அரசியல்உள்ளூர்என் கண்களில்...

தேர்தலின் போக்குகளும் மக்கள் தீர்ப்பும்

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான தமது தலைவிதியை மக்கள் எழுதிவிட்டார்கள். இலங்கையின் கடந்த கால்நூற்றாண்டுகால பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றில் மிகவும் அமைதியான, வன்முறை குறைந்த தேர்தலொன்று நடந்து முடிந்திருக்கிறது. இதற்காக இலங்கையர்கள் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். வுழமையாக விருப்பு வாக்குகளுக்காகக் கட்சிகளுக்குள்ளேயே நடக்கும் குத்துவெட்டுக்கள் இம்முறை பாரியளவில் நடக்கவில்லை. இது தேர்தல் வன்முறைகள் குறைவதற்கு முக்கிய காரணம்.

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்கும் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்கும் அடிப்படை வித்தியாசம் உள்ளது. ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் மிகவும் சூடாக இருந்த அதேவேளை, நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கவில்லை. அது ஒப்பீட்டளவில் அமைதியாகவும் இருந்தது. இந்த மாற்றத்தை விளக்குவதற்கு ஒரு காரணி என்னவென்றால், ஜனாதிபதித் தேர்தலில் அரசியல் அதிகாரப் பிரச்சினை தீவிரமாக வெளிப்பட்டு செப்டம்பர் 21 அன்று ஓரளவு தீர்க்கப்பட்டுவிட்டது என்பதாகும். அதேவேளை இலங்கை அரசியலின் பிரதான அரங்காடிகள் பலர் இத்தேர்தலில் இருந்து ஒதுங்கியிருப்பதும் இன்னொரு காரணியாகும்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் இலங்கையின் அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கத்தை உறுதிப்படுத்தின. அதாவது, நாட்டின் பாரம்பரிய ஆளும் வர்க்கம் ஒதுக்கப்பட்டு புதிய ஆளும் வர்க்கத்திற்கான வாசல் திறக்கப்பட்டுள்ளது. இது பழைய-புதிய ஆளும் வர்க்கங்களுக்கு இடையேயான போட்டியாகக் காலப்போக்கில் உருமாறும். அதேவேளை அதிகாரச் சமநிலையில் மாற்றம் நிச்சயமாகத் தொடங்கிவிட்டது. அதனால்தான் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர்களுக்கிடையேயான போட்டி, ஒன்றுக்கொன்று விரோதமான உறவுகளைக் கொண்ட இரு முகாம்களுக்கு இடையேயான வன்முறையற்ற ‘வர்க்கப் போராக” தோற்றமளித்தது. ஆளும் வர்க்கங்களுக்கு அரசியல் தோல்வியை அளித்ததன் அடையாளமாக ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளிப்பட்டன. ஆனால் அறுதியான தோல்வியை ஆளும்வர்க்கத்திற்கு மக்கள் பரிசளிக்கவில்லை. இதனையே “மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெறாதவர் ஜனாதிபதியாகியுள்ளார்” என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நகையாடினார். ஆந்த அறுதியான தோல்வியை, ஆளும் வர்க்கத்தின் அகங்காரத்திற்கான பதிலாக இந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. இப்போது ஜனாதிபதி திஸாநாயக்கவுக்குத் தேவைப்பட்ட “அறுதியான தோல்வியை” பழைய ஆளும்வர்க்கத்திற்கு மக்கள் பரிசளித்துள்ளனர். ஓன்றுமட்டும் நிச்சயமாயுள்ளது. நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் ஒரு புதிய செயல்முறையைத் தொடங்காது, ஆனால் செப்டம்பர் 21 அன்று அறிவிக்கப்பட்ட அதே செயல்முறையைத் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

ஜனாதிபதித் தேர்தலில் நடந்ததைப் போன்று இந்த பாராளுமன்றத் தேர்தலிலும் அதிகாரப் போட்டி இரு அரசியல் முகாம்களுக்கு இடையே துருவப்படுத்தப்பட்டிருப்பதாக இருந்தது. ஆனால் அந்தப் பிரிவிலேயே ஒரு வித்தியாசமும் புதிய இயல்பும் இருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலின் முடிவில் இவ்விரு வர்க்கங்களும் தங்கள் பங்கை மாற்றிக் கொண்டன. ஆட்சியைப் பிடித்ததன் விளைவால் புதிய ஆளும் வர்க்கம் உருவானது. புழைய ஆளும் வர்க்கம் பாராளுமன்றத் தேர்தலின் வழி தமது ஆளும் அதிகாரத்தைக் தக்கவைக்கப் போராடுகிறது. ஜனாதிபதித் தேர்தலுடன் ஆரம்பித்த ‘ஆளும் வர்க்கங்களாக” மாறுவதை நிறைவு செய்வதே தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் அரசியல் திட்டமாகும்.

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரத்தைக் கூர்மையாக அவதானித்தால் மிகத் தெளிவான இரண்டு குறிப்புகளை பார்க்கவியலும். முதலாவது, ஒரு சமூக முகாமில் இருந்து அரச அதிகாரத்தை மாற்றும் செயல்முறையின் கடினத்தன்மையை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நன்கு புரிந்துகொண்டிருக்கிறார் என்பதே அதுவாகும். இரண்டாவது, ஜே.வி.பி மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரின் கடந்த சில வருடங்களில் ஏற்பட்ட அரசியல் மாற்றமானது, தேர்தல் மற்றும் ஜனநாயக செயற்பாட்டின் மூலம் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கான அவர்களின் புரிந்துணர்வு மற்றும் உறுதிப்பாடு குழப்பமற்றது என்பதை வெளிப்படுத்துகிறது.

இம்முறை தேர்தல் பிரசாரங்கள் மிகவும் விசித்திரமான முறையில் இடம்பெற்றன. ஒருபுறம் தேசிய மக்கள் சக்தி, ஜனாதிபதித் தேர்தலின் வழி ஏற்பட்ட “அனுர அலையைப்” பயன்படுத்தி அதிகப்படியான ஆசனங்களை தேசிய மக்கள் சக்திக்குப் பெற்றுக் கொள்வதற்கு முனைந்தது. தனிநபர்களுக்கு மேலாக கட்சிக்கான வாக்குகளைக் கோரியதாகவே அவர்தம் பிரச்சாரங்கள் இருந்தன. அவர்களில் ஒரு பிரிவினர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கோரி நின்றார்கள் என்பதும் கவனிப்புக்குரியது.

மறுபுறம், எதிர்க்கட்சியினரின் பிரச்சாரங்கள் எக்கட்டத்திலும் வேகமெடுக்கவில்லை. அதேவேளை சஜித்-ரணில் பிரிவு இன்னமும் தீர்க்கப்படாமல் தொடருகிறது. ஏற்கனவே தோற்கடிக்கப்பட்ட மனோபாவத்துடனும், புரிந்துணர்வுடனும், மனநிலையுடனும் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை எதிர்க்கட்சிகளும் குழுக்களும் தொடங்கின. நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இந்தத் தோல்வி அணுகுமுறையையே வெளிப்படுத்தியது. இதில் முக்கியமானது யாதெனில், பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியுறும் அணுகுமுறையுடன் பங்கேற்கும் அனைத்து எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் தங்களது கட்சியையோ, குழுவையோ வெல்வவைப்பது முக்கிய நோக்கமல்ல. தனிப்பட்ட அரசியல் இருப்பைக் காப்பாற்றுவதுதான் பிரதான இலக்கு என்பது புலனானது. இது பாராளுமன்ற எதிர்க்கட்சி குழுக்களை மேலும் பலவீனப்படுத்தியது. பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதில், ‘பலமான எதிர்க்கட்சியை உருவாக்குவோம்” என்ற முழக்கம் எதிர்க்கட்சிகளின் அரசியல் ஆதரவற்ற தன்மையை மேலும் வெளிப்படுத்துவதாக இருந்தது.

இம்முறைத் தேர்தலில் முக்கியமானதும் அதேவேளை கவனிக்கப்படாததுமான ஒரு அம்சமும் உண்டு. வருங்கால ஜனாதிபதி வேட்பாளர்களாக வர வேண்டும் என்ற நீண்ட கால இலக்குகளை கொண்ட ஒரு சில வேட்பாளர்கள் பாராளுமன்ற தேர்தலில் பங்கேற்கிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த அரசியல் சித்தாந்தத்தை முன்வைத்து தமக்கென ஒரு குறிப்பிட்ட அரசியல் மற்றும் கருத்தியல் அடையாளத்தை உருவாக்க கடுமையாக முயற்சி செய்கிறார்கள். இந்த நோக்கமானது விருப்பு வாக்குகளை அதிகரிப்பது என்ற இலக்கிற்கு அப்பாற்பட்டது. தேசிய மக்கள் சக்தி அரசு மிகக் குறுகிய காலத்தில் வலுவிழந்து கவிழும் என்றும், தங்களுக்குப் பலன் தரும் புதிய அரசியல் வெளி நிச்சயம் உருவாகும் என்றும் அவர்கள் நம்புவதாகத் தெரிகிறது. இதற்கிடையில், தனிப்பட்ட ‘அரசியல் ஆளுமை” என்று அவர்கள் நினைக்கும் அரசியல் மற்றும் கருத்தியல் அடையாளத்தை உருவாக்குவதற்கான அவர்களின் பொறுமையின்மை மற்றும் பதட்டம் ஆகியவை எளிதில் கவனிக்கத்தக்கவை.

இத் தேர்தலில் “அனுசரணை அரசியல்” எத்தகைய பங்கு வகித்தது என்பதை நாம் ஆழமாக நோக்க வேண்டியுள்ளது. குறிப்பாக இத்தேர்தலுக்கு முன்னர் நடைபெற்ற எல்பிட்டிய உள்@ராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் அனுர அலையைப் பிரதிபலிக்கவில்லை. ஆனால் இம்முடிவுகள் பெரும் அரசியல் குழப்பங்களையும் பின்னடைவுகளையும் சந்தித்த அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுக்கு தற்காலிகமாக புதிய அரசியல் வாழ்வையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது என்பது உண்மைதான். எல்பிட்டிய பெறுபேறுகளிலிருந்து ஒரு முக்கியமான அரசியல் பாடம் கற்க வேண்டியுள்ளது. அதாவது, ஜனாதிபதித் தேர்தலைப் போலல்லாமல், தேசியக் காரணிகளும், பிராந்திய மற்றும் தனிப்பட்ட காரணிகளும் பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் முக்கியமானவை. குறிப்பாக மூன்று தேர்தல்களிலும் பாரம்பரியமாக முக்கியமான ஒரு பிராந்திய, தனி நபர் காரணிகள் முக்கியமானவையாக இருந்துள்ளன. பரஸ்பர நன்மை மற்றும் ஆதரவை உறுதி செய்யும் “அனுசரணை அரசியல்” இதில் பிரதானமானது. இது, அரசியல்வாதிகள், பாராளுமன்ற ஆர்வலர்கள் மற்றும் தொகுதிகளுக்கு இடையே சேவை வழங்குதல் மற்றும் ‘சேவை-பெறுதல்” உறவுகளைக் குறிக்கிறது. அரசியல்வாதிகளுக்கு வாக்குகளையும், வாக்காளர்களுக்கு பொருளாதார மற்றும் சமூக நலன்களையும் வழங்கும் இந்த உறவுகளின் வலையமைப்பு, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் முக்கியமான காரணியாக இருக்க முடியும் என்பதை எல்பிட்டிய முடிவுகள் மீண்டும் கோடுகாட்டின.

இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜன பெரமுன மற்றும் சில சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் அத்தகைய அனுசரணை உறவுகளைக் கொண்ட வேட்பாளர்களைக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சர்களாக பதவியில் இருந்த அரசியல்வாதிகள் இந்த அனுசரணை அரசியலில் முன்னணியில் உள்ளனர். நில உரிமையாளர்கள், வணிகர்கள், சமூக சேவகர்கள் மற்றும் கிராமப்புற சமூகத்தில் உள்ள சில உயரடுக்குகள் இந்த அனுசரணை அரசியல் வலைப்பின்னல்களின் உரிமையாளர்களாக தங்கள் வாக்காளர் தளங்களை தயார் செய்கின்றனர். இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் பங்கேற்கும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களுக்கு இதுபோன்ற அனுசரணை வலைப்பின்னல்கள் இல்லாமல் இருக்கலாம். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் இதற்குமுன் ஆட்சியில் இருக்கவில்லை. எனவே, இந்தப் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை வடிவமைப்பதில் அனுசரணை அரசியலின் பங்கு என்பது கவனிப்புரியதாகும். தேசிய மக்கள் சக்தி பெற்ற வாக்குகள் மற்றும் ஆசனங்களின் எண்ணிக்கையை அது எவ்வாறு பாதிக்கும் என்பது குறிப்பாக முக்கியமானது. இலங்கை வாக்காளர்களை பழைய அரசியல் கலாசாரத்திலிருந்து விடுவித்து புதிய அரசியல் கலாசாரத்திற்கு வழிகாட்டும் தேசிய மக்கள் சக்தியின் முயற்சிகளின் முடிவுகளை அளவிடுவதற்கும் இது உதவும்.

தேசிய மக்கள் சக்தியைப் பொறுத்தமட்டில், ஐக்கிய மக்கள் சக்தியோ சஜித் பிரேமதாசவோ சவால் அல்ல. ஏனெனில் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் பலமும், வாக்காளர்களின் ஈர்ப்பும் அதிகரித்துள்ளது. ஆனால் அது எவ்வளவு என்பதை யூகிக்க முடியாதுள்ளமையே சவாலாகும். தேசிய மக்கள் சக்தியினர் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை விரும்புகிறார்கள். அது அவர்கட்கு கட்டற்ற அதிகாரத்தைக் கொடுக்கும்.

2022ம் ஆண்டின் மக்கள் போராட்டத்தின் போது எழுந்த வலுவான அரசியல் முழக்கங்கில் ஒன்றாகவும் எதிர்பார்ப்புகளில் முக்கியமான ஒன்றாகவும் இருந்தது: ‘இருநூற்றி இருபத்தைந்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வீட்டுக்கு அனுப்புவோம்’. ஊழல், பேராசை மற்றும் தொழில் ரீதியாக தகுதியற்ற பாராளுமன்ற உறுப்பினர்;களை நம் நாட்டின் சட்டமன்றத்திலிருந்து அகற்ற வேண்டியதன் அவசியத்தை இது குறிக்கிறது. அந்த எதிர்பார்ப்பை ஓரளவுக்கு நிறைவேற்றும் வாய்ப்பாக இத்தேர்தல் அமைந்தது.

புதியவர்களால் பாராளுமன்றம் நிறைவது இந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யலாம். குறிப்பாக பாராளுமன்றின் தார்மீக வீழ்ச்சியையே தேசிய மக்கள் சக்தியின் பிரசாரம் கவனஞ் குவித்தது. நினைவில் கொள்ள வேண்டியது யாதெனில், பாராளுமன்றத்தின் நெறிமுறை சரிவு, இலங்கையின் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் நெருக்கடியின் ஒரு பகுதியாகும். பாராளுமன்றமும் அதன் உறுப்பினர்களும் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மாற்றப்பட்டால் மட்டுமே அந்த முயற்சி முழுமையடையும். புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு பாராளுமன்றத்தை நிரப்புவதன் மூலம் மட்டும் அதைச் செய்துவிட முடியாது.

நல்ல நம்பிக்கையுடன் ஒருவித சோதனையை முயற்சிக்க வேண்டிய நேரம் இது என்பதை இலங்கையர்கள் உணர்ந்திருப்பதாகத் தெரிகிறது. 76 ஆண்டுகளாக, அதிக காலம் ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் திருட்டு, மோசடி, ஊழலை நமது அரசியலில் புற்று நோயாக மாற்றியுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. அதிகாரத்தை செலுத்திய ஒரு குழுவாக, அவர்கள் அனைவரும் அதற்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பொறுப்பாவார்கள். பொருளாதாரத்தில் ஊழலின் தாக்கத்தை கணக்கிடுவது கடினம். ஆனால் ஊழல் கலாசாரம், இன்னமும் உயிருடன் உள்ளது. இந்த கலாசாரத்தை இல்லாதொழிக்க ஒரு ஆரம்பத்தை எடுக்க புதிய அரசாங்கத்தால் முடியும் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஏனென்றால் இதுவரை யாரும் திருடவில்லை. மறுபுறம், நமது ஜனநாயக நிறுவனங்களை (அரசு சேவை மற்றும் சட்டத்தின் ஆட்சி போன்றவை) மூழ்கடித்துள்ள ஊழல் நடைமுறைகளிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். இதுவரை அதில் பங்கேற்காத ஒரு குழு அதை அகற்ற ஆரம்பிக்கலாம் என்பதே எதிர்பார்ப்பாகும். ஒரு புதிய கலாசாரத்தினை நோக்கிய பரிசோதனைக்காக மக்கள் வாக்களித்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *