீன நெருக்கடி: தென்னாசியா குறித்த வினாக்கள்

தென்னாசியா பதட்டத்தின் விளிம்பில் உள்ளது போன்றதொரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நெருக்கடி தேவையற்றது என்பதை அனைவரும் அறிவர். ஆனால் அதை வெளிப்படையாகச் சொல்வதற்கு யாரும் தயாராக இல்லை. இந்த நெருக்கடியால் பயனடைவோர் பலர். எனவே இந்த நெருக்கடியைத் தக்கவைப்பதும் தகவமைக்கதும் பலரின் தேவையாயுள்ளது. அதன் காட்சிகளே இங்கே அரங்கேறுகின்றன.

இந்தக் கட்டுரையை எழுதுகின்ற போது நான்கு முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. அவற்றின் அடிப்படையில் இந்த நெருக்கடியை நோக்குவது தகும். முதலாவது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சிக்கல்களைத் தீர்ப்பதற்கான முயற்சியொன்றை ரஷ்யா இந்தவாரம் முன்னெடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளது. சீனா மீதான பொருளாதாரத் தடைகள் இந்தியாவையே பெருமளவில் பாதிக்கும் என வெளியுறவுத் துறை சார் நிபுணர்களும் பொருளியலாளர்களும் தெரிவிக்கிறார்கள். மூன்றாவது இந்தியாவில் இந்தியாவில் சீனா எதிர்ப்புப் பிரச்சாரம் வலுப்பெற்றுள்ள நிலையில் பிரதமர் மோடி சீனாவின் பெயரைச் சுட்டாமல் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். நான்காவது சீனா வலிந்து தாக்குதல் நடத்தியது என்ற கருத்துருவாக்கத்தை அமெரிக்கா வலிமையாக முன்னெடுக்கிறது

கொவிட்-19 ஏற்படுத்தியுள்ள நெருக்கடியை கையாள இயலாமல் இந்தியா தடுமாறுகையில் எல்லைத் தகராறு தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றப்பட்டுள்ளது. இந்தியப் பொருட்களைப் புறக்கணிப்பது, கொடும்பாவி எரிப்பது போன்ற செயற்பாடுகள் தேசியவாத இந்து இந்தியாவுக்கு வழிகோலுகிறது. அது படிப்படியாக பாசிசத்தை நோக்கி நகர்வதை சீன மிரட்டல் சாத்தியமாக்கியுள்ளது. அதேவேளை ஒரு போருக்கு இந்தியா தயராக இல்லை என்பதையும் இந்திய ஆட்சியாளர்களின் நடத்தை காட்டுகிறது. ஆனால் தெற்காசியாவில் தனது ஆதிக்கத்தைத் தக்கவைக்கவும் இந்தியா விரும்புகிறது.

தென்னாசியா: உலைக்களம்
தென்னாசியாவைப் பூகோள ரீதியாகக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கான போரின் ஒரு பகுதியே இப்போது அரங்கேறுகிறது. தென்னாசியாவின் அமைவிடம், அதைச் சூழ்ந்துள்ள கடற்பரப்பு, சீனா முன்னெக்கும் ஒருவார் ஒருவழிப் பாதைத் திட்டம் என்பன முன்பை விட இப்போது முக்கியத்துவம் பெறுகின்றன. இதன் பின்னணியில் இந்தியாவை தனது மூலோபாயப் பங்காளியாக்க அமெரிக்கா நீண்டகாலமாக முயன்று வருகி;றது. இப்போது அது சாத்தியமாயுள்ளது. இதையே 2010ம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்த அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார். அவர் “அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயற்பட்டால் அது ஒரு சக்திமிக்க இணைப்பாய் இருக்கும். இரு தரப்புக்கும் நன்மை பயக்கும் பங்காளியாவதால் இந்தியாவுடன் பல வழிகளிலும் இணைந்து செயற்படுவது ஒரு நிலையான செயற்பாடாக அமையும். இந்த உறவானது அமெரிக்காவினதும், தென் ஆசியப் பிராந்தியத்தினதும் ஸ்திரத்திற்கும் பாதுகாப்புக்கும் உத்தரவாதமாக அமையும்” என்றார்.

ஒபாமாவின் ‘ஆசியாவை மீள்சமநிலைப்படுத்தல்’ திட்டத்தின் கீழ் இருபத்தோராம் நூற்றாண்டில் கிழக்கு-மேற்கு உறவு எப்படி அமையப் போகிறது என்பதே பாரிய வினாவாக இருந்தது. அதன்படி அமெரிக்காவும் இந்தியாவும் மூலோபாயப் பங்காளிகள் (Strategic Partners) என்ற அடிப்படையில் கைகோத்துள்ளன.

இவ்விடத்தில் இந்திய அமெரிக்க உறவின் பரிணாமங்களைப் பார்ப்பது அவசியம். இந்தியா சுதந்திரமடைந்தது முதல் 1990 வரை,இந்திய-அமெரிக்க உறவுகளைத் தீர்மானிக்கும் சக்தியாக இந்திய-சோவியத் உறவுகள் அமைந்திருந்தன. குறிப்பாகக், கெடுபிடிப் போர் உச்சத்தில் இருந்த காலத்தில் இந்திய-அமெரிக்க உறவு மிக மட்டுப்படுத்தப்பட்டு —ஆனாற் பகைமையற்று— இருந்தது. நேரு அணிசேராக் கொள்கையை இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையாக கொண்டிருந்ததனால் கெடுபிடிப்போர்க் காலத்தில் ஒருவகையான இரட்டறு நிலையை இந்தியா கொண்டிருந்தது. இந்திய-பாகிஸ்தான் போரின் போது அமெரிக்கா பாகிஸ்தானுக்கே ஆதரவு தெரிவித்தது. அதேவேளை, இந்தியாவின் கைத்தொழிற்றுறை வளர்ச்சியிலும் ஆயுத விற்பனையிலும் சோவியத் ஒன்றியம் முக்கிய பங்காளியாக இருந்தது. இக் காலத்தில், இந்தியாவைத் தனது சந்தையாக மட்டுமே பார்த்த அமெரிக்கா இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க பங்கை வழங்கவில்லை.

சோவியத் ஒன்றியத்தின் உடைவின் பின்னர் இந்திய-அமெரிக்க உறவு முன்னேறிது. அமெரிக்கா உலகப் பொலிஸ்காரானாகியதன் விளைவாக இந்தியா அமெரிக்காவுடன் நெருக்கமான உறவை நாடியது. 1997இல் பொக்ரானில் இந்தியாவின் அணுகுண்டுச் சோதனை இந்திய-அமெரிக்க உறவில் விரிசலை உண்டாக்கியது. அமெரிக்கா இந்தியாவிற்கெதிரான பொருளாதாரத் தடைகளை விதித்தது. ஆனால் இந்தியாவின் தொழில்நுட்ப, கைத்தொழில் வளர்சிகளின் பின்னணியில் பொருளாதாரத் தடை பாரிய பாதிப்பை விளைக்கவில்லை. எனவே, 2001இல் அமெரிக்கா இந்தியா மீதானான பொருளாதாரத் தடையை நீக்கியது.

இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா முன்னெடுத்த “பயங்கரவாதத்திற்கெதிரான போரில்” இந்தியா அமெரிக்காவின் பங்காளியாகிய பின்பு இந்திய-அமெரிக்க உறவு சுமுகமாகியது. 2004ம் ஆண்டு கைச்சாத்திட்ட அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் இந்திய-அமெரிக்க உறவில் ஒரு புதிய பரிமாணமாகும். அணு ஆயுத வலிமையுடைய நாடுகளை ஓப்பந்தங்களினூடு தனது கட்டுப்பாட்டின் கீழக் கொண்டுவரும் அமெரிகத் திட்டத்தில் இந்தியா பங்காளியானதுடன் தனது அணுசக்தித் திட்டத்தை சர்வதேச அணுசக்தி முகவராண்மையம் (IAEA) மேற்பார்வையிட இந்தியா அனுமதித்தது. அடிப்படையில் இது இந்தியாவின் இறைமைக்கு சவால்விடுவதாக இருந்தும் ஆட்சியாளர்களின் “அமெரிக்க விசுவாசம்” அதை இயலுமாக்கியது.

இன்று, இந்திய-அமெரிக்க உறவின் முக்கியமான அம்சமாகப் அமெரிக்க-இந்தியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு விளங்குகிறது. அதை இயலுமாக்கிய ஒரே காரணி, ‘சீன மிரட்டல்’ எனப்படும் —சீனாவை அண்டிய பிராந்தியத்திலும் உலகளாவிய முறையிலும்— சீனாவின் தவிர்க்கவியலாத வகிபாகமாகும். சீனாவின் வளர்ச்சியும் அதன் இராணுவ பலமும் தென்னாசியப் பிராந்தியத்தில் இந்தியச் செல்வாக்குக்குச் சவாலாகத் தெரியும் அதே வேளை, உலகளாவிய முறையில் அமெரிக்காவின் பேரரசுக் கனவுக்கு அச்சுறுத்தலாய் விளங்குகிறது. இந்த அடிப்படையில், சீனாவைப் பொது எதிரியாகக் கொள்ளுமாறு இந்திய-அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைகிறது. குறிப்பிடத்தக்கவாறு, அண்மை வரை, அமெரிக்கா தனது அதிநவீன ஆயதங்களை இந்தியாவுக்கு விற்கவில்லை. இன்றும் இந்தியாவுக்கு ஆயதம் வழங்கும் முன்னணி நாடுகளாக ரஷ்யாவும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளுமே விளங்குகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, அவை நம்பகமான ஆயத விற்பனையாளர்களாக இன்னமும் உள்ளன. அமெரிக்க ஆயதங்களின் கூடிய விலையும் தொடர்ச்சியான விநியோகம் பற்றிய ஐயங்களும் அமெரிக்க ஆயதக் கொள்வனவில் இந்தியத் தயக்கத்துக்கான காரணங்களாகும். இந்த நிலை அண்மைக்காலமாக மாறி வருகிறது.

இந்தப் பின்னணியிலேயே ரஷ்யா இந்த நெருக்கடியில் மத்தியஸ்தம் வகிக்க முன்வருவதை நோக்க வேண்டும். ரஷ்யா யுரேசியா பகுதியை அமைதியான பகுதியாக வைத்திருக்க விரும்புகிறது. அதன் பார்வையில் இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி தேவையற்றது. எனவே பதட்டங்களைத் தணித்து அமைதியையும் பிராந்திய சமநிலையையும் உருவாக்க ரஷ்யா முனைகிறது. மறுபுறம் சீனாவை ஒருதலைப்பட்சமாக குற்றஞ்சாட்டுவதன் மூலம் பதட்டத்தைத் தக்க வைக்க அமெரிக்க முனைகிறது.

இவ்விடத்தில் தென்னாசியா குறித்த இரண்டு முக்கிய அவதானிப்புகளை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது:
1. தென்னாசியப் பூகோள அரசியலில் இந்திய-அமெரிக்க உறவென்பது இரு நாடுகளுக்குமிடையிலான போட்டியை மையப்படுத்துகிறது. இன்று இலங்கை, நேபாளம், மாலைதீவு ஆகிய நாடுகளில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் மேலாதிக்கப் போட்டி உள்ளது. நேபாளத்தில் தொடரும் அமெரிக்கா-இந்திய சதுரங்கமும் மாலைதீவு ஆட்சிக் கவிழ்ப்பில் இந்தியப் பங்கும் கவிழ்க்கப்பட்டவருக்கு அமெரிக்க ஆதரவும் இந்திய-அமெரிக்க போட்டிக்கான சில உதாரணங்கள்.

2. சீனாவும் ரஷ்யாவும் வேகமாக வலுவடையும் நிலையில் ஆசியப் பிராந்தியத்தில் ஒரு ‘ஆசிய நேட்டோ’வை உருவாக்க அமெரிக்க முயல்கிறது. இதில் முக்கிய பங்காற்ற இந்தியா அழைக்கப்பட்டிருப்பினும், அவ்வாறு உருவாகும் கூட்டமைப்பு இந்தியாவையும் அச்சுறுத்தும் என்பதை இந்தியா நன்கறியும். இதனால் மெல்லவும் முடியாது, விழுங்கவும் முடியாது என்ற நிலையில் இந்தியா உள்ளது.

கிழக்கில் இந்தியா மட்டுமே சீனாவிற்கு எதிராக நிற்கக் கூடிய நிலையில் உள்ளதால், அமெரிக்காவைப் பொறுத்தமட்டில், இந்தியாவுடன் கூட்டுச் சேர்வது அத்தியாவசியமாகிறது. புவிசார் அரசியலின் மையம் விரைவாக ஆசியாவின்; பக்கம் பெயர்வதால் இந்தியா ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கின்றது. கிழக்கில், யப்பானும் அவுஸ்திரேலியாவும் அமெரிக்காவின் பெறுமதி மிக்க நண்பர்கள் என்ற போதும் சீனாவை எதிர்கொள்வதற்கு அவை இந்தியாவை விட முக்கியமானவை அல்ல. பாகிஸ்தானும் முன்னரைப் போல “மூலோபாய” முக்கியத்துவம் உள்ள பங்காளியல்ல. அவ்வப்போது தேவைக்கேற்பப் பாகிஸ்தானைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சீனாவுக்கு எதிரான பெருஞ்சுவர் ஒன்றை எழுப்ப, அமெரிக்காவாற்; கைநழுவவிட முடியாத நாடாக இந்தியா விளங்குகிறது. அதில், யப்பானும் அவுஸ்திரேலியாவும் அமெரிக்காவிற்கு உதவும் இரண்டாம் நிலைப் பங்காளிகளாய் விளங்கும்.

இச் சூழலில், இந்திய-அமெரிக்கக் கூட்டினால் தென்னாசியப் பிராந்தியத்தில் என்ன நடக்கும் என்பது கவனிப்புக்குரியது. இரண்டு இராட்சதர்களான அமெரிக்காவும்-இந்தியாவும் இணைந்து செயற்படும் போது என்ன நடக்கும் என்பதை நினைக்கையில் ஓர் ஆபிரிக்கப் பழமொழி நினைவிற்கு வருகிறது: “யானைகள் ஒன்று கூடினாலோ அல்லது சண்டையிட்டாலோ நசியுண்டு போவதென்னமோ எறும்புகள் தான்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *