அரசியல்உலகம்

அகதிகள் நெருக்கடி: யாருடைய பொறுப்பு

மக்கள் போரை விரும்புவதில்லை. அவர் அதில் பங்கெடுப்பதும் இல்லை. யாரோ நலன்பெற நடக்கும் போர்களில் பாதிக்கப்படுவதென்னமோ அப்பாவி மக்கள்தான். ஏதையிழந்தாலும் பரவாயில்லை உயிரைப் பாதுகாப்பதற்கெனவே பல்லாயிரக்கணக்கானோர் தத்தம் நாடுகளை விட்டு இடம்பெயருகிறார்கள். ஆனால் அவர்களுக்கான கதவுகள் மூடப்பட்டுள்ளன. போருக்குக் காரணமானவர்கள் கதவுகளை இறுக்கமூடி எல்லைகளின் பாதுகாப்பை அதிகரிக்கிறார்கள். ஒருபுறம் ‘பயங்கரவாத ஆபத்து’ பற்றிப் பேசும் இவர்கள் மறுபுறம் ‘மனித உரிமைகள்’ பற்றியும் ‘மனிதாபிமானம்’ பற்றியும் பேசுகிறார்கள்.

முன்னெப்போதும் இல்லாதளவுக்கு அகதிகள் நெருக்கடி உலகின் மிகமுக்கியமான நெருக்கடியாக உருமாறியுள்ளது. ஆனால் இப்பிரச்சனை மீதான கவனம் மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த நெருக்கடியின் பரிமாணங்கள் பல. அவற்றை அண்மைய சில நிகழ்வுகளுடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.

கடந்த வாரம் 14 பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் உட்பட 239 அகதிகளுடன் அதன் கடற்கரைக்கு வந்து சேர்ந்த Mission Lifeline  என்ற ஜேர்மன் ஆதரவு மீட்பு கப்பலை இத்தாலிய அரசாங்கம் ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளது. அந்த மீட்பு கப்பல் மால்டாவின் மேற்கு கடற் பகுதியில்; கவனிப்பாரற்று விடப்பட்டிருக்கிறது. நடுக்கடலில் போக்கிடம் இன்றி இவ்வகதிகள் தவிக்க விடப்பட்டிருக்கிறார்கள்.

இந்நிகழ்வுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர். உணவு மற்றும் குடிநீர் இன்றி 629 அகதிகளுடன் தத்தளித்துக் கொண்டிருந்த Aquarius என்ற பிரெஞ்சு மீட்பு கப்பலை இத்தாலி திருப்பி அனுப்பியது.

இதேவேளை கடந்த வியாழனன்று, அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகர் மூன்று நாட்களில் 220 அகதிகள் கடலில் மூழ்கி இறந்துள்ளனர் என அறிவித்தார். இந்த அவலம் இத்தாலி மற்றும் லிபியாவிற்கு இடையில் உள்ள மத்தியதரைக் கடல் பகுதியில் நிகழ்கிறது.

மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் நடைபெறும் போர்களிலிருந்து தப்பித்து லிபியா ஊடாக ஐரோப்பாவிற்குள் நம்பிக்கையுடன் தஞ்சம்புகும் பெரும் எண்ணிக்கையிலான அகதிகளின் வருகையை தடுத்து நிறுத்தவும், அவர்களுக்கு புகலிட உரிமையை மறுக்கவும் ஐரோப்பிய ஒன்றியம் முனைகின்றது. நடு மத்தியதரைக்கடல் நீர் பகுதியில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இந்த நெருக்கடி ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப் பெரிய சவாலாகும்.

இந்நிலையில் கடந்தவாரம் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் பங்குபெற்ற அகதிகள் மாநாடு எதுவித உடன்படிக்கையும் எட்டப்படாமல் முடிவடைந்தது. இவ்வகையில் அகதிகள் யாரையும் உள்ளீர்ப்பதில்லை என்ற முடிவில் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் உடன்பட்டுள்ள நிலையில் அதை வெளிப்படையாகக் கொள்கையாக அறிவிப்பதில் பாரிய நெருக்கடிகள் உண்டு என அவை அறியும். இன்று பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வலதுசாரி அலை வீசுகிறது. பெரும்பாலான அரசாங்கங்கள் தீவிர வலதுசாரிச்சார்பு அரசாங்கங்களாகவே உள்ளன. இந்நிலையில் அகதிகளுக்கு எதிரான பொதுவான நிலைப்பாட்டை எடுப்பதில் இந்நாடுகளுக்கு சிரமங்கள் அதிகமில்லை.

இம்மாநாட்டோடு ஒட்டி நிகழ்ந்த சில விடயங்கள் கவனிப்புக்குரியவை. ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 அங்கத்துவநாடுகளில் 16 நாடுகள் மட்டுமே அகதிகள் மாநாட்டில் கலந்து கொண்டன. அகதிகளை அவரவர் நாடுகளுக்கு திருப்பியனுப்ப இந்த மாநாட்டின் போது ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுக்கும் சாத்தியம் இருப்பதாகவும் இதனால் இம்மாநாட்டை  எதிர்ப்பதற்காக Visegrad நாடுகள் (ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் செக் குடியரசு) கூறி மாநாட்டைப் புறக்கணித்தன. இம் மாநாட்டில் பரிசீலிக்கப்படவுள்ள ஐரோப்பிய ஒன்றிய வரைவு அறிக்கை ஒன்று முன்னரே வழங்கப்பட்ட நிலையில்  இத்தாலிய பிரதமர், இவ்வரைவுடன் தான் உடன்படிவில்லை என்றும் இதனடிப்படையில் மாநாடு நடக்குமாயின் தான்  அதில் கலந்துகொள்ள மாட்டேன் என்றார்.

இதேவேளை இத்தாலியத் துணைப்பிரமர் மட்டியோ சல்வீனி Mission Lifeline கப்பலில் தவித்துக் கொண்டிருக்கும் அகதிகளை ‘மனித இறைச்சி’ என இழிவாக அழைத்தார். அவரும் அவரது சகாக்களும் அகதிகளுக்கெதிரான கீழ்த்தரமான பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்கள்.

ஹங்கேரி ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவி வழங்கும் எவரொருவரையும் சிறையிலடைக்கும் ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. அதேவேளையில் ஹங்கேரி ‘அன்னிய மக்களை ஏற்காது என்ற சொற்றொடரை அரசியல் அமைப்புக்குள் உள்வாங்குவதன் ஊடு பாதுகாப்பான ஹங்கேரிக்கு உத்தரவாதமளிப்பதாக ஹங்கேரியின் அதிவலது அரசாங்கம் சூளுரைக்கிறது.

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனும் ஸ்பானிய பிரதம மந்திரி பெட்ரோ சான்சேஸூம், அகதிகள் பிரச்சனைக்கு உடனடி நடவடிக்கையாக ஐரோப்பாவிற்குள் ‘மூடிய தடுப்புக் காவல் மையங்கள்’ அமைப்பதற்கு அழைப்பு விடுத்தனர். இன்னொரு வகையில் சித்திரவாத முகாம்களாகவே இம்மையங்கள் இயங்கும் என்பதை இதற்கு முன்னர் இவ்வகையான முகாம்களில் நடந்த சம்பங்கள் காட்டுகின்றன. லிபியாவில் இருந்து தப்பி கப்பல்களில் வந்தவர்கள் இவ்வாறான தடுப்புக் காவல் மையங்களிலேயே வைக்கப்பட்டார்கள். அங்கு தஞ்சம் புகுந்தவர்களுக்கு ‘கடுமையாக சவுக்கடி, தொடர்ச்சியான தாக்குதல்கள் மற்றும் மின் அதிர்ச்சி’ போன்ற சித்திரவதைகள் இடம்பெற்றது கண்டறியப்பட்டது என்று மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் (Human Rights Watch) அறிக்கை விவரிக்கிறது.

இப்போது பேசப்படுகின்ற அகதிகளில் பெரும்பான்மையானோர் லிபியர்கள். 2011ம் ஆண்டு அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் லிபியாவின் மீது தாக்குதல் தொடுத்து ஜனாதிபதி முகம்மர் கடாபியை கொலைசெய்து அரசற்ற ஒரு நாடாக லிபியாவை ஆக்கியது. இன்றுவரை அங்கு அமைதி திரும்பவில்லை. அப்போது நடைபெற்ற போரில் இடம்பெயர்ந்த மக்கள் அகதிமுகாம்களில் தங்கள் வாழ்வைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியம் அகதிகள் விடயத்தில் எதுவித முடிவையும் எடுக்கவியலாது தடுமாறுகிறது. இது இன்னொரு வகையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஆழமடையும் நெருக்கடிகளை இனங்காட்டுகிறது. ஆனால் ஏதோ ஒருவகையில் அகதிகள் விடயத்தைக் கையாள வேண்டிய நிலைக்கு ஐரோப்பிய ஒன்றியம் தள்ளப்பட்டுள்ளது. இதனாலேயே ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் தலைவர் டொனால்ட் டுஸ்க் அல்பேனியா மற்றும் துனிசியாவில் அகதி முகாம்கள் அமைக்க எல்லோரும் முன்வர வேண்டும் என்று கோரினார். இக்கோரிக்கையானது அகதிகளை எவ்வாறேயினும் ஐரோப்பிய எல்லைகளுக்கு வெளியே வைத்திருப்பதையே நோக்காகக் கொள்கிறது.

இன்று ஐரோப்பாவில் வீசுகின்ற தேசியவாத வெள்ளைநிறவெறி நிறைந்த வலதுசாரி அலை இரண்டாம் உலகப் போர் காலத்திற்கு பின்னர் முதற்தடவையாக ஐரோப்பா இவ்வாறானதொரு ‘இனச்சுத்திகரிப்பு’ ஆதரவு அலையைக் கண்டுள்ளது. இதனுடன் முதலாளித்துவத்தின் தோல்வியை இணைத்துப் பார்க்க வேண்டும். ஆனால் இன்று ஐரோப்பிய அரசியல் தலைவர்கள் வெளிப்படையாகவே வெள்ளை நிறவெறியை முன்மொழிகிறார்கள். குறிப்பாக இத்தாலியத் துணைப்பிரதமரும் உள்துறை அமைச்சருமாகிய சல்வீனி, 600,000 பேரை இத்தாலியை விட்டு நாடு கடத்துவதற்கு சூளுரைக்கிறார். அதேவேளை நாஜிக்களால் இனப்படுகொலைக்காக இலக்கு வைக்கப்பட்ட ரோமா மக்களைத் தனியே பதிவுக்குட்படுத்தக் கோருகிறார். அதன்மூலம்  அவர்கள் அனைவரையும் நாடு கடத்துவதற்கும் அழைப்பு விடுக்கிறார்.

ஜேர்மன் அரசில் கூட்டணி வைத்துள்ள கட்சிகளும், ஆஸ்திரிய சான்சலரும் பிரெஞ்சு ஜனாதிபதியும் இதே வகையான சொல்லாடல்களையே பயன்படுத்துகிறார்கள். அனைவரும் அகதிகள் இந்நாட்டவர்கள் அல்ல. திருப்பியனுப்பப்பட வேண்டும் என்று வரன்முறையின்றிக் கோருகிறார்கள்.

இன்னொருபுறம் தென்னமரிக்க நாடுகளில் இருந்து வரும் அகதிகளைத் திருப்பியனுப்பும் கொள்கைக்கு தனது முழு ஆதரவையும் வழங்குவதன் மூலம் அமெரிக்காவில் அகதிகள் வெளியேற்றப்படுவதற்கான வாய்ப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்கியுள்ளார். புலம்பெயர்ந்தவர்களைப் பயங்கரமாக பீதியூட்டுவதற்கும் நாட்டுக்குள் அவர்கள் நுழைவதைத் தடுப்பதற்கும் ஒரு வழிவகையாக, தஞ்சம் கோரும் பெற்றோர்களின் கரங்களில் இருந்து குழந்தைப் பிரிக்கும் அவரது நிர்வாக கொள்கையை நடைமுறைப்படுத்தினார்.

பிரிக்கப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட குழந்தைகள் தங்களின் தாய்-தந்தையரை தேடி தேம்பி அழும் சத்தங்களின் ஒலிக்கோப்புகளும், தாய்மார்களின் மார்பிலிருந்து அப்பட்டமாக குழந்தைகளைப் பிடுங்கி எடுப்பது குறித்த செய்திகளும், தங்களின் மழலைகளை உடலோடு இறுக்கிப்பிடிக்க முயலும் தாய்மார்கள் அடக்கப்பட்டு, கைகளில் விலங்கிடப்பட்ட நிலைமை என்பன பற்றி ஒளிக்கோப்புகளும் உலகெங்கிலும் வெறுப்பையும், அதிர்ச்சியையும் தூண்டியுள்ளன. உலகின் வளர்ச்சிபெற்ற ஜனநாயகத்தின் முகம் கிழிந்து தொங்கியது.

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகவராண்மை மற்றும் நார்வே அகதிகள் அமைப்பின் உள்நாட்டு இடம்பெயர்வு கண்காணிப்பு மையம் ஆகியவற்றின் புள்ளிவிபரங்களின்படி 2018-ம் ஆண்டு தொடக்கம் மே மாதம் வரை, வற்புறுத்தப்பட்டு இடம்பெயரச் செய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கை சுமார் 6.85 கோடி. இது இங்கிலாந்தின் மொத்த மக்கள் தொகைக்கு சமமானதாகும். சுமார் 4 கோடி மக்கள் தங்களது சொந்த நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்கின்றனர். 2.85 கோடி பேர் எல்லை கடந்து வெளிநாடுகளுக்குச் சென்று அகதிகளாகின்றனர். உலகம் முழுவதும் இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை தொடர்ச்சியான ஆறாவது ஆண்டாக அதிகரித்து வந்துள்ளது. இடம்பெயர்பவர்களில் மிகவும் குறைவானவர்களே பாதுகாப்பாக வீடு மீள்கிறார்கள்.

அகதிகள் பற்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வாய்கிழியப் பேசினாலும் கடந்த ஆண்டு இடம் பெயர்ந்த புதிய அகதிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு துருக்கி, வங்காள தேசம் மற்றும் உகாண்டா ஆகிய மூன்று நாடுகள் அடைக்கலம் தந்திருக்கின்றன.

கடந்த ஆண்டு புதிய அகதிகளை அதிகமான அளவில் தன்னகத்தே சேர்த்துக் கொண்ட நாடு துருக்கி. சுமார் 7 லட்சம் மக்களை புதிய அகதிகளாக அது ஏற்றுக் கொண்டது. இதுவரையில் சுமார் 38 லட்சம் அகதிகளை அது ஏற்றுக் கொண்டுள்ளது. சிரிய அகதிகளே மிக அதிகமாக அங்கு இடம்பெயர்கின்றனர். ஐரோப்பாவின் அனைத்து நாடுகளும் சேர்ந்தே வெறும் 5 இலட்சம் புதிய அகதிகளைத்தான் கடந்த ஆண்டு ஏற்றுக் கொண்டுள்ளன. அமெரிக்கா சுமார் 60,000 அகதிகளை மட்டுமே கடந்த ஆண்டு ஏற்றுக் கொண்டுள்ளது.

தெற்கு சூடானிலிருந்தும் காங்கோவிலிருந்தும் போரின் காரணமான ஏராளமான அகதிகள் உகாண்டாவிற்கு வருகிறார்கள். வரும் அனைவரையும் உகாண்டா ஏற்றுப் கொள்கிறது. ஆனால் அவ்வாறு வருபவர்களைப் பராமரிப்பதற்கு  ஆதரவளிக்க, ஐக்கிய நாடுகள் சபையும் மற்ற அமைப்புகளும் உடன்பட்ட தொகையில் வெறும் 7 சதவீதத்தை மட்டுமே இந்த ஆண்டு மே மாதத்தில் உகாண்டா பெற்றுள்ளது. எனவே அங்குள்ளவர்களை மிகுந்த சிரமத்துடன் உகாண்டா பார்த்து வருகிறது.

இதேபோலவே பங்களாதேஷ் அகதிகளுக்காக இவ்வமைப்புகள் உடன்பட்ட தொகையில் வெறும் 20% மட்டுமே இதுவரைக் கொடுக்கப்பட்டுள்ளது. இவை பொறுப்புப் பகிர்வு பற்றிய அடிப்படையான கேள்விகளை எழுப்புகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகவரான்மையின் தரவுகளின்படி பெருமளவிலான அகதிகளை ஏற்றுக் கொள்ளும் நாடுகளுக்கு பொருளாதார ஆதரவு கொடுப்பதோடு மட்டுமல்லாமல், சுமார் 12 இலட்சம் அகதிகள் புதிய நாடுகளில் குடியமர்த்தப்படுவதும் தேவையானதாகும். கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் எல்லாம் சேர்ந்து சுமார் 1,03,000 குடியமர்வு அகதிகளை மட்டுமே ஏற்றுக் கொண்டன.

இவையனைத்தும் அகதிகள் தொடர்பான பிரச்சனையில் பொறுப்பு யாருக்கு இருக்கிறது என்கிற கேள்வியை எழுப்புகின்றன. போர்களைத் தொடங்குவோர் யார்? யாருக்காகப் போர்கள் தொடங்கின? ஏதற்காக அவை தொடர்ந்தும் நடக்கின்றன? ஆபிரிக்காவெங்கும் நிகழும் போர்களின் இலாபம் யாரைச் சென்று சேருகிறது? ஆபிரிக்க வளங்களுக்கு உரிமை கொண்டாடுவோர் யார்? இக்கேள்விகளுக்கான பதில்கள் யாரைச் சுட்டுகின்றனவோ அவர்களை நோக்கியே இவ்வகதிகளுக்கான பொறுப்பும் சுட்டப்பட வேண்டும்.

இன்று உலகம் மிகவும் நெருக்கடியான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒருபுறம் முதலாளித்துவத்தின் தோல்வியும் அது சந்தித்து வரும் நெருக்கடியும் பல்வேறு வழிகளில் வெளிப்படுகிறது. மறுபுறம் இத்தோல்வியைப் பயன்படுத்தி தேசியவாதம் முன்னெழுந்துள்ளது. குறிப்பாக ஐரோப்பாவில் வெள்ளைநிறவெறி வெளிவெளியாகவே தனது அடையாளத்தைப் பதிவு செய்கிறது. இது சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய சவாலாகிறது. முதலாளித்துவத்தின் சவால் தனது நிதிமூலதனத்தைத் தக்கவைப்பதும் பெருக்குவதுமே. எனவே போர்கள் தவிர்க்கவியலாதவை. முதலாளித்துவம் தனக்குள்ளேயே போட்டியிட வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் பற்றி தேசியவாத அரசுகளின் கவனம் மிகக்குறைவு.

ஆபத்தான நம்பிக்கைகள் குறைந்த மனிதாபிமானமற்ற எதிர்காலம் குறித்து சொல்லுவதற்கு எதுவுமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *