இந்திய – சீன எல்லை நெருக்கடி: சொந்தச் செலவில் சூனியம்
நெருக்கடியான காலகட்டங்களில் திசைதிருப்புதல்கள் தவிர்க்கவியலாதவை. அதிகாரத்துக்கான ஆவல் திசைதிருப்பல்கள் விரும்பியோ வலிந்தோ தூண்டும். ஆனால் அந்தத் திசைதிருப்பல்கள் எப்போதும் எதிர்பார்த்த விளைவுகளைத் தரா. எதிர்பாராத விளைவுகள் விடைகளற்ற வினாக்களுக்கு மௌனத்தை மட்டுமே பரிசளிக்கின்றன. அந்த மௌனம் சொல்லும் செய்தி வலுவானது. வினாக்களுக்கான விடைகள் அந்த மௌனத்திலேயே ஒளிந்திருக்கின்றன.
சில தினங்களுக்கு முன் இந்திய – சீன எல்லைப்பகுதியில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய இராணுவத்தினர் மரணமடைந்துள்ளனர். குறிப்பாக குண்டுகள் வீசப்படாமல், துப்பாக்கிகள் பயன்படுத்தப்படாது நடந்த இந்த மோதலில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. சீனாவின் தரப்பில் ஏற்பட்டுள்ள சேத விபரம் பற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள் இல்லை. இருதரப்பினருக்கும் இடையில் எல்லைப்பகுதியில் காலங்காலமாக பதட்டங்கள் நிலவி வந்தாலும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டதில்லை. 45 ஆண்டுகளுக்குப் பிறகு – 1975ம் ஆண்டுக்கு அருணாசலப் பிரதேசத்தில் 4 இந்திய ஜவான்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பின் – முதன்முறையாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இது இந்திய – சீன உறவு குறித்த புதிய கேள்விகளை எழுப்புகிறது.
கடந்த 15ம் திகதி லடாக் பிரதேசத்தில் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இது குறித்து உடனடியாகவே ஊடகங்களுக்கு தகவல் அளித்த சீனாவின் அயலுறவுகளுக்கான ஊடகப் பேச்சாளர் இந்தியா எல்லைமீறி சீனாவின் எல்லைப்பகுதிக்குள் வந்ததாகவும் அதைத் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியில் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் ஈடுபட்டதாகவும் இந்திய இராணுவத்தின் அத்துமீறல்கள் முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் வரை (புதன் அதிகாலை) வரை இந்த சம்பவம் குறித்து இந்தியப் பிரதமரோ அல்லது இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சரோ வாய் திறக்கவில்லை.
கடந்த மே மாதம் 5ம் திகதி முதல் குறித்த பகுதியில் பதட்டம் நிலவி வந்தது. இந்திய இராணுவத்தினர் மேலதிகமாகக் குவிக்கப்பட்டது இதற்கான காரணமாக அமைந்தது. இந்த சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள இந்தியத் தேசியப் பாதுகாப்புச் சபையின் உறுப்பினரும் முன்னாள் இராஜதந்திரியுமான பி.எஸ். இராகவன், “குறித்த விடயத்தில் நாம் அவசரப்படக்கூடாது. ஊகங்களினதும் வதந்திகளின் அடிப்படையிலும் முடிவெடுக்க முடியாது. எனவே நாம் அவதானமாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். சீனாவின் அரசாங்கப் பேச்சாளர் “இந்திய இராணுவத்தினர் இரண்டு தடவைகள் சீனாவின் எல்லைப் பகுதிக்குள் நுழைந்து சீன இராணுவத்தினரைத் தாக்க முனைந்தனர். அதை ஆயதமெதுவுமின்றித் தடுக்க முனைந்த சீன இராணுவத்தினர் இந்தியாவின் முன்னேற்றத்தை வெற்றிகரமாக முறியடித்தனர்” என்றார்.
இந்தியா கொவிட்-19 பெருந்தொற்றின் விளைவால் மிகவும் மோசமான நெருக்கடியை எதிர்நோக்குகிறது. பிரதமர் நரேந்திர மோடியும் அவர்தம் அரசாங்கமும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன. இப்போது இந்த நிகழ்வு தேசிய ரீதியில் ஒரு முக்கியமான திசைதிருப்பலைச் செய்துள்ளது. தேசப்பற்றும் இந்தியன் என்ற பெருமிதமும் மீண்டும் ஊட்டப்படுகிறது. இது இந்த நெருக்கடிக்குக் காரணமானவர்கள் யார் என்ற வினாவுக்குப் பதிலை வழங்கக் கூடும்.
ஒருவேளை கடந்தாண்டு தேர்தலுக்கு முன்னர் பாகிஸ்தான் மீதான விமானத்தாக்குதல் மூலம் பிரபலமடைந்தது போல ஒரு செயலை மோடியும் அவரது குழுவினரும் திட்டமிட்டிருக்கக் கூடும். குறிப்பாக கொவிட்-19 தொற்றின் தாக்கம் மோசமாக நிலவுகையில் இந்தவகையான தாக்குதல்கள் முக்கியமான திசைதிருப்பிகள் மட்டுமன்றி அரசாங்கத்தைக் காப்பாற்றுவற்கான பயனுள்ள வழிகள்.
இந்திய சீனப் போரும் படிப்பினைகளும்
1962 இல் நிகழ்ந்த இந்திய சீனப் போரின அடிப்படை, சட்டத்திற்கும் சர்வதேச நியமங்களுக்கும் முறைகேடான முறையில் வரைபடத்தை இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு மாற்றியமை என்பது இப்போது வெளிப்படை. ஆனால் இது நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக மறைக்கப்பட்டு வந்துள்ளது. 1954இல் அக்ஸய் சின் பகுதி இந்தியாவினது என்று காட்டுமாறு தேசப்படத்தை மாற்றுமாறு நேரு ஆணையிட்டார். அதையே அவர் மக்மஹொன் எல்லைக்கோட்டு விடயத்திலுஞ் செய்தார். இந்த இடத்தில் இந்திய சீனப் போருக்கு காரணமான மக்மஹொன் எல்லைக்கோடு பற்றிச் சொல்லியாக வேண்டும்.
மக்மஹொன் கோடென்பது, மார்ச் 1914 இந்தியா-திபெத் உடன்பாட்டில் எழுத்தில் விவரிக்காமல் அதற்கான குறிப்புகளுடன் இணைத்த ஒரு அங்குலத்துக்கு எட்டு மைல் அளவிடையில் வரைந்த வரைபட மொன்றில் தடித்த அலகுப் பேனாவால் சிவப்பு நிறத்தில் வரைந்த ஒரு கோடாகும். அது 1914 ஆம் ஆண்டின் புவிப்பட வரைதலின் நிச்சயமின்மைகளைக் கொண்டது. இங்கும் நேரு ஆணவத்துடன், நம்பவியலாத, சட்டவிரோதமில்லாவிடினும் அறமற்ற ஒரு காரியத்தைச் செய்தார். 1959 செப்டெம்பரில் நேரு, ஒளிவுமறைவின்றி, ‘மக்மஹோன் எல்லைக்கோடு சில இடங்களில் ஒரு நல்ல கோடாகக் கருதப்படாததால் அது நம்மால் மாற்றப்பட்டது’ எனப் பாராளுமன்றத்துக்குத் தெரிவித்தார். ஆனால் மக்மஹொன் கோட்டின் சட்டப்படியான செல்லுமை ஒருபுறமிருக்க, அதன் செம்மையான அடையாளப்படுத்தல் என இந்தியா உரிமை கோரியதைச் சீனா 1959 செப்டெம்பரிலேயே மறுத்திருந்தது. பீக்கிங் றிவ்யூ சஞ்சிகையின் 15.9.1959 இதழில் வந்த வரைபடம் அதை உறுதிப்படுத்திற்று. ஆனால் நேரு இதை ஏற்க மறுத்தார்.
இந்தியாவுடன் பேசுவதன் மூலம் இந்த எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வுகாண விரும்பிய சீனா அதன் பிரதமர் ஜோ என்லாய்யை இந்;தியாவுக்கு அனுப்பியது. 1960 ஏப்ரலில் ஜோ என்லாய் புது டில்லிக்கு வரமுன்பே ‘இரு தரப்பினருக்குமிடையே பொது அடிப்படை எதுவுமே இல்லை’ என நேரு அறிவித்துவிட்;டார். மக்மஹொன் எல்லைக் கோட்டை ஏற்பதை உள்ளடக்கிய ஜோ என்லாயின் இசைவை, அவர் ஏற்க மறுத்தார். ‘இப் பிரதேசத்திலிருந்து அவர்கள் வெளியேறினாலே இப் பிரச்சனை தீரும்’ என்று அவர் 20.2.1961இல் பாராளுமன்ற மேலவைக்குத் தெரிவித்தார். இதன் மூலம் வலிந்த போரொன்றை அவர் வேண்டினார். இறுதியில் அவமானகரமான தோல்வியொன்றை அவர் சந்தித்தார். ஆனால் இன்று இந்தியா மீது சீனா வலிந்து போர் தொடுத்தது என்றே இந்திய மக்கள் மனங்களில் பதிய வைக்கப்பட்டுள்ளன.
1962ம் ஆண்டு நடந்த போர் இந்திய-சீன எல்லைச் சிக்கல்கள் குறித்த பல படிப்பனைகளைத் தருகின்றன. தேசிய வியாதிக்காகத் தொடுக்கப்படும் போர்கள் அளவில்லாத துன்பத்தையும் அவமானத்தையும் கொண்டு வந்து சேர்க்கும் என்பது அந்தப் போர் உணர்த்துகின்ற உண்மை.
இந்திய மனோநிலையும் பிராந்திய ஆதிக்கமும்
அண்மைய சம்பவத்தைத் தொடர்ந்து இந்திய ஊடகங்களின் கவனம் இந்த நெருக்கடியை நோக்கியதாக மாறியுள்ளது. குறிப்பாக சீனாவின் தரப்பில் எத்தனைபேர் இறந்தார்கள் என்பதைத் தேடிக்க கண்டுபிடிப்பது அவர்களின் இப்போதைய குறிக்கோளாக இருக்கிறது. ஒரு செய்தி 43 சீன இராணுவத்தினர் காயமடைந்தும் இறந்தும் இருக்கலாம் என்று தெரிவித்தது. அதைவைத்துக்கொண்டு 20 எதிர் 43 எனவே இந்தியா வென்றது என்ற வகையான செய்தியாக்கங்களை இந்தியத் தொலைக்காட்சிகளில் காண முடிகிறது. ஒரு அவலத்தையும் கிரிக்கெட் போட்டி போல பார்க்கத்தூண்டும் மனோநிலையிலேயே ஊடகங்கள் உள்ளன.
இன்னொருபுறம் இந்தியா தனது பிராந்திய “தாதா” பட்டத்தை இழந்துவருகிறதோ என்றும் எண்ணும் வகையில் நிகழ்வுகள் நடக்கின்றன. சில தினங்களுக்கு முன்னர் நேபாள பாராளுமன்றம் இந்தியாவுடன் சர்சைக்குள்ளாகியிருந்த எல்லைப்பகுதிகளான லிபுலேக், கலபாணி மற்றும் லம்பியாதூரா ஆகிய பகுதிகளை நேபாளத்தின் வரைபடத்தில் இணைத்து உருவாக்கப்பட்ட புதிய வரைபடத்திற்கு அங்கீகாரம் வழங்கியது. இப்போது சட்டரீதியாக அப்பகுதிகள் நேபாளத்திற்கு உட்பட்ட பகுதிகளாக மாறியுள்ளன. நேபாள விடயங்களில் ‘பெரியண்ணன்’ பாத்திரம் வகித்த இந்தியாவுக்கு விழுந்த அடியாக இதைக் கொள்ள முடியும். குறித்த எல்லைப் பகுதிகள் விடயத்தில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொடர்ச்சியாக நேபாளம் இந்தியாவை அழைத்தது. ஆனால் இந்தியா பேச மறுத்துவிட்டது. கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் நேபாளம் முன்வைத்த கோரிக்கையை இந்தியா செவிசாய்க்கவில்லை. இதில் கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில் இப்போது நேபாளம் உள்வாங்கியிருக்கும் பகுதிகளுக்கு தார்மீக ரீதியாகவோ வரலாற்று ரீதியாகவோ உரிமை கொண்டாடுவற்கான எந்தவொரு ஆவணங்களும் இந்தியாவிடம் இல்லை என்று இந்தியாவின் வரலாற்றாசிரியர்களும் கொள்கைவகுப்பாளர்களும் தெரிவிக்கிறார்கள். இந்தியா பேசுவதற்கு மறுத்த முக்கியமான காரணி இதுவே என்கிறார்கள். மறுபுறம் சீனா விடயத்தில் இந்தியா சீனாவுடன் பேசுவதற்கு முண்டியடிக்கிறது.
சீனா தனது எல்லை நாடுகளுடன் உடன்படிக்கைகளுக்கு வந்துள்ளது. சீனா 14 நாடுகளுடன் தனது எல்லைகளைப் பகிர்கிறது. ஆதில் இந்தியா தவிர்த்து ஏனைய 13 நாடுகளுடனும் எல்லை உடன்படிக்கைகளை சீனா கொண்டுள்ளது. அந்தவகையில் சீனா தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளது. மறுபுறம் இந்தியா 7 நாடுகளுடன் தனது எல்லைகளைப் பகிர்கிறது. இதில் பூட்டான், பங்களாதேஷ் தவிர்த்து ஏனைய 5 நாடுகளுடனும் (சீனா, பாகிஸ்தான், நேபாளம், மியன்மார், ஆப்கானிஸ்தான்) எல்லைத் தகராறுகள் உள்ளன. இது இந்தியாவின் அயலுறவுக் கொள்கையின் குறைபாடு மட்டுமல்ல ‘பெரியண்ணன்’ மனோநிலையின் வெளிப்பாடும் கூட.
நிறைவாக
சீனாவும் இந்தியாவும் சனத்தொகை ரீதியாக மிகப்பெரிய நாடுகள். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான போர் தென்னாசியாவில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கும். இதை இரண்டு நாடுகளும் நன்கறியும். இவ்வாறான சின்னச் சின்னச் சீண்டல்கள் அரசியல் ரீதியான யாருக்குப் பலனளிக்கும் என்ற கேள்விக்கு விடை காணுதல் வேண்டும். இந்த எல்லைத்தகராறு சீன அரசியலில் பிரதிபலிக்கா. ஆனால் இந்திய அரசியலில் மோடிக்கு இன்னொரு புல்வாமா தேவைப்படுகிறது. ஆனால் இந்த இடத்தில் சீனா பாகிஸ்தான் அல்ல என்பதையும் அழுத்திச் சொல்ல வேண்டியுள்ளது. இந்தியப் பிரதமரின் மௌனமும் இராஜதந்திர ரீதியான நகர்வுகளுக்கு இந்தியா முண்டியடிப்பதும் ஒரு சொலவடையையே நினைவூட்டுகின்றது. அதுதான் தலைப்பாயுள்ளது.